தேவதேவன் ஒரு பேட்டி

தேவதேவன்

 

நவீன தமிழ்க் கலைஞர்களில் தனித்துவம் மிக்கவர் தேவதேவன். தனது கவிதைகள் மற்றும் கவிதை சார்ந்த உரையாடல்கள் மூலம் நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழ்க் கவிதைக்கு வளம் சேர்த்திருப்பவர். இயற்கையின் மீது அபரிமிதமான காதல் கொண்ட தேவதேவன், குழு சார்ந்தும் சர்ச்சைகள் மூலமும் தங்கள் பெயரைத் தக்க வைத்துக்கொள்ள முயலும் தற்காலப் படைப்பாளிகளுக்கு மத்தியில், தொடர்ச்சியான தனது செயல்பாடு மற்றும் கவிதைகள் மூலம் மட்டுமே தனக்கான இடத்தை நிறுவியிருப்பவர். இதுவரை தேவதேவன் கவிதைகள் 12 தொகுதிகளாக வந்துள்ளன.

தேவதேவன் கவிதைத் தொகுதிகள்; குளித்துக் கரையேறாத கோபியர்கள் (1976), மின்னற் பொழுதே தூரம் (1981), மாற்றப்படாத வீடு (1984), பூமியை உதறியெழுந்த மேகங்கள் (1990), நுழைவாயிலேயே நின்றுவிட்ட கோலம் (1991), சின்னஞ்சிறிய சோகம் (1992), நக்ஷத்ரமீன் (1994), அந்தரத்திலே ஓர் இருக்கை (1995), நார்சிஸஸ் வனம் (1996), புல்வெளியில் ஒரு கல் (1998), விண்ணளவு பூமி (2000), விரும்பியதெல்லாம் (2002), மேலும் கவிதை பற்றி உரையாடல் (1993, கட்டுரை); அலிபாபாவும் மோர்ஜியானாவும் (1999, நாடகம்); தேவதேவன் கதைகள் (2002) ஆகிய நூல்களும் வெளியாகியுள்ளன.


தீராநதி: நீங்கள் கவிஞராக உருவானதற்கான அடிப்படைப் பின்புலங்கள் மற்றும் சிறுவயது அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்கள்?

தேவதேவன்: நான், ஒரு பிரச்சினைக்குரிய குழந்தையாகவே பிறந்தேன். கிளர்ச்சியற்ற, உற்சாகமற்ற, வாய்ப்பேச்சு அரிதான ஒரு குழந்தையாக இருந்தேன். தாங்கிக் கொள்ள முடியாத துயராக அது இருந்தது. தன்னை விடுவித்துக் கொள்வதற்கும் பிறருக்குப் புரியவைப்பதற்கும், தன்னைப் பற்றியே அறிந்துகொள்ளாத வகையிலுமான துயராகவும் அது இருந்தது. கல்வி மற்றும் வாசிப்பு தொடரும் முன்னான சிறுவயதிலேயே ‘நான் யார்?’ எனும் கேள்வி, என்னை ஆட்கொண்டது. நல்லவேளையாக அசௌகரியமான ஏழ்மைச் சூழலிலும், வேகமாக எழுதப் படிக்கத் தெரியாத எனது தந்தை, புத்தக வாசிப்பில் மிகுந்த அக்கறை காட்டியவாறு இருந்தார். ஒவ்வொரு அந்திப் பொழுதிலும், சாயங்காலம் தொடங்கி இரவு வரை, சமயங்களில் நள்ளிரவு வரையும், சிறு மண்ணெண்ணெய் விளக்கொளியில், எனது சகோதரி நாக்கு உலர்ந்து போகும்வரை புத்தகங்கள் வாசிக்கும் ஒலி, எங்கள் வீட்டில் நாள் தவறாமல் கேட்டுக் கொண்டேயிருந்தது. இதனால், என் வாசிப்பைத் தொடங்குவதற்கு முன்னேயே கணிசமான புத்தகங்களை, எனது சகோதரியின் குரல்மூலம் நான் முழுமையாகவே வாசித்து விட்டிருந்தேன். இதனால், அப்பருவத்தில் மனித வாழ்க்கையை நேரடியாக அறிந்து கொள்வதற்கு முன்னமேயே, புத்தகங்கள் மூலம் அதனை அறிந்தவனாகவும் சிந்திக்கிறவனாகவும் ஆகிவிட்டேன். வகைதொகை, தேர்வு அறியாதபடியான அந்த வாசிப்பில், எப்போதுமே மேலான ஏதோவொன்று என்னை ஈர்த்தபடியே இருந்தது. ஒரு கட்டத்தில் மனித வாழ்க்கையில் புத்தகங்களின் இடத்தை நான் அளவு கடந்து சிலாகித்தேன். பிற்காலத்தில் ‘கவிதை பற்றிய நூலில் அதைப் பதிந்தும் வைத்தேன். எனது இளம் பருவத்துக் கனவுகளில், போர் மேகங்கள் சூழ்ந்த பிரமாண்டமான வானத்தையும், மூச்சடக்கிக் கொண்டதுபோல், மக்கள் அரவமற்றுப் பதுங்கிக் கொண்டிருக்கும் வீதிகளின் வெறிச்சோடிய வெளிகளையும் அனுபவத்திருக்கிறேன். “ஜப்பான்காரன் குண்டுபோட்ட சமயம். அவள் என் வயிற்றில் ஏழு மாதம்” . என் இயல்பான உரையாடல்களையும் வெளியே நான் கவனித்துள்ளது என் நினைவில் உள்ளது. இன்று என் நினைவில் நிற்கும் இளம் பருவத்து வாழ்க்கை என்பது, இதுபோன்ற சிறுசிறு மனப்பதிவுகளாக மட்டுமேயாக உள்ளது.

