மரபு- ஒரு கடிதம்

வணக்கம்.

பனை நொங்கின் உள்ளே குடும்பம் நடத்திய யட்சியின்
கதை நன்றாக இருந்தது. உங்கள் கதைகளில் வரும் பாட்டாக்கள் ஒவ்வொரு அழகு. பஸ்ஸில் பாதை தெரியாத பாட்டா, 100 வயது தாண்டி நாகர் கோவிலின் பொறுமையுடன் டீக் கடை வாசலில் மழையோடு காத்திருந்த பாட்டா, இன்று கதை சொன்ன பொறியியல் பாட்டா எனப் பல வடிவம்.

ஆசை கொஞ்சி, ஊடல் கொண்டு , கெஞ்சி , கெஞ்ச வைத்து, மிரண்டு ,மிரள வைத்து என பல முகம் காட்டி நெஞ்சு கிழித்து தின்னும் யட்சிகள் எங்கும் உண்டு. சில நேரங்களில் யட்சி என உணர முடிகின்றது.பல நேரம் உணர்வதில்லை. கொஞ்சம் வீர பல் தெரிகையிலும், மூடி கிழித்து அகம் காட்டையிலும் யட்சி தரிசனம் உண்டு.

இதெல்லாம் உள்ளுக்குள் ஓடினாலும் தாழம்பூ வாசம் வீசும் நள்ளிரவில் , விளக்குகள் அணைத்து இந்தக் கதை கேட்டால் கொஞ்சம் கிலி பிடிக்கவே வாய்ப்பு உண்டு.

ஆசிரியருக்குத் தொழில் நுட்பம் மேல் உள்ள கோவம் நன்கு துலங்குகின்றது. இந்த பந்தல் வேலை செய்வதைப் புத்தகம் எழுதிப் பதிந்து, அதைப் பத்து பேருக்கு வகுப்பு வடிவில் பகிர்ந்து கொண்டால் அதுவே பொறியியல் படிப்பு. தலை முறை , பாரம்பரியம் என என்னும்பொழுது அறிவிழப்பு
ஏற்படும். அது ஏற்பட்டது. உங்கள் கதையின் வல்லுனரான பாட்டாவுக்கு வாரிசு இல்லை, அவரது அறிவு அங்கேயே இறந்து விடும். அது இழப்பு. தலை முறை, பாரம்பரியம் என்ற வார்த்தைகள் ஒரு பெரும் பொறி என்றே படுகின்றது.

யாருடைய பாரம்பரியம், யாருக்கு பாரம்பரியம் என்றே கேள்வி வரும். களை பிடுங்குவனுக்கும் , கள் இறக்குபவனுக்கும், சுடுகாடு நிற்பவனுக்கும் உள்ளே உள்ள ஆசைகள், பொருளியல் தேடல்கள் இந்த வார்த்தைகள் கொண்டே சாகடிக்கப்பட்டன என்றே நான் நினைக்கின்றேன்.

நிர்மல்

வணக்கம்.

நேற்று தலை முறை பாராம்பரியம் பற்றியெல்லாம் நெக்குருகிக் கடிதம் எழுதி விட்டு வந்தால் இன்று பேராசிரியர் பற்றிய கட்டுரை பார்த்தேன். பின்பு
மத்துறு தயிர் , நாகார்ஜுனர் , அஜிதன், நடராஜ குரு , நித்ய சைதன்ய யதி , நீங்கள், காந்தி ,லாரி பேக்கர் ,அண்ணா ஹசாரே என்று உங்கள் எழுத்துகளில் பல அலை பாயல். நீங்கள் சொல்லும் தலை முறை என்பது குரு வழி தலை முறை.அது பிறப்பின் தலை முறை அல்ல , அறிவின் தொடர்ச்சி. நான் நினைப்பது சரியா?

அப்படி இருப்பினும் பாட்டாவின் அறிவு முடிந்து போனதே என்றும் தோன்றியது. நிறுவன வடிவங்களான மடங்களும், ஆதினங்களும், சிற்பப் பள்ளிகளும் சமயம் சார் அறிவினை , ஆசார சடங்குகளை (தெனாலியின் பால் கதை பூனை வடிவில் என்றாலும் கூட) சிற்ப அறிவினைத் தூக்கிக் காப்பாற்றி விட்டன. ஆனால் பல் வேறு நுட்பங்கள் முறையான நிறுவன வடிவு புரவலர் இல்லாமல் காணாமல் ஆகி விட்டன என்பது வருத்தமானதே.

