அம்பேத்கரின் தம்மம் 4[தொடர்ச்சி]

தேடலை கைவிடுதலே தர்மம் என்ற நான்காம் படிநிலை இன்றைய வாசகனுக்கு ஆச்சரியமளிக்கும். தேடல் என்பதை புனிதமானதாக, மனிதனுக்களிக்கப்பட்டுள்ள ஆசீர்வாதமாக நாம் அறிந்திருக்கிறோம். ’தேடலின் புனித துக்கம்’ என்ற சுந்தர ராமசாமியின் புகழ்மிக்க வரி நினைவுக்கு வருகிறது. எது தர்மம் என்ற வினாவுக்கு ‘தேடலைகைவிட்ட செயல்பாடு’ என்று பதில் சொல்லப்படும்போது அப்படி ஒருசெயல்பாடு இருக்கமுடியுமா, இருந்தால் அதற்கு என்ன பயன் என்ற வினா மனதில் எழுகிறது.

புத்தர் தம்மபதத்தில் சொல்லும் ஒரு வரியை அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார். ’ஆரோக்கியத்தைவிட சிறந்த நன்மை ஒன்றில்லை. ஆகவே நிறைவுமனநிலையை விட மதிப்பானது ஏதுமில்லை’. இந்தவரியைச் சுட்டியதுமே அம்பேத்கர் அதுசார்ந்துவரும் தவறான புரிதல்களை விளக்க ஆரம்பிக்கிறார். நிறைவுமனநிலை என்பது ஆர்வமின்மையோ சலிப்போ அல்ல. சூழலுக்குப்பணிந்து சும்மா இருப்பது அல்ல. உலகியலில் ஒட்டாத துறவுமனநிலையும் அல்ல

ஏனென்றால் அப்படிப் பொருள்கொள்வது புத்தரின் பிற சொற்களுடன் முரண்படுகிறது. ஏழையாக இருப்பதை புத்தர் ஆதரிக்கவில்லை. துயரப்படுபவர்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளாமல் அதிலேயே அமைந்துவிடவேண்டும் என புத்தர் சொல்லவில்லை. நேர்மாறாக, செல்வங்கள் தேவையானவை என்றுதான் புத்தர் சொல்கிறார். அநீதியின்முன் ,ஒடுக்குமுறைகளின் முன் நமக்குத்தேவையானது ஆற்றலும் அஞ்சாமையும்தான் என்றே அறைகூவுகிறார்

அதற்கு புத்தர் சொல்லும் சொல் வீர்யம் என்பது. பிராகிருதத்திலும்,பாலியிலும், சம்ஸ்கிருதத்திலும் மிக முக்கியமான சொல் இது.வீரம் என அதை நேரடியாக தமிழாக்கம் செய்யக்கூடாது. வீரியம் என்பதை ‘உயிர்களுக்கு இயல்பாகவே உள்ள அடிப்படையான ஆற்றல்’ என்று சொல்லலாம். வாழ்வதற்காக போராடும் ஆற்றல். எல்லா எதிர்மறைப்பண்புகளையும் எதிகொண்டு கடந்துசெல்லும் ஆற்றல். அதை முன்வைக்கும் புத்தர் ஒருபோதும் செயலின்மையை நிறைவுமனநிலை என்று சொல்ல மாட்டார் என்கிறார் அம்பேத்கர்

இந்த இடத்தில் அம்பேத்கர் அளிக்கும் சில வரிகள் இன்றையசூழலில் பௌத்தத்தை புரிந்துகொள்வதற்கு முக்கியமானவை. சொல்லப்போனால் அம்பேத்கர் ஏன் பௌத்தத்தை தெரிவுசெய்தார் என்பதற்கான பதிலும் அதில் உள்ளது. ‘ஏழைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று புத்தர் சொல்லவில்லை’ என்கிறார் அம்பேத்கர்.

வரலாற்று ரீதியாகப் பார்த்தால் இந்த அம்சம்தான் பௌத்ததை வணிகர்களுக்கு உகந்த மதமாக ஆக்கியது. திரைகடலோடி திரவியம் சேர்க்க உந்துதலாகியது. பௌத்தத்தின் இந்த அறைகூவலே இந்தியாவில் பிரம்மாண்டமான ஒரு வணிகஉலகம் உருவாக வழிவகுத்தது. இந்தியாவின் மாபெரும் வணிகப்பாதைகளை உருவாக்கியது இந்த சொல்தான். அந்த வணிகப்பாதைகள் இந்தியப்பெருநிலத்தின் நரம்பமைப்பாக ஆகி இந்த தேசத்தை கட்டி எழுப்பின. போரிட்டுக்கொண்டிருந்த பல்லாயிரம் இனக்குழுச் சமூகங்களை ஒன்றாக இணைத்து இந்தியச் சமூகத்தையும் பண்பாட்டையும் உருவாக்கின.

அம்பேத்கர் தியாகத்தின், துறவின் , இகவுலகை நிராகரிப்பின் மதத்தை நமக்கு அறிவுறுத்தவில்லை. இகத்தை வெல்லும், இங்குள்ளவை அனைத்தையும் நியாயமான வழியில் உரிமைகொள்ளும் மதத்தையே அளிக்கிறார். பௌத்தம் துறவின் மதம் என்ற வழக்கமான நம்பிக்கையை தன்னுடைய நூல் வழியாக அவர் நிராகரித்துக்கொண்டே செல்வதை காணலாம்.

பௌத்தம் பேசும் நிர்வாணமென்பது இகவுலகில் தீயஇச்சைகளை களைந்து வாழும் தூயநிலையே என்றும் பரிநிர்வாணம் என்னும் முழுமையாகத்துறந்தநிலை பௌத்ததின் கடைசி இலக்கே என்றும் அவர் முந்தைய வரியின் விளக்கமாகச் சொன்னதை இங்கே இணைத்துக்கொள்ளவேண்டும்.

பௌத்தம் சொல்லும் ஆசைகளைத் துறத்தில் என்பது இயல்பான உலகியலாசையை நிராகரித்தல் அல்ல. பேராசையைத் துறத்தல் மட்டுமே. ஏனென்றால் பேராசை அறிவுத்தேடலுக்கு எதிரானது. அறிவு அளிக்கும் விடுதலையை மறுப்பது. பௌத்தமோ அறிவின்விளைவான விடுதலையைப்பற்றிப்பேசும் ஒரு ஞானப்பாதை.

ஏன் தேடலைத் துறக்கவேண்டும்? நான் ஒரு முன்னாள் துறவியின் வாழ்க்கை வரலாற்றை மலையாளத்தில் வாசித்தேன். ராமகிருஷ்ண மட்த்தைச்சேர்ந்த அமர்த்யானந்தா எழுதியது. முப்பதுவருடம் துறவியாக இருந்தவர் அந்த வாழ்க்கையை துறந்து மீண்டும் இல்லறத்தாரானார்.