சொந்த வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கும் கல்விக்கும் போதிய வசதியில்லாத சூழலில், வீணான சில அலைக்கழிவுகளுக்கும் தடுமாற்றங்களுக்கும் ஆளாகவிட்டமைதான் என் வாழ்க்கையில் நிகழந்த பெரும் இழப்பு என்று கருதுகிறேன். மற்றபடி, ரொம்ப இளமையிலேயே எனது சீரான பயணத்தை, குறிப்பாக, கவிதை வாழ்வைத் தொடங்கிவிட்டேன். எனது பள்ளிப் பருவச் செயல்பாடுகள் மற்றும் உறவுகளில் ஒரு கவிஞனாகவே எனது ஆளுமை வெளிப்பட்டது. நாளடைவில், அதே மனிதர்களும் சமூகமும்தான், அஞ்சியும் தங்கள் மாமூலான அவசர வாழ்க்கையாலும் ஒருவனைத் தனிமைப்படுத்தியும் விடுகின்றனர். அப்பொழுதுதான் நான் தீவிரமாகக் கவிதை எழுதத் தொடங்கியிருக்க வேண்டும். அது தனிமை நீக்கம் வேண்டிய ஒரு விண்ணப்பமா அல்லது விடாப்பிடியான தீரமா? அதன் உள்ளுறை இலட்சியத்தை, அதன் முழுமையான பொருளை ஒருவர் உணரத்தான் முடியுமேயொழிய அத்தனை எளிமையாக சொற்களால் விளக்குதல் அரிது.


தீராநதி: உங்களைக் கவர்ந்த கவிஞர்கள் யார்?

தேவதேவன்: முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியவர்கள் வில்லியம் பிளேக், ராபர்ட் ஃபிராஸ்ட், எமிலி டிக்கின்ஸன், வேர்ட்ஸ்வொர்த், தாகூர் ஆகியோர். மேலும், எல்லாப் பெருங்கவிஞர்களும் என்னைக் கவர்கிறார்கள் என்றே சொல்லலாம். அந்த மாதிரி நான் விழுந்து விழுந்து வாசிப்பேன்.


தீராநதி: குறிப்பாக உங்களைப் பாதித்த கவிஞர்கள் என்று யாராவது உண்டா?

தேவதேவன்: அப்படிச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்வது சரியாகவும் இருக்காது. நான் வாசித்த எல்லாப் பெருங் கவிஞர்களும் என்மீது தங்கள் பாதிப்பை அல்லது ஈர்ப்பை அளித்திருக்கிறார்கள். அவர்களது எல்லாப் படைப்புகளாலும் , நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ நான் பாதிப்படைகிறேன் என்றே சொல்லவேண்டும். மட்டுமல்லாமல், வாழ்விலும் நான் எதிர்கொள்ளும் எல்லாவற்றாலும் பாதிப்படைந்து விடுவதே எனது பிரச்னையாக உள்ளது. ஆனால், உடனுக்குடன் அனைத்தும் மறந்து விடுகிறது. என்றாலும், அதன் சாராம்சம் போலும் ஒரு கனல் அல்லது ஒரு துயர் என்னுள் தங்கிவிடுகிறது என நினைக்கிறேன். அனுபவங்கள், ஞாபகங்கள் போன்றவற்றை ஒரு சுமையென எண்ணியது போல, எப்போதுமே என் மூளை உதறிக்கொண்டே வந்துள்ளது.

தீராநதி: பிரமிளுடன் அடிக்கடி நீங்கள் ஒப்பிடுகிறீர்கள். தமிழ்க் கவிதை உலகில் பிரமிள் கவிதைகளின் இடம் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?

