வாசகர் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களை ட்விட்டரில் follow செய்து உங்கள் blog ஐ படித்து வருகிறேன். உங்கள் புத்தகங்களை எல்லாம் படிக்க ஆசை . நான் சீரியஸ் reader இல்லை. ஆனால் எந்த விஷயத்திலும் மாறுபட்ட கருத்தைப் படிப்பதில் and எதிர்கொள்ளத் தயக்கமில்லை. 61 வயதில் மாறுபட்ட கருத்துகளைத் தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகம் இருக்கிறது.

நீங்கள் தொடர்ந்து blog எழுதுவேன் என்று சொல்லி இருப்பதற்கு மகிழ்ச்சி. ஏனென்றால் இது போல் யார், எதில் எழுதுவார்கள் என்று கண்டு பிடித்துப் படிப்பது கஷ்டம். நன்றி.
yours sincerely
Natarajan

அன்புள்ள நடராஜன்

நலம்தானே?

ஆமாம், இணைய எழுத்தின் சிறப்பே அது நேரடியாகச் சென்று சேர்கிறது. எப்போதும் கைக்குக் கிடைக்கிறது என்பதுதான். செல்பேசியில் வாசிக்கும் வாசகர்களே எனக்கு இன்று அதிகம்.

மாறுபட்ட கருத்துக்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் நீடிப்பது உள ஆரோக்கியத்தின் அடையாளம். நன்றி

ஜெ

dear Je Mo,

I have almost become addicted to reading u. Ur writings are intellectually stimulating and engaging, they open a lot of avenues for learning u new things. Reading u has fulfilled a long felt thirst for knowledge and informed discussions… i feel ever grateful to u for the wonderful service u do by writing, specially ur blog… ur travels, ur principles, ur experimentation, ur revelations are things that i can very much relate to and have always been an inspiration… kudos to the great work u do and wish u all the best in all ur endeavors..

S.V.SAGAR.

அன்புள்ளவிஜய்சாகர்

நன்றி.

இந்த உரையாடல் என்னையும் ஆக்கபூர்வமாக வைத்திருக்கிறது

ஜெ

அன்புள்ள ஜெ

முன்பெல்லாம் உங்கள் இணையதளத்தில் நிறைய கடிதங்கள் வெளியாகி வந்தன. இப்போது பொதுவாகக் கடிதங்கள் குறைவு என்று தெரிகிறது. என்ன காரணம்? கடிதங்களை நீங்கள் அதிகம் வெளியிடுவதில்லையா? கடிதங்களை நிறைய வெளியிடுங்கள். அவை நாம் ஒரு பெரிய வட்டத்தில் இருக்கிறோம் என்ற உணர்ச்சியை உருவாகுகின்றன. அதேபோலப் பல கடிதங்களில் நாம் எழுத நினைப்பதை இன்னொருவர் எழுதியிருப்பதை வாசிக்கமுடிகிறது. அது ஒரு பெரிய அனுபவமாக உள்ளது

சிவராம்

அன்புள்ள சிவராம்

தினமும் தோராயமாகப் பத்தாயிரம் பேர் என் இணைய எழுத்தை வாசிக்கிறார்கள். அது தமிழ்ச்சூழலில் ஒரு பெரிய எண்ணிக்கை. அவர்களில் கடிதம் எழுதுபவர்கள் ஒரே ஒரு கடிதம் எழுதியவர்களையும் சேர்த்தால் ஒட்டுமொத்தமாக ஐந்நூறுபேருக்குள்தான்.

இவர்களை நான் அவதானித்திருக்கிறேன். இவர்கள் இணைய வாசகர்கள் அல்ல. இணையத்தில் நான் சுட்டிகொடுக்கும் விஷயங்களைகூட இவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் வாசிப்பதில்லை. இணையத்தில் நிகழும் விஷயங்களை எப்போதாவது நான் பகிரும்போது இவர்களுக்குப் புரிவதுமில்லை.

இவர்கள் பெரும்பாலும் பல தனிப்பட்ட தேடல்கள் வழியாக என்னிடம் வந்து சேர்பவர்கள். பலர் இந்திய ஞானம், ஆன்மீகம், மதம் சார்ந்து வரக்கூடியவர்கள். உதாரணமாக ஜக்கி வாசுதேவ் அல்லது ஓஷோ பற்றிய ஒரு கட்டுரை வெளியானால் அதைவாசிக்க வந்து சேர்பவர்கள். பெரும்பாலும் அவர்கள் எவரேனும் கொடுத்த சுட்டி வழியாகவே வந்திருப்பார்கள்

அதேபோல மாற்று மருத்துவம், இயற்கை விவசாயம் சார்ந்து வந்துசேரும் வாசகர்களும் நிறையப்பேர் இருக்கிறார்கள். சில அரசியல் கட்டுரைகளின் வழியாக வந்துசேர்பவர்கள் உண்டு. அவ்வப்போது நிகழும் விவாதங்கள் வழியாக வருபவர்கள் உண்டு. சினிமா சார்ந்த கட்டுரைகள் வழியாக வந்து சேர்பவர்கள் உண்டு.

