அம்பேத்கரின் தம்மம் 3

[தொடர்ச்சி]

இரண்டாவது படிநிலையாக அம்பேத்கர் சொல்வது வாழ்க்கையின் முழுமையை அடைவதே அறம் என. முழுமை என்பது மொழியாக்கம் மூலம் பலபடிகளாக மாற்றப்பட்டுவிட்ட வார்த்தை. பௌத்த மூலச்சொல் பூர்ணம். சரியானபடி அமைந்த முழுமை என்று அதை மொழியாக்கம் செய்யலாம்.

மிக இயல்பாக தூய்மை என்ற முதல் படிநிலை இரண்டாவது படிநிலைக்குக் கொண்டுவருகிறது. ஐந்து நெறிகள் மூலம் தன்னை தூய்மைப்படுத்திக்கொண்ட ஒருவன், உடலையும் வாக்கையும் மனதையும் தூய்மையாக்கிக்கொண்ட ஒருவன் இயல்பாக உடலை உடலாகவும் உணர்வுகளை உணர்வுகளாகவும் மனதை மனமாகவும் கருத்துக்களை கருத்துக்களாகவும் காண ஆரம்பிக்கிறான். அதன் பின் அவனுக்கிருக்கும் அறைகூவல் என்பது தன்னால் சாத்தியமான முழுமை நோக்கிச்செல்வது மட்டுமே.

காயம், வாக்கு, மனம் மூன்றிலும் முழுமை என்கிறார் அம்பேத்கர். முழுமையான உடல். அதன் பல படிநிலைகளை விவரித்துச்செல்லும் அம்பேத்கர் மகத்தானதோர் ஞானத்தை பௌத்தமெய்ப்பொருளில் இருந்து எடுத்து முன்வைத்துச் செல்கிறார்.

சுபுத்தி என்ற சீடனுக்கு புத்தர் சொன்னபதில் அது.

சுபுத்தி கேட்கிறான்: போதிசத்வன் அடையும் மெய்ஞானத்தின் முழுமை எது?

புத்தர் சொல்கிறார்: போதிசத்வன் எந்த தர்மத்திலும் தேங்கி நின்றுவிடமாட்டான். அனைத்து தர்மங்களுக்கும் மூலமாக உள்ளது எது என எப்போதும் அவன் தியானித்திருப்பான். அவ்வாறு அனைத்து தர்மங்களுக்கும் முதற்பொருளான தர்மத்தை நோக்கிச்செல்ல பிறரை வழிநடத்திக்கொண்டிருப்பான்.

ஒரேவரியில் இதை பன்மையில் இருந்து ஒருமைக்கு என்று சொல்லலாம். வைக்கம் முகமது பஷீர் சிறுவனாக இருந்தபோது ஆசிரியர் கேட்டார். ’ஒன்றும் ஒன்றும் என்ன, பஷீர் சொல்லு’.

குட்டிபஷீர் எழுந்து சொன்னார் ‘ன்னும்கொஞ்ச பெரீய ஒண்ணு’

ஆசிரியர் குட்டிபஷீரின் மொட்டைத்தலையில் குட்டினார். பஷீர் கடைசிவரை அந்த மெய்ஞானத்தை கைவிடவில்லை. ஆசிரியர் சொன்னது முன்னால்செல்லும் வழி. அங்கே ஒன்று இரண்டாகும். இரண்டு மூன்றாகும். மூன்று ஆயிரமாகும். கோடியாகும். பலகோடியாகும். முடிவின்மை ஆகும்.

பஷீர் பின்னால் திரும்பிச்சென்றார். ஒன்று இன்னும் கொஞ்ச பெரிய ஒன்றாகும். அதில் எவ்வளவு வந்துசேர்ந்தாலும் அது ஒன்றுதான். அது அங்கேதான் இருக்கும் என்றென்றும். பஷீர் தேடிய ஒன்று அதுவே.

புத்தரின் அந்த வரியில் உள்ள தர்மம் என்ற முதல் சொல்லை சிறிய எழுத்திலும் இரண்டாவது சொல்லை பெரிய எழுத்திலும் போடலாம்.