தேவதேவன்: இன்றைய தமிழ்க் கவிதையின் முன்னேடி பிரமிள்தான். பிற எழுத்தாளர்கள், கவிஞர்களைவிட, தன் காலகட்டத்தின் தார்மீக எழுச்சியால் ஆட்கொள்ளப்பட்ட ஆளுமையும்கூட அவர். தன் காலத்தின் தத்துவச் சிக்கல்களைத் தீர்த்துக்கொண்டு, மரபையும் நவீனத்துவத்தையும் செரித்துக் கொண்டு முன்னோக்கிப் பாயும் வேகம், அவருடைய கவிதைகளில்தான் துவக்கம் கொண்டுள்ளது.


தீராநதி: தற்காலத் தமிழ்க் கவிஞர்களில் நீங்கள் நெருக்கமாக உணர்கிற கவிஞர்கள் யார், யார்?

தேவதேவன்: கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான எனது பெரும் தொகுப்பு நூலின் முன்னுரையில் அவர்களைக் குறிப்பிட்டிருக்கிறேன். அபி,ராஜ சுந்தரராஜன், சு.வில்வரத்தினம், யூமா.வாசுகி, ஜெ.பிரான்ஸிஸ் கிருபா இவர்கள், தற்காலக் கவிஞர்களில் முக்கியமானவர்கள் என்பதே சுருக்கமான எனது மதிப்பீடு.

 

தீராநதி: ஒரு கவிதையை எப்படிக் கட்டமைத்து எழுதத் தொடங்குகிறீர்கள்? கவிதையை எழுதத் தொடங்குவதற்கு முன்பாக உங்கள் சிந்தனையோட்டம் எப்படி இருக்கிறது?

தேவதேவன்: வாழ்வு நம் மீது செலுத்துகிற வன்முறையாலோ, அபூர்வமான தொடுகையாலோ உந்தப்பட்டே எல்லாக் கவிஞர்களும் கவிதை எழுதுகிறார்கள் என்பது என் அனுமானம். கவிதை எழுதத் தொடங்குவதற்கு முன், என் முன்னாலோ அல்லது அகத்துள்ளோ இருப்பது ஓர் ஆழமான துயரம்: அடிக்கடி என் மனம் வந்து சிக்கிக் கொள்கிற பாதாளம். இதனை ஒத்திசைவுக்கு ஏங்கும் ஆன்மாவின் வேதனை என்றோ, பேரொழுங்குக்கான தவிப்பு என்றோ, மனிதனின் முக்கியமான ஒரு ஜீவதாதுவில் நிகழும் கொந்தளிப்பு என்றோ நாம் கவிதை பாடலாம்தான். அந்தக் கொந்தளிப்பைத்தான் நாம் மொழிபெயர்க்கிறோம். ஒவ்வொரு கவிதையும் அதனதன் கால, இட பிரச்னைகளுக்கேற்ப தன்னைத்தானே கட்டமைத்துக் கொள்கிறது. ‘துயரமான இந்த இரவில் ஒரு கவிதை எழுதலாம்’ என்ற நெருடாவின் வரி, ஞாபகத்துக்கு வருகிறதல்லவா?


தீராநதி: உங்கள் முதல் தொகுப்பான, ‘குளித்துக் கரையேறாத கோபியர்கள்’ பெரும்பாலும் அழகியல் தன்மையுடையதாய் இருந்தது. ஆனால், இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘மின்னற் பொழுதே தூரம்’ கொள்கை ரீதியான ஒரு உரைநடைக்குள் செல்வதாய்த் தோன்றுகிறது. இந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது?

தேவதேவன்: முதலில் இங்கே நான் ஒரு விபர உண்மையைத் தெளிவாக்கிக் கொள்ளவேண்டும் என நினைக்கிறேன். எழுபதுகளின் துவக்கத்தில் நூல் வெளியீட்டு முயற்சியை நான் மேற்கொள்ளும் தருவாயில், என் கையிலிருந்தது மொத்தம் நூற்றி நாற்பத்தெட்டுக்கும் மேற்பட்ட சில கவிதைகள். இவற்றையே இரு கூறுகளாக வகைப்படுத்தி, இரு தொகுப்புகளாக்கினேன். ஒன்று: ‘மின்னற் பொழுதே தூரம்; மற்றது ‘குளித்துக் கரையேறாத கோபியர்கள்’. இவற்றில் எது முதல், எது இரண்டாவது என்று கணக்கிடுவது சரியானதல்ல. பிரசுர ரீதியில் மாத்திரமே ‘குளித்துக் கரையேறாத கோபியர்கள்’ முன்னதும், ‘மின்னற் பொழுதே தூரம்’ 1970களின் துவக்கத்திலேயே வெளிவந்திருக்க வேண்டியது. அதனையே முதலில் பிரசுரிக்க நினைத்து, முயன்று, அது எதிர்பாராத அசம்பாவிதங்கள் காரணமாக வெகு நீண்ட காலதாமதத்திற்குள்ளாயிற்று. அந்த இடைவேளையில்தான், ‘குளித்துக் கரையேறாத கோபியர்கள்’ தொகுப்பை வெளியிட்டேன். அதிலிருந்தும் ஐந்து ஆண்டுகள் கழித்தே, 1976இல் ‘மின்னற் பொழுதே தூரம்’ வெளியானது. இரண்டுமே ஒரே காலத்தில், ஒரே பேனாவால், ஒரே மையால்தான் எழுதப்பட்டுள்ளது.

