சாரு நிவேதிதா – தமிழ் விக்கி
சாரு நிவேதிதா என்று ஒருவர் இல்லை. அது புனைவு என்பதே ஆய்வாளரின் துணிபு. அப்புனைவை உருவாக்குபவரது பவேறு வகையான எழுத்துக்களில் இருந்து இந்த தகவல்கள் தொகுக்கப்பட்டு வாசக கவனத்துக்காக அளிக்கப்படுகின்றது.
சாரு நிவேதிதா டிசம்பர் மாதமானால் பாரீஸ் கார்னருக்குச் சென்றுவிடுவார். துரதிருஷ்டவசமாக டிசம்பரில்தான் சென்னையில் புத்தகக் கண்காட்சியும் பெரும்பாலான இலக்கியக் கூட்டங்களும் நடக்கின்றன. பாரீஸிலிருந்து அவர் இலக்கியக்கூட்டங்களுக்கெல்லாம் வந்துகொண்டிருக்க முடியாது. எல்லா இலக்கியக் கூட்டங்களும் அவருக்கு பெரும் சலிப்பையே உருவாக்குகின்றன. காரணம் எல்லாமே ஒரே மாதிரி நவீனத்துவக் கருத்துக்களையே சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஒன்று கூட விதிவிலக்கு இல்லை. இதை அவரால் உறுதியாகவே சொல்லமுடியும், அவர் போகாத இலக்கியக் கூட்டமே சென்னையில் நிகழ்வதில்லை.
சாரு நிவேதிதா ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளர். அறைக்குள் அடைத்துக்கொண்டு இரவு பகலாக வாசித்து செவ்விலக்கியம் படைத்துவிடலாம் என்ற மூடக்கற்பனை கொண்டு தலையணைகளை அச்சிட்டு வெளியிடும் இலக்கியவாதிகளை அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. இலக்கியம் என்பது விளிம்புநிலை மக்களில் இருந்து உருவாகவேண்டும். கல் உடைப்பவர்கள், பல் உடைப்பவர்கள், பாலியல் தொழிலாளிகள் ஆகியோரிடையே இருந்து வரவேண்டும். சாதாரணத் தொழிலாளிகள் பற்றி எழுதினால் அது முற்போக்கு யதார்த்தவாதம் மட்டுமே.
இந்தக்கருத்தை அவர் இருபதுவருடங்களாக கடுமையாக சொல்லி வலியுறுத்திக் கோண்டு வந்திருக்கிறார். இதற்காக அவர் ஒருநாளில் இருபத்தாறு மணிநேரம் வேலை செய்கிறார், மறுநாளில் இருந்து இரண்டுமணிநேரம் கடன் வாங்கி. ஆகவே அவர் ஒரு குகை மனிதனைப்போல வாழ்கிறார். வெயிலை அவர் பார்ப்பதே ஜன்னல்கண்னாடி வழியாகத்தான். சமீபத்தில் மனுஷ்ய புத்திரன் என்ற ஆய்வாளர் அவரை அகழ்ந்து கண்டுபிடித்து வெளியே கொண்டுவந்தபோது வெளியே கண்கூசியது. ”பரவாயில்லை மேலே நல்ல பிரகாசமான விளக்கு போட்டிருக்கிறார்கள்” என்று அவர் சொன்னபோது மனுஷ்ய புத்திரன் அதுதான் சூரியன் என்று சொன்னார். அதை முன்னரே வின்செண்ட் வான்கா படங்களில் பார்த்திருப்பதை அப்போதுதான் சாரு நிவேதிதா நினைவுகூர்ந்தார்.
சாரு நிவேதிதா டெல்லியில் இருந்தபோது ஆழமாக இலக்கியவாசிப்பில் ஈடுபட்டிருந்தமையால் பெரும்பாலான மனிதர்களை அவருக்குத் தெரியாது. ஒருமுறை குல்லாவும் கறுப்புக்கண்ணாடியும் போட்ட ஒருவர் தன்னை தமிழக முதல்வர் என்று அறிமுகம் செய்துகொண்டபோது சாரு தமிழ்நாடு என்றால் இந்தியாவின் தென்பகுதிதானே என்று கேட்டார். அவர் ஆமாம் என்று சொல்லி பேனாவால் வரைந்தும் காண்பித்தார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள், அதாவது சாரு, தெரிவிக்கின்றன.