அறிவுக்கு நிறுவன வடிவம் அவசியம் தேவை. நிறுவனம் ஒரு சேமிப்புக் கிடங்காக அமைகின்றது. அந்த சேமிப்பின் நுகர்வர்களான ஆசிரியர்களும் , மானவர்களும் சிறிது பழுதாக இருந்தாலும் , அதில் இருந்து எழும் ஒரு நல்ல தெறிப்பு ஒரு யுகத்தினை மாற்றக் கூடியதாக இருக்கக் கூடியதே. மேலை நிறுவனக் கூடங்கள் இதை செய்து காட்டி இருந்தன.

இந்திய தத்துவங்கள் மேன்மையானவை. அதன் நுகர்வர்கள் அதை ஆயுத வடிவில் கையாண்டு நில உடமை உலகில் வாழ்ந்திருந்தது போல, தொழில் நுட்பமும் ,அதன் நுகர்வர்களால் பல நேரம் அடக்கு முறை ஆயுதமாகக் கையாளப்பட்டு வருகின்றது. அதையும் தாண்டி ஒரு சிலந்தியைப் போல விடாமல் மானுடம் அனைத்தினையும் தொழில் நுட்ப வலை இணைத்துக் கட்டுகின்றது. இனம் ,மதம், மொழி கடந்து ஒன்றிணைக்க வழி தேடுகின்றது,அந்த இணைப்பின் அதிர்வில்,துடிப்பில் உங்கள் எழுத்துக்களும் ஒரு பகுதியாகின்றது.

எதிர்மறை நுகர்வோரின் குற்றம், பயன்படு பொருளின் குற்றம் அல்ல. அத்வைதம் தீண்டாமையை வளர்க்காது. அத்வைத நுகர்வர்கள் அதை ஒரு அதிகார செயல் பாட்டுக் கருவியாக்கித் தீண்டாமை வளர்க்கப் பயன்படுத்துகின்றார்கள். கோபம் ,ஆசை , அதிகார வேட்கை போன்ற புற காரணிகள் மானுடம் முழுதும் உண்டு. எந்த தத்துவ வடிவிலும் இவை ஒட்டுண்ணியாக படர்ந்து அதன் உயிர் குடிக்கும் வலிமை உள்ளவை. எனவே இதை காரணம் காட்டி தொழில் நுட்பம் அனைத்தையும் நிராகரிக்க இயலாது என்றே எண்ணுகின்றேன்.

காந்தியம் என்பது தொழில் நுட்ப எதிர்ப்பல்ல. காந்தியம் ஒரு பகுத்தறிவு வழி. அது அதிகார செயல்பாட்டினை நெறி செய்கின்றது. அதிகாரக் குவிப்பினை எதிர்க்கின்றது. அதிகார பீடத்தின் உயரத்தினை அது குறைத்து துரைமார்களை, பயனர்களுக்கு அருகில் கொண்டு வந்து அதன் வழி ஒரு தானியங்கி மக்கள் சார் அதிகார அமைப்பினை வலியுறுத்தியது. காந்தியம் ஒரு எதிர் அதிகார செயல் பாடு என்று கொள்ள வேண்டுமென்றே எண்ணுகின்றேன். தொழில் நுட்பம் அதிகார அமைப்பின் முதலீட்டு வலிமையின் காரணமாகத் தனது பிறப்பின் துவக்கத்தில் அதிகார மட்ட அளவில் அதிகம் உபயோகப் படுத்தப்படுகின்றது. பின்னர் அதிகாரம் தனது முதலீட்டினைக் கூட்ட தொழில் நுட்பத்தினை சந்தை செய்கின்றது. சந்தைப்படுத்தல் வழி தொழில் நுட்பம் ஒரு சாமான்யர் பயன்பொடு பொருளாகி வருகின்றது. பின்னர் அதிகாரம் அதன் அடுத்த கட்ட தொழில் நுட்பம் நோக்கி நகர்கின்றது. இங்கு சாமான்யப் பயனர் தன் சூழல் , குடும்பம் , தன் பிள்ளைகள் சார்ந்து ஒரு அடிப்படை நுகர்வு விழிப்பு நிலை கொண்டிருந்தால் அதிகாரம் தனது தொழில் நுட்பத்தினை சந்தை செய்கையில் இன்னமும் பொறுப்புணவுடன் சந்தையைக் கையாளலாம்.

