அகம் மறைத்தல்

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். 1991ஆம் வருடம், நான் 11ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலம். தமிழக அரசு முதன் முதலாக, இறுதித்  தமிழ்த் தேர்வில் ஒரு கவிதை எழுதுவதைக் கட்டாயமாக்கி இருந்தது. அந்த அறிவிப்பு வந்த அடுத்த நாள், எங்கள் தமிழ் ஆசிரியர் (சு. சார்ஜ்), எங்கள் வகுப்பில் ஒரு கவிதைப் போட்டி வைத்தார். அதில், “அன்பு மக்களின் அம்பு , அது மனிதனை ஆண்டவனாக்கும் பண்பு”, என்ற ரீதியில் எழுதிருந்த என் (முதல்) “கவிதைக்கு” இரண்டாம் பரிசு கொடுத்தார். பரிசு, மூன்றாய் உடைக்கப்பட்ட ஒரு ரவா லட்டு. அடுத்த முறை விடுதியிலிருந்து வீட்டிற்கு வந்த ஒரு நாள் இரவில், என் அப்பாவிடமும் அம்மாவிடவும் பரிசைப் பற்றிச் சொன்னேன். அம்மா என்ன கவிதை என்று கேட்க, எனக்கு “அன்பை”ப் பற்றி எழுதியதை சொல்ல வெட்கம். வாரமலரில் படித்த வேறொன்றை சொல்லிவிட்டேன் (இது ஒரு கவிதையா என அப்பா அவமதித்தது போகட்டும்).

இன்றுவரை அன்பைப் பற்றி, அன்பு செலுத்துதல் பற்றிப் பேச வெட்கம். இதை என் நண்பர்களிடமும் நிறைய நான் பார்க்கிறேன். என் பெற்றோர்கள் சொல்லிக் கேட்டதில்லை. என் உறவினர்கள் என்னிடம் சொன்னதில்லை, என் மேல் உயிராய் இருப்பவர்கள் கூட. அன்பைப் பற்றி , அன்பாய் இருத்தல் பற்றிப் பிறர் சொல்லி நான் கேட்ட இடம் மூன்றுதான். 1) ஒருவர் ஒரு உடன் பிறப்புகளைப் பற்றி , “அவனுக்கு அவன் அக்கா மேல ரொம்ப பிரியம்” ன்னு சொல்லுவார் . 2) சினிமா 3) இளம் காதலர்கள். சங்கத்தில் அகத்திணைகள் படைத்த நம் சமூகம் அகத்தை வெளிப்படையாக சொல்வதை ஏன் தவிர்க்க வேண்டும். ஏன் என்னால் என் தங்கையிடம் சொல்ல முடியவில்லை. என்னால் என் நண்பர்களின் மின்னஞ்சலில் மட்டுமே சொல்லமுடிகிறது. மிகுந்த முயற்சிக்குப்பின், அதுவும். ஆனால் நேரில் அல்லது தொலைபேசியில் பேசும்போதோ சொல்ல முடிவதில்லை. என் தோழி(மனைவி)கிட்ட கூட வேறு மனிதர்கள் முன் சொல்ல முடிவதில்லை. என்மகனிடம் நான் சொல்லவதை சக தமிழ் நண்பர்கள் வித்தியாசமாக உணர்கிறார்கள். ஆணால், அது அவனை சந்தோஷப்படுத்துவது தெரிகிறது.

இதற்கு மாறாக, இங்கு மேலைச் சமூகத்தில் இது மிகவும் இயல்பாக இருக்கிறது. யாரும், தனக்குப் பிடித்தவரிடம், தனக்கு அவர் பிடித்திருப்பதைப் பற்றி சொல்லத் தயக்கம் இல்லை. மகள்கள் அப்பாவிடமும், அப்பாக்கள் அம்மாவிடமும், தோழர்கள் தோழிகளிடமும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அதில் இவர்களுக்கு அலுப்பே இல்லை. முதலில் அது செயற்கையாகத் தோன்றினாலும், சில வருடங்களில் தெரிந்து விட்டது, அவர்கள் அதை நிஜமாகத்தான் சொல்லுகிறார்கள் என்று. அந்த அன்பு அல்லது உறவு மாறும் பொழுது அதை சொல்வதில்லை. அதில் எந்த குழப்பமும் தெரிவதில்லை.