சாரு நிவேதிதா தமிழில் கடந்த நாற்பது வருடங்களாக எதுவுமே வாசிபப்தில்லை. ஆகவே தமிழில் எதுவுமே இலக்கியமல்ல என்ற தெளிவை அவர் கொண்டிருக்கிறார். ஆகவே அவர் துணிந்து தமிழில் எழுதுகிறார். ஆகவே அவை உலக இலக்கியம் என்று அவர் கருதுகிறார். ஆகவேதான் அவர் தமிழில் எதுவுமே படிப்பதில்லை.
வான்கா போலவே காதை அறுத்துக்கொள்ளும் அளவுக்கு கடுமையான வறுமையில் இலக்கியத்திற்காக உயிர்வாழ்ந்துகொண்டிருக்கிறார் சாரு நிவேதிதா. வீட்டில் ரேஷன் அரிசியை உப்பு போட்டு காய்ச்சி குடிக்கிறார்கள். அடுத்த ரேஷனை பற்றி அடுத்தவாரம்தான் சிந்திப்பதே. அவருக்கு உதவ உலகமெங்கும் இருக்கும் தமிழர்கள் முன்வருவதே பின்நவீனத்துவ சேவையாகும். மின்னஞ்சல் இணைப்பு. வருமானவரி விலக்கு உண்டு. இலக்கியவாதி இலக்கியம் அன்றி வேறு வேலைசெய்யக்கூடாது என்று பாரீஸில் சொல்லிக் கொள்கிறார்கள். அங்கெல்லாம் இலக்கியவாதிகள் பெட்காபியை நைட் கிளப்புகளில்தான் குடிக்கிறார்கள்.
காலை எழுந்ததும் வீட்டிலேயே அமர்ந்து ‘தி இந்து’ படிப்பவர்களை பின் நவீனத்துவம் சாம்பார்சாதம் என்றும், பஸ்பிடித்து ஆபீஸ் கிறவர்களை புளிசாதம் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் சிற்றிதழ்களில் இலக்கியம் படைப்பவர்களை தயிர்சாதம் என்றும் அழைத்து மகிழ்கிறது. ஆகவே சாரு நிவேதிதா காலை எழுந்ததும் ஓட்ஸ் கஞ்சி குடித்துவிட்டு ஏரோபிக்ஸ் செய்ய நேர்கிறது. மாலையில் ‘ப்ளூலெதர்’ ரெட்ஷ¥ஸ்’ போன்ற உயர்தர பார்களில் ஷாம்பேய்ன் அருந்தியபின்னர் அழகிய இளம்பெண்களுடன் நடனமிடுவதற்கு ஏரோபிக்ஸ் பயிற்சி மிக அவசியமானது. ஷாம்பேய்ன் ஷிவாஸ் ரீகல் போன்றவற்றுக்கு கீழே இறங்கிவந்து குடிப்பவர்களால் விளிம்புநிலை பற்றி எழுத முடியாது.
பொது இடங்களில் ‘கக்கா’ போய் வைக்கும் அநாகரீகமான மனிதர்கள் நடுவே சாரு நிவேதிதா போன்ற பின்நவீன எழுத்தாளர் வாழ்வது கஷ்டம். அவர்களுடன் பஸ்ஸில் போவதை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. ஒருநாளைக்கு ஐம்பதாயிரத்துக்கு குறையாமல் செலவிடும் நண்பர்கள் இருப்பதனால் சாரு நிவேதிதா சமாளிக்க முடிகிறது. அவர்களுக்கு இன்னொரு ஐம்பதாயிரம் பட்ஜெட் நண்பர் சலிப்பு மூட்டுவதனாலும் ஸ்காட் விஸ்கிக்கு மேல் ஸ்காட் நகைச்சுவைகளை சொல்லி நடித்துக்காட்ட ஆஸ்தான கலைஞர்கள் தேவையாக இருப்பதனாலும்தான் இன்று தமிழில் பின்நவீனத்துவம் செழிப்பாக வளர்கிறது.