அவரது நூலில் ஒரு வரி என்னை மிகவும் தொந்தரவு செய்தது. தேடலையே வாழ்க்கையாகக் கொண்டு முப்பதுவருடம் வாழ்ந்தவர் ஒரு கட்டத்தில் திரும்பிப்பார்த்தபோது அந்த தேடலின்பொருட்டு இழந்தவற்றை பார்த்து திடுக்கிட்டார். அவையெல்லாம் எங்கும் போகவில்லை. அவற்றை உதறி உதறி முன்னால்செல்வதாக நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால் அவையெல்லாம் அவரிடம்தான் இருந்தன. x முத்திரை அடிக்கப்பட்டு பாதாள அறைகளில் இருட்டில் கிடந்தன, அவ்வளவுதான்.

ஆமாம், தேடல் என்பது ஒன்றின்பொருட்டு பிறவற்றை நிராகரிப்பதே. நம்முள் இருக்கும் அவற்றுக்கான விழைவை நிராகரிக்காமல் வெளியே உள்ளவற்றை நிராகரித்தால் அவை நிராகரிக்கப்படுவதில்லை. அவை நம்முள் மேலும் வலுவாக இருந்துகொண்டிருக்கும்

துறக்கவேண்டியது வெளியே உள்ளவற்றை அல்ல. உள்ளே உள்ள தேடலையே. நாம் முன் செல்லும் ஒவ்வொரு கணமும் நம் காலடிகளுக்கு பின்னாலுள்ளவை மிக இயல்பாக நம்மை விட்டு விலகிச்செல்லவேண்டும். முழுமையாக நம்மை விட்டு அவை அகலவேண்டும். அதுவே விடுதலையின் பாதை

புத்தர் திருஷ்ணையை வெல்லச் சொல்கிறார். அதன் பின் தேடலை இழக்கச் சொல்கிறார். அதன்பின்னரே முன்னகர்தல் சாத்தியமாகும் என்கிறார்.

ஆம், உலகியலை வெல்வதை புத்தர் சொல்கிறார். உலகியலை விடுவதை அடுத்து சொல்கிறார். இரண்டும் ஒரு விஷயத்தின் இரு பக்கங்கள். எவன் வென்று கைவிட்டானோ அவனே முன்செல்பவன். வெல்லும்போது அதை நான் கடந்து செல்கிறேன். அதை கைவிடும்போது அதைப்பற்றிய என் விழைவை கடந்துசெல்கிறேன். கடந்துசெல்வதுதான் விடுதலை.

அப்படியென்றால் அது அறச்செயல்? எச்செயல் தேடலின் விளைவாக அல்லாமல் விடுதலையின் ஒரு படிநிலையாக நிகழ்கிறதோ அச்செயல்தான்.

*

பிற்காலப் பௌத்த ஞானிகளில் ஒருவர் நாகசேனர். பௌத்தத்தின் அடிப்படைத்தரிசனங்களை விரிவான தத்துவ அமைப்புகளாக உருவாக்கிய ஞானிகளின் வரிசையில் முதன்மையானவர். நாகசேனர் காந்தார மன்னராகிய மினாண்டர் [அல்லது மிலிந்தர்] என்பவருடன் நிகழ்த்திய உரையாடல் பௌத்த ஞானமரபின் முக்கியமான நூல்களில் ஒன்று. பௌத்தத்த்தை ஆராய்ந்த முன்னோடி மேலைநாட்டு அறிஞரான ரய்ஸ் டேவிட்ஸ் இந்நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

இந்நூலில் இந்த உலகம் நிலையானதா என்று மினாண்டரிடம் நாகசேனர் கேட்கிறார். ஆம், எனக்கு அப்படித்தெரிகிறது என்று அவன் பதில் சொல்கிறான். அங்கிருக்கும் ஒரு தீபத்தைச் சுட்டிக்காட்டி இதோ இந்த சுடர் நிலையானதா என்று நாகசேனர் கேட்கிறார். மினாண்டர் தெளிவுறுகிறான்

தீபச்சுடர் ஒரு பொருள்போலவே தெரிகிறது. காட்சிக்கும் கருத்துக்கும். ஆனால் அது பொருளல்ல, நிகழ்வு என நாம் அறிகிறோம். அது கணம்தோறும் மாறிக்கொண்டே இருக்கிறது. அது நிகழ்வென்றால் வெளியே ஓங்கிநிற்கும் மலைகளும் நிகழ்வுகள் அல்லவா? நம்முடைய ஆயுள் குறைவென்பதனால் அந்த மலைகளின் மாற்றம் நமக்கு மிக மெதுவானதாகத் தெரிகிறது. ஆகவே அவற்றை நிலையானவையாக , பொருட்களாக காண்கிறோம்.

நாம் காணும் ஒவ்வொன்றும் அந்தந்தக் கணங்களிலேயே உள்ளன, அடுத்த கணம் அவை மாறி இன்னொன்றாக ஆகிவிடுகின்றன. இந்தக்கொள்கை பௌத்ததின் ஆதார தரிசனங்களில் ஒன்று. இஅதை பௌத்தம் ஷணிகவாதம் என்கிறது. ஷணபங்கவாதம் என்றும் சொல்லப்படுவதுண்டு

இப்பிரபஞ்சத்தில் எதுவுமே நிலையானதல்ல என்பது பௌத்த மெய்ப்பொருளின் அடிப்படையான மூன்று அறிதல்களில் ஒன்று. அனிக்க, அனாத்த, துக்க என்று பாலியில் அதைச் சொல்கிறார்கள். சம்ஸ்கிருதச் சொற்கள் அநித்யம், அநாத்மம், துக்கம். அவற்றை நிலையாமை, சாரமின்மை, அறியமுடியாமை என்று மொழியாக்கம்செய்யலாம்

இம்மூன்று சொற்களும் சற்றே பிழையாக பொருள்கொள்ளப்படுகின்றன. நிலையின்மை என்று பௌத்தம் சொல்வது யாக்கைநிலையாமை அல்லது வாழ்க்கை நிலையாமையை மட்டும் அல்ல. இப்பிரபஞ்சத்தில் உள்ள எதுவும் அதன் நிறைநிலையில், முழுமைநிலையில் , சமநிலையில் இல்லை என்பதையே அது சுட்டுகிறது. பொருள் என்பது ஒன்றின் நிறைநிலை. நிறைநிலை என்பது இல்லையென்பதனால் நாம் நம்மைச்சுற்றிக் காணும் இப்பிரபஞ்சம் என்பது பொருட்களாலானதல்ல, நிகழ்வுகளாலானது மட்டுமே.

பௌத்ததின் அனாத்மவாதத்தை உயிர்களுக்கு ஆன்மா இல்லை என்று புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. பௌத்தம் சொல்வது அதை மட்டும் அல்ல. எந்தப்பொருளுக்கும் அதற்கு மட்டுமே உரிய சாராம்சம் என்ற ஒன்று இல்லை என்று பௌத்தம் சொல்கிறது.