நேற்று, என் வயதே ஆன(35) என் மகனின்(3 வயது) ஆசிரியையிடம் கேட்டேன். “can I say, I love you?”. என்னை இறுக்கி அணைத்தபடி, நீ ஆயிரம் முறை சொல்லலாம் என்றாள். ஆனால், என்னால் என் அம்மாவிடம் சொல்ல முடியவில்லை; அத்தையிடம் சொல்ல முடியவில்லை; அப்பாவிடம் முடியவில்லை. நான் என் மறைமுக அக்கறை மூலமும், செயல்கள் மூலமுமே அதை நிரூபிக்கவேண்டி இருக்கிறது. உறவுகள் மூலம் பின்னிப் பிணைந்த, இன்னும் சற்றேனும் (அல்லது நிறைய) பழங்குடி மனநிலையில் உள்ள நம் சமூகம் ஏன் அதை மறைக்கிறது.

இது அன்பைப் பற்றி மட்டுமல்ல. என் மாமா, இன்று தமிழ்நாட்டின் மிக முக்கியமான, பெரிய ஒரு அரசு கல்லூரியின் முதல்வர். ஆனால் அவரிடம், அதில் எனக்குப் பெருமை என்பதை சொல்ல முடியவில்லை. அதை மறைமுகமாக, வேறு ஏதோதோ சொல்லி உணர்த்த வேண்டி இருக்கிறது. அவரும் அதற்கு போலியாக “இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை” என்று பதில் சொல்ல வேண்டி இருக்கிறது.

அதே போலத்தான் தொடுதலும். நாம் நிறைய உரசிக்கொள்(ல்)கிறோம். பேருந்தில், பொதுஇடங்களில், கல்லூரிகளில். ஆனால் தொட்டுக்கொள்ளுதல் குறைவு. கல்லூரிகளில் பசங்கள் தோளைத் தட்டிக்கொள்வதைத் தவிர, பைக்குகளில் போகும்போது தவிர, (மேலை சமூக த்தில் இது இன்னும் குறைவு, அதுவும் ஆண்-ஆண் தொட்டுக் கொள்ளுதல் அறவே இல்லை). ஆனால், பஞ்சாப் போன்ற மாநில மக்களுக்கு இது மிக இயல்பாக இருக்கிறது. கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்துதல் இயல்பாக வருகிறது. நான் என் அம்மாவைக் கட்டிப்பிடித்து அன்பாய்ப் பேசினால் அவள் பாதி நோய் சரியாகிவிடும் போல…..

இதற்கு வரலாறு, பண்பாடு, தட்பவெப்பம் சார்ந்த காரணிகள்உண்டா? அல்லது இது அவ்வளவாக முக்கியமானது இல்லையா? நேரம் இருந்தால் மட்டும் உங்கள் கருத்துக்களை அறிய ஆவல்.

“எவ்வளவு சொன்னாலும் சொல்லாமல் விடப்பட்டது தான் அகம்” என்று உங்கள் தமிழாசிரியர் சொன்னதை நீங்கள் எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது .

அன்புடன் கெளதம்.

பின் குறிப்பு: உங்களுக்கு இது முன்னமே தெரிந்து இருக்கும். உங்களிடம் நூற்றுக் கணக்கானவர்கள் ஒரு உரையாடலில் இருந்துகொண்ட இருக்கிறார்கள் (என்னைப் போல, என் தோழி போல, என் நண்பர்கள் போல). அதனால், இணையத்தில் எழுதுவதைக் குறைப்பதைப் பற்றி மட்டும் நினைக்கவேண்டாம். அது உங்கள் எழுத்துக்கான நேரத்தையும் சச்தியையும் உறிஞ்சும் என்ற உண்மை தெரிந்தும், இந்தக் கோரிக்கையை உரிமையாக வைப்பதில் என்னக்கு எந்த சங்கோசமும் இல்லை.

***

அன்புள்ள கௌதம்,

நீங்கள் குறிப்பிடும் இந்த விஷயத்தை நான் என்னுடைய பதின்பருவத்தில் மிக உக்கிரமாக உணர்ந்திருக்கிறேன். இளமையில் நாம் அறியும் ஓர் வெறுமைக்கான காரணமே இதுதான். நம்மைச்சுற்றி எங்கும் அன்பின் கடல், ஆனால் குடிக்க ஒரு துளிகூட இல்லாமல் வாட்டும் தாகம்.