பின் நவீனத்துவக் கலைஞன் ஒரு கோமாளி. ஏனென்றால் உலக முதலளித்துவம் மூன்றாமுலகைச் சுரண்டி தின்று குடித்து பருத்து உப்பிக் கொண்டே இருப்பதன் பின் விளைவாக உருவாவது அது. பின் நவீனத்துவம் சுரண்டலுக்கு எதிரான பெரும் எதிர்ப்புக்குரலாகும். அது தெருவில் வாழும் விளிம்பு மனிதர்களின் எழுத்து. ஆகவே சுரண்டல்வாதிகள் வெட்கி நாணும்படி அவர்களுடைய சொல்லாடல்களை குடித்துமுடித்த ஒயின் கோப்பைகளைப்போல தலைகீழாகக் கவிழ்ப்பதே பின் நவீனத்துவமாகும். இதைக்கண்டு அஞ்சி அவர்கள் உடனே அடுத்த கோப்பைக்கு ஆணையிடுகிறார்கள்.பின் நவீனத்துவக் கலைஞன் ஒரு பெரும் கலகக்காரன் ஆகையால் அவர்கள் அவனுக்கும் சேர்த்தே சொல்லிவிடுகிறார்கள்.
பின்நவீனத்துவக்கலை என்பது உயர்வான விஷயங்களுக்குப் பதிலாக கீழான விஷயங்களால் ஆனது என்பதை வாசிப்பவர்கள் அறிவார்கள். ரத்தம் மூத்திரம் விஸ்கி விந்து ஆகியவற்றால் ஆன இவ்வுலகில் எதுவும் முன்பின் தொடர்புடன் இருக்க வாய்ப்பில்லை. விமான நிலையங்களில் மூத்திரக்கோப்பைகளில் முறைப்படி நீர் பீய்ச்சி சுத்தம்செய்யத்தெரியாமல் வெளியே போகும் முட்டாள்களின் நாட்டில் பின்நவீனக்கலைஞனுக்கு மரியாதை இல்லாமல் இருப்பது ஆச்சரியத்திற்குரியது அல்ல. சிங்கப்பூரில் சாலையில் குப்பை போடுபவனை சாட்டையால் அடிக்கிறார்கள். தொண்டுகிழவர்கள் ராத்திரியெல்லாம் ஓயாமல் நகரத்தைச் சுத்தம் செய்கிறார்கள். ஆகவே அங்கேதான் பின் நவீனக்கலைஞன் வாழ விரும்புகிறான்.
பின்நவீனக்கலை மட்டுமே இப்போது கலைநேர்த்தியுடன் வெளிப்படுகிறது. பிறவற்றில் மானுட அறம் வெளிப்படவில்லை. ஆகவே தான் தமிழில் ஒரே ஒருவர் மட்டும் பின் நவீனக்கலையை உருவாக்க நேர்கிறது. ஆர்ட் என்பது ·பார்ட் ஆக வெளிப்படக்கூடியது. அவருக்கு மலச்சிக்கல் உண்டு. எழுதாதபோது வாழைபபழம் அதற்கு ஏற்றது என அவர் கண்டுபிடித்திருக்கிறார். தயிர்சாதத்தைப்போலன்றி வாழைபபழம் குளிர்ச்சியானது.
