இரு சந்திப்புகள்

நவம்பர் இருபத்துநான்காம் தேதி சென்னையில் இருந்தேன். பெரிதாக அன்று வேலை ஏதும் இல்லை. இளையராஜாவை சந்தித்து நெடுநாட்களாகிறது என்ற எண்ணம் எழ சுகாவைக் கூப்பிட்டேன். ’சொல்லுங்க மோகன்…’ என்றார். அவர் இயக்கும் படத்துக்கான வேலைகளில் தாறுமாறான பரபரப்புடன் இருந்தார். சினிமாவில் மூன்று கட்டங்களில் இயக்குநர்களை அருகே நெருங்கமுடியாது. படம் தொடங்குவதற்கு முன், படப்பிடிப்புக்கு முன், படவெளியீட்டுக்கு முன். இதயம் வாயில் வந்து நிற்கும் அந்த நாட்கள்தான் அவர்கள் வாழ்க்கையில் பொன்னாட்களும்கூட.

இளையராஜாவைச் சந்திக்கப்போகலாமா என்று கேட்டேன். ’நானே சந்திச்சு கொஞ்சநாளாகுது மோகன்…இப்ப கேட்டுட்டுச் சொல்றேன்’ என்றார் சற்று நேரம் கழித்து ‘பிரசாத்திலேதான் மோகன் இருக்கார். கெளம்பிருவோம்… காலம்பற நீதானே என் பொன் வசந்தம் பாக்கிறார். லஞ்ச் டைமிலே பாத்திருவோம்’ என்றார். நான் மதியச்சாப்பாட்டுக்கு கெ.பி.வினோத் இல்லத்துக்குச் சென்றேன். அவரும் கூடவருவதாகச் சொன்னார்.

சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே சுகா அவர் இளையராஜா அலுவலக வாசலில் இருப்பதாகச் சொன்னார். நான் அவசரமாகக் கிளம்பினேன். நானும் வினோத்தும் பிரசாத் வாசலுக்குச் சென்றபோது பதினைந்துநிமிடம் காத்திருந்த சுகா ஏதாவது சொல்லுவார் என நினைத்தேன். அவர் செல்பேசியில் வேலைகள் ஏவிக்கொண்டிருந்தமையால் நேரமானது அவருக்கும் தெரியவில்லை.

பிரசாத் ஸ்டுடியோ ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு விதமாக எனக்குத் தோற்றமளிப்பது. நான் சினிமாவில் இருந்தாலும் என் வேலைக்கும் ஸ்டுடியோக்களுக்கும் சம்பந்தமில்லை. ஸ்டுடியோ எப்போதும் எனக்கு புதிரான கவர்ச்சியான இடம். இயக்குநர்களையும் நடிகர்களையும் எளிதாகச்சந்திக்க ஏற்ற இடம் இப்போதும் ஸ்டுடியோதான். குறிப்பாக டப்பிங் ஸ்டுடியோக்கள். ஆகவே கனவுகள் கொண்ட முகங்களை இப்போதும் ஸ்டுடியோ வாசல்களில் காணமுடிகிறது.

நேராக உள்ளே சென்றோம். உள்ளே பதிவரங்கில் ஐம்பது வயலின்கலைஞர்கள் அமர்ந்து இசைக்குறிப்புகளைப் பிரதியெடுத்துக்கொண்டிருந்தார்கள். அரங்கு வழியாக மறுபக்கம் சென்று இளையராஜாவின் அறைவாசலை அடைந்தோம். ராஜா அப்போதுதான் ஏதோ சாப்பிட்டுவிட்டு எழுந்திருந்தார். சுகாவைப்பார்த்ததும் ‘வாய்யா.. சுரேஷ்…அட நீங்க இப்ப சுகா இல்ல… ’ என்றவர் என்னைப்பார்த்தார் ‘அடடா…வாங்க வாங்க …என்ன பாக்கிறதே இல்லியே’ என்றார்

‘சென்னைக்கு அடிக்கடி வாரேன்…ஆனா ஒரு விஷயமும் இல்லாம சும்மா எப்டி வாரதுன்னு ஒரு தயக்கம்’ என்றேன்.

‘என்ன தயக்கம்? உங்களுக்கு இங்க என்ன அனுமதி? பேசாம வந்திரவேண்டியதுதானே? பேசிட்டிருக்கலாம் இல்ல பாடிட்டிருக்கலாம்…’

சோபாக்களில் அமர்ந்தோம். நான் கெ.பி.வினோதை ராஜாவுக்கு அறிமுகம் செய்தேன். சுகா ‘நானும் வந்து கொஞ்ச நாளாச்சு..படவேலைகள்’ என்றார்.

