ஆனியாடி

திவான் வேலுப்பிள்ளை எழுதிய திருவிதாங்கூர் ஸ்டேட் மானுவல் இரண்டாம் பகுதியில் குமரிமாவட்டப்பகுதியின் தட்பவெப்பம் பற்றிய அத்தியாயத்தில் ஒரு கதை வருகிறது. மகாராஜா சுவாதித்திருநாள் [ பிரபல இசைப்பாடலாசிரியர்] காலத்த்தில் கன்யாகுமரி பகுதியில் இருந்து உயர்தர வாழைக்கன்றுகள சிலர் தமிழ்நாட்டுக்கு கள்ளத்தனமாக கொண்டுபோகிறார்கள் என்று வதந்தி பரவியது. தமிழ்நாட்டில் மட்டிப்பழம் சிங்ஙம் பழம் போன்றவற்றை பயிரிடப்போகிறார்கள் என்ற அச்சம். மகாராஜா வரைக்கும் செய்தியைக் கொண்டு சென்றார்கள் நாஞ்சில்நாட்டு பதினெட்டு பிடாகைக்காரர்களும்.

”வாழைக்கன்றுகளை விற்கவும்  வாங்கயும் தடை நீக்கப்படுகிறது. முடிந்தவரை வாழைக்கன்றுகளை விற்று காசாக்குங்கள்” என்று ஆணையிட்டார் மகாராஜா. பதறிய பிடாகைக்காரர்களிடம் சிரித்தபடி  சொன்னாராம் ”வாழைக்கன்றுகளைத்தானே கொண்டு போவார்கள்? நாஞ்சில்நாட்டு ஆனியாடி சாரலைக் கொண்டு போக முடியுமா?” இன்று வரை அந்தப்பழங்கள் எல்லை தாண்டி விளைவதில்லை.

ஆனியாடிச் சாரல் என்று இங்கே சொல்லப்படுவது ஆனி அதாவது ஜூன் மாத மழைக்குப்பின் கிட்டத்தட்ட ஓணக்காலம் வரை நீளக்கூடிய இளமழைக்காலத்தை. தென்மேற்கு பருவக்காற்று வழியாக பெய்யும் மழை இப்பகுதியில் இடவப்பாதி என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக குறுகிய நாள் பெய்யும் மழை. மலையாள ‘இடவ’ மாதம் பாதியில் பெய்ய ஆரம்பிக்கும். இடபம் என்றால் ரிஷபத்தின் தூய தமிழ்ச்சொல். மலையாளத்தில் உள்ள மாதங்கள்தான் தமிழரின் தொல் மாதங்கள் என்று ஆய்வாளர்கள் குமரிமைந்தனும் வெள்ளுவனும் இணைந்து எழுதிய கட்டுரையில் சொல்கிறார்கள்.

அந்தக்காலத்தில் இடவப்பாதி முடிந்ததும் நடவுவேலைகள். ஆடிப்பட்டம் தேடி விதைத்தல். மேமாதம் அதாவது மேட மாதம் வெயிலில் காய்ந்த மண் மழையால் உயிர்கொள்ளும் காலம் இது. இடவப்பாதி மழைக்கு இதனாலேயே அருமையான மணம் உண்டு. அதேசமயம் சேற்றில் உலவினால் கால் புழுக்கடித்து புண்ணாகவும் செய்யும். சாணிக்குழிகளில் எரு கோடையில் நொதித்து கிடக்கும். இந்த மழையில் அது அடங்கி குளிர்ந்து கறுக்கும். அதில் இருந்த குப்பையும் கூளமும் மட்கி நைட்ரஜனாக ஆகும்.

வாழை நட மிகச்சிறந்த மாதம் இது. கோடையில் தோண்டி போட்டிருக்கும் மண்ணில் இடவப்பாதி ஆரம்பித்ததுமே வாழைகளை ஊன்றிவிட்டால் ஆனியாடி முடிந்து ஆவணியில் ஓணம் வரும்போது பிரம்மாண்டமான நாக்குகளாக இலை விரித்து வாழைகள் வெயிலில் பச்சைக் குத்து விளக்குகள் போல ஒளிவிடும். ஓணத்துக்குப் பின்னர் வரும் தெளிந்த வானில் காற்றடிக்கும் இளங்கோடைகாலம் வாழை பொதிவிட

ஏற்றது. தை மாதத்துக்குள் குலை வெட்டிவிடலாம்.