காந்தி சொல்லிய கிராமம் என்பது இந்திய அளவில் மட்டும் அல்லாமல் உலக அளவில் பொதுமை செய்யலாம். கிராமியம் என்பது ஒரு அடிப்படை அலகு. அங்கு அதிகாரம் பகிர படுகின்றது. நிர்வாகம் கூட்டு தளத்தில் நடக்கின்றது.சூழல் எதிர் காலம் சார்ந்த சந்தை நெறி முறைகள் மக்களால் மக்களுக்கென உண்டாக்க படும். வரி வசூல்,வரி செலவு இரண்டும் அந்த சிறு தளத்தில் இருந்தே விரிகின்ரது. அதிகாரம் கீழிருந்து மேல் செல்லும்,
மேலிருந்து தொண்டைக்குள் திணிக்க படாது. நாகர் கோவில் மாவட்டம் தனக்கான நிதி வசூல் செய்து , அந்த வர்வுக்குள சாலை, சாக்கடை , பள்ளி,கல்லூரி , நகர நிர்வாகம் செய்து கொள்ளலாம். மாவட்ட இடையிலான வணிக விதிகள் மாநில அளவிலும், அரசியல் சட்ட ரீதியிலான விதிகள் தேசிய அளவிலும் பேணப்படும். இது கிட்டத்தட்ட அமெரிக்க வாழ்வில் நான் காண்பதே. இதன் சிரமம் என்னவென்றால் தர்மபுரி, பாப்பாபட்டி, உத்தப்புர  மதில் சுவர், ஹரியானாவின் காப் பஞ்சாயதுகள் போன்றவையே. அதிகாரம் சிறிய அளவாகும் பொழுது இந்த சிறிய அளவுகளில் கண்ட எதிர் மறைக் கூறுகள் அதிகார விளிம்புகளை விடாது. காந்திய வழி இதை உரையாடல் வழி தீர்க்க சொல்கின்றது. அந்த உரையாடலுக்கு நம்மைத்  தயார் செய்து கொள்ளப் பெரும் போராட்டம் தேவை படுகின்றது.

சாதியை அழிக்க ஒரு பெரிய ஆழி ரப்பரைத் தேடும் கூட்டத்தில் நானும் இருந்தேன். ஆனால் ஒரு புண்ணியம் இல்லை. சாதியை நான் என் அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தவில்லை. அது மட்டுமே நான் செய்ய முடிந்தது. சாதி பேசுவது அவர்களுக்குப் பொருள் ரீதியாக , சமூக ரீதியாகப்
பயனில்லாத பொழுது அதைக் கடக்க முடிந்தது. என் தந்தை அதைச் செய்ய இயலாது. ஏன் என்றால் சாதி அவர்களுக்கு பிறப்பு ,இறப்பு, காது குத்தல்,பண்டிகை கொண்டாட்டம் , குல சாமி என வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உண்டு. அவரால் சாதியை வெறுத்துப் பேச முடியும். ஆனால் லௌகீக வாழ்வில் தாண்ட முடியாது. தாண்டினால் உறவினர் இழக்க நேரிடும். அது நடை முறை அல்ல.

நான் மத்திய தர வகுப்பில் இருந்து என் சொந்த அனுபவதில் இருந்து சொல்கின்றேன். இந்த சடங்கு, சம்பிரதாயங்கள் தாண்டிய நுகர்வு சார் புற வாழ்வில் சாதி தேவைப்படுவதில்லை. சினிமா , பொது கோவில்கள், ரயில் டிக்கெட் , சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் யாரும் சாதி பார்ப்பதில்லை. எனவே சடங்குகளைக் கைவிட்ட பொது வாழ்வு மட்டும் கொண்ட ஒரு இடத்தில் மட்டுமே சாதி இல்லாமல் போகும். அது நடை முறை அல்ல என்றே நினைக்கின்றேன்.

எனவே சாதியை ஒழிப்பதை விட, சாதியை அரசியல் செய்து அதன் நடுவில் உள்ள ஏற்ற தாழ்வினை ஒரு பொது விவாதமாகி நீர்த்துப்போக செய்தால் ஏற்றத்தாழ்வினை அகற்றிட முடியுமா என்று ஒரு கேள்வி உள்ளுக்குள் உண்டு. அரசியல் செய்யும் பொழுது உள் விவாதங்கள் அரசியல் சட்டம் என்னும் பொது சட்டத்துக்குள் நடக்க வேண்டும். அதற்குக் குடிமை சமூக உணர்வும், நீதி துறையும் ,காவலமைப்பும் வேண்டும். இன்னும் இந்த இடம் தெளிவாகவில்லை. ஆனால் குடிமை உணர்வு சார் அரசியல் சட்ட விழிப்புடைய சமூகமே சாதி வழி உயர்வு தாழ்வுக்கு மாற்று என்பது தெளிவு. சாதியை அழிக்க அதிரடியான அழி ரப்பர் இல்லை என்பது திண்ணம்.

நிர்மல்

முந்தைய கட்டுரைஅயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு- 2
அடுத்த கட்டுரைஅயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-3