என் கவிதைகள் கொள்கை ரீதியான உரைநடைக்குள் செல்கிறது என்ற மதிப்பீடும் தவறானது. ‘மின்னற் பொழுதே தூரத்’திலுள்ள ‘வியர்த்த போதம்’, ‘வர்க்க போதம்’, ‘குற்ற போதம்’ போன்ற கவிதைகளை ஒரு சேர வாசித்தால், இது புரியும். அத்தொகுப்பிலேயே உள்ள ‘இலட்சியவாதிகளுக்கு’ என்ற கவிதை, எல்லாவித கொள்கை, கருத்தியல், இலட்சியங்களாலும் மானுட வாழ்க்கை கந்தலாகும் கோலம் அறிந்து, அதைத் தீவிரமாய் அறிவிக்கும் கவிதை… இக் கவிதை மிகமிகச் சிறந்த கவிதை என்று பிரமிளால் சுட்டப்பட்டது. கவித்துவத்தைப் பொறுத்தவரை ‘குளித்துக் கரையோறாத கோபியர்க’ளில் தொடங்கி, அது இன்றுவரை என்னிடம் மாறாத ஒரு கதியில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று எண்ணுகிறேன். ‘குளித்துக் கரையேறாத கோபியர்க’ளில் ஆங்காங்கே மரபுக் கவிதையின் யாப்பொலி உண்டு. யாப்பொலி, நம் உணர்வினைப் பிசிறின்றி வெளிப்படுத்தும்போது மாத்திரமே செய்யுளிலிருந்து தாவிக் கவிதையாகிறது. யாப்பை நாம் உதறுவதற்கும், பேச்சொலியைச் சார்வதற்கும் எது உயர் நியாயமாக இருந்ததோ, அதுவேதான், கவிதை உரைநடையைச் சார்வதற்கும் சமயங்களில் பொருந்தக்கூடியது என்பதே எனது அனுபவமாகும்.

 

தீராநதி: தங்களது கவிதை உலகம் எளிமையானதாகவும் அதே சமயத்தில் அசாதாரணமான கவித்துவப் பொதுமை உடையதாகவும் அமைகிறது. எப்படி இதனைச் சாத்தியப்படுத்துகிறீர்கள்?

தேவதேவன்: உங்கள் அவதானம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கவிதை, ஒரு சொல் விளையாட்டோ, வெறும் அழகியல் மாத்திரமோ அல்ல; அது தன்னுள் கொண்டிருக்கும் இலட்சியம் அபரிமிதமானது. முதலில் அது அவன் வாழ்வில் ஒரு புரட்சிகரத்தை உண்டாக்கி விடுகிறது. பின்னர் அதன் அழகியல், புனைவின்றியே ஒளிரத்தக்க பெருங்காட்சியாகவும் கண்கூடான ஒரு செயல்பாடாகவும் திகழ்கிறது. முதலில் கவிதையில் வெளிப்படுவது நமது ஆளுமைதான் என்று தெரிந்து கொண்டோமானால், நாம் நமது ஆளுமை வளர்ச்சியில் நாட்டம் கொள்ளத் தொடங்கிவிடுவோம். ஆளுமை வளர்ச்சி என்பது இடையறாத மெய்மையறிதலன்றி வேறில்லை என்ற நிலைக்குக் கொண்டுவந்து விடும். ஆளுமையின்மையெனும் பேராளுமை என்றும் நாம் அந்நிலையை சொல்லத் தகும். அப்போது நம் புறஉலகில், அகத்திலும்தான் நாம் எதைக் காண்போம்? புனைவுகற்ற எளிமையும், மானுடத்திற்கே பொதுவான மெய்மைகளையும்தானே.

 

தீராநதி: உங்களது கவிதைகளில் துறவுத்தன்மையும் ஆங்காங்கே சிறிதளவில் காணப்படுகிறது. இது குறித்து உங்கள் பதில் என்ன?