நாம் இங்கே காண்பவை எல்லாம் தர்மங்கள். பலவகை தர்மங்கள். ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான தர்மம் உள்ளது. அப்பொருள் இன்னொன்றுடன் இணைவதில் அதற்கான தர்மம் உள்ளது. அவ்விணைவுகள் வழியாக நிகழும் ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்கும் தர்மம் உள்ளது. ஆனால் இவ்வனைத்து தர்மங்களுக்கும் மூலமாக உள்ளது மகாதர்மம். இந்த பன்மைகளில் நின்றுவிடாமல் அந்த ஒருமையை உணர்ந்தவன் போதிசத்வன். உணரச்செய்பவன் போதிசத்வன். அதுவே ஞானத்தின் முழுமை.

ஒருசெயல் நம்மை முழுமைக்கு இட்டுச்செல்லுமா என்பதே அது தர்மமா இல்லையா என்பதற்கான அளவுகோல். இந்தக்கேள்வியை ஆழமாகக் கேட்டுக்கொள்ளும் தருணங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வரும். வெற்றுத் தத்துவமல்ல இது.

என்னுடைய வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அவர் ஒரு அரசூழியர். மிகமிகக் கடுமையான சிக்கனத்தில் பிள்ளைகளை வளர்த்தார். மிச்சம்பிடித்து சென்னையில் ஒரு வீட்டைக் கட்டினார். கட்டியபின் அதிலொரே அறையில் வாழ்ந்துகொண்டு மிச்சத்தை வாடகைக்கு விட்டார். பிள்ளைகளை பெரியநிலைக்குக் கொண்டுசெல்லவேண்டும், அவர்களுக்கு சொத்து சேமித்துக்கொடுக்கவேண்டும் என்பதுதான் அவரது இலட்சியம்

பையன்கள் அமெரிக்காவில் வேலைகிடைத்து சென்றார்கள். இவரை நாற்பது வருடம் உந்திக்கொண்டுவந்த உலகியல் கடமை முடிந்தது. வெறுமை. சோர்வு. வீட்டை பையன்களுக்கு கொடுக்க நினைத்தார்.பையனுக்கு அதில் ஆர்வம் இல்லை. ‘அது எனக்கு எதுக்கு, அத்தைக்கு கொடு’ என்று பையன் கடிதம் எழுதினான். இவர் மனம் உடைந்துவிட்டார். அபடியென்றால் என்னுடைய இருபதாண்டுக்கால சேமிப்புக்கு பொருளே இல்லையா, இதற்காகவா நான் வாழ்க்கையையே துறந்தேன் என்று கேட்டு எனக்கு எழுதியிருந்தார்

நான் கொஞ்சம் குரூரமாகவே எழுதினேன். ‘ஆம் பொருளே இல்லை’ என்று. அவர் வாழ்நாள் முழுக்க அந்த வீட்டை சேமிப்பதை மட்டுமே செய்தார். அந்த வீட்டின் இன்றைய சந்தை மதிப்பே அவரது வாழ்க்கையின் மதிப்பு. அந்த வீட்டை அவர் தன் மகனுக்காகவே கட்டினார். ஆகவே அந்த மகனுக்கு அந்த வீட்டின் மதிப்பு எதுவோ அதுவே அவரது வாழ்க்கையின் மதிப்பு. அவ்வளவுதான். மேலே ஒன்றுமே இல்லை

ஆம்,உலகியல்சார்ந்த எதையும் முழுவீச்சாக பின் தொடர்ந்து செல்பவர்கள் வெறுமையையே அடைவார்கள். எந்த மகத்தான இலட்சியமானாலும் அதை நம்பியே வாழ்ந்தால் கடும் ஏமாற்றத்தையே கொண்டுவந்து சேர்க்கும். அந்த மகனுக்கு அந்த வீட்டின் மதிப்பு ஆறுமாதச் சேமிப்பு. ஆனால் அவன் இழந்தது இருபது வருட இளமைக்காலத்தை. இது அபத்தம் இல்லையா?

எந்தசெயல் முழுமையை கொண்டுவருகிறதோ அதுவே தர்மம். எது சமநிலையை அளிக்கிறதோ, எது நம் எல்லா பக்கங்களையும் வளரச்செய்கிறதோ, எது நம்மை நிறைவை நோக்கி கொண்டுசெல்கிறதோ அதுவே தர்மம் என்கிறது இந்நூல்.

