பிழை -கடிதங்கள்

அன்புள்ள ஜெ

பிழை படித்தேன். சமீபத்தில் நீங்கள் எழுதியவற்றில் முக்கியமான சிறுகதை அது. ஒரு கலைப்படைப்பின் சிருஷ்டியைப் பார்ப்பது என்பது கடவுள் இந்தப்பிரபஞ்சத்தை உருவாக்கியதைப் பார்ப்பதற்கு சமானமானது என்று ஒரு கூற்று உண்டு. அந்த உணர்ச்சியை அடைந்தேன். கலைப்படைப்பு உருவாவதைப் பார்த்தவன் கடவுளையே பார்த்தவன்.அவன் எவ்வளவு பெரிய ஒரு சிருஷ்டிகர upheaval நடுவே இருக்கிறான் என்பதை அவன் காணும் இடம் அது. அது அகங்காரத்தை அழித்துவிடுகிறது.அதைத்தான் ரானே சொல்கிறார் பெரிய விஷயத்தின் அருகே ஈயாகவேனும் பறந்துகொண்டிரு என்று.

அந்த சிருஷ்டிகரம் என்பது ஒன்றும் ஒரு complete circuit அல்ல. அது perfection வழியாக செயல்பட்டுக்கொண்டிருப்பதில்லை. அது அதன் பிழைகள் வழியாகவே செயல்படுகிறது. இல்லையா? மனிதனே இயற்கையில் நிகழ்ந்த ஒரு பிழையின் விளைவுதான். ஆமாம், பிழை வழியாகத்தான் கடவுளே தெரிகிறார்.

இந்தக்கதையை நான் வாச்சோவ்ஸ்கி சகோதரர்களின் மேட்ரிக்ஸ் சினிமாவரிசையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பேன். [நான்தான் அந்த டிவிடி தொகுதிகளை உங்களுக்கு வாங்கி அனுப்பினேன். ஞாபகமிருக்கும் என்று நினைக்கிறேன்] அதில் oracle என்பது ஒரு பிழை. மேட்ரிக்ஸின் சிருஷ்டிகர்த்தர் [கடவுள்?]அவரை மீறி நடக்கும் பிழைகளை அந்த மென்பொருள் வழியாகத்தான் புரிந்துகொள்கிறார். அதில்தான் அவரையும் மீறிய அவரது சிருஷ்டிகரம் வெளிப்படுகிறது

மேட்ரிக்ஸில் அதன் சிருஷ்டிகர்த்தர் சொல்லும் இந்த வசனம் ஒரு உபநிஷத் வரி போன்றது. perfection என்பது சிருஷ்டியின் அப்பா. பிழை என்பது அதன் அம்மா! எவ்வளவு மகத்தான கற்பனை இல்லையா?

The first Matrix I designed was quite naturally perfect, it was a
work of art – flawless, sublime. A triumph equalled only by its
monumental failure. The inevitability of its doom is apparent to
me now as a consequence of the imperfection inherent in every
human being. Thus, I redesigned it based on your history to more
accurately reflect the varying grotesqueries of your nature. However,
I was again frustrated by failure. I have since come to understand that
the answer eluded me because it required a lesser mind, or perhaps a
mind less bound by the parameters of perfection. Thus the answer was
stumbled upon by another – an intuitive program, initially created to
investigate certain aspects of the human psyche. If I am the father
of the matrix, she would undoubtedly be its mother.

கிருஷ்ணன்

*

அன்புள்ள ஜெயமோகன்

பிழை வாசித்தேன். அற்புதமான கதை. ஆதமும் ஏவாளும் கடவுளின் கச்சிதமான உருவாக்கங்கள். ஆனால் பாவத்தின் கனியை ஆதம் உண்டது ஒரு பிழை. அங்கேதான் எல்லாமே ஆரம்பிக்கிறது. கடவுளும் அதை விரும்பியிருப்பார் இல்லையா?

எட்வின் சாம்

*

ஜெ,

பிழை நேற்று படித்தேன் . மனிதனின் மிகப் பெரிய வரம் கடவுள் அவனிடம் இருந்து மறைக்கப்பட்டுள்ளார் .

ஒரு சிறு பிழை , குழந்தைக்கு வைக்கப் பட்டுள்ள திருஷ்டி போல .
பிழைகளே பிரபஞ்சத்தின் ஆயிரம் சாத்தியங்கள் .

அசோக் சாம்ராட்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

பிழை சிறுகதை நெகிழவைக்கும் சிறு தருணங்களின் மகத்துவத்தை அழகாக சொல்கிறது. நாம் அறியாமலோ அல்லது நம் செயற்பாட்டை மீறியோ சில விஷயங்கள் நம் வாழ்வில் நடப்பதுதான். நாம் பிழையாக அறிந்த அந்த விஷயங்கள் நமக்கு நற்பலனை அளிக்கும் போது அந்தப் பலன் நிலையிலிருந்து பார்க்கையில் அது அதிர்ஷ்டமாகவோ அனுகிரஹமாகவோ பார்க்கப்படுகிறது.

இப்படி நாம் எதிர்பார்க்காத ஒரு பலன் நம்மை அடையும்போது உண்மையில் நாம் அடக்கமாகவும் பணிவாகவும் அமைதியாகவும் உணர்கிறோம். திடீரென்று இந்த அகிலத்தின் பேருருவம் நம் கண்முன்னே தெரிகிறது. இந்த அண்டத்தின் செயற்பாட்டில் நாம் ஒரு சிறு துரும்பாக நம்மை நாமே வெளியிலிருந்து அவதானிக்கும் ஒரு பார்வை கிட்டுகிறது. அது ஒரு உன்னத நிலை. அறிந்தவர்கள் அந்த தருணத்தின் உணர்வை மறு சுவைப்பு செய்யமுடியும். ரானே அந்த கதை சொல்லிய பின் உணரும் உணர்வை வார்த்தைகளில் சொல்லமுடியாதவை. கதை கேட்பவரும் அந்த உணர்வை அறியாதவர் போல் சித்தரிக்கபடுவதால் அவராலும் அதை புரிந்துகொள்ளமுடிவில்லை. உணர்வை அறிவால் பார்க்க முனைகிறார். அது அறிவுக்கு புலப்படாதது.