பௌத்தத்தின் இந்தத் தரிசனத்தை நாம் சமணத்தின் சர்வாத்மவாதத்திற்கான நேர் எதிர்நிலையாக புரிந்துகொள்ளவேண்டும். சமணர்களைப்பொறுத்தவரை அனைத்துக்குமே ஆன்மா உண்டு. ஆன்மா என்பது சாராம்சமான இருப்பு என்று அவர்கள் வரையறைசெய்கிறார்கள். அந்தப்பொருள் என்பது அந்த சாராம்சத்தின் பருவடிவ வெளிப்பாடு மட்டுமே. அதாவது கல்லின் கல்தன்மை என்பது அதன் ஆன்மாவின் வெளிப்பாடுதான்.

கல்லின் ஆன்மா என்பது ‘கன்மை’ என்று சொல்லலாம்.கல் எந்நிலையிலும் அந்த சாராம்சத்தை மீறிச்செல்லமுடியாது. ஆனால் பௌத்தம் அப்படி ஒரு சாராம்சமே இல்லை என்று வாதிடும். ஆகவே கல் என்பது இந்த கால இடத்தில் நமக்கு தன்னை கல்லின் இயல்புகளுடன் வெளிப்படுத்திக்கொள்ளும் அறியமுடியாத ஒன்றுதான்.

வேதாந்தத்துக்கும் பௌத்ததுக்கும் இடையேயான முக்கியமான முரண்பாடும் இதுதான். வேதாந்தத்தை முதல்முழுமைவாதம் [absolutism] என நடராஜகுரு மொழியாக்கம் செய்கிறார். முதல்முழுமையாக இருப்பது சாரம்தான். ஆகவே வேதாந்தத்தை சாராம்சவாதம் அல்லது ஆன்மசார வாதம் என்று சொல்லலாம். இப்பிரபஞ்சம் என்பது ஒரு மாயை. அதன் சாரமாக உள்ள ஒன்றுதான் பிரபஞ்சமாக தன்னைக் காட்டுகிறது. ஆகவே இங்குள்ள அனைத்திலும் திகழ்வது அந்த சாராம்சமே. உபநிடதங்களின் ஞானம் என்பது இதுவே.

பௌத்தத்தின் அனாத்மவாதம் என்பது முழுமையான சாராம்ச மறுப்புதான். எந்தப்பொருளுக்கும் அதற்கு மட்டுமே உரிய சாராம்சம் என ஏதும் இல்லை. அது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அந்நிகழ்வின் ஒரு தருணத்தையே நாம் அறிகிறோம். அதை நாம் பொருள் என்கிறோம். நாமறியும் விதத்துக்கு ஏற்ப அதற்கு ஒரு சாராம்சத்தைக் கற்பனைசெய்கிறோம். அப்பொருள் அது அல்ல. அது ஒட்டுமொத்தப்பிரபஞ்ச நிகழ்வின் ஒரு துளியான ஒரு சிறுநிகழ்வு, அவ்வளவுதான்.

துக்கம் என பௌத்தம் குறிப்பிடுவது பசி, மரணம், அவமதிப்பு போன்ற உலகத்துயர்களை அல்ல. பிறவித்துயர் [ பவதுக்கம்] என பௌத்த சமண மதங்கள் சொல்வதை இதனுடன் புரிந்துகொள்ளக்கூடாது.
அது வேறு ஒரு கருதுகோள்.

இங்கே துக்கம் என்று பௌத்தம் குறிப்பிடுவது மனிதன் மனிதனாக இருப்பதனாலேயே அடையும் எல்லைகளைத்தான். அவனுடைய அறிதலின் எல்லைகள் மிகக் குறுகியவை. ஆகவே அறியாமை பிரம்மாண்டமானது. அந்த அறியாமை அவனுக்கு பிரபஞ்சம் பற்றிய பதற்றத்தை, வாழ்க்கைபற்றிய பதைப்பை உருவாக்குகிறது. அதுவே இங்கே துக்கம் என்று சொல்லப்படுகிறது

பிற்கால ஐரோப்பிய சிந்தனையில் இருத்தலியளாளர்களால் பறதி [ angst] என்று சொல்லப்பட்ட அதே நிலைதான். பறதி மீண்டும் மீண்டும் வரையறைசெய்யப்பட்டுள்ளது. சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். பிரபஞ்சமும் காலமும் முடிவற்றவை. அவற்றின் முன் தான் என உணரும் மனிதப்பிரக்ஞை மிகமிகச்சிறியது தற்காலிகமானது. அதை அந்தப் பிரக்ஞை உணரும் நிலையே பறதி.

இந்த பிரபஞ்சத்தின் ஒரு துளி நான். என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு துளியும் முழுமையாகவே இப்பிரபஞ்சத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை என்னால் அறிந்துகொள்ள முடியாது. ஆகவே என் வாழ்க்கையை நான் அறிந்துகொள்ள முடியாது.இந்த தன்னுணர்வே துக்கம். சரியாகச் சொன்னால் பறதி என்பதும் அதுவே.

என் வீட்டுக்குப் பின்னால் ஒரு கிறித்தவ தேவாலயம் உண்டு. அங்கே வெள்ளி ,ஞாயிறுகளில் பிரார்த்தனையும் வழிபாடும் நடக்கும். ஒலிப்பெருக்கி வழியாக பகலிரவாக அந்த பிரார்த்தனைகளை கேட்டுக்கொண்டிருப்பேன். திரும்பத்திரும்ப மன்ற்டால்கள்தான். இறைவா என்னை காத்துக்கொள். என் குழந்தைகளை, என் குடும்பத்தைக் காத்துக்கொள். எவ்வளவு வேண்டுதல்கள்! பரீட்சை ஜெயிப்பதற்காக, வியாபாரம் செழிப்பதற்காக, நோய் குணமாவதற்காக !

திடீரென்று ஒன்றை கவனித்தேன். தொண்ணூறு சத பிரார்த்தனைகளும் தங்களுக்கு வந்த பிரச்சினைகளுக்காக அல்ல. வரக்கூடும் என அஞ்சப்படும் பிரச்சினைகளுக்காகவே செய்யப்படுகின்றன. மனிதர்களுக்கு எவ்வளவு பாதுகாப்பின்மை உணர்வு. எவ்வளவு அவநம்பிக்கை. மாபெரும் ராட்சதன் ஒருவனின் கையில் இருக்கும் பூனைக்குட்டி போல அவர்கள் காலத்தின் கைகளில் இருந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு லௌகீக மனிதனுக்குள்ளும் பௌத்தம் துக்கம் என்று சொல்லும் அந்த பெரும்பதற்றம் நிறைந்திருக்கிறது.