வானத்தையே பார்க்கமுடியாத ஒருவன் மண்ணில் எதைப்பார்ப்பான்? பல்லாயிரம் கோடி பொருட்களில் ஒளிவிடும் முடிவில்லாத சூரியர்களை அல்லவா? ஒருநாள் அவனால் வானைப்பார்க்கமுடிந்தால் சூரியனை காண்பான். பிற அனைத்தும் அச்சூரியனின் தோற்றங்களே என உணர்வான். சூரியனை பார்க்கமுடியாதவர் நாம். பார்த்தவர் போத்சத்வர்

போதிசத்வ அம்பேத்கரை இத்தருணத்தில் வணங்குகிறேன்

*

மூன்றாம் படிநிலையை நிர்வாணத்தில் அமைவது என்கிறார் அம்பேத்கர். முழுமையை நோக்கிச்சென்றவன் நிர்வாணத்தில் அமைகிறான். [நிப்பானம் என்ற சொல்லின் தமிழ் -சம்ஸ்கிருத வடிவம் நிர்வாணம்]

நிர்வாண நிலை மட்டுமே உண்மையான ஆனந்தம் என்று சொல்லும் புத்தரின் கூற்றை அம்பேத்கர் முன்வைக்கிறார். புத்தரின் போதனைகளிலேயே உச்சமானதும் மையமானதும் அதுவே. அவருக்கு முன்னரே நிர்வாணநிலையை, முக்தி நிலையை பற்றி பலரும் பேசியிருக்கிறார்கள். புத்தர் சொன்னவை அவற்றிலிருந்து மாறுபட்டவை.

நான்குவகை நிர்வாணங்கள் இந்தியச்சூழலில் போதிக்கப்பட்டுள்ளன என்று அம்பேத்கர் சுட்டுகிறார்.

1. உலகியல் நோக்கில்.

2. யோகநோக்கில்

3. பிராமணிய நோக்கில்

4. உபநிடத நோக்கில்.

உபநிடத நோக்கை வேதாந்த நோக்கு என்று சொல்லலாம். அது ஆன்மா என்ற ஓர் சுயமான இருப்பை உருவகித்து அதன் முழு விடுதலையையே நிர்வாணம் என்று சொல்கிறது. பிறப்பால் தான் பிணைக்கப்பட்டுள்ள அனைத்திலிருந்தும் ஆன்மா பெறும் விடுதலை அது.

அம்பேத்கர் அந்த விடுதலை என்பது எதிர்மறை நோக்கிலிருந்து உதித்தது என்கிறார். நேதி நேதி என்ற, இது அல்ல இது அல்ல என்ற, நிராகரிப்பில் இருந்து அது கண்டடையப்படுகிறது. அது உண்மையின் பாதை அல்ல, மறுப்பின் பாதை.

அதன் மறுஎல்லை என்பது உலகியல் நோக்கு. அது நிர்வாணத்தை முழுக்கமுழுக்க அன்றாட வாழ்க்கை சார்ந்தே பேசுகிறது. மனிதனின் தேடலும் சரி நிறைவும் சரி மிகச்சிறிய அளவிலேயே அன்றாட வாழ்க்கை சார்ந்தவை. ஒருவன் மானுட வாழ்க்கைக்கான முழுமையான பதில்களை தன்வாழ்க்கையை வைத்து அறிந்துவிடமுடியாது. அவன் ஒட்டுமொத்த பிரபஞ்ச இயக்கத்தைக்கொண்டே அதை உணர முடியும். அதற்கு உலகியல் நோக்கு உதாவாது

ஆகவே உலகியல்வாதத்தின், அதாவது நம்மூர் மொழியில் சொல்லப்போனால் நாத்திகவாதத்தின், பதில் என்பது எவ்வகையிலும் போதுமானதல்ல என்கிறார் அம்பேத்கர். உலகியல் இன்பங்களை அவை முன்னிலைப்படுத்துகின்றன. உலகியல் இன்பங்களுக்கான தேடல் எதுவும் மேலும் துயரத்தையே அளிக்கும் என்கிறார் புத்தர்.

ஆசைப்பட்ட அனைத்தையும் அடைந்து, அவற்றை அடைவதனூடாக அவற்றில் இருந்து விடுபட்டுச் செல்லுதலே உலகியல் சொல்லும் நிர்வாணம். அது சாத்தியமானதே அல்ல.