இப்படி தனிப்பட்ட தேர்வு வழியாக வரும் வாசகர்களில் கால்வாசிப்பேர்தான் மற்ற கட்டுரைகளை வாசிக்கிறார்கள். அவர்கள் இணையதளத்தின் பொதுவாசகர்களாக நீடிக்கிறார்கள். பிறர் அவர்களுக்கு ஆர்வமுள்ளவற்றை மட்டுமே வாசிப்பவர்கள்.

வாசகர்கடிதங்கள் இருவகை. தனிப்பட்ட தேர்வுள்ள வாசகர்கள் தங்கள் துறைசார்ந்து எழுதும் கடிதங்கள் நிறைய வந்துகொண்டிருக்கின்றன. இயற்கை மருத்துவம் சார்ந்து ஒருவர் எழுதினால் அடுத்த இயற்கைமருத்துவக் கட்டுரைக்கே அவர் எதிர்வினையாற்றுவார்

பொதுவாக இணையதளத்தை வாசிக்க ஆரம்பித்துப் புதிய விஷயங்களை சந்திக்க நேர்ந்து மாற்றுக்கருத்துக் கொண்டோ ஐயம் அடைந்தோ பாராட்டியோ விவாதிக்க விரும்பியோ எழுதுபவர்கள் அடுத்த வகை.

ஒப்புநோக்க இலக்கியத்தேடலுடன் வருபவர்கள் குறைவு. அவர்கள் ஏற்கனவே இலக்கிய அறிமுகம் உடையவர்களாக இருக்கிறார்கள்.

ஆரம்பத்திலிருந்தே நிறைய கடிதங்கள் வந்தன. அதன்பின் கட்டுரைகளுக்குக் கீழே விவாத அரங்கு தொடங்கப்பட்டது. அதில் வாசகர்கள் அவர்களுக்குள் உரையாட ஆரம்பித்தனர். அந்த உரையாடலை ஆக்கபூர்வமாக முன்னெடுக்கும்பொருட்டு விவாதக்குழுமம் உருவாக்கப்பட்டது. சொல்புதிது விவாதக்குழுமத்தில் ஆரம்பகாலத்தில் நிறைய கடிதங்களை எழுதிய ஏறத்தாழ அனைவருமே இருக்கிறார்கள்

இன்று மிகத்தீவிரமாக விவாதம் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு தளம் என சொல்புதிதைச் சொல்லலாம். விவாதங்கள் அத்துமீறாமலிருப்பதனால் மனக்கசப்பில்லாத விவாதம் இங்கே சாத்தியமாகிறது. தினமும் சராசரியாக ஐம்பது கடிதங்கள் வரை அதில் பிரசுரமாகின்றன.

முன்பு எனக்கு வாசகர்கடிதங்கள் எழுதி அறிமுகமான பலர் இன்று குழுமத்தில் எழுதி பழகி தொடர்ச்சியாக எழுதும் எழுத்தாளர்களாக ஆகிவிட்டனர். பலர் எனக்கு தனிப்பட்ட முறையில் நண்பர்களாக ஆகிவிட்டனர். இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டபோது வந்த கடிதங்களை எழுதியவர்களே இன்று விஷ்ணுபுரம் வாசகர்வட்டம் என்ற அமைப்பாகத் திரண்டுள்ளனர். தமிழகத்தின் பெரிய இலக்கிய அமைப்புகளில் ஒன்று இது.

அவர்கள் என் நண்பர்களாகவும் இருப்பதனால் முன்பு போல வாசகர் கடிதங்கள் அதிகம் எழுதுவதில்லை. நேரடி உரையாடலே அதிகம்.

ஆகவே இன்று இணையதளத்தில் வரும் கடிதங்கள் பெரும்பாலும் விவாதக்குழுமத்துக்கு வெளியே உள்ளவர்கள், புதியதாக வருபவர்கள்தான். அப்படியும் தொடர்ந்து வாசகர்கடிதங்கள் வந்தபடியேதான் உள்ளன. முன்பு ஆங்கிலக்கடிதங்களை மொழியாக்கம் செய்து வெளியிட்டேன். ஓர் உரையடலுக்காக. இப்போது எனக்கு அதற்கு நேரமில்லை

ஜெ

முந்தைய கட்டுரைஅயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-1
அடுத்த கட்டுரைஅயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு- 2