 

இடவப்பாதி மழை தென்மேற்கில் இருந்து மேகங்களைக் கொண்டு வந்து நாஞ்சில் நாட்டின் வேளிமலை — தாடகை மலை குவட்டுக்குள் நிறைக்கிறது. மழை கொட்ட ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே மேகம் காலியாகிவிடும். ”அதுக்குள்ள கிண்ணம் காலியாச்சா?” என்று வைவார்கள் விவசாயிகள். மீண்டும் சேர்ந்து சேர்ந்து அடுத்த மழை. குடை வேண்டாம் என்று முடிவெடுத்து திருப்பி வைத்து செஉப்பு மாட்டுவதற்குள் அடுத்த மழை. ஆகவே இங்கே எல்லாருமே கையில் குடை வைத்திருப்பார்கள்.

இடவப்பாதி முடிந்ததும் மேகம் கனமில்லாமல் அதே கிண்ணத்தில் வந்து தேங்குகிறது. கொஞ்சம் கனம் வந்ததும் சாரலாக அடிக்கிறது. கனத்த காற்று பாண்டிய நாட்டு நிலம் நோக்கி வீசிக்கொண்டே இருப்பதனால்  நுண்ணிய வெள்ளி அம்புகள் போல நீர்த்துளிகள் பாய்ந்து வரும். வாழையிலைகள் புறுபுறு என்று ஒலிக்கும். தென்னை சுழன்றாடும். நீர்த்துளிகள் குறையும் போது பிசிறுகளாக காற்றில் சிதறி துணிகளில் எல்லாம் மென்மையான சிறிய கண்ணாடித்துருவல்கள் போல பரவியிருக்கும்.. சாணி மெழுகிய தரையில் நீர்த்துளி பரவியிருப்பதன் மீது நம் பெயரை எழுத முடியும்.

எங்கள் வீட்டுக்கு தென்மேற்கே இருப்பது சவேரியார் குன்றும் சுங்கான்கடை மலையும். அவற்றின் இடைவெளி ஒரு வாசல் போல. அதன் வழியாக குளிர்ந்த நீர்த்துளிக்காற்று அருவி போல கிடைமட்டமாக கொட்டிக்கொண்டே இருக்கும்.  சுவர்கள் குளிரில் சிலிர்த்துக்கொள்ளும். காகங்கள் கிளைகளில் அமர்ந்ததுமே சிறகுகளை குடைந்து துளியுதறும். அமரும்போது கழுத்தை உள்ளிழுத்துக்கொண்டு ஒடுங்கும். மேயும் பசுமாடுகள் ஈரமாக இருப்பதாக தெரியாது. தொட்டு வழித்தால் நீர் வரும். எருமைகள் கன்னங்கரிய பளபளப்புடன் அடிவயிறு சொட்ட உல்லாசமாக நின்று கொண்டிருக்கும்.

 

கேரளத்தை ஒட்டி மலைக்கு அருகே இருக்கும் ஊர்கள் எல்லாமே இப்படித்தான் இருக்கும். இதுதான் குற்றாலச் சாரல். தேனியும் இப்படித்தான் இருக்குமாம். வைரமுத்து

தென்மேற்குப் பருவக்காற்று தேனிப்பக்கம் வீசும் போது
சாரல் – இன்பச்சாரல்!

என்று  அதைப் பாடியிருக்கிறார். இங்கே மிக இன்பமான பருவநிலை என்பது ஆனியாடிச்சாரல்தான்.

ஆனால் இது இன்று. பழங்காலத்தில் அல்ல. அன்றெல்லாம் நடவு முடிந்தால் பிறகு விவசாய வேலைகள் இல்லை. ஆகவே பட்டினி ஆரம்பித்திருக்கும். கிழங்கு சேகரிக்க பிள்ளைகள் புதர்கள் தோறும் அலைவார்கள். கைகால்களில் எல்லாம் சொறி சிரங்கு படர்ந்து பிடிக்கும். எல்லாவற்றைவும் விட விறகு அகப்படாது. ஈரவிறகை ஊதி ஊதி பற்ற வைத்து அந்த வெப்பத்தில் கிழங்குகளை சுட்டு தின்று கூடிகூடி அமர்ந்திருக்கும் மக்களை குடிசைகளுக்குள் காணலாம். ஆடிக்காற்றில் குடிசைகளே பறந்து போய்விடுவதும் உண்டு.

ஆனிக்கடைசியில் சாரல்மழை மெல்ல குறைந்து ஆடியில் நீர் சிதறும் குளிர் காற்று மட்டுமாக ஆகிறது. ஆடி இறுதியில் அது வரண்ட குளிர் காற்றாக உக்கிரம் பெறுகிறது. ஆவணி ஆரம்பிக்கும் போது இனிய தென்றலாக ஆகிறது. வசந்த காலம். வசந்த கால திருவிழாவான ஓணம் வருகிறது. பூக்காலம். ஊஞ்சல்காலம்.

