சினிமா, கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் இணையதளத்தை கொஞ்சநாளாக வாசிக்கிறேன். உங்கல் எழுத்துக்களை வாசிக்கும்போது நீங்கள் எடுத்துக்கொள்ளும் விஷயங்களின் பாப்பும் ஆழமும் வியக்கச்செய்கின்றன

என்னுடைய ஒழுங்கில்லாத எதிர்வினைக்கு மன்னிக்க. எனக்கு அதற்கு ரொம்ப நேரம் எடுக்கும். [நான் உங்கள் கட்டுரைகளை படிப்பதும் அதனால்தான். திடவட்டமான கருத்து சொல்லும் முறையில் மறு விளக்கங்களுக்கே இடமிருப்பதில்லை]

இணையத்தை ஒரு வினியோக ஊடகமாக கொள்வது தமிழ் சினிமாவுக்கு மிகமிக உதவியாக இருக்கும். இந்திய சினிமாவுக்கே உதவியாக இருக்கலாம். இது இருப்பதிலேயே கடைநிலையில் உள்ள ரசிகனுக்காக படம் எடுக்கும் நிலையில் இருந்து காப்பாற்றக்கூடும். ஊடுருவல் இல்லாத ஒரு இணைய முறையை உருவாக்குவது கஷ்டம்தான் ஆனாலும் அது சாத்தியம்தான்.

சமீபத்திய சொல்லாசி நீள வால் “The Long tail”. கவனித்திருப்பீர்கள். இணையத்தை ஒரு வினியோக வழியாக பயன்படுத்துவதைப்பற்றியது அது. இந்த இணைப்புகள் ஆர்வமூட்டக்கூடும்

என் வி பாலாஜி

1. http://www.intelligententerprise.com/showArticle.jhtml?articleID=193000158
2. http://en.wikipedia.org/wiki/The_Long_Tail

அன்புள்ள பாலாஜி

இந்த தளம் பற்றி ஒன்றுமே தெரியாது. சில விஷயங்கள் காதில் விழுந்தன. அதில் ஒன்று இணையம் புத்தகங்களுக்கு நல்ல விளம்பரமாக அமைகிறது. ஓரளவு விற்பனைக்கு உதவுகிறது. சுத்தமாக சினிமாவுக்கு இணையத்தால் எந்த லாபமும் இல்லை. இரண்டு ம்ன் ஊடகங்கள் வழியாக சினிமாவுக்கு எந்த பெரிய வருமானமும் இல்லை — பாடல் சிடி, பட டிவிடி, ரிங்டோன் எல்லாமே ஒப்புக்குத்தான்.

மலையாள சினிமாவெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறது. காரணம் அதன் வருமானம் ஒப்புநோக்க வருடம் தோறும் குறைகிறது
ஜெ

அன்புள்ள ஜெயமோகன்

கொஞ்சநாளாக உங்கள் இணைய இதழை வாசிக்கிறேன். காந்தியைப்பற்றிய உங்கள் கட்டுரைக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். சமீபத்தில் நீங்கல் எழுதியிருந்தீர்கள்

அதன் பொருள் என்ன? ஏனென்ரால் நான் ஒரு தஞ்சை மகாராஷ்டிரியர். உங்களுக்கு எந்த சமூகத்துடனும் வெறுப்பில்லை என அறிவேன் ஆகவே இதைக் கேட்கிறேன்

நான் தமிழில் எழுத முடியாதவன். சென்னை வாழ் தமிழர்களைப்போல நானும் 20 வருடம் முன்பு என் பள்ளியிறுதி தேர்வில் தமிழில் எழுதியதுடன் சரி

பரத் பிக்காஜி

அன்புள்ள பரத்

நான் சொன்னது ஒரு யதார்த்தம். தமிழ்நாட்டில் கணிசமாக உள்ள  கன்னட உருது தெலுங்கு சௌராஷ்டிர மக்களில் பெரும்பாலானவர்கள் பிறரிடம் பொதுவாக பேசும் அளவுக்கே தமிழ்  தெரிந்து வைத்திருக்கிறார்கள். குறிப்பாக பெண்களின் தமிழறிவு என்பது மேலோட்டமானது. நுட்பமோ கனமோ உள்ள தமிழ் மொழிசார்ந்த விஷயங்கள் அவர்களுக்கு போய்ச்சேராது. இதெல்லாம் சினிமா விவாதங்களில் கணக்கில் கொள்ளப்படும் விஷயங்கள். ஆனால் அம்மக்களில் இருந்து தமிழின் பெரிய அறிஞர்கள் எழுத்தாளர்கள் உருவாகி வந்திருக்கிறார்கள் என்பதும் உண்மையே. குபரா முதல் கி.ராஜநாராயணன் வரை சுப்ரபாரதிமணியன் முதல் சு.வேணுகோபால் வரை…

ஜெ

சமரச சினிமா

முந்தைய கட்டுரைகன்னிநிலம் – நாவல் : 10
அடுத்த கட்டுரைகன்னிநிலம் – நாவல் : 11