என்னுடைய அப்பா அளவுக்கு என் மேல் பிரியம் கொண்டிருந்த எவரேனும் இருந்தார்களா என எனக்குத்தெரியவில்லை. ஆனால் என் அப்பாவிடம் நான் ஒட்டுமொத்தமாக இருபது முப்பது சொற்றொடர்களே பேசியிருக்கிறேன். என்னைஅவர் நாலைந்துமுறைக்குமேல் தொட்டதே இல்லை. நான் அவரைப் புரிந்துகொள்ளும்போது அவர் உயிருடனில்லை. இளமையின் அலைக்கழிப்பிலும் கொந்தளிப்பிலும் சிக்கி நான் திசையறியாமல் விழித்த நாட்களில் அந்த அன்பை நான் உணர்ந்திருந்தால் என்னுடைய தவிப்பு பெருமளவு குறைந்திருக்கும்.

கடலலை மேல் தாகத்தால் வெந்து மரணம் வரை சென்று மீண்டபின் தெரிந்தது நான் அலைக்கழிந்த கடல் குடிநீராலானது என்று. அவரது துணையும் பலமும் எனக்குத் தேவையானபோது கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் அவரே. அவர் எப்போதும் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டிக்கொள்ளக்கூடாது என நினைத்து வாழ்ந்தவர்

எந்த உணர்ச்சியையும் என்று சொன்னேனே அது தவறு. கோபத்தை வெளிக்காட்டுவார். அப்பாவிடம் வெளிப்பட்ட ஒரே உணர்ச்சி அதுதான். சொல்லப்போனால் அவர் கோபம் கொண்டால் மட்டும்தான் பேசுவார். அவர் வீட்டில் இருப்பதை அவரது கோபம் வழியாக மட்டுமே உணரமுடியும். அவர் ஒரு ரகசியவெடிகுண்டுபோல, கோபத்தால் மட்டுமே பற்றவைக்கப்படுவார். மற்றநேரத்தில் குளிர்ந்த கரிய உலோகம்.

பின்னர் எழுத வந்தபோது நான் இந்த ஒரு பிரச்சினையைப்பற்றி மீண்டும் மீண்டும் எழுதியிருக்கிறேன். என்னுடைய மிகப்பெரிய ‘தத்துவப்பிரச்சினைகளில்’ ஒன்றாக என் அப்பா இருந்தார் என்றால் மிகையல்ல. அப்பா எனக்கு என் மரபை, என் சமூக அமைப்பைப் பிரதிநிதித்துவம் செய்தார். அவர் வழியாகவே நான் என் வரலாற்றுடன் உறவுகொண்டேன். அவரைப்போலவே அதுவும் என்னுடன் பேசாததாக, அல்லது தன் கோபம் மூலம் மட்டுமே என்னுடன் பேசக்கூடியதாக இருந்தது.

அதன்பின் நான் சுந்தர ராமசாமியைக் கண்டுகொண்டேன். சுந்தர ராமசாமியும் அவரது தந்தையின் வடிவில் மரபை அறிந்தவர். தந்தைமீதான எல்லா உணர்ச்சிகளையும் மரபின் மேல் திருப்பிக்கொண்டவர். எண்பதுகளிலிருந்த ஜெயமோகன் அப்படியே ஜே.ஜே.சிலகுறிப்புகளின் சுந்தர ராமசாமி [என்ற பாலு] தான்

நான் ராமசாமியிடம் நேரடியாக இதைப்பற்றி உரையாடியிருக்கிறேன். மானசீகமாக இன்னும் பலமடங்கு தீவிரமாகப் பேசியிருக்கிறேன். ராமசாமிக்கு சுந்தரம் அய்யர் பேசமறுக்கும் கோயில் சிலை, திருவிழா நெரிசலில் விட்டுச்சென்ற கை. அந்தக் கோபம் பரிதவிப்பு ஏக்கம் எல்லாமே இருந்தது. ஆனால் ஆச்சரியமாக ராமசாமியே ஒரு சுந்தரம் அய்யர் [எஸ்.ஆர்.எஸ்] தான். ராமசாமி ஒருபோதும் பிரியத்தை வெளிக்காட்டக்கூடியவரல்ல. பிரியத்தின்மீது சுயக்கட்டுப்பாட்டின், சுய கண்காணிப்பின் கடிவாளத்தை எப்போதும் போட்டிருந்தவர் அவர்.