தமிழ்நாட்டில் எழுத்தாளனைக் கொண்டாட மாட்டேன் என்கிறார்கள். எழுத்தாளன் தெருவில் இறங்கினாலே மக்கள் அவனைப்பார்த்து மகிழ வேண்டும். அவன் பேசும்போது விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும். மேலும் எழுத்தாளன் இறந்தும் நீண்டநாள் ஆகிறது. செத்துப்போன எழுத்தாளர்களுக்கு பாரீஸில் அங்குள்ள மக்கள் சிறப்பாக திவசம் கொடுக்கிறார்கள் என்பதனால் அது பண்பட்ட நாடு. அங்குள்ள எழுத்தாளர்கள்எழுத்தாளர்களாக இருந்தாலே போதும், எழுதக்கூட வேண்டியதில்லை
சாரு நிவேதிதா இந்தியாவை வெறுக்கிறார். அவருக்குப் பிடித்தமான நாடு பிரெஸில். அதேபோல அவர் எழுத விரும்பும் மொழி ஸ்வாஹிலி. பிரேஸில் போய் ஸ்வாஹிலி கற்றுக் கொண்டு எழுதி அதை பிரேஸில் மக்கள் ஸ்வாஹிலி கற்றுக் கொண்டு படிக்கும் வரை காத்திருக்க முடியாமல் அவர் தமிழில் எழுதி வருகிறார். தாய்லாந்தையும் அவருக்குபிடிக்கும். அங்கே பத்தாக் கிளாஸ் பெண் பிளஸ்டூபையனை காதலிக்கும் ஆபாச சினிமாக்களுக்கு பதிலாக ஆம்ஸ்டர்டாம் டிவிடிக்கள் மட்டுமே கிடைக்கின்றன. கைக்குழந்தையானாலும் உரிய மருத்துவச் சான்றிதழுக்குப் பிறகே அனுமதிக்கிறார்கள்.
பின்நவீனத்துவக்கலைஞனான சாரு நிவேதிதா புனிதங்களைக் கட்டுடைக்கிறார். கட்டுடைக்கப்பட்டவர்கள் எப்போது வேண்டுமானாலும் திருப்பி உடைக்க வரக்கூடுமென்பதனால் எப்போதும் பவ்யமாகவும் பிரியமாகவும் விளங்குகிறார். பின்நவீனத்துவக் கலைஞன் சாமி, பூதம், மதம், சாமியார், ஆன்மீகம் போன்றவற்றைஅடிக்குமட்டில் ஏறி மிதிப்பதே அழகு. அதிலும் ஆங்கிலத்தில் புத்தகமெழுதும் மலையாளச் சாயார்களை புகழ்ந்து கட்டுரை எழுதும் இலக்கியவாதிகள் தோலுரித்து தொங்கவிட்டு தொடைக்கறி கிலோ நூற்றைம்பதுக்கு விற்கத்தக்கவர்கள்.
பின் நவீனத்துவத்தின் ஒரு பகுதியே மாய யதார்த்தமாகும். மாயயதார்த்தத்தில் வெறும்கையில் லட்டு எடுத்து சாதாரண பக்தர்களுக்கும் சிவலிங்கம் எடுத்து பணக்காரர்களுக்கும் கொடுக்க வாய்ப்பிருக்கிறது என்று கலியுக கிருஷ்ணாவதாரமான பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா சாருநிவேதிதாவின் கனவில் நேரில் அவ்ந்து சொல்லி வழிகாட்டியிருக்கிறார். கணிப்பொறி மேல் சாய்பாபா படம் வைத்தால் வைரஸ் தாக்குதல்மட்டுபப்டுவதோடு பின்நவீனக் கட்டுரைகளும் பின்நவீன சினிமா விமரிசனங்களும் நிறையவே எழுத முடிகிறது. தமிழ் சினிமா திடீரென பின் நவீனமயமாகி வருவதனால் சாரு நிவேதிதாவுக்கு வாய்ப்புகள் அதிகமாகிவருகின்றன.
பின் நவீனத்துவத்தின் தத்துவ சாதனை முரணியக்க இயங்கியலை மறுத்ததாகும். ஆகவே சாரு நிவேதிதா எப்போதும் முரண்பாடுகளே இல்லாமல் எழுதவும் பேசவும் செய்துவருகிறார் . சாரு நிவேதிதா வளமான கற்பனைத்திறன் கொண்டவர். ஆகவே தொடர்ந்து சுயசரிதை நாவல்களும் அனுபவக் கட்டுரைகளும் எழுதி வருகிறார்.
சாரு நிவேதிதா முந்தைய பதிவு