தேவதேவன்: கடினமான ஒரு சாதனை என்பது, நமக்கு விருப்பமானவற்றை எல்லாம் விட்டுவிலகி இருப்பதுதான். இதுதானே துறவு பற்றிய நமது பொதுப் புத்தியிலுள்ள படிமம்? ஆனால், துறவு பற்றிய சரியான சிந்தனை அல்ல அது. மெய்யான துறவு என்பது, எவ்வித இழப்புணர்வும் இல்லாத ஒரு பெருநிலை. மெய்மையை நோக்கியவாறு பொய்மைகளைக் களைதல், ஒரு போர் வேட்கையின் முன் சிறுசிறு விருப்பங்கள் உள்ஒடுங்கிப் போதல். இது மதவாதிகளின் அனுஷ்டானங்களில் உண்டாவதில்லை. இப்பெருநிலைக்குள் எல்லாவித உலக சுகங்களும் புலனின்பங்களும் இருக்க முடியும். ஆனால், தன்மயமான விருப்பங்களின் இன்பத் தேட்டங்களில் அச்சமும் பதற்றமும், போட்டியும் பொறாமையும், சச்சரவுகளுமே சாத்தியம். மதவாதிகளுடையது தன்மயமற்றது என்று சொல்வதற்கில்லை. துறவு என்பது கவிதையோடும் அழகோடும் நெருங்கிய தொடர்புடைய ஒரு சொல். ஆன்மிகத்தை ஆபாசப்படுத்துவிடுகிற மதவாதிகளாலேயே துறவு என்ற சொல்லும் ஆபாசப்படுத்தப்பட்டு விடுகிறது. கவிஞனின், மனிதனின் தன்னைத் துறந்து யாவுமாகி நிற்கிற ஏகாந்த நிலையே, பெருநிலையும் துறவு நிலையும் ஆன்மிகமானதும் கவிதை அவாவக் கூடியதும் அல்லவா? மேலும், துறவி என்றொருவன் இருக்க முடியாது. துறவு நிலை என்பதுவே இருக்க முடியும் என்பதையும் வற்புறுத்த வேண்டும். நம் கவிதைகளில் துறவுத்தன்மை காணப்படுவது வியப்பானதே அல்ல.

 

தீராநதி: பிற்காலங்களில் சில அரசியல் கவிதைகள் எழுதியிருக்கிறீர்கள்; சில தலித் கவிதைகளும் பெண்ணியக் கவிதைகளும்கூட, இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?

தேவதேவன்: தீராத எனது தாகமும் அதிருப்திக் கனலுமேயன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்? எனது முதல் தொகுப்பான ‘மின்னற் பொழுதே தூரம்’ தொகுப்பும், ஒரு வகையில் அரசியல் கவிதைகள் அடங்கியதுதான். ஆன்மிகமான தரிசனங்கள் எல்லாமே ஆழ்மையான அரசியலின் பாற்பட்டதே என்பது என் அனுபவம். அக்காலங்களில், உலக நன்மை குறித்த ஓர் அரசியல் மீது அக்கறை கொண்டபடியே, பிரிவினைகளும் அதிகார வேட்கைகளும் கொண்ட அரசியலை அவதானித்தபடியும் நண்பர்களிடையே சச்சரவிட்டபடியும் நான் இருந்தேன். ‘குளித்துக் கரையேறாத கோபியர்கள்’ தொகுப்பிலுள்ள ‘மறுபடியும் புரட்சி மரத்துப் போச்சு’ என்ற வரியினையுடடைய ‘அவரைப் பந்தல்’ கவிதை, நமது வருத்தத்தையும் அக்கறையையும் கூறும் ஓர் அரசியல் கவிதைதான். எனது மூன்றாவது தொகுப்பான ‘மாற்றப்படாத வீடு’ கவிதைகளையும் இங்கே எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தச் சமூகம் மாற்றப்பட்டேயாக வேண்டிய சமூகம் என்பதில், சுரணையுள்ள ஒருவனுக்குத் துளிகூட மாறுபாடு இருக்க முடியாது. சமூகம் தற்போது தருகிற சௌகரியமான இருக்கைகளில் அமர்ந்து கொண்டே, புரட்சி, சீர்திருத்தம் பேசுவபர்களால் தான் சமூக மாறுதல் சாத்தியமற்றுப் போய்க் கொண்டேயிருக்கிறது. இந்தச் சமூகப் பிரச்னையே, தன் சொந்தப் பிரச்னையாகவும் ஒருவனால் உணரப்படுகையில்தான் அவனிடமிருந்து அரசியல் கவிதைகளும் பிறக்கின்றன. கவிதையென நம் மனம் கற்று வைத்திருந்த அழகியல் காரணமாகவே அத்தகைய கவிதைகள் அரிதாகவும் இருக்கிறது. ஆனால், அரசியலும் அக்கவிதைகளில் மறைபொருளாகவும் நுண்பொருளாகவும் இருந்துவிடுகிறது. எனது பிற்காலக் கவிதைகளில் வெளிப்படையானதும் நேரடியானதும் தீரமானதுமான ஓர் அரசியல் பார்வை உள்ளது என்பது உண்மைதான். பிறிதொரு அழகியலோடுள்ள நல்ல அரசியல் கவிதைகளை நான் வாசித்தும் அனுபவித்தும் கற்றுக்கொண்டமையே அதற்குக் காரணமாக இருக்க வேண்டும்.