பிராமண மதம் என அம்பேத்கர் சொல்வது பூர்வமீமாம்சையை. அதாவது வேள்விச்சடங்குகளின் மதத்தை. அது ஒருபக்கம் லௌகீக லாபங்களையும் மறுபக்கம் ஆன்மவிடுதலையையும் பேசக்கூடிய ஒரு கலவைச் சித்தாந்தம். அதன் ஆன்மீக உருவகம் வேதாந்தம் சொல்லக்கூடிய ஆன்மாவின் விடுதலைதான். ஆனால் அவர்களுக்கு அது ஒரு பாவனையே. நடைமுறையில் அவர்கள் பேசுவது உலகியல்வாதம்தான். இந்த பூசையை அல்லது வேள்வியை அல்லது பரிகாரத்தைச் செய்தால் இது கிடைக்கும் என்ற உலகியல் பேரத்தைத்தான்.

பிராமணமதத்தின் நிர்வாணம் என்பது உலகியல்வாழ்க்கையில் பொருள்சேர்த்து பூசைகளையும்வேள்விகளையும் செய்து அதன் விளைவான புண்ணியத்தை சேமித்துவைப்பது. அது பிறப்பு இறப்புகளின் ஓர் வெளியில் எங்கோ இருந்துகொண்டிருக்கிறது. அதற்கு அபூர்வம் என்று பெயர். அதை மறுபிறப்பில் அடையலாம். அவ்வாறு பல பிறப்புகள் வழியாக அடைந்த புண்ணியங்களின் ஒட்டுமொத்த்தால் ஆன்மா முழுமையான விடுதலையை அடைகிறது.

இது உலகியலையும் ஆன்மவிடுதலையும் போட்டுக்கலக்கும் ஒரு முறை. அம்பேத்கர் பிற நூல்களில் இதை புரோகிதமோசடி என்றே கடுமையாக நிராகரிக்கிறார். அந்த நிராகரிப்பு அம்பேத்காரைவிட கடுமையான மொழியில் முன்னரே பௌத்தஞானிகளாலும் வேதாந்திகளாலும் செய்யப்பட்டதுதான். பிராமணமதத்தின் நிர்வாணம் என்பது ஒரு பேரம் மூலம் அடையப்படுவது. அதில் ஞானத்துக்கு இடமே இல்லை. ஆகவே அது நிராகரிக்கப்படுகிறது.

யோகிகள் சொல்லும் நிர்வாணநிலை என்பது ஒரு நிறைநிலை அல்ல . அது ஒரு தற்காலிக உள எழுச்சி மட்டுமே. ஒரு மாயை. மனிதன் தன் நிறைநிலையை சென்றடைவதை அவை சுட்டிக்காட்டவில்லை. மாறாக மனிதன் தன் எளிய நிலையில் நின்றபடி ஒருசில பயிற்சிகள் மூலம் நிறைநிலையை பாவனையாக அடைவதைப்பற்றி மட்டுமே பேசுகின்றன என புத்தர் அதை நிராகரிக்கிறார் என்கிறார் அம்பேத்கர்.

ஆன்மாவின் விடுதலை பற்றி பேசும் கொள்கைகளை பௌத்தம் நிராகரிக்கிறது என்கிறார் அம்பேத்கர்.ஏனென்றால் புத்தர் ஆன்மா இல்லை என்று சொன்னவர். ஆகவே அவற்றை அவர் நிராகரிக்கிறார். புத்தர் சொல்லும் நிர்வாணநிலை என்பது ஆன்மாவின் விடுதலை அல்ல. இந்த உடலை, இந்த இருப்பை உதறி வேறெங்கோ சென்று அடையும் விடுதலை அல்ல.

புத்தரின் நிர்வாணநிலை முற்றிலும் நேர்நிலையான ஒரு முழுநிலை. நம் சாராம்சம் தன் மீட்பைக் கண்டடைவதல்ல அது. நாமென நாமுணரும் அனைத்தும் அடையும் முழு நிலை அது. அறிவின் முழுமை, இருத்தலின் முழுமை என்று அதைச் சொல்லலாம்.