அவரது சொற்களிலேயே சொல்லப்போனால் ‘ யானைத்தலையளவுக்கு புனுகை எவரேனும் உருட்டிக் காண்பித்தால் அது புனுகுதானா என்று நான் சந்தேகப்படுவேன்’ . மனிதர்களின் அன்பு என்பது புனுகு போல மிகமிக அரிதாகவே உருவாகக்கூடியது என்று அவர் நம்பினார். அதை ஒருபோதும் அதிகமாக வெளிக்காட்டிவிடக்கூடாது என்றும் அப்படி காட்டினால் அதன் மதிப்பு இல்லாமலாகிவிடும் என்றும் நினைத்தார். அவரது அன்பை நான் ஒருபோதும் உணர்ந்ததே இல்லை என்றால் மிகையல்ல. நான் அவரிடம் உணர்ந்தது அவர் மேல் நான் கொண்டிருந்த அன்பை மட்டுமே.

நெடுங்காலம் கழித்து நான் சுந்தர ராமசாமியின் குழந்தைகள் ஆண்கள் பெண்கள் நாவலை படிக்கையில் ஆச்சரியமாக ஒன்றைக் கண்டுகொண்டேன். சுந்தர ராமசாமி அதில் அவரது தந்தையைத் தனக்குச் சாதகமானவராக மாற்றிக்கொண்டிருந்தார். தன்னைப்போன்ற ஒருவராக அவரை சுந்தர ராமசாமி கட்டமைப்பதை அந்நாவலில் காணலாம். தன் தந்தை பற்றி சுந்தர ராமசாமி நிறையவே சொல்லியிருக்கிறார். அறிவார்ந்த தேடல்களோ ரசனைகளோ இல்லாத வணிகர் அவர். சுய உழைப்பால் தன்னை உருவாக்கிக்கொண்டவர். அந்த பெருமிதம் கொண்டவர். அதேசமயம் புற உலகு பற்றிய நீங்காத பதற்றம் கொண்டவர். ஆகவே தன் சொந்த குட்டி சாம்ராஜ்யத்தில் சர்வாதிகாரி.

அந்த எஸ்.ஆர்.எஸ்சை ஷெல்லி வாசிக்கக்கூடிய சுதந்திரப்போராட்ட ஈடுபாடுள்ள ஒருவராக சித்தரித்துக்கொள்கிறார் ராமசாமி. அப்பா மேல் அவருக்கிருந்த கசப்புகளையும் ஆங்காரத்தையும் அப்படித்தான் அவரால் செரிக்க முடிந்தது. அப்பாவின் விராடரூபமாக அவர் கண்ட இந்தியமரபையும் கடைசிக்காலத்தில் அப்படி சுருக்கி திரித்துக்கொள்ள கொஞ்சம் முயன்றார் என்று படுகிறது.

ஆற்றூர் ரவிவர்மாவுடனான என் உறவும் அந்த இடைவெளியுடன் மட்டுமே இருக்கிறது. அவரது பெரும் பிரியத்தை பத்து கண்ணாடிகளில் மீண்டும் மீண்டும் பிரதிபலித்து என்னிடம் வந்த பிம்பமாகவே நான் உணர்கிறேன். எனக்கு உடல்நலமில்லாதிருந்த காலகட்டங்களில் அவரது ஆழ்ந்த அன்பை உணரும் வரம் எனக்குக் கிடைத்தது. இன்று முதுமையில் கனிந்திருக்கும்போது இன்னும் அவரிடம் என்னால் நெருங்கமுடிகிறது.