தீராநதி: இளம் பருவத்திலேயே நான் யார்? எனும் கேள்விக்கு ஆளாகியிருக்கிறீர்கள். தன்னை மையமாகக் கொண்ட இக்கேள்விகள், மனிதனின் அகங்காரத்தினின்று எழுகிற ஒன்றில்லையா? இதுவே, ‘இப்பூமியின் மையம் நானே’ என்று இப்பூமியை மனிதன் சிதைப்பதற்கும் இயற்கையில் நிகழ்ந்த சகல சமன்குலைவுகளுக்கும் காரணமாகி விட்ட ஆரம்பக் கோணல் இல்லையா?

தேவதேவன்: இப் பூமியிலுள்ள உயிரினங்களிலேயே, ஒரு கோணத்தில் அபூர்வமான தனிச் சிறப்புள்ள ஓர் உயிர், மனிதன்தான் என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்காது. அந்தத் தனிச் சிறப்பு தான் பிரக்ஞை மற்றும் மெய்மையறிதல். மனிதனின் முதல் பிரக்ஞை ‘நான்’ என்பதையே ஒரு கவிதை வரியாக எழுதியிருக்கிறேன். அது தன் தொடக்கத்திலேயே மையமற்றதும், அப்படி ஒரு மையம் இருக்கும் பட்சத்தில், அம் மையத்தை உதறுவதற்காகவே எழுந்த பிரக்ஞையுமாகும். மனிதன் பிரச்னைக்குள்ளாகும் போதெல்லாம், ‘நான் யார்?’ எனும் விசாரமே அவனது விடுதலைக்கான அறிவை அவனுக்குக் கொடுக்கிறது. மற்ற வேளையில், அதாவது விடுதலையான நிலையில், அவன் யார்? எதிரேயிருக்கும் நீங்களாகலாம், ஒரு புழுவாகலாம், இந்த மரம் ஆகலாம், ஒரு புல் ஆகலாம், துன்புறுத்தப்பட்ட ஒரு பெண்ணாகலாம், மொத்த மானுட குலத்தாலுமே வஞ்சிக்கப்பட்ட ஏழையாகலாம். யாதும் ஆகலாம். மானுட குலத்தின் முக்கியமான அனுபவம் இதுதான். அறமும், அன்பும், கருணையும், பேரறிவும், இயற்கை வெளிக்காட்டும் பேரெழிலும், பெருங்களிப்பும் ஊற்றெடுக்கும் இடம் இது. எல்லாவற்றுள்ளும் எல்லோருள்ளும் தன்னைக் காணும் பேருள்ளம் அது. இந்நிலைக்கும், மனிதன் சுயநலத்தாலும், பேராசை வெறியாலும், மூடத்தனத்தாலும் இயற்கையைச் சீர்குலைத்துள்ளமைக்கும் நேர்மாறான சம்பந்தமல்லவா உள்ளது.

 

தீராநதி: உங்கள் கவிதைகளில் பெரும்பாலானவை ஒரு தரிசனத்தைக் கூறுவதாக உள்ளன. நீங்கள் கற்றறிந்த தத்துவப் பயிற்சி ஏதும் இதற்குக் காரணமா? கவிஞனுக்குத் தத்துவப் பயிற்சி தேவை என்று கருதுகிறீர்களா?

தேவதேவன்: நிச்சயமாக இல்லை. அவனிடமிருப்பது அனுபவ ஊற்று; இடையறாத மெய்மையறிதல்; உயிர்த் தழல் என்பதால் அது அவனுக்குத் தேவையில்லை. எனினும், எல்லாமும் அவன் மீது வந்து விழுகிறதே, எறியப்படுகிறதே, அவற்றை என்ன செய்வது? அறிவாக, உலகில் இதுவரை என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதெல்லாமே ஓர் ஆசையின் காரணமாக, நம் வாசிப்பிற்குள் வந்துவிடுகிறது என்றாலும் கூட, கவிஞன் மெய்மையையே உணர வேண்டியவனாக இருக்கிறான்.மெய்மையறிதல் ஒரு தத்துவம் அல்ல. தத்துவம் ‘பிலாஸபி’ என்னும் ஆங்கிலச் சொல்லின் கிரேக்க மூலத்திற்கு ‘உண்மையைக் காதலி’ என்றுதான் பொருள்.


தீராநதி: நவீன தமிழ்க் கவிஞர்களில் ஆரோக்கியமான, மரபின் தொடர்பு அறுபடாத முக்கியக் கவிஞர்களுள் ஒருவராக நீங்களும் குறிப்பிடப்படுகிறீர்கள். இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இதன் பின்புலம் என்ன?