அது என்னை துறந்து நான் அடைவதல்ல, என்னை முழுமையாக்கி நான் அடைவது. என்னுடைய உலகியலை நான் துறந்தபின் அடைவதல்ல அதில் இருந்தப்டியே அடைவது. செத்தபின் அடைவதல்ல, வாழ்க்கையில் அடைவது. என்னை இவ்வுலகின் அலைக்கழிப்புக்குள் நிறுத்தும் அனைத்தும் அடங்கி என்னுள் நான் நிறைந்திருக்கும் பெருநிலை அது.

தர்மம் என்றால் என்ன என்ற வினாவுக்கு மூன்றாவது பதில் இது. எது நிப்பானத்துக்கு இட்டுச்ச்செல்லக்கூடியதோ அது தர்மம். எந்த ஒருசெயலையும் அதன் கடைசிநுனி வரை கொண்டுசென்றால் அது என்னை விடுதலை செய்வதாக இருக்கவேண்டும். என்னை முழுமை செய்வதாக இருக்கவேண்டும். அதுவே தர்மம்.

பௌத்தம் திருஷ்ணை என்ற சொல்லை கையாள்கிறது. அதை ஆசை என்று பொதுவாகச் சொல்லலாம். எல்லா ஆசைகளையும் உள்ளடக்கிய ஒன்றைச் சுட்டும் சொல் அது. வாழ்வதற்கான ஆசை. வெல்வதற்கான ஆசை. துய்ப்பதற்கான ஆசை. தன்னை நிறுவிக்கொள்வதற்கான ஆசை. ஆசையை நெருப்பு என்று புத்தர் சொல்கிறார். மனித துயரங்களுக்கு ஆதாரமாக இருப்பது அதுவே. திருஷ்ணை என்னும் நெருப்பு

பேராசை [லோபம்] அதன் விளைவான சினம் [தோஷம்] அவற்றின் விளைவான மனமயக்கம் [மோகம்] ஆகியவையே மனிதனை கட்டியிருப்பவை. அவற்றிலிருந்து விடுபடுதலே நிர்வாணம். பௌத்தத்தின் முக்தி என்பது இங்கே இவ்வாழ்க்கையில் இருந்து அடையப்பெறுவது என்று அம்பேத்கர் மீளமீளச் சுட்டிக்காட்டுகிறார்.

மேலே சுட்டப்பட்ட சொற்கள் மிகமிகநுட்பமாக யோசிக்கத்தக்கவை. இவற்றுக்கு சம்ஸ்கிருதத்தில் உள்ள பொருள் அல்ல பாலி மொழியில் என்று அம்பேத்கர் இன்னொரு இடத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார். லோபம் என்றால் குறுகுதல் என்று பொருள். பேராசை என்பது ஒருவனின் ஆளுமை உலகியல் சார்ந்த ஏதோ ஒன்றில் குறுகிச்சுருங்குதல். தோஷம் என்றால் வளைதல். பேராசையின் விளைவான பதற்றமும் கோபமும் வெறுப்பும் எல்லாம் மனிதனை வளையச்செய்பவை. மோகம் என்றால் மங்குதல், ஒளியிழத்தல் என்று பொருள். மனிதனின் ஆளுமையின் மீது கறையாகப்படிபவை அவை.

பௌத்தமெய்ப்பொருளை கற்பவர்களுக்கு மிகமிக முக்கியமான ஒரு விளக்கத்தை இந்த அத்தியாயத்தில் அம்பேத்கர் சொல்கிறார். அம்பேத்கரின் இந்நூலின் மகுடமாக இந்த அத்தியாயம் திகழ்வதற்கான காரணம் இதுவே. நிர்வாணம் [நிப்பானம்] என்ற சொல்லை பின்னால் வந்தவர்கள் மிகப்பிழையான விளக்கம் மூலம் திசைதிருப்பிக் கொண்டு சென்றுவிட்டார்கள் என்று அம்பேத்கர் சொல்கிறார். பின்னால்வந்தவர்கள் என அவர் சொல்வது வஜ்ராயனம் உள்ளிட்ட பிற்கால பௌத்தமதப்பிரிவுகளை.