பின்னர் நித்ய சைதன்ய யதியைக் கண்டுகொண்டேன். நித்யா இருமுனை கொண்டவர். அவர் பிரியம், கருணை போன்றவற்றுக்கு அப்பால் இருப்பதாகத் தோன்றியபடியே இருக்கும். ஆனால் அவர் நமக்கு மிகமிக அருகே இருப்பார். என்மீது தடையின்றிக் கொட்டிய பிரியம் என்றால் அது நித்யாவுடையதுதான். ‘உனக்காகக் காத்திருந்தேன்’ என்று என்னிடம் சொல்ல, ‘அவனுக்காகக் காத்திருக்கிறேன்’ என்று அத்தனைபேரிடமும் காட்ட, ‘நீ எனக்குப் பிரியமானவன்’ என்று எனக்கு எழுத, உணர்ச்சிகரத்துடன் என்னை மார்போடு தழுவிக்கொள்ள, என் கைகளை இறுகப்பற்றிக்கொள்ள, தன் கால்களை என்னை நோக்கி நீட்டி எனக்குப் பணிவிடைசெய் என ஆணையிட அவருக்கு எந்தத் தடையும் இல்லை.

நித்யா ஒரேசமயம் வைரம்போல இறுகிய வெண்பனிபோல இளகிய மனிதர். ஒருவரைப் பிரியும்போது கண்ணீர்மல்கியபடி அவர் கைகளைப்பற்றிக்கொள்வார். ஒவ்வொரு முறை நான் கிளம்பும்போது ‘எப்போது மீண்டும் வருவாய்?’ என்று அவர் கேட்பார். முதல்பார்வையிலேயே உரக்கச்சிரித்து ‘வா வா’ என்று மகிழ்வார். அன்பை முழுக்கமுழுக்க வெளிப்படுத்தக்கூடியவராகவே இருந்தார். .எனக்கு அவர் கற்பித்த அனைத்தும் அன்பினூடாகவே.

‘நம்மவர் பாவத்துக்குக் கூச்சப்படுவதில்லை, அன்புக்குக் கூச்சப்படுகிறார்கள்’ என்று நித்யா ஒருமுறை சொன்னார். ஒருமுறை ‘நான் உன்னைச் சந்திக்க ஏங்குகிறேன். உன்னைப்பற்றிய நினைப்பால் முழுக்கமுழுக்க தித்திக்கிறேன்…’ என அவரது பிரியத்துக்குரிய இளம் மாணவர் பீட்டர் ஓபன்ஹைமருக்கு அவர் கடிதம் சொல்லி எழுதவைக்கும்போது நான் அருகே இருந்தேன்..சட்டென்று என் கண்கள் ஈரமாகிவிட்டன. எத்தனை அபூர்வமாகிவிட்டன அன்பின் சொற்கள் என எண்ணிக்கொண்டேன் பின்பு.

அந்த நாளில், அந்தக்கணத்தில் நான் புரிந்துகொண்டேன். என் அப்பாவின் ,அவரைப்போன்றவர்களின் சிக்கல் என்ன என்று. நித்யா அந்தக் கடிதத்தை ஓர் இளம் ஜெர்மானிய மொழியியலாளருக்கு எழுதிக்கொண்டிருந்தார். அந்தக்கணத்தில் அவர் அவரது கல்வியை, அவரது கவித்துவத்தை, அவரது புகழை, அவரது குருபீடத்தை முழுக்க இழந்து எளிமையான குழந்தையாக அவன் முன் நின்றிருந்தார்.

அப்படி இறங்கி வருபவர்களுக்குரியது அன்பு. அன்பு நம் ஆன்மாவை உடைகளைக் கழற்றும்படி கட்டாயப்படுத்துகிறது. அகங்காரத்தை மட்டுமல்ல அறிவையும் கழற்றாமல் அன்பு செலுத்த முடிவதில்லை. அதற்கு முடியாத நிலையிலேயே அன்பை ஒளித்துவைக்கிறார்கள். அன்பை ஒளித்துவைப்பவர்களை கவனித்திருக்கிறேன். அவர்கள் குழந்தைகளிடமும் மிருகங்களிடமும் அந்த அன்பைத் தடையில்லாமல் கொட்டுவார்கள். ஏனென்றால் அவர் இறங்கிவந்திருப்பதை அவை உணர்வதோ மதிப்ப்பிடுவதோ இல்லை என அவர்கள் நினைக்கிறார்கள்.