எவ்வளவு கண்ணீர்! எவ்வளவு தவிப்பு! கிறித்தவம் அந்த துக்கத்துக்கு நிவாரணமாக முன்வைப்பது கண்மூடித்தனமான எளிய நம்பிக்கையை. முழுமையான சமர்ப்பணத்தை. கடவுள் உலகைபடைத்து ஆள்கிறார், அவரது கருணையில் மனிதர்கள் வாழ்கிறார்கள், ஆகவே கடவுளிடம் மனிதர்கள் தங்களை காத்து தங்கள் துக்கத்தை அழிக்க மன்றாடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். அவருக்குத்தெரியும் அவர் மனிதர்களை காப்பார். காக்கவில்லை என்றால் அது அவரது இச்சை. அதை மனிதர்கள் புரிந்துகொள்ளமுடியாது

நம்பிக்கை எந்த அளவுக்கு கண்மூடித்தனமாக ஆகிறதோ அந்த அளவுக்கு ஒருவன் மேலான கிறித்தவனாக ஆகிறான். ‘விசுவாசத்தை காத்துக்கொள்’ என்றுதான் கிறித்தவம் அறைகூவுகிறது. ஆகவே அது அறிவை எதிரியாகக் கண்டது. அறிவு நம்பிக்கைக்கு தடையாக அமையக்கூடியது. கிறித்தவத்தில் அறிவு என்பது சாத்தானின் ஒளிமிக்க கருவி.

நேர் எதிரானது பௌத்தம். அது அறிவையே கருவியாகக் கொள்கிறது. ஏனென்றால் அது துக்கத்திற்கு நிவாரணமாகச் சொல்வது நம்பிக்கையையும் சரணடைதலையும் அல்ல. அந்த துக்கத்தின் காரணத்தை அறிந்துகொள்வதைத்தான். அந்தக் காரணத்தை அறிபவன் அவ்வாறு அறியும்போதே அந்த துக்கத்தை கடந்துசென்றுவிடுகிறான். அதுவே நிர்வாணம் என்பது.

பௌத்தத்தின் செய்தியை ஒரே வரியில் சொல்வதென்றால் ‘விடுதலைசெய்யும் அறிவு’ என்று சொல்லலாம். அடிமைப்பட்ட தன் மக்களுக்கு அம்பேத்கர் விட்டுச்சென்ற அறைகூவல் அதுதான்.

ஆச்சரியமான விஷயம்தான். நூற்றாண்டுக்கால அடக்குமுறையால் அடிமைப்பட்டு, கல்வியிழந்து, செல்வமிழந்து, சுயமிழந்து வாழும் மக்கள்கூட்டத்துக்கு மிக எளிய பாதை என்பது நம்பிக்கையின் குறுக்குவழிதான். அவ்வழியைத்தான் அவர்கள் அதிகமும் தேர்வுசெய்யவும் செய்கிறார்கள் என்பது ஓர் நடைமுறை உண்மை. இந்தியாவின் அடித்தளமக்களுக்கு எளிதில் புரியக்கூடிய மதம் கிறித்தவமே. அவர்களால் எளிதில் கடைப்பிடிக்கத்தக்கதும் அதுவே. ஆனால் அம்பேத்கர் அவர்களுக்கு கொடுத்தது அறிவின்மதமாகிய பௌத்தத்தை.

நவயானபௌத்தம் என அம்பேத்கர் முன்வைத்த பௌத்தம் முழுக்கமுழுக்க அறிவார்ந்தது. அந்த மக்கள் தங்கள் அறிவின், ஆன்மீகத்தேடலின் உச்சத்தில்தான் பௌத்தத்தை அறியமுடியும். அம்பேத்கர் தன் மக்கள் மீதுகொண்ட மகத்தான நம்பிக்கையை காட்டுகிறது நவயான பௌத்தம் என்று நான் நித்ய சைதன்ய யதியிடம் சொன்னேன்.

அதைவிட எச்சரிக்கையைக் காட்டுகிறது என்றார் நித்யா. விடுதலைக்கான குறுக்குவழிகளில் அவர்கள் புதிய நுகங்களில் சிக்கிவிடக்கூடாதென்ற எச்சரிக்கை அது. சமரசமற்ற அறிவுத்தேடல், கூரியவாள் போன்ற தர்க்கம் அவர்களிடமிருக்குமென்றால் அது அவர்களைக் காக்கும் ஆயுதம் என அம்பேத்கர் நினைத்திருக்கலாம். ஒருவேளை என்றாவது நவயானபௌத்தமும் அடிமைப்படுத்தும் அமைப்பாக மாறினால் அதையும் கிழித்துமுன்னேற அந்த ஆயுதம் அவர்களுக்கு கைகொடுக்கும்.

*

மேலே சொன்ன நிலையின்மை,சாரமின்மை,அறியமுடியாமை என்ற மூன்றும் ஒன்றுடனொன்று தொடர்புடையவை என்பதை சிந்தித்தால் அறியலாம். சாரமின்மையே நிலையின்மையை உருவாக்குகிறது. நிலையின்மை அறியமுடியாமையை உருவாக்குகிறது.

மனிதனின் இந்த அறியமுடியாமையை முன்னிறுத்தி மேலே சிந்தனைசெய்த பௌத்த ஞானிகள் சூனியவாதம் என்ற பௌத்ததரிசனத்தை உருவாக்கினார்கள். அதன் முதல்குரு நாகார்ஜுனர். சூனியவாதம் என்பது வெறுமைவாதம் அல்ல. அது அறியமுடியாமைவாதம்தான். தன்னை தானே விளங்கிக்கொள்ளமுடியாத நிலையையே சூனியம் என்ற சொல்லாம் பௌத்தம் சுட்டிக்காட்டுகிறது

அம்பேத்கர் இந்த அத்தியாயத்தில் மூன்று வகை நிலையின்மையை பற்றிச் சொல்கிறார்

1. நம்மைச்சுற்றியிருக்கும் பொருளுலகின் பொருண்மையின் நிலையின்மை.

2. நம்முடைய இருத்தலின் நிலையின்மை.

3. நம்மைச்சுற்றியிருக்கும் அனைத்தின் தன்னிலையின் நிலையின்மை

பொருண்மையின் நிலையின்மையைப்பற்றி யோகாசாரபௌத்தத்தின் முதல்ஞானிகளில் ஒருவராகிய அசங்கர் சொல்லும் ஒரு விளக்கத்தை அம்பேத்கர் எடுத்து அளிக்கிறார். பொருண்மை என்பது ஒரு உண்மையில் ஒரு சுயநிலை அல்ல. அது ஒரு கூட்டுநிலை . நாம் இங்கே காணும் அத்தனை பொருட்களும் பல்வேறு விஷயங்களின் கலவைதான். அந்தக்லப்பின் ஒரு தருணத்தையெ நாம் பொருள் என்று கண்டுகொண்டிருக்கிறோம். அந்தக்கலவை தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டே இருக்கும் ஒன்று. ஆகவே எந்தப்பொருளும் நிறைநிலையில் இல்லை. எவையும் நிலையானவை அல்ல.

