அம்பேத்கரின் தம்மம்- 1

புத்தகங்களைப் பூஜையறையில் வைத்து வாசிப்பதற்காக ஒரு ஸ்டேண்ட் உண்டு. கத்திரி போன்ற வடிவில் இருக்கும். அதற்கு எங்களூரில் கிரந்தகாவடி என்று பெயர். பெரும்பாலான குமரிமாவட்டப் பழங்கால வீடுகளில் அது சந்தன மரத்தில் செய்யப்பட்டிருக்கும். நான் சிறுவயதாக இருக்கும்போது அப்படி ஒரு ஸ்டேண்டை எடுத்துக்கொண்டு வந்து அதில் வைத்து அலக்ஸ்டாண்டர் டூமாவின் த்ரீ மஸ்கிட்டீர்ஸ் என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். கனமான நூல். அதாவது பக்க அளவில்.

ஜோதிடரான என் பெரியப்பா அங்கே வந்தார். ‘அது என்ன நூல்?’ என்று கேட்டார். சொன்னேன். கடும் கோபத்துடன் ‘அதற்கு எதற்காக கிரந்த காவடி? எடுத்துக் கொண்டுபோ அந்த புத்தகத்தை’ என்று கத்தினார். நான் நடுங்கிப்போனேன். கொஞ்சநேரம் கழித்து சாந்தமாகி ஒருவாய் வெற்றிலை போட்டுத் துப்பியபின் அவர் விளக்கினார். ஒரு நூலுக்கு கிரந்தகாவடி வைப்பது என்பது ஒரு பெரிய கௌரவம். அதை எல்லா நூல்களுக்கும் கொடுக்கக்கூடாது.

இருவகை நூல்களுண்டு. வாசிக்கத்தக்கவை. பாராயணம் செய்யத்தக்கவை.வாசிப்பதென்பது அந்நூலை மொழிவழியாகக் கடந்துசெல்வதுதான். ஒரு நூலை உள்ளுணர்வில் வாங்கிக்கொள்ளும்போது நாம் இயல்பாகவே அதைக் கடந்துசென்றுவிடுகிறோம். அதாவது சாதாரணமான நூல்களென்பவை நாம் நம் இறுதிக்கணம் வரை ஒயாமல் ஏறிச்சென்றுகொண்டிருக்கும் படிக்கட்டின் படிகள் மட்டுமே.

ஆனால் சில நூல்கள் உண்டு. அவை நாம் குடியிருக்கவேண்டிய வீடுகள் போன்றவை. அவற்றை நாம் கடந்துசெல்லமுடியாது. அவற்றை நம் வாழ்நாள் முழுக்க ஒவ்வொருநாளும் வாசித்தாகவேண்டும். அப்படி ஒவ்வொருநாளும் வாசிப்பதையே நாம் பாராயணம் என்கிறோம். அப்படி பாராயணம்செய்யவேண்டிய நூலை மட்டுமே கிரந்தகாவடியில் வைக்கவேண்டும். அது அந்நூலுக்கான சிம்மாசனம். சிம்மாசனத்தில் மன்னர்கள் அமரலாம். அவர்களைவிட முக்கியமாக ஞானிகள் அமரலாம். எளிய மனிதர்களை அமர்த்துவதென்பது பிழை’

அத்தகைய மகத்தான நூல்கள் பல உலகில் உள்ளன. என் வரையில் கீதையும் உபநிடதங்களும் பைபிளும் அத்தகையவை. இந்நூல்களை நான் இருபதாண்டுக்காலமாக வாசித்துக்கொண்டே இருக்கிறேன் என்றாலும் அதிகமாகப் பேசியதில்லை. காரணம் முதன்மையாக என்னுடைய தகுதி பற்றிய சந்தேகம்தான். இரண்டாவதாக ,அந்தப் பேச்சு மூலம் உருவாகும் விவாதம் சற்றே தரையிறங்கினாலும் அந்நூல்களுடனான என் உறவை அது பாதித்துவிடும்.