நிர்வாணம் என்ற சொல்லை ’முழுமையாக களைந்துவிடல்’ என்று இவர்கள் பொருள்கொள்கிறார்கள். வெறுமே சொற்பொருளைக்கொண்டு அதை விளக்குகிறார்கள். அந்தவிளக்கம் சம்ஸ்கிருதச் சொற்பொருளை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. பாலி சொற்பொருளை அடிப்படையாகக் கொண்டு அல்ல.

நிர்வாணம் என்பது அனைத்தையும் களைந்துவிடல் அல்ல என்று அம்பேத்கர் சொல்கிறார். நிர்வாணம் என்பது அறிவின் நெருப்பில் நம்மைக் களைந்து எரிப்பது மூலம் அடையப்பெறுவது. ஒரு தூய்மையாக்கல் அது. ஆனால் அந்நெருப்பில் அனைத்தையும் எரிப்பதைப்பற்றி புத்தர் பேசவில்லை. அதில் திருஷ்ணையை- ஆசைகளை – எரிப்பதைப்பற்றியே பேசுகிறார். ஆம், அனைத்தையும் துறந்து அமைவதல்ல நிர்வாணம். அது இங்கே இந்த வாழ்க்கையில் ஆசைகள் மீதான அறிவின் கட்டுப்பாட்டுடன் வாழும் முழுமையான வாழ்க்கை மட்டுமே

அப்படியென்றால் முழுமையாகக் களையும் நிலை பற்றி புத்தர் சொல்லவில்லையா என்ன? அது வேறு ஒரு நிலை, அதன் பெயர் பரிநிர்வாணம். எட்டுவகை பிரபஞ்சக்காட்சிகளையும் கைவிட்டு தன்னிலையை இழந்து முழுமையில் கலந்து அமைதல்.

புத்தர் தன் உரையாடல்களில் இந்த வேறுபாட்டை துல்லியமாக விளக்குகிறார் என்கிறார் அம்பேத்கர். நூற்றுக்கணக்கான நூல்களில் இந்த இரு சொற்களும் மாற்றிமாற்றி குழப்பியடிக்கப்பட்டிருக்கின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். இக்காரணத்தாலேயே பௌத்த ஞானத்தை தவறாக மதிப்பிடும் தன்மை உருவாகிவிட்டது என்கிறார். பௌத்தம் உலகவாழ்க்கையை துறப்பதையே முன்வைக்கிறது என மேலைநாட்டினர் விளக்கிவிட்டார்கள் என்று சொல்கிறார்

என்னைப்பொறுத்தவரை இந்தத் தெளிவு மிகமிக முக்கியமானது. ஒரு திருப்புமுனை என்றே சொல்வேன். பௌத்தம் மீதான என் முக்கியமான விமர்சனமாக இருந்ததும் அது முழுமையான விடுபடல்நிலையை மட்டுமே முன்வைக்கிறது என்பதுதான். ஆகவே அது உலகியல்வாழ்க்கைக்கு உகந்த நெறி அல்ல என்றுதான் நான் நினைத்திருந்தேன். அத்தனைபேரையும் சாமியாராக ஆக்க முனையும் மதம் என்ற மனப்பிம்பம் உருவாகியிருந்தது.

அம்பேத்காரின் விளக்கம் தெளிவாகவே ஓர் எல்லைக்கோட்டை உருவாக்குகிறது. நிர்வாணம் என்பது முழுமையாகத் தன்னைத் துறத்தல் அல்ல. தன் மேல் இவ்வுலகு ஏற்றும் அழுக்குகளை துறந்து தூய்மையாதல் மட்டுமே. அவ்வழுக்குகளுக்கு காரணமாக உள்ளது நம்மிலிருக்கும் திருஷ்ணை அல்லது ஆசைகள். அதை எரித்தழிக்கும் நெருப்பே தர்மம்.

ஆகவே, எது அறச்செயல்? எது விடுதலையை இறுதிவிளைவாகக் கொண்டிருக்கிறதோ அதுதான். சமுக விடுதலை, தனிமனித விடுதலை, அக விடுதலை, முழு விடுதலை.

 

[மேலும்]

[ ராஜபாளையம் நாற்று அமைப்பு சார்பில் நவம்பர் 2,2012 அன்று நிகழ்ந்த கூட்டத்தில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம்]

*

முந்தைய கட்டுரைஉண்மையின் வெற்றி
அடுத்த கட்டுரைஅமெரிக்காவில் விவசாயம்