தேவதேவன்: ஆங்கில இலக்கியங்களுக்குப் பின்புலமாய் அமைந்த கிரேக்க அழகியலும், கிறிஸ்தவ இறையியலும் கூட, இன்று நம் மனதைப் பறித்துக் கொண்டுள்ளதாமே? எனது கவிதைகள் சங்க இலக்கிய மரபோடும், பக்தி இலக்கிய மரபோடும் அடையாளம் காணப்பட்டுப் பேசப்படுகின்றன. புனித கவிஞர்களோடும் இந்திய ஆன்மிக மரபோடும் அது தொடர்பு காட்டுவதை உணர்ந்த கையோடே, அது கிரேக்க அழகியல் மரபோடும், அராபிய இறைவீர மரபோடும் தொடர்பு காட்டுவதும், இன்னும் இப்படியே நாம் பார்த்துக் கொண்டுபோனால் பிறநாட்டு முக்கிய மரபுகளோடும்கூட, அது தொடர்பு காட்டக்கூடும் என்று எனக்குத் தோன்றுவதுண்டு. ஆன்மிகமான பேரனுபவங்கள் எல்லாமே, தன்னியல்பாகவே மானுடகுலம் முழுமைக்கும் சொந்தமானதாக இருப்பதாலேயே, அது உலகின் அனைத்து மரபினுடைய தொடர்ச்சியாகவே காட்சியளிக்கிறது. இதில் ஒரு அதிசயமும் இல்லை. மெனக்கெடலும் இல்லை என்பதே என் கருத்து.


தீராநதி: இறைவழிபாட்டுக்கு மாற்றாக அந்த இடத்தில் இயற்கை வழிபாட்டை முன்வைக்கிறது உங்கள் கவிதை. கவிதை இயக்கம் என்று கூறலாமா?

தேவதேவன்: முதலில் நமது கவிதை இயக்கத்தின் அடிப்படை எந்தக் கருத்தியலும் அல்ல என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். எல்லாக் கருத்தியல்களுமே மனிதனைப் பேராபத்தில் கொண்டே முடிக்கக் கூடியது என்பதை நாம் அறிவோம். எல்லாக் கருத்தியல் கொடுங்கோன்மைகளையும், நாம் நம் அகத்திலிருந்தும் நம் புறத்திலிருந்தும் அகற்றிய பிறகு, கண்கூடாக நம் எதிரே இருக்கும் இயற்கை வெளியைத்தான் மெய்மை என்றறிகிறோம். இயற்கையைக் கண்டுகொள்ளுதலும் அதன் அருமையுர்ந்து பேணுதலுமே உண்மையான நமது மதம் ஆகிறது. இந்தப் போக்கில்தான் நிகழ்கால வாழ்வையும் பிரச்னைகளையும் நாம் எதிர்கொள்கிறோம்.


தீராநதி: கவிதைதான் கலைவடிவங்களில் மிக உயர்ந்தது என்று முன்பு ஒருமுறை சொல்லியுள்ளீர்கள். இதனை இப்போது விளக்க முடியுமா?

தேவதேவன்: கவிதை என்றால் என்ன என்ற கேள்விக்கு அப்படிச் சொல்லியிருப்பேன். உயர்ந்ததைத்தான் கவிதை என்று சொல்கிறோம் என்று புரிந்து கொண்டால், அந்தக் கேள்வி தெளிவு பெற்றுவிடுகிறது. ஆனால், அப்புறம் உயர்ந்தது, மேன்மையானது எது, என்ன என்ற கேள்வி. சரியான கேள்வி அதுதான். ஒவ்வொரு கவிதையும் அதையே உணர்த்த முயல்கிறது. விளக்க முடியாததும், ஆனால், சொற்களால் விளக்கி ஆக வேண்டியதுமானது அந்த மேன்மையையே.

 

தீராநதி:பல காலகட்டங்களிலும் குழு மனப்பான்மை குறித்து கடுமையான விமர்சனங்களைக் கூறி வந்திருக்கிறீர்கள். எப்போதும் அமைப்பாகி விடாத ஓர் இயக்கத்தை நீங்கள் முன்னிறுத்துவது தெரிகிறது. உங்கள் சொந்த வாழ்க்கையில், நீங்கள் இதுவரை ஒரு அமைப்போடும் உங்களைப் பொருத்திக்கொள்ளவில்லையா? ஓர் இயக்கமாகக் கூடி எதையாவது செய்ய முயன்றதில்லையா?