உதாரணமாக பைபிள் எனக்கு ஞானநூல். ஒரு ஆசாரக் கிறித்தவர் அவரது கண்மூடித்தனமான நம்பிக்கையுடன் என்னிடம் அந்நூலைப்பற்றிப் பேசினால் நான் என் ஏசுவை இழந்துவிடுவேன் என அஞ்சுகிறேன். கீதையைப்பற்றி எழுத ஆரம்பித்தபோதும் இதையே உணர்ந்தேன். பாதியிலேயே நிறுத்திக்கொண்டேன்.

அந்த வரிசையில் நான் பதினைந்தாண்டுகளுக்கும் மேலாக வைத்திருக்கும் ஒரு நூல், ஒவ்வொருநாளும் வாசிக்கும் ஒரு நூல் , என்னுடைய ஏராளமான மனச்சிக்கல்களில் இருந்து என்னை விடுவித்த ஒரு நூல், என் இருண்ட மனக்குகையில் ஒளியாக இருக்கும் ஒரு நூல் உண்டு. அதைப்பற்றி பொதுவெளியில் அதிகமாக நான் பேசியதில்லை. அதாவது தமிழ்ச்சூழலில் பேசியதில்லை. ஏனென்றால் அந்நூலுடனான என்னுடைய அந்தரங்கமானது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் எழுதிய ‘புத்தரும் அவரது தம்மமும்’ என்ற மகத்தான நூல் அது.

அவர் தலித் அரசியல் பிதாமகர். ஆம், ஆனால் அதுமட்டுமல்ல அவர் என்று சொல்ல முயல்வேன். அந்த அரசியல் எவ்வளவு தேவையானதென்றாலும் எவ்வளவு மகத்தானதென்றாலும் அம்பேத்கர் அதைவிட பலமடங்கு மேலானவர். அதன் வழியாக அம்பேத்காரை அணுகினால் அவரது நிழலையே நீங்கள் தொட முடியும்.

சாதி இந்துக்களால் ஒடுக்கப்பட்டு அம்பேத்கர் ஒரு பழிவாங்கலாக, பதிலடியாக மதம்மாறினார் என்று இன்று திரும்பத்திரும்ப நம்மிடம் சொல்லப்படுகிறது. அது அவரது தொடக்கம். அவர் மதங்களை ஆராய ஆரம்பித்தது அந்தச் சூழலில்தான். ஆனால் அவர் சென்றடைந்த இடம் அதுவல்ல. அது ஒரு பதிலடி அல்ல. அரசியல்நடவடிக்கை அல்ல. அது முற்றிலும் இன்னொன்று. எந்த எதிர்மனநிலை வழியாகவும் ஒருவர் அங்கே சென்றடைய முடியாது. எந்த கசப்புகள் வழியாகவும் கோபங்கள் வழியாகவும் ஒருவர் அந்தக் கனிவை அடையமுடியாது. அது இன்னொரு நிலை.

அம்பேத்கர் மனிதகுலத்திற்கு விளக்காகும் ஞானத்தைச் சென்றடைந்தவர் என்பதற்கான ஆதாரம் அவர் நிறைவடைந்தபின் வெளிவந்த இந்நூல். சமீபகாலமாக மனதை அந்தரங்கமாக திறந்து உரையாடத்தக்க சில அம்பேத்காரிய நண்பர்கள் எனக்கு அமைந்தபோதுதான் அவரைப்பற்றி பேச ஆரம்பித்தேன். எனக்கு அவர் எவரோ அந்த அம்பேத்காரைப்பற்றி. அவர்களுடைய ஊக்கத்தாலேயே இதை இங்கே பேச முன்வருகிறேன். மிகுந்த தயக்கத்துடன்.

இந்த உரையைக் கேட்கும்போது கையில் சட்டநூலுடன் கோட் சூட் அணிந்து நிற்கும் அம்பேத்காரை மறந்துவிடுங்கள். போதிமரத்தடியில் மலருடன் அமர்ந்திருக்கும் வெள்ளுடையணிந்த போதிசத்வரை, ஞானகுருவை நினைத்துக்கொள்ளுங்கள். இச்சொற்கள் உங்களுக்கு இன்னொரு பொருளை அளிக்கும்

*

நண்பர்களே, பௌத்தம் இந்தியாவில் உதித்து சீனா ஜப்பான் என கீழைநாடெங்கும் பரவி பல கிளைகளாகி பல முறைகளாகி பெருகியது. நவீன யுகத்தின் தொடக்கத்தில் மூன்று மேல்நாட்டு அறிஞர்களால் அது மீட்டுருவாக்கம் செய்யப்பட்டது. கர்னல் ஆல்காட், ரய்ஸ் டேவிட்ஸ், பால் காரஸ்.