வேளி- தாடகை மலைக்கிண்ணத்தின் ஓட்டை ஆரல்வாய்மொழிக் கணவாய். அதன் வழியாக மழைக்காற்று பாண்டிப்பெருநிலம் நோக்கி வீசுகிறது. திருக்கணங்குடி வடக்கன்குளம் பகுதிகளில் கொஞ்சம் தூறல் இருக்கும். அப்பால் செல்லும்போது வெறும் செம்புழுதிக்காறு. சிதல் புற்றுகளும் முட்புதர்களும் பனைமரங்களும் சருகுகளுமாக விரிந்து கிடக்கும் நிலம் மழைக்கு ஏங்கி பெருமூச்சு விடும்.

சிலசமயம் ஒரு சாரல் மடிநழுவி விழுந்தால் அந்நிலங்களின் ரகசிய ஆழங்களில் இருந்து சிறிய துளைகள் வழியாக ஈசல்கள் பெருகிக் கிளம்பும். ஈசல்புற்றுகள் மாபெரும் பல அடுக்கு பாதாள நகரங்கள் போல இருக்கும். பலமணிநேரம் ஈசல்கள் வந்து கொண்டிருக்கும். பேருந்துக் கண்ணாடியை மறைத்து வண்டிகளை நிறுத்தச்செய்யும் அளவுக்கு. அங்கே ஈசல்களை வலை வைத்து பிடித்து நீரில் முக்கி கொன்று வெயிலில் உலர்த்தி  சட்டிகளில் போட்டு சிவக்க வறுத்து கம்பு சோள மாவுடன் இடித்து உப்பு போட்டு உருட்டி வைத்துக்கொள்கிறார்கள். மிகவும் சத்தான மாவுருண்டை அது.

அக்காலத்தில் போருக்குப் போகிறவர்கள் அதைத்தான் கொண்டு செல்வார்கள். பணகுடி சேர்மாதேவி பகுதி நண்பர் இல்லங்களில் நான் பலமுறை சாப்பிட்டிருக்கிறேன். பனங்கிழங்கு போட்டு இடித்தது சுவையாக இருக்கும். ஆனால் பனங்காயின் பருப்பை  எண்ணை மணக்க சுட்டு அதை வறுத்த ஈசலுடன் சேர்த்து இடித்து கருப்பட்டி சேர்த்து உருட்டிய  உருண்டை மிக அபூர்வமான சுவை கொண்டது. எண்ணையும் கொழுப்புமாக கையே வழுக்கும்.

இந்த நிலங்களில் இன்று காற்றைப்பிடித்து மின்சாரமாக ஆக்கும் பல்லாயிரம் காற்றாடிகள் நிற்கின்றன. பொட்டல்கள் எல்லாம் பொறியியல் கல்லூரிகள் ஆகி விட்டன. மங்கம்மாள் சாலையில் மதுரை செல்லும்போது பேருந்துக்குள் காற்று சுழலி போல சுற்றும். மண் மணம். பாண்டிமண்ணுக்கு எப்போதுமே வெந்த மணம். பனை மணம்.

கிங் ·பிஷர், அல்லது பாரமௌண்ட் போன்ற சிறு ரக விமானத்தில் சென்னை திருவனந்தபுரம் வந்தால் வரும் வழியில் பல சமயம் குமரிமாவட்ட மலைகள் மேல் பறப்போம்.  கீழே தெரியும் விசித்திரமான வளைகோடு உற்று கவனிக்க வைக்கும். அது மலை உச்சி வரம்பு. கச்சிதமாக அந்த வரம்புக்கு தென்மேற்குப்பகுதி பச்சைபசேலென வெல்வெட் போலிருக்கும். வடகிழக்குப்பகுதி செம்மண் நிறத்தில் இருக்கும். மலை முழுமையாகவே மழையை மறைத்து விட்டிருக்கிறது.

சமீபத்தில் நிலவியலாளர் ஒரிசா பாலசுப்ரமணியம் வீட்டுக்கு வந்தார். பேசும்போது சொன்னார் கோதையாறுக்கு மேலே முத்துக்குளிவயல் பகுதியில் இன்றுகூட மனிதக்காலடி படாத காடுகள் உள்ளன என்று. ஓயாத மழை பெய்யும் அந்தக் காடுகள் தான் இந்த நிலத்தின் குளுமை. அங்கிருந்துதான் இந்த அழகிய மண் தொடங்குகிறது. அங்கே வாழும் மனிதனை அறியா மலைத்தெய்வங்கள் வாழ்க!

முந்தைய கட்டுரைமு.இளங்கோவன்,இணையப்பயிலரங்கம்
அடுத்த கட்டுரைபாவம் சாரு…