இங்குள்ள எல்லா பொருட்களும் நான்கு தனிபருப்பொருட்களின் கூட்டினால் ஆனவை. நிலம்,நீர்,காற்று, அனல். [பௌத்தம் வானத்தை ஒரு பருப்பொருளாகக் கொள்வதில்லை] அவை வானத்தின் வெளியில் ஒரு நோக்கத்துக்காக இணைந்து பொருளாகின்றன. அந்நோக்கம் அழியும்போது மீண்டும் பிரிந்து மறைகின்றன. பொருட்கள் எல்லாமே தொகைநிலைகள் மட்டுமே என்கிறார் அசங்கர்

[இங்கே நால்வகை அடிப்படைப் பருப்பொருட்களை சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். நிலம், நீர், காற்று,அனல் என்பவற்றை பூமிமீது நாம் காணும் நான்கு பொருட்களாக புரிந்துகொள்ளக்கூடாது. பலசமயம் நம் விளக்கங்கள் அப்படித்தான் அமைகின்றன. பொருள் இருக்கச்சாத்தியமான நான்கு நிலைகளைத்தான் அவை சுட்டுகின்றன.நிலம், நீர், காற்று ,அனல் என்பவற்றை முறையே திடவடிவம், திரவ வடிவம், வாயு வடிவம், ஆற்றல்வடிவம் கொண்ட பொருண்மை என பொருள்கொள்ளவேண்டும்]

ஓர் உதாரணம் சொல்லலாம். மனிதர்கள் கூடி நிற்பதை கூட்டம் என்று சொல்கிறோம். அதை ஒரு பொருள் என்போமா? இல்லை அது ஓர் நிகழ்வு. கூட்டம் ஓர் இடத்தில் ஓரு காலத்தில் ஒரு நோக்கத்துக்காக ஒன்றுசேர்ந்திருக்கிறது. அது கூடுதல் என்ற நிகழ்வே. கூட்டம் மாறிக்கொண்டே தான் இருக்கும்.

ஆனால் அக்கூட்டத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனையும் நாம் பொருள் என்போம். யோசித்துப்பாருங்கள் , அந்த மனிதன்கூட பொருள் அல்ல. அங்கே உயிரும் உடலும் இணைந்திருக்கிறது. உடம்பின் உறுப்புகள் இணைந்து இயங்குகின்றன. ஆகவே மனிதனும் ஒரு கூட்டம்தான். ஒரு கால இடத்தில் ஒரு நோக்கத்துக்காக சேர்ந்த ஒரு நிகழ்வுதான் அவன்

அப்படியானால் அவன் உடம்பு ஒரு பொருளா? இல்லை. அது பல்வேறு செல்களின் கூட்டம். செல்கள் பொருளாகுமா? இல்லை அவை பல ரசாயனங்களின் கூட்டம். ரசாயனங்கள் பொருளாகுமா? இல்லை அவை பல்வேறு அணுக்களின் கூட்டம். அணுக்கள் பொருளாகுமா? இல்லை, அவை பல்வேறு துகள்களின் கூட்டம். துகள்கள் பொருளாகுமா? இல்லை , அவை நிக்ழ்வுகள் மட்டுமே. ஆகவே பொருண்மைநிலையாமை என பௌத்தம் சொல்வது ஏறத்தாழ பொருண்மைஇன்மை என்றுதான் என விளக்குகிறது யோகாசார பௌத்தம்.

நம்முடைய இருத்தலின் நிலையின்மையை இன்னும் நுட்பமாக விளக்குகிறது பௌத்தம். நமது நிகழ்காலத்தில் நாம் இருந்தோம், ஆனால் இப்போது இல்லை. நம்முடைய எதிர்காலத்தில் நாம் இருக்கலாம், ஆனால் இப்போது இல்லை. இப்போது நம்முடைய நிகழ்காலத்தில் மட்டுமே நாம் இருக்கிறோம். அப்போது எதிர்காலமும் இறந்தகாலமும் இல்லை.

ஆனால் நிகழ்காலமும் இல்லை. நிகழ்காலம் என்பது நிகழ்வதை நாமுணரும் ஒரு கணம் மட்டுமே. மறுகணமே அது இறந்தகாலம். எதிகாலம் இறந்தகாலமாக ஆகிக்கொண்டே இருப்பதை நாம் உணரும் ஒரு நிலை மட்டுமே நிகழ்காலம். நிகழ்கணம் என்று அதைச் சொல்லலாம். அது ஒரு சலனமாக., ஒரு நிலையின்மையாக மட்டுமே நம்மால் உணரத்தக்கது. ஒரு மனிதன் இரு கணங்களில் ஒருவனாக இருப்பதில்லை.

பொருண்மையும் மனித இருப்பும் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருப்பதன் விளைவாகவே சூழ்ந்திருக்கும் ஒவ்வொன்றிலும் நிலையின்மையில் இருக்கின்றன. ஒரு மனிதன் தான் என உணரும் தன்னிலையும் அந்த தன்னிலையைக்கொண்டு வெளியே உணரும் ஒவ்வொரு பொருளின் தன்னிலையும் மாறிக்கொண்டே இருக்கின்றன

ஜென்பௌத்தம் அற்புதமான ஒரு படிமம் வழியாக அதை விவரிக்கிறது. நதியோட்டத்தில் பிரதிபலிக்கும் வான்மேகத்தின் பிம்பமே உலகக் காட்சி.. நதி ஒரு பெரிய தொடர்மாறுதல். அந்த தொடர்மாறுதலில் கணம்தோறும் மாறிக்கொண்டிருக்கும் மேகம் பிரதிபலிக்கிறது. இரு தொடர்மாறுதல்கள் ஒரு நிலைத்த காட்சியை அளிக்கின்றன. கணநேரத்துக்கு!

உலகியலில் வாழும் சாமானியனால் இதை எளிதாகப்புரிந்துகொள்ள முடியாது என்கிறார் அம்பேத்கர். உண்மைதான். ஒரு வேடிக்கையான உருவகம் மனதிலெழுகிறது. சினிமாவில் வரும் இரு கதாபாத்திரங்கள் சினிமாத்திரையில் பேசிக்கொண்டன. ஒன்று சொன்னது “நாம் நிலையானவர்கள் அல்ல. நிமிடத்துக்கு இருபத்துநான்கு படங்கள் ஓடும் ஒரு ஓட்டத்தால் உருவாக்கப்பட்டவர்கள்”. இன்னொரு கதாபாத்திரம் பீதியுடன் சொல்கிறது. ‘அய்யோ….அதெப்படி.. நான் இதோ உன்னை என் கண்முன்னால் நிலையாகத்தானே பார்க்கிறேன்!”. கொஞ்சம் கஷ்டம்தான்!