அந்த மூவரும் செய்தது என்னவென்றால் பலபிரிவுகளாக உடைந்து வளர்ந்து பரவிக்கிடந்த பௌத்தத்தை மீண்டும் ஒரே கட்டுமானமாக நமக்குக் காட்டினார்கள். ஆலமரம் மிகமிகப் பெரிதாக வளரும்போது அதன் விழுதுகள் ஒவ்வொன்றும் பேராலமரங்களாக ஆகும். மைய மரம் அதிலொன்றாக இருக்கும். அதை ஒரு காடாகவே எண்ண முடியும், ஒற்றைமரமாக கற்பனைசெய்ய முடியாது. இந்த மூன்று மேல்நாட்டு அறிஞர்களும் பௌத்த விருட்சத்தை தொகுத்து ஒரே மரமாகக் காட்டினார்கள்.

ஆனால் இந்த நூல்களெல்லாமே நம் வரலாற்று ஆர்வத்தை, தத்துவத்தேடலை நோக்கிப் பேசக்கூடியவை. இவர்களின் நூல்கள் வழியாக பௌத்தத்தின் வரலாற்றை புரிந்துகொள்ள முடியும். பௌத்த தத்துவத்தைக் கற்க முடியும். புத்தரின் சொற்களை அறிய முடியும். ஆனால் பௌத்த தம்மத்தை, அதாவது பௌத்தம் முன்வைக்கும் அறத்தை, அறிய முடியாது.

பௌத்த அறமே பௌத்தத்தின் ஆன்மீகசாரம். அதுவே புத்தரின் ஞானம். அதைச் சொல்ல ,நமக்கு உணர்த்த வெறும் அறிஞர்களாகிய இவர்களால் முடியாது என்பது மிக இயல்பே. ஏனென்றால் தர்மத்தை ஒரு தத்துவஞானி உணர்த்திவிடமுடியாது. அதைச் சொல்ல ஒரு போதிசத்வர்தான் வந்தாகவேண்டும்.

இருபதாம்நூற்றாண்டின் விளிம்பில் வந்து நின்ற மானுட அறிவுத்தளத்தை நோக்கி இரண்டாயிரத்தைநூறு வருடம் முன்பு உருவாகி பல நூறு வழிகளாக பல்லாயிரம் நூல்களாக விரிந்து பரவிய ஒரு ஞானத்தை எடுத்துச்சொல்வதென்பது சாதாரணமான பணி அல்ல.

தொகுப்பதற்கு ஒரு மையம் வேண்டும். எந்த மையத்தில் அதை தொகுப்பது? எங்கே அத்தனை தர்க்கங்களையும் தரிசனங்களையும் சுற்றிக்கட்டுவது? தன் அக ஆழத்தில் அந்த ஒளிமிக்க மையத்தைக் கண்டடைந்த ஒருவராலேயே அதைச்செய்ய முடியும்.

அம்பேத்கர் அதைக் கண்டடைந்தார். பிற பௌத்த நூல்கள் எதிலுமில்லாத ஒன்று அவரது ’பௌத்தமும் அவரது தம்மமும் என்ற ஞானநூலின் எல்லா பக்கங்களிலும் நிறைந்திருக்கிறது. அதை நான் கருணை என்பேன். கருணை என்ற சொல்லுக்கு நாம் நடைமுறையில் கொடுக்கும் அர்த்தமல்ல இங்கே நான் குறிப்பது. பௌத்தம் அதற்கு மேலும் விரிவான அர்த்தத்தை அளிக்கிறது. ஆங்கிலத்தில் அதை compassion என்று சொல்லலாம்.

ஆனால் அச்சொல் பௌத்தத்தில் அதைவிட பெரியது. கம்பாஷன் என்ற சொல்லுக்கு உயிர்களுடன் நாம் கொள்ளும் அன்பு என்று பொருள் சொல்லலாம். உயிர் உயிரற்றவை என அனைத்தின் மேலும் கொள்ளும் பேரன்பே கருணை. கருணைக்கு பாத்திரமாக ஒன்றுமே இல்லாமல் இருக்கும் நிலையில்கூட தனக்குள் தானே நிறைந்து தன்னை முழுமையாக்கும் பேருணர்வே பௌத்தம் சொல்லும் கருணை.

