அன்புள்ள ஜெயமோகன்
உங்கள் இணையதளத்தில் ஸ்டெல்லா புரூஸ் பற்றிய கட்டுரையை படித்தேன்,
உணர்ச்சிகளை விலக்கி பிரச்சினையை நேராக நோக்கலாம்
நாம் நிரந்தரமானவர்களல்ல என்று நமக்குத்தெரியும். ஆனால் ஒருநாள் கூடுதலாகக் கிடைத்தால்கூட அதை வாழவேண்டும் என்ற ஆழமான ஆசை நம்முள் உறைகிறது. மக்கள் இந்த மனநிலையில் பணத்தை அள்ளிவீசத்தயாராக இருக்கும்போது நவீன மருத்துவத்தைக் குறைசொல்வது துரதிருஷ்டவசமானது. இன்றைய மருத்துவம் நோயாளி அல்லது நோயாளியின் உறவினரின் வேண்டுகோளுக்கு ஏற்ப நோயாளியின் உயிரை சற்றேனும் நீட்டிப்பதையே தன் இலக்காகக் கொண்டுள்ளது.
அத்துடன் நீங்கள் மொத்த நவீன மருத்துவமே ஒரு மோசடி என்றும், மக்களின் உதிரத்தை உறிஞ்சும் நோக்கம் மட்டுமே அதற்கு உள்ளது என்றும் எழுதியிருப்பதும் உண்மைக்கு மாறானதே. உங்கள் சொந்த விஷயத்தில் நீங்கள் மருத்துவம் பற்றி முடிவு எடுக்கலாம், ஆனால் பிறர் எனன் செய்யவேண்டும் என்று நீங்கள் உத்தரவிடுவது முறையல்ல.
நாம் அனைவருக்குமே வாழ்க்கையின் எதைப்பற்றியும் கருத்துக்கள் சொல்ல உரிமை உள்ளது. ஆனால் அத்தகைய கருத்துகக்ள் அந்தரங்க அபிப்பிராயகங்ளாக இருகக் வேண்டுமே ஒழிய பொதுமைப்படுத்தல்களாக அல்லது தீர்ப்பு சொல்லல்களாக இருக்கக் கூடாது. அது சமூக தளத்தில் சிக்கலான விளைவுகளையே உருவாக்கும். நோயுற்றவர்கள் சிகிழ்ச்சைக்குச் செல்ல அஞ்சி ஆரம்ப கட்டத்தில் நோயை தவிர்க்கும் நிலையை தவறவிட வாய்ப்பாகும்.
நான் நோயாளிகளுக்கு உரிய தகவல்கள் அளிக்கபப்டவேண்டும் ,சட்ட ஆலோசனைகள் வழங்கப்படவேண்டும் என்ற கட்டாயங்கள் உள்ள ஒரு நாட்டில் வாழ்ந்து மருத்துவம் செய்துவருகிறேன். இந்தியாவிலும் இச்சட்டங்கள் உள்ளன. அதேசமயம் கடுமையான சந்தைப்படுத்துதல் மூலம் மருத்துவத் தொழில்துறை நுகர்வோருக்கு தனக்கு வேண்டியதென்ன என்பதை தெரிவுசெய்துகொள்ள வேண்டிய பொறுப்பையும் அளிக்கிறது.
இப்பிரச்சினைக்கு இரு தீர்வுகள் உள்ளன.
1. தேசிய அளவிலான மருத்துவக் காப்பீடு
2 பொதுமக்களின் மருத்துவ அறிவின் தரத்தை அதிகரித்தல்
முடிவாக, எவருமே சிகிழ்ச்சைக்கு செல்லவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படவில்லை. எந்த ஒரு மானுட செயலிலும் ஆபத்து மற்றும் தவறுகளுக்கான வாய்ப்புகள் உள்ளன. வாய்ப்பின் சதவீதம் மட்டுமே வேறுபடுகிறது. சாலையில் நடப்பதுகூட உயிருக்கு ஆபத்துள்ள ஒன்றுதான். வீட்டிலேயே இருந்தால்கூட கட்டிலில் இருந்து கீழே விழுந்து இடுப்பு உடையலாம்.