இந்த அறியமுடியாமைதான் நாகார்ஜுனர் முதலியோரால் முன்வைக்கப்பட்ட சூனியவாதத்தின் பிறப்பிடம் என்கிறார் அம்பேத்கர். பௌத்த சூனியவாதம் என்பது மறுப்புவாதம் அல்ல. வெறுமைவாதமல்ல. அது நேர்நிலையான, ஆக்கபூர்வமான ஒரு பார்வை. அறிதலின் எல்லையை உணரும் ஒரு நிலை என அதைச் சொல்லலாம்.

ஆரம்பகால ஐரோப்பிய அறிஞர்கள் சூனியவாதத்தை வெறுமைவாதம் என விளக்கினர். அந்த விளக்கத்தை உடைத்து சரியான விளக்கத்தை அளித்தவர் ஜெர்மானிய பௌத்த மெய்ப்பொருளியளார் பேராசிரியர் குந்தர். அந்த விளக்கத்தையொட்டியே அம்பேத்கரின் சொற்களும் அமைந்துள்ளன.

அம்பேத்கர் இரண்டு முக்கியமான வரிகளைச் சொல்கிறார். சூனியம் என்ற சொல்லை வெறுமை என புரிந்துகொண்டால் மிகப்பெரிய சிக்கல்கள் உருவாகும். அது வெறுமை அல்ல. நிலையின்மையை முழுதுணரும் நிலை மட்டுமே. நிலையின்மையை உணர்வதனூடாக கிடைக்கும் வாழ்வியல் நெறி என்ன? எதனுடனும் முழுமையான பற்றுடன் இல்லாமலிருக்கவேண்டும் என்பதே.

அப்படியென்றால் அறச்செயல் என்றால் என்ன? எச்செயல் இவையனைத்தும் இவற்றை அறியும் ந்ம் தன்னிலையும் நிலையற்றவை என்ற உணர்வுடன் ஆற்றப்படுகிறதோ அதுதான். எது அந்த அறிதலின் விளைவாக உருவாகும் பற்றின்மையை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளதோ அதுதான்.

*

பௌத்த மெய்யியலில் கர்மவினை என்பது முக்கியமான ஞானம். கர்மம் என்ற சொல் இந்திய ஞானப்பரப்பில் பலவாறாக பொருள்கொள்ளப்படும் ஒன்று. ஒவ்வொரு சிந்தனைமுறையும் அதற்கு ஒரு பொருள் அளிக்கிறது. வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் அச்சொல் ஒரு பொருளை அளித்துள்ளது. இந்த வேறுபாடுகளை புரிந்துகொள்ளாமல் பொத்தாம்பொதுவான விவாதங்கள் நிகழ்வதும் நம்மூரில் மிக அதிகம். ஆகவேதான் ஏதேனும் ஒரு திட்டவட்டமான குருமரபைச் சேராதவர்களிடம் விவாதிக்கலாகாது என இங்கே விலக்கு இருந்தது.

கர்மம் என்ற சொல்லுக்கு உள்ள முக்கியமான விளக்கங்கள் இவை. பிராமண மதம் எனப்படும் பூர்வமீமாம்ச மரபில் கர்மம் என்பது இங்கே செய்யப்படும் வேள்விச்செயல்கள். எச்செயலுக்கும் அதற்குரிய விளைவுண்டு. வேள்விச்செயல்களுக்கான பயன் இப்பிறவியிலும் எஞ்சியது அடுத்த பிறவியிலும் தொடரும். தீயசெயல்களுக்கான பயன்களும் அப்படியே. நற்செயல்கள் மூலம் புண்ணியத்தை அடைந்து விடுதலை அடைவதே முழுமை

சமண மரபில் கர்மம் என்பது உலகியல் வாழ்க்கையில் ஆன்மாக்களை கட்டிப்போடும் ஒரு மாயச்சுழற்சி. செயல்களும் அவற்றின் விளைவுகளுமாக அது மனிதனைச் சூழ்ந்துகொண்டிருக்கிறது. கர்மத்தை அறுத்து அதன் விளைவுகளையும் அறுத்து விடுபடுதலே முக்தி.

வேதாந்தமரபில் கர்மம் என்பது ஒவ்வொன்றுக்கும் இருக்கும் மறுபக்க விளைவு. தராசின் மறுதட்டு. பிரபஞ்சத்தின் கட்டமைப்பிலேயே உள்ள ஆதார விதிகளின் விளைவு அது. அதாவது பிரபஞ்சத்தின் சமநிலைகளை நிலைநிறுத்துவது. செயல்கள் விளைவுகள் கொண்டவையாதலால் செயலறுத்தலே விளைவுகளையும் வெல்வதற்கான வழி.

பௌத்தம் பேசும் கர்மம் என்பது நுட்பமான ஒரு வேறுபாடுள்ளது. பிரபஞ்ச நிகழ்வுகளின் தொடர்மாறுதல் ஓட்டத்தில் ஒன்றின் அடுத்த நிலை அது. ஒன்று இப்போது இப்படி இருக்கிறது, இக்கணம் நிகழ்வதன் விளைவாக அது அடுத்த நிலையை அடைகிறது. இந்த மாற்றமே கர்மம். வெற்றிலையும் சுண்ணாம்பும் பாக்கும் மெல்லப்பட்டால் சிவப்பான தாம்பூலம் வரும். அதன் கர்ம நீட்சி அது.

கர்ம நீட்சி என்பது பிரபஞ்சத்தில் உள்ள விதிகளின் வெளிப்பாடு. பிரபஞ்ச விதி என்பது மகாதர்மத்தில் நாம் அறியும் ஒரு பகுதி. விதை நட்டால் மரம் வரும். மரம் கனி கொடுக்கும். கனி விதையை உருவாக்கும். இதுதான் கர்மநெறி. இதில் ஓர் ஒழுங்கு உள்ளது. அதை உருவாக்கும் உள்ளடங்கிய விதி உள்ளது

பௌத்தமெய்யியல் இந்த விதியை நியமம் என்கிறது. தமிழில் சரியான சொல்லாட்சி ‘நெறி’ என்பதுதான். அம்பேத்கர் பௌத்தம் ‘நெறி’க்கு இவ்வளவு முக்கியத்துவத்தை ஏன் அளிக்கிறது என்று கேட்டுக்கொண்டு அதற்கு ஒரு விளக்கத்தை அளிக்கிறார்.

இப்பிரபஞ்சம் எவ்வாறு உருவாகி எப்படி நிகழ்கிறது என்ற வினாவுக்கு ‘கடவுளால்’ என்ற எளிமையான விடையை அளித்துவிட்டால் பிரச்சினையே இல்லை. கடவுள் என்பது ஒரு விடை அல்ல. எந்த விடையாகவும் மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு சாத்தியக்கூறு மட்டுமே.