தேவதேவன்: குடும்பம் என்பதும் ஓர் அமைப்புதான்; நண்பர்கள், சுற்றம், ஜாதி, இனம், மதம், கொள்கை, கட்சி, தொழிற்சங்கம் இவைகளும், மனிதர்கள் குழுக்குழுவாக வாழ்கிறார்கள் என்பதை ஒரு துயர்தொனிக்கும் கூற்றாகக் கூறி வந்திருக்கிறேன். துளியும் நஞ்சை விளைவிக்காத இயக்க நிலையும் அமைப்பு நிலையும் நம்மிடையே ஒரு கவிக் கனவாகவே  உள்ளது. மனிதர்களுக்கு அது ஏன் மிகக் கடினமான காரியமாக இருக்கிறது? என் வாழ்வின் உற்சாகமான ஓர் கால கட்டத்தில், அதாவது நான் கவிதை எழுதத் தொடங்கிய துவக்க காலத்தில், நாடகம், இலக்கியம், சினிமா, நாட்டியம், இசை, ஓவியம் எனக் கலைகள் மீது ஆர்வமும் கவனமும் செலுத்தத் தொடங்கியபோது, ‘தர்சனா’ என்னும் திரைப்படக் கழகத்தைத் தொடங்கினோம். சிறந்த செயலாளனாக இருந்த ஒரு நண்பனின் பண்பையும் துணை வலியையும் கொண்டு, ஒரு கனவு உருவாயிற்று. அந்தத் திரைப்படக் கழக இயக்கத்தையே ஆதார நம்பிக்கையாகக் கொண்டு, ஒரு கனவு உருவாயிற்று. அந்தத் திரைப்படக் கழக இயக்கத்தையே ஆதார நம்பிக்கையாகக் கொண்டு, கலைகள் மீதும், மானுட மேன்மை மீதும் தாகம் கொண்டுள்ள நுண்ணுணர்வாளர்களை எல்லாம் கூட்டிச் சேர்த்து, ஒரு சமூகமாக வாழும் ஒரு மாதிரிக் கிராமத்தை உண்டாக்கத் திட்டமிட்டோம். ரொம்ப நல்ல அனுபவம் அது. அது நிறைவேறவில்லை. இந்த நிறைவேற்றமின்மையை மிக முக்கியமான நிகழ்வாகக் கருதுகிறேன். இப்போதும் நம் குடியிருப்புகளுக்கெல்லாம் வெளியே போய், தூய காற்றும், புத்தம் புதிய நிலப்பரப்புமாய் விருப்பமான வழியில் புது வாழ்வை அமைத்துக்கொள்ளக் கிடைக்கிற சுதந்திரமான வெளியிலும் கூட, மனிதர்கள் எப்படி தங்கள் வீட்டினை சமூகத்தை அமைத்துக் கொள்கிறார்கள்? வழக்கமான நோய்களை எல்லாம் பரப்பக் கூடிய, தங்கள் நூற்றாண்டுப் பழமையுடைய அழுக்கு மூட்டைகளுடனேயே அங்கேயும் போய்க் குடியிருக்கிறார்கள். இந்த மனிதர்களை நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது.


தீராநதி: நீங்கள் வாழும் தூத்துக்குடி நகரம் குறித்த உங்கள் மனப்பதிவுகள் என்னவாக இருக்கிறது?

தேவதேவன்: நிலாவொளியில் ஒளிரும் மடிப்பு மடிப்பான அழகிய மணல் தேரிகளுடைய நிலக்காட்சியை, நான் இங்கே என் இளமையில் கண்டு காதல் வயப்பட்டிருக்கிறேன். இன்று கட்டடங்கள் அவற்றை முழுமையாக விழுங்கிவிட்டன. உலகின் எப்பகுதியிலுள்ள மனிதர்களானாலும் அவர்களுடைய பிரச்னைகள் ஒன்றுபோலவே உள்ளன. எனக்கு, அழகிய இப்பூமிப் பரப்பில் ஒரு சிறுபகுதி நிலம்தான் தூத்துக்குடி என்பதைத் தவிர, அதன் மீது தனிப்பட்ட கவனமோ, பாசமோ, அக்கறையோ இல்லை. இங்கே கடற்கரையோரத்தில் வாழும் மீனவர்களைத் தவிர, மற்றவர்கள் பூர்வகுடிகள் அல்லர். தொழிற்சாலைகள், நூற்பாலைகள், உப்பளங்கள், துறைமுகம், மீன்துறை என ஏற்பட்டு, பிழைப்புத் தேடி, இங்கு பணி செய்வதற்காகவே பக்கத்துக் கிராமங்களில் இருந்தெல்லாம் வந்து குடியேறியவர்களாலான ஒரு குடியேற்ற நகரம்தான் தூத்துக்குடி. நெய்தல் நில மக்களுக்கும்கூட இந்தியாவின் எல்லாக் கடற்கரைகளுமே ஒன்று போலவே, வேற்றுணர்வை அளிக்காத காதல் தளங்களாகவே இருக்கும் என்பதே நினைப்பதற்கு மகிழ்ச்சியளிக்கிறது.

முந்தைய கட்டுரைவயிறு ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் கடிதங்கள்