அந்தக் கருணையை மையமாகக் கொண்டு மொத்த பௌத்தஞானத்தையும் மீண்டும் சொல்லியிருக்கிறார் பி.ஆர். அம்பேத்கர். கருணையின் பொற்தகட்டில் எழுதப்பட்டிருக்கிறது இந்நூல். அது எதைச்சொன்னாலும் அதனுடன் கருணையும் இயல்பாகவே இணைந்துகொள்கிறது.

இருபதாண்டுகளுக்கு முன் இந்நூலை எனக்கு பரிந்துரை செய்த நித்ய சைதன்ய யதியை நினைத்துக்கொள்கிறேன். அவர் அம்பேத்காரை நாகபுரிக்குச் சென்று நேரில் சந்தித்தவர். அவர் சொற்களைக் கேட்டவர். நித்யா இந்நூலைப்பற்றிச் சொல்லும்போது சொன்னார். ’இந்நூலுக்கும் முந்தைய பௌத்த நூல்களுக்கும் இடையேயான வேறுபாடு ஒன்றுதான். இந்நூல் இரு உலகப்போர்களுக்குப் பின் எழுதப்பட்டது’ இதைவிடச் சிறந்த ஒரு விளக்கம் இருக்கமுடியாது. மனிதகுலத்தின் அத்தனை குரூரங்களையும் சிறுமைகளையும் கண்ட ஞானியால் உருவாக்கப்பட்ட நூல் இது

இந்நூலை முதலில் மிக உதாசீனமாக வாசித்த நான் ஒருமுறை நித்யாவிடம் கேட்டேன். ‘இரு உலகப்போர்களை கண்ட அம்பேத்கர் எந்த நம்பிக்கையில் மனிதனிடம் அறம் பற்றியும் அகிம்சை பற்றியும் பேசுகிறார்?’.

நித்யா சொன்னார். ‘என்றும் எல்லா ஞானியும் மனிதனின் இருளை நோக்கி தன்னுடைய ஒளியால் பேசியவர்கள்தான்’

நம் இருளை நோக்கி தன் ஒளியை முன்வைக்கும் இந்த மகத்தான நூல் அறம் என்றால் என்ன என்று சொல்வதை நான் இங்கே பேசப்போகிறேன்.

*

தர்மம் என்ற சொல்லுக்கு பிராகிருதம், பாலி இருமொழிகளிலும் தம்ம, தம்மோ என்றுதான் உச்சரிப்பு. தர்மம் என்ற சொல்லின் தமிழ் வடிவமே அறம் என்பது. தமிழல்லாத பிற இந்திய மொழிகள் அனைத்திலும் தர்மம் என்ற சொல்லே உள்ளது.

பெண்கள் ஸ்வெட்டர் பின்னுவதை நான் ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருப்பேன். ஒரு ஊசியில் சுற்றும் நூல் ஸ்வெட்டராக மறுபக்கம் உருவம் கொண்டபடியே செல்கிறது. ஸ்வெட்டர் என்பது ஊசி ஊடுருவிய நூல் என்று சொல்லலாம். இந்தியப்பண்பாட்டை எடுத்துப் பார்த்தால் தர்மம் என்ற சொல் அந்த ஊசி என்று தோன்றுகிறது

மிகமிகத் தொன்மையான காலம் முதல் அந்தச் சொல் இருக்கிறது. அது குலங்களை, இனக்குழுக்களை, மானுட இனங்களை, நிலப்பகுதிகளை தொகுத்து தொகுத்துப்பின்னிப்பின்னி இந்த பண்பாட்டு வெளியை உண்டுபண்ணியிருக்கிறது.

ஆனால் சொல் இரும்பாலானதல்ல. பொன்னாலானதுமல்ல. அது உயிருள்ளது. இந்தியப்பண்பாடு உருவாக உருவாக அச்சொல்லும் அதன் சாரத்தை உண்டு வளர்ந்தது. ஒவ்வொரு மானுட இனம், ஒவ்வொரு நிலப்பகுதி உள்ளே வரும்போதும் அச்சொல் அதை உள்வாங்கி உருமாறியிருக்கக் கூடும்.