கடவுள் இல்லாமல் இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தை விளக்கப்போனால் நெறி [நியமம்] பற்றிய ஞானம் தேவையாகிறது. ஆக்ஸிஜனும் ஹைட்ரஜனும் சேர்ந்தால் நீர் என்பது ஒரு நெறிதான். மனிதன் இன்றுவரை கண்டடைந்துள்ள எல்லா அறிவியல்தேற்றங்களும் நெறிகளே. கர்மத்தின் உள்ளுறையாக உள்ள நெறி பற்றிய ஞானமே நாம் பிரபஞ்சத்தில் இருந்து அறிவது. இன்னது இன்னின்ன காரணத்தால் இப்படி மாறி இன்ன விளைவை உருவாக்குகிறது என்கிற புரிதல்தான் அது.

மனிதன் எதற்காக கர்மத்தை அறியவேண்டும்? அந்த மெய்ஞானத்திலிருந்தே அறநெறி உருவாகமுடியும் என்பதற்காகத்தான். [அறம் அறநெறி என்ற சொற்களை இங்கே வேறுபடுத்தி புரிந்துகொள்ள வேண்டுகிறேன். அறம் என்பது தம்மம் என்பதற்கான தமிழ்ச்சொல். அறநெறி என்பது ethics என்பதற்கான தமிழ்ச்சொல்] அறநெறியில் இருந்தே நீதியும் ஒழுக்கமும் உருவாக முடியும். நீதியும் ஒழுக்கமும் சமூகத்தை உருவாக்கும் விதிகள். சமூகமனிதனை தீர்மானிக்கும் அடிப்படைகள்.

கடவுளை முன்வைக்கும் ஒரு சிந்தனை அறநெறியை எளிதில் விளக்கிவிடும். அது கடவுளின் ஆணை அவ்வளவுதான். பத்துகட்டளைகள் போல. குர்ஆன் வாசகங்கள் போல. ஸ்மிருதியின் கட்டளைகளைப்போல. ஆனால் அறிவை முன்வைக்கும் பௌத்தம் அறநெறிகளுக்கான அடிப்படையை பிரபஞ்சத்தின் இயக்கவிதிகளில் இருந்து தர்க்கபூர்வமாக உருவாக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. அதற்காகவே அது கர்மம் பற்றிப் பேசுகிறது.

அம்பேத்கர் இந்த இடத்தில் அறநெறியை கடவிளின் சட்டமாக, புனிதவிதியாக முன்வைப்பதை கடுமையாக நிராகரிக்கிறார். அறநெறியை தர்க்கபூர்வமாக விளக்காமல் கடவுள்நம்பிக்கையுடன் பிணைக்கும் எல்லா தரப்புகளையும் மறுக்கிறார். அம்பேத்கர் அனைத்துமதங்களையும் நிராகரித்தமைக்கான காரணம் இங்கே தெரிகிறது. அறநெறி அறிவார்ந்த முறையில் விளக்கப்படாத நிலையில் அது ஆதிக்கத்தரப்பினரின் ஆயுதமாகவே இருக்கும்.

அறநெறி கடவுளால் முன்வைக்கப்படுவது என்றால் யார் கடவுள் மீதான அதிகாரத்தை கையில் வைத்திருக்கிறார்களோ அவர்களே அறநெறியை தீர்மானிப்பார்கள். இது கடவுளின் புனித ஆணை என்று சொல்லி அவர்கள் அடக்குமுறையையும் சுரண்டலையுமே முன்வைப்பார்கள். அறநெறி என்பதே சுரண்டலுக்கான விதிமுறையாக உருவம் கொண்டுவிடும்.அத்தகைய அடக்குமுறையின் ஒரு நுகத்தில் இருந்து இன்னொரு நுகத்துக்குச் செல்வதில் பொருளே இல்லை.

ஆகவேதான் முற்றிலும் அறிவார்ந்த தர்க்கம் கொண்ட பௌத்தத்தின் வழியை அம்பேத்கர் ஏற்றுக்கொண்டு முன்வைக்கிறார். அங்கே அறநெறிக்கு எந்த புனிதமும் இல்லை. அது முற்றிலும் புறவயமானது. இயற்கையின் விதிகளில் இருந்து ஒவ்வொருவரும் கண்டுகொள்ளத்தக்கது. இங்கே அறநெறியை ஒருகூட்டம் பிழையாக முன்வைத்தால், உள்நோக்குடன் பயன்படுத்திக்கொள்ளமுயன்றால் உடனடியாக மறுக்க முடியும். அந்த நெறி இயற்கையின் கர்மநீட்சியில் இல்லை என்று வாதிட முடியும். இயற்கையில் அதை எடுத்துக்காட்டுங்கள் என அறைகூவ முடியும்.

கடவுள் உலகைப்படைத்தார் என்றால் ஏன் அநீதியை அவர் உருவாக்கினார் என்ற கேள்வி எப்போதுமே உள்ளது என்கிறார் அம்பேத்கர். அதற்கு இறைவாதிகள் கடவுள் இயற்கையைத்தான் படைத்தார், அவரளித்த விதிகளின் படி இயற்கை செயல்படுகிறது, அந்த விதிகளை மனிதன் மீறினால் கடவுள் பொறுப்பல்ல என்று வாதிடுவார்கள் என்கிறார். ஆனால் கடவுளே ஆக்கல் காத்தல் அழித்தல் மூன்றுக்கும் பொறுப்பு என்றால் மனிதனின் மீறல்களுக்கும் அவர் பொறுப்பேற்றாகவேண்டும் என்கிறார்.

மாறாக புத்தர் கடவுளை தவிர்த்துவிட்டு அறநெறி பற்றி பேசமுற்படுகிறார். அதுவே அம்பேத்கருக்கு உவப்பானதாக இருக்கிறது. ‘எப்படி அறநெறி பிரபஞ்சத்தில் திகழ்கிறது?’ என்று கேட்கப்பட்டபோது ‘கர்மநெறியால். கடவுளால் அல்ல’ என்று புத்தர் பதிலிறுத்தார் என்கிறார் அம்பேத்கர்.

புத்தரைப்பொறுத்தவரை அறநெறி என்பது மனிதன் பிரபஞ்சத்தின் இயக்கமுறையில் இருந்து கற்றறிந்து கடைப்பிடிப்பது. அதுவே கர்மநெறி. அதற்கான முழுப்பொறுப்பும் அவனுடையதே. அவன் அதற்கு கடவுளையோ பிற சக்திகளையோ பொறுப்பு சுமத்தவேண்டியதில்லை. வாழவேண்டுமா அழியவேண்டுமா என்பதை அவன்தான் முடிவெடுக்கவேண்டும்.