அந்த மனநிலையின் வேர் கிடப்பது நம் பண்பாட்டின் மூதாதை வழிபாட்டில். நாம் இறந்தவர்களை தெய்வமாக்குகிறோம். அந்த மனநிலையின் நீட்சியாக மூத்தவர்களை சற்றே குறைந்த தெய்வங்களாக நிறுத்துகிறோம். நம் பல்லாயிரமாண்டுக்காலப் பண்பாடு மூத்தவர்களைத் தங்கள் இளையவர்களின் உலகில் இருந்து பிரிக்கிறது. மரியாதையான ஒரு தொலைவில் அவர்களை நிறுத்துகிறது. நாம் நம் மூத்தவர்களுக்கு மதிப்பை மட்டுமே வழங்குகிறோம். அன்பைக்கூட மரியாதையாக நாணயமாற்றம் செய்துதான் கொடுக்கிறோம்.

நம் மூத்தவர்கள் அந்த மரியாதைக்குப் பழகிவிட்டிருக்கிறார்கள். அதையே தங்களுக்குச் சமூகம் அளிக்கும் அங்கீகாரமாக, இடமாக நினைக்கிறார்கள். அந்த மரியாதை சற்று குறைவதைக்கூட அவர்கள் தாங்கிக்கொள்வதில்லை. அவர்கள் உக்கிரமாகக் கோபம் கொள்ளுமிடம் எல்லாமே மரியாதை குறைகிறதோ என தோன்றுமிடங்கள்தான். அவர்கள் முன்கோபத்தையும் விரைப்பையும் கைக்கொள்வதே மரியாதையை இழக்காமலிருக்கத்தான். அவர்கள் மண்ணில் மூதாதைதெய்வங்களின் வடிவில் வாழ நினைக்கிறார்கள், மனிதர்களாக அல்ல. அக்குளில் அந்தக் கண்ணாடிப்பாத்திரத்துடன் இருக்கையில் எப்படி இயல்பாக அசையமுடியும்?

மேலைநாடுகளில் மூத்தார்வழிபாடு இல்லை. ஆகவேதான் அன்பை வெளிப்படுத்துவதற்கான செயற்கையான தயக்கங்களும் இல்லை என நான் ஊகிக்கிறேன்

அதற்கு இன்னொரு பக்கமும் உள்ளது. நம் சூழலில் தூய அன்பை மதிக்கும் மனநிலை நம்மிடமில்லை. நம் தந்தையரிடமிருந்து மிகமிக மாறுபட்டவர்கள் நம் அன்னையர். அவர்களுக்கு அன்பை அள்ளிக்கொட்ட எந்தத் தயக்கமும் இல்லை. ஒவ்வொரு செயலிலும் அன்பை அவர்கள் நமக்கு தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நம் குடும்பங்களில் அவர்களின் அன்பு ஒவ்வொருநாளும் அவமதிக்கப்படுகிறது. அவர்களின் அன்பு என்பது அவர்களை நாம் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாமென்பதற்கான உரிமைப்பட்டயமாக எண்ணப்படுகிறது.

நம்முடைய கசப்புகளை கொதிப்புகளை எல்லாம் நாம் அம்மாமேல் தான் கொட்டுகிறோம். பல குடும்பங்களில் குழந்தைகள் அம்மாக்களை நடத்தும் விதம் கண்டு கொதிப்படைந்திருக்கிறேன். ரயிலில் அம்மாவிடம் ‘கொஞ்சம் வாய மூடிட்டிருக்கியா? நான்சென்ஸ்’ என்று சீறிய ஒரு இளம்பெண்ணை சென்றவாரம் பார்த்தேன். அம்மா ‘சொன்னாக்கேளுடீ’ என்று மீண்டும் எதையோ சொல்ல ஆரம்பித்தாள். கண்டிப்பாக அது தனக்காக இருக்காது, அந்தப்பெண்ணுக்கு நல்லது என அந்த அம்மா நினைக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கும்.

தன் அன்பைத் தெரிவிக்கக்கூடிய ஒருவரை தன்னுடைய பலவீனத்தை தன்முன் திறந்துவைக்கக்கூடியவராக நினைத்துக்கொள்ளும் அற்பத்தனம் நிறைந்த சமூகம் நாம். குறிப்பாக நம் படித்த இளைய தலைமுறை இந்த அற்பத்தனத்தில் ஊறி ஊறி வாழ்பவர்கள். குடும்பத்தின் அன்பையும் தியாகத்தையும் கூச்சமில்லாமல் பெற்றுக்கொண்டு அதெல்லாம் தன் சிறப்புத்தகுதிக்கு அளிக்கப்பட்ட காணிக்கைகள் என நினைத்துக்கொள்ளும் அசடுகள் அவர்கள். அவர்கள் முன் அன்பின் வெளிப்பாடு அசட்டுத்தனமாக நிற்க நேரிடலாம்.