தொடக்கத்தில் தர்மம் என்ற சொல் ‘செய்தாக வேண்டியது’ என்ற பொருளில் மட்டுமே இருப்பதைக் காணலாம். தனிமனித தர்மம், குடும்பதர்மம், குலதர்மம், ராஜதர்மம் என்றெல்லாம் அது வளர்வதைக் காணலாம்.

அறம் என்றால் நீ செய்யவேண்டியது என்ற நிலையில் இருந்து நானும் நீயும் செய்யவேண்டிய ஒன்று என்ற நிலைநோக்கி நகர்கிறது அதற்கான வரையறை,. நாமனைவரும் செய்யவேண்டியது என்றாகிறது. மானுடகுலத்துக்கு பொதுவானது என்று பேருருவம் கொள்கிறது. உயிர்க்குலத்துக்கே பொதுவானது என்று மேலும் வளர்கிறது. பிரபஞ்சவிதி என அதை அறிகையில் முழுமை கொள்கிறது

பௌத்தம் பேசும் தம்மம் என்பது என்ன? நான் முன்னர் சொன்ன அத்தனை நிலைகளிலும் இருக்கும் ஒன்று. என்னுள் இருந்து என்னை உருவாக்கும் நியதி. இவையனைத்தையும் ஆளும் நெறி. காலத்தையும் வெளியையும் உருவாக்கி நிறுத்தும் விதி. அனைத்துமாக ஆகி நிற்கும் பிரபஞ்சமெனும் ஒழுங்கு. அதுவே பௌத்த தம்மம்.

பௌத்தம் தர்மத்தைப்பற்றி பேசும்போது இந்த ஒவ்வொரு நிலையையும் இணைக்கும், ஒவ்வொருநிலைக்கும் ஒரேசமயம் பொருத்தமாக இருக்கும் ஒரு விளக்கத்தை உருவாக்க முயல்கிறது. எந்த நியதி பிரபஞ்சத்தை ஆள்கிறதோ அந்த நியதி இந்த மணல் இந்தக்காற்றால் அந்தப்பக்கம் நகர்வதை இந்த பேச்சு இங்கே ஒலிப்பதை நிகழ்த்துகிறது என அது சொல்கிறது

விண்ணுக்கு எந்த நியதி உள்ளதோ அதுவே மண்ணுக்கும் என்ற விளக்கம் இது. அண்டத்துக்கு எந்த விதி உள்ளதோ அதுவே அணுவுக்கும் என்ற தரிசனம் இது. முழுமை என ஒன்று உண்டெனில் எல்லாமே முழுமையே என்ற மெய்ஞானம் அது.

பௌத்தத்தின் தர்மம் பற்றிய விளக்கம் இந்தியப்பண்பாட்டின் ஓர் உச்சக்கட்டம். மானுட ஞானத்தின் பொன்னொளிர் தருணம். அதன்பின் அந்த வார்த்தையே மாறிவிட்டது. இந்தியாவின் எந்த மதத்திலும் எந்த தரிசனத்திலும் தர்மம் என்ற சொல் அதன்பின் பௌத்த அர்த்தத்துடன்தான் கையாளப்பட்டுள்ளது. ஏன் சாதாரணமான நாட்டார்வழக்கில்கூட தர்மம் என்ற சொல்லுக்கு பௌத்தப் பொருள்தான் உள்ளது. ‘நான் தர்மத்துக்குக் கட்டுப்பட்டவன்யா’ என ஊர்முனையில் ஒருவர் சொல்லும்போது அவர் பௌத்தத்தை சொல்லிக்கொண்டிருக்கிறார்.

அந்த தர்மத்தைப்பற்றிய கூரிய, கவித்துவமான வரையறைகளின் தொகுதி அம்பேத்கரின் இந்த மகத்தான நூலில் உள்ளது


[மேலும்]

[ ராஜபாளையம் நாற்று அமைப்பு சார்பில் நவம்பர் 2, 20102 அன்று நிகழ்ந்த கூட்டத்தில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம்]

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது 2012
அடுத்த கட்டுரைபிழை -கடிதங்கள்