உதாரணமாக, ஒவ்வொரு உயிர்த்தொகுதியும் ஒன்றுடன் ஒன்று மோதி போட்டியிட்டு தகுதிகொண்டது வாழும் என்ற விதியின்படி தங்கிவாழலாம். அதைவிட பலமுள்ளதும் பலவீனமானதும் ஒருங்கிணைந்து ஒருவரின் இடைவெளியை இன்னொருவர் நிரப்பிக்கொண்டு பெரும் தொகுதிகளாக முழுமைகொண்டு மேலும் சிறந்த வாழ்க்கையை வாழலாம். இரண்டுமே இயற்கையிலிருந்து கிடைக்கும் கர்மநெறிகள். தேர்வு மனிதனின் கையில் உள்ளது

கர்மம் மனிதனின் கையில் உள்ளது. நல்ல கர்மம் நல்விளைவை உருவாக்கும். அதுவே குசல கம்மம் என்கிறது பௌத்தம் . தவறான கர்மம் தவறான விளைவுகளை உருவாக்கும். அதை அகுசல கம்மம் என்கிறது பௌத்தம். நல்ல கர்மம் நல்ல விளைவுகளை உருவாக்கியே தீரும் என்பதே பிரபஞ்சநியமம் என்கிறார் புத்தர்.

புத்தர் கர்மம் என்பதே அறநெறிக்கு ஆதாரம் என்று மட்டும் சொல்லவில்லை. அந்த கர்மத்தின் வகைகளையும் விரிவாகப் பேசுகிறார். தீத்ததம்ம வேதனீய கம்மா [உடனடியான விளைவுகளை உருவாக்கும் செயல்] 2. உபபஜ்ஜ வேதனீய கம்ம [நீண்டகால விளைவுகளை உருவாக்கும் செயல்] 3. அபோரபரிய வேதனிய கம்ம [முடிவின்மை வரை விளைவுகளை உருவாக்கும் செயல்] என மூன்று வகைச் செயல்களை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இவ்வாறு உவமை சொல்லலாம். நெல்லை விதைப்பவன் அவனே அறுவடைசெய்கிறான். ஆலமரத்தை நடுபவன் தலைமுறைகளுக்கு நிழல் அளிக்கிறான். ஒரு புதிய வேளாண்மைமுறையை உருவாக்குபவன் மானுடகுலம் உள்ளளவும் நலம் பயக்கிறான். மூன்றுமே கர்மங்கள். விளைவுகள் வெவ்வேறு.

கர்மத்தின் விளைவு செய்பவனுக்கு மட்டுமே வரவேண்டும் என்பதில்லை. மனிதர்கள் வருவார்கள் மறைவார்கள். நற்செயல்களின் விளைவுகள் மானுடகுலம் வழியாக என்றும் வாழும். வளரும். ஏனென்றால் செயலின் விளைவை தீர்மானிக்கும் நியமம் அல்லது நெறி என்பது என்றும் நீளக்கூடியது. அது மகாதர்மத்தின் ஒரு பகுதி.

ஆகவே இப்பிரபஞ்சத்தில் நெறி எப்படி நீடிக்கிறது என்பதற்கு புத்தர் அளித்த பதில்தான் முழுமையானது மறுக்கமுடியாதது என்கிறார் அம்பேத்கர்.

அப்படியென்றால் எது அறச்செயல்? எச்செயல் அதன் இன்றியமையாத கர்மநீட்சியினூடாக நீடித்த நல்விளைவுகளை உருவாக்குகிறதோ அது. எது அறநெறியை நிலைநாட்டுகிறதோ அது. செயல் – அதன் விளைவு என முடிவில்லாமல் நீளும் இந்த நிகழ்வுச்சங்கிலியில் செய்யப்படும் ஒரு செயல் அச்சங்கிலியின் எந்த நிலையிலும் நல்விளைவுகளை அளிக்குமெனில் அதுவே அறச்செயல்.

*

சென்ற சில வருடங்களாக அறம் என்ற ஒரு மையம் சார்ந்தே சிந்தித்து எழுதி வருகிறேன். பல கோணங்களில், பல உணர்ச்சிநிலைகளில். நான் ஒரு தத்துவமாணவனாக இந்த வினாவை முன்னெடுக்கவில்லை. சிந்தனை அமைப்புகளை தெரிந்துகொள்வதில், விவாதிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் அந்த வயதைக் கடந்துவிட்டேன். நான் தேடுவது என் சொந்த வாழ்க்கையின் அறிதல்களை என் தியானத்தின் வெளிச்சங்களை இணைத்து முழுமைசெய்துகொள்ளும் சிந்தனைமுறைமையை. என் அறிவை ஒளிபெறச்செய்யும் தரிசனத்தை.

ஆகவே நான் வேதாந்தம், கிறித்தவம், பௌத்தம் என எல்லா ஞானமார்க்கங்களினூடாகவும் பயணம் செய்கிறேன். அவற்றிடையே ஓர் உரையாடல் என்னுள் நிகழவேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். எந்த அமைப்பையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள நான் முயல்வதில்லை. எல்லாவற்றிலுமிருந்து என்னுடைய சொந்தப்பயணத்துக்கான வழிக்குறிப்புக்ளை பெறவே முயல்கிறேன். விவாதமுறைமைகளுக்கு தத்துவச் சட்டகங்களுக்கு அப்பாலிருக்கும் தூய மெய்ஞானத்தை என்னுடைய அந்தரங்கத்தின் பாத்திரத்தில் அள்ளிவிடலாமா என்று பார்க்கிறேன். அதுவே என் ஆசிரியரின் பாதையாகவும் இருந்தது,

தடுமாற்றங்கள், தத்தளிப்புகள், ஏமாற்றங்கள், பிழைகள் வழியாக என்னை மேம்படுத்திக்கொண்டு முன் செல்கிறேன். கண்டடைதல்கள் , ஒருங்கிணைவுகள், முழுமையாக்கல்களை நிகழ்த்திக்கொள்கிறேன். நான் செய்யும் இப்பயணத்தில் அம்பேத்கரின் இந்த மகத்தான ஞானநூல் ஒரு பெரும் வழிகாட்டியாக இருந்தது. இந்த மேடையில் இதை நான் முன்வைப்பதுகூட நானே இந்நூலை மேலும் அறியும்பொருட்டுதான். அதற்கான உரையாடல் சிலரிடம் திறக்கக்கூடும் என்ற நம்பிக்கையினால்தான்.

எந்த நிலையிலும் மகாதர்மம் மனிதகுலத்தை கைவிடுவதில்லை என்றே உணர்கிறேன். இன்னும் நம் மீதான நம்பிக்கையுடன் அது போதிசத்வர்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது. அந்நம்பிக்கையாகவே நாம் மகாதர்மத்தின் அளவிலா கருணையை அறிகிறோம். அதற்கு வணக்கம்.

[முழுமை]

[ராஜபாளையம் நாற்று அமைப்பு சார்பில் நவம்பர் 2, 2012 அன்று ஆற்றிய உரை]

நதியில் மேகம் ஓர் இசைக்கோலம்.

http://www.youtube.com/watch?v=LpIiolrXwi4

முந்தைய கட்டுரைஅமெரிக்காவில் விவசாயம்
அடுத்த கட்டுரைமாறுதலுக்கான அரசியல் :அயோத்திதாசர் ஆய்வரங்கம்