ஆனால் அதற்காக அன்பைத் தெரிவிக்காமலிருக்கவேண்டும் என நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் அன்பு என்பது நாம் பிறருக்குக் கொடுப்பது அல்ல. நமக்கு நிகழ்வது. அது நம்முடைய சொந்த ஆன்மீக மலர்ச்சிக்கான வழி.

சுந்தர ராமசாமியின் புனுகு உதாரணத்தின் அடிப்படைப்பிசகு என்ன? அன்பு என்பது கொஞ்சமாக மட்டுமே உருவாக முடியும் என்ற நம்பிக்கைதான். அன்பு அப்படித் தன்னிச்சையாக கொஞ்சமாக நம்முள் ஊறக்கூடிய ஒன்று அல்ல. அன்பு என்பது ஒரு நிகழ்வு. நாம் நிகழ்த்திக்கொண்டால்தான் அது நிகழும். நாம் நிறைக்க நிறைக்க அது நிறையும். அன்பை மிகையாகத் தெரிவிப்பது என்பது சாத்தியமே அல்ல. ஒருபோதும் ஒரு செய்கையாலும் உண்மையான அன்பை முழுமையாகத் தெரிவித்துவிடமுடியாது. அன்பை எப்படி மிகையாகத் தெரிவிக்க முயன்றாலும் குறைவாகவே தெரிவித்திருப்போம்.மண்ணில் எந்தச்செயலும் அன்பைத்தெரிவிக்கப் போதுமானவை அல்ல.

நான் அதை என் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறேன். என் அப்பாவுக்கு நேர்மாறாக. நான் சொல்வது நான் அப்படி செய்து கற்று உணர்ந்ததை மட்டுமே நான் என் மனைவியிடம் குழந்தைகளிடம் நண்பர்களிடம் என் அன்பை முடிந்தவரை தெரிவித்துக்கொண்டே இருப்பவன். என் குழந்தைகளை நண்பர்களைக் கட்டித்தழுவ முடியும்போதெல்லாம் அதைச் செய்வேன். ஒருநாளில் நூற்றுக்கணக்கான முறை நீ என் செல்லம் என்று என் பிள்ளைகளிடம் சொல்வேன். என் நாய்களிடம் சொல்வேன். [முந்தைய நாள் அதைச் சொன்ன அதே நேரத்துக்கு சரியாக டாபர்மான் நாய் வந்து நின்று எட்டு தெரு அதிர குரைத்து நம்மைக் கூப்பிடுவதைப்பார்க்கவேண்டும்!]

ஆம், அப்படி அன்பை சொல்லிக்கொண்டே இருப்பதனால் நான் இழப்பதென்பது என் அப்பாவுக்கு அவரது சூழலில் கிடைத்துவந்த மரியாதையை. என் வீட்டில் நான் வந்தால் எவரும் அமைதியாக எழுந்து நிற்பதில்லை. நான் ஏவினால் என் மனைவியோ குழந்தையோ ஓடிப்போய் அதைச் செய்வதில்லை. எனக்கு எவரும் பணிவிடைகள் செய்வதில்லை. உரையாடல்களில் எப்போதும் சமமான இடமே எனக்குக் கிடைக்கும். என்மீது எவருக்கும் பயம் இல்லை. அந்த பயத்தை, மரியாதையை எதிர்பார்த்தால் அங்கே அன்பு இருக்க முடியாது.

ஆனால் அவர்களுக்கு நான் நெருக்கமானவனாக இருக்கிறேன். அவர்களின் அப்பாவாக மட்டுமல்லாமல் ஆசிரியனாகவும் இருக்கிறேன். அந்த இடம் முக்கியமானது.

ஜெ

முந்தைய கட்டுரைதேவதேவனின் பரிணாமம்
அடுத்த கட்டுரைநாள் என