கடைசியாக நோக்கினால் சிக்கல் முடிவை எடுப்பது யார் என்பதிலேயே . அமைப்பையோ பிறரையோ அதன் பொருட்டு குற்றம் சாட்டுவதில் பொருள் இல்லை
டாக்டர் பாரதி மோகன்
Dr S Bharathi Mohan MD DA
Chief of Medical Staff and
Associate Professor of Anesthesiology & Intensive care
Gulf Medical College Hospital
Ajman, UAE.
திரு வாசுதேவனின் கடிதம் படித்தேன். நூற்று நூறு உண்மை.
இன்றைக்கு பங்குச் சந்தையில் மருத்துவத் துறை (குறிப்பாக மருத்துவமனைகள்) பற்றிப் பேசும்போது, Occupancy Level என்றெல்லாம் பேசுகிறார்கள். மருத்துவமனைக்கு வராமல் இருப்பதே, சுகமான வாழ்வு என்றெல்லாம் இந்திய மனங்களில் ஆழ பதிந்த கூற்றுக்கள் இன்று முற்றிலும் இதுபோன்ற கார்ப்பரேட் மருத்துவமனைகளால் மாற்றமடைந்துவிட்டன. அதுவும் சினிமா கொட்டகை போல் (ஐனாக்ஸ், பிவிஆர் சினிமா போல்) எவ்வளவு தூரம் முழுமையாக பயன்படுத்தப்படுகின்றன என்றெல்லாம் கணக்குப் பார்க்கிறார்கள். இதன் இன்னொரு எல்லை, மெடிக்கல் டூரிஸம். வெளிநாட்டில் இருந்து மருத்துவம் பார்த்துக்கொள்ள இந்தியா வருபவர்களுக்கு உதவ என்றே பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் மும்பையிலும் பெங்களூரிலும் அலுவலகங்கள் அமைத்து இருக்கின்றன.
எழுதிக்கொடுக்கப்படும் ஒவ்வொரு மெடிக்கல் டெஸ்ட்டுக்கும் எக்ஸ்ரேவுக்கும் ஸ்கான்களுக்கும், எழுதிக்கொடுக்கும் டாக்டருக்கு ஒரு கமிஷன் உண்டு. என் குடும்ப டாக்டர் அப்படி எழுதிக்கொடுக்கும்போதே கீழே ஒரு சின்ன மார்க் போட்டு கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன். என்னவென்று விசாரித்தபோது, எனக்கு நீ கொடுக்கும் கமிஷன் வேண்டாம், இந்த நோயாளிக்கு உரிய விலையை மட்டும் பெற்றுக்கொள் என்று அர்த்தமென்றார்.
இரண்டு நாள்களுக்கு முன் என் நீரழிவு நோய்க்கான வருடாந்திர பரிசோதனைகள் செய்துகொள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சென்றேன். என் கண்களை பரிசோதித்தவர், “சரியாத்தான் இருக்கு, ஆனால் உங்கள் ரெடினாவையும் செக் பண்ணனும், கப் சைஸ் பெரிசா இருக்குற மாதிரி இருக்கு” என்று சொல்லி, கலர் போட்டோகிராபி, ஃபீல்டு டெஸ்ட் என்று இன்னும் இரண்டு டெஸ்ட்களை பண்ணச் சொன்னார். ஏற்கனவே கட்டிய தொகைக்கு மேல், இந்த இரண்டு டெஸ்ட்டுகளுக்கும் இன்னும் பெரிய தொகையைக் கட்டி டெஸ்ட் பண்ணினேன். அதனால், ஏதும் பலன் உண்டா. இல்லை. கண்கள் சரியாகவே இருக்கின்றன.
இது எனக்குத் தெரிந்த ஒருவர் சொன்ன விஷயம். ஒரு சினிமா இயக்குநருக்கு வயிற்றுவலி. ஷூட்டிங் நடுவே ஒரு பெரிய மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டுவிட்டார். பணம் போட்ட முதலாளிக்கு வயிற்றில் புளி. சிறுநீரகத்தில் கல் இருந்தது. மருத்து மாத்திரைகள் மூலம் அதைக் கரைத்துவிடலாம். ஆனால், அந்த மருத்துவமனை நான்கு நாள்களுக்கு குறைவாக அவரை வெளியே அனுப்பவே மறுத்துவிட்டது. இத்தனைக்கும், இதில், மருத்துவம் பார்த்த டூட்டி டாக்டர் தெரிந்தவர். பேசினால், கையை பிசைகிறார். சீக்கிரமாக டிஸ்சார்ஜ் பண்ண வழியே இல்லை, மருத்துவமனை அனுமதிக்காது, என்னைத் தப்பாக எடுத்துக்கொள்வார்கள் என்று பயப்படுகிறார்.