கலை உலகில் நுண்ணுணர்வு மிகுந்தவர்கள் என்பதால் அந்த நிகழ்வை நோக்கிப் பார்க்கும் பார்வை அதிகப்படுகிறது. இதே தருணங்கள் நம் தொழிலிலும் அலுவல்களிலும் வியாபாரத்திலும் நிகழும்தான். ஆனால் அந்த நிகழ்வுகளை இந்த கோணத்தில் பார்க்க முடிவதில்லை.

இந்த நிகழ்வின் மறு உருவம்தானே நாம் சிறந்ததாக நினைத்து உருவாக்கும் ஒரு விஷயம் அல்லது செய்யும் ஒரு செயல் நாம் எதிர்பார்க்கும் பலனை அளிக்காமல் போவது. அதுவும் கடவுள் தன்னை வெளிப்படுத்தும் தருனமாகத்தான் பார்க்கப்படுகிறதா? சில நேரங்களில் கலைப்படைப்பாளிகள் சொல்வது போல் நான் நன்றாகத்தான் செய்தேன் ஆனால் ஏன் வெற்றியடையவில்லை என்று தெரியவில்லை.

இந்த கதையிலும் வேறு விதமாக பார்க்க வாய்ப்பிருக்கிறது. அந்த ஒரு காட்சி வெற்றிபெற்ற காரணத்தின் அடிப்டையில் தான் ஒரு உன்னத காட்சியாக பார்க்கபடிகிறதா என்பது. எனனில் நீங்கள் நம் மழை பயணத்தின் போது மொனோலிசா சித்திரம் பற்றி பேசியது நினைவிருக்கிறது. அந்த சித்திரத்தை ஒரு சிறந்த சித்திரமாக மதிப்பிடமுடியாது என்று கூறியிருந்தீர்கள். ஆனால் உலகமே அந்த சித்திரத்தைப்பாராட்டுகிறது. அந்த உன்னத படைப்பு என்ற ஒரு தருணம் பார்ப்பவரின் பார்வையில்தானே இருக்கிறது? அது உண்மையில் ஒரு தனி மனித உணர்வுதானே? அதிகமானவர்கள் ஒரு தருணத்தை அல்லது படைப்பை உன்னதமாக பார்ப்பதினால் அந்த படைப்பு உன்னத படுவதில்லை. சில நேரம் பல காலம் ஒரு படைப்பு வெற்றி பெறாமல் திடீரென்று பெருமை படும். அந்த படைப்பை எப்படிப்பார்ப்பது?

அன்புடன்

திருச்சி வே விஜயகிருஷ்ணன்

அன்பின் ஜெ எம்,

பிழை படித்து முடித்த கையோடு இந்த மடல்.

மாபெரும் வரலாற்றுத் தருணங்களில் உடனிருப்போர், பின்னாளில் அமைதியாக அந்தக்கணங்களை அசைபோட்டு நினைவுகூரும்போதுதான் அவற்றின் மகத்துவம் புரிகிறது.அவற்றின் அர்த்தமும் கண்ணுக்குப் புலப்படுகிறது. //மகாத்மா காந்தி குழந்தையாகப் பிறக்கும்போது அவரைப்பார்த்த ஒருத்திக்குப் பின்னாளில் அவரைப்பற்றி நினைத்தால் எப்படி இருக்கும்//என்னும் வரிகளில் பெரிதும் நெகிழ்ந்தேன்.சரித்திரத்தின் மீது அமர்ந்து ஆரோகணிக்கும் ஈக்களுக்கு அந்தச் சரித்திரத்தின் சுவையை/மேன்மையைத் தாமதமாகத்தான் உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஒரு நேரத்தில் பெரும் பிழையாகத் தோன்றியதைக் கூடக் காலம் செல்லச் செல்ல வெறித்தனமாக நேசிக்க முடிவதாகக் கதையில் நீங்கள் காட்டியிருப்பதுதான் எத்தனை பெரிய மானுட உண்மை? அதன் வழி, புரிந்து கொள்ளமுடியாததும் அர்த்தமற்றதுமான இந்த உலகியல் வாழ்க்கையின் மாபெரும் புதிர் ஒன்றையே தொட்டுக் காட்டி விட்டீர்கள் என்றே தோன்றுகிறது. குடும்ப வன்முறையிலேயே பழகிப்போன பெண் ஒருத்தியின் ஆழ்மனம் காலப்போக்கில் அவளையும் அறியாமல் அதை விரும்பத் தொடங்கிவிடும் அதிசயத்தை நான் பழகிய பெண்கள் சிலரிடம் கண்டு வியந்திருக்கிறேன்.கிட்டத்தட்ட அது போன்றதே இந்த மனச்சிக்கலும்….

அன்புடன்,
எம்.ஏ.சுசீலா
புதுதில்லி
(தமிழ்ப் பேராசிரியர்-பணிநிறைவு,
பாத்திமாக் கல்லூரி,மதுரை)
www.masusila.com

முந்தைய கட்டுரைஅம்பேத்கரின் தம்மம்- 1
அடுத்த கட்டுரைஅம்பேத்கரின் தம்மம் 2