இதுதான் இன்றைய நவீன மருத்துவத்தின் உத்தி: பயமுறுத்துதல். பணம் சம்பாதித்தல்.
இதெல்லாம் தாங்க முடியாமல் ஸ்டெல்லாம் புரூஸின் மனைவி மறைந்துபோனது ஆச்சரியம் ஒன்றும் இல்லை. என் அம்மாவையும் இதுபோல் பறிகொடுத்தவன் நான். நான்கு ஆண்டுகள் மருத்துவமனை மருத்துவமனையாக மாற்றி மாற்றி, கடைசியில் ஒரு நாள் தீக்கு இரையாக்கி இருக்கிறேன்.
நேசமுடன்
வெங்கடேஷ்
—
Venkatesh R
Head – Publishing
Bilcare Research
601 ICC Trade Tower
Pune 411 016
Email : [email protected]
Mobile: 9922962551
அன்புள்ளபாரதி மோகன் அவர்களுக்கு,
உங்கள் கடிதம் கண்டேன். நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். நான் மருத்துவ அறிவியல், மருத்துவர்கள் ஆகியோரை ஒட்டுமொத்தமாகக் குறை சொல்லவில்லை. நிராகரிக்கவும் இல்லை. இப்படி ஒரு சிக்கல் இன்று உள்ளது என்று சொல்வது மட்டுமே என் நோக்கமாகும் இதைச்சொல்ல நான் நிபுணனாக இருகக் வேண்டும் என்பதில்லை. எழுத்தாளனாக பிறர் வாழ்க்கையை கவனிப்பவனாக இருந்தாலே போதும். நான் சொன்னது என் அனுபவம் மட்டுமல்ல, நான் கண்ட வாழ்ககையும்கூட . நவீன மருத்துவம் மாபெரும் அமைப்பாக மாறி நம்மைச் சூழ்ந்துள்ளது. அதை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதற்கு நம்மை ஒப்புக்கொடுப்பது தவிர எதுவுமே செய்ய முடிவதில்லை. அது நம்மை பெரும்பாலும் ஒட்ட உறிஞ்சி துப்பி விடுகிறது. இது ‘நுகர்வோரின்’ தரப்பில் இருந்து எழும் ஒரு குரல். இதற்கு சற்றேனும் செவிசாய்க்க வேண்டிய நிலையிலேயே மனசாட்சி உள்ள மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதே என் கருத்து.
இதற்கு காப்பீடோ, கல்வியோ தீர்வாக முடியுமா? அவை பெருமளவுக்கு வளர்ந்த அமெரிக்காவையே இவான் இல்லிச்சின் நூல் தன் ஆய்வுக்களமாகக் கொண்டிருக்கிறது. இவான் இல்லிச் சொல்லிய பல விஷயங்கள் இப்போது இந்தியாவில் பூதாகரமாக வளர்ந்துள்ளன. எளிய மக்கள் லாப வெறி மட்டுமே கொண்ட மருத்துவத்துறையின் பலியாடுகளாக விடப்பட்டிருகிறார்கள். அவர்களே ‘முடிவெடுத்து’ அதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் வேறு வழி இல்லையே.
இந்த சிக்கல் வரும்காலங்களில் பெரிதாகப்பேசப்படும் என்றே எண்ணுகிறேன். மருத்துவத்துறை எந்தவிதமான கட்டுபபடுகளும் இல்லாத ஒன்றாக இந்தியாவில் பேருருவம் கொண்டுள்ளது. அதை கட்டுபப்டுத்துவது எபப்டி என்ற கேள்வி இனிமேல் விவாதிக்கப்படும் எனபது உறுதி.
ஜெயமோகன்
முந்தைய பதிவு