‘அப்றம்? என்ன பண்றீங்க?’ என்றார் ராஜா

‘நெட்டில நெறைய எழுதறேன்…ஒருநாவல் முடியற நிலைமையிலே இருக்கு’ என்றேன்.

’பண்ணைபுரம் போயிருந்தீங்க போல’ என்றார்

சமீபத்தில் அங்கே சென்றிருந்தபோது அவருக்கு செய்தி சொல்லியிருந்தேன். ‘ஆமா…அந்தவழியாப் போனப்ப போய்ப் பாக்கலாம்னு தோணிச்சு’

’அம்மா சமாதி போனீங்கள்ல?’

’ஆமா..ஊரிலேயே சொன்னாங்க…’ என்றேன்

‘இப்பல்லாம் ஊரே மாறிப்போச்சு… அந்தக்காலத்திலே ஒண்ணுமே இல்ல. குடிசைங்கதான் அதிகம். ..’

’அந்தக்காலத்திலே நல்ல சாரல் மழை பெய்யும்னு சொன்னாங்க. ஜூன்மாசத்திலே

‘ஆமா…சாரல் மழையிலேதான் பள்ளிக்கூடமே போவோம்…இப்ப சாரல் இல்லாம ஆயிடுச்சு…மலைகளிலே காடு இல்லாமலானதோட சாரலும் போச்சு’

‘கொஞ்சம் மலையாளச் சாரல் அங்கெல்லாம் இருக்கு’ என்றேன். ‘இப்பதான் அதர்வம் படத்தோட பாடல்களை மறுபடி கேட்டேன்… கேரளத்துக்கே உரிய கருவிகளை அழகாப் பயன்படுத்தியிருக்கீங்க. தனிமலையாளிகள் கூட இடைக்காவையெல்லாம் பயன்படுத்தினதில்லை’

‘எங்க ஏரியாவே அதாச்சே…நாங்க அங்கெல்லாம் நெறைய போயிருக்கோம். தேனி கம்பம் தாண்டினா கேரளம்… இடைக்கான்னா என்ன? இடக்கை. இடக்கையிலே இருக்கிற வாத்தியம்ங்கிறதனால அந்தப்பேரு…அங்க கோயில்களிலே அஷ்டபதி வாசிக்கிறாங்க… ‘

‘ஆமா ரொம்ப நிதானமான தாளத்திலே…’ என்றேன்

‘அஷ்டபதிக்கு அந்தத் தாளம்தான் வேணும்… அப்பதான் உச்சரிப்புகள் தெளிவா இருக்கும்…’

‘நாங்க இந்தியாப்பயணம் போனப்ப கோதாவரிக்கரையிலே ஒருத்தர் நெக்குருக ஆண்டாள் பாசுரம் பாடுறதைக் கேட்டேன். கடைசியிலே அவர்ட்ட பேசப்போனா அவருக்குத் தமிழே தெரியாது. கிருஷ்ணதேவராயர் காலம் முதல் தலைமுறை தலைமுறையா மந்திரம் மாதிரி பாட்டுகளைப் படிச்சுப் பாடிட்டிருக்காங்க’ என்றேன்.

‘அப்டியா…அடாடா ‘ எனக் குழந்தை மாதிரி மகிழ்ந்தார் இளையராஜா ‘பாட்டுக்கு என்ன பாஷை?’

‘இவாள்லாம் இப்ப ஒரு பெரிய டிரிப்பு போயிருக்காங்க’ என்றார் சுகா ‘இந்தியா முழுக்க காரிலேயே போயிருக்காங்க’

‘அய்யோ’ என்றார் ராஜா

‘ஆமா…ஈரோட்டிலே ஒரு டீம் இருக்கு. நாங்க எட்டுப்பேரு ஒரு காரிலே கெளம்பி சமண தலங்களை மட்டும் பாத்துட்டு அப்டியே பாகிஸ்தான் எல்லையிலே லொதுவாரா வரைக்கும் போயிருந்தோம். தினம் ஒரு மடத்திலே தங்குறது, ரோட்டிலே சாப்பிடறதுன்னு ஒரு நல்ல டிரிப்பு ’ என்றேன் ‘போற வழிக்கு உங்க பாட்டும் துணைக்கிருந்துச்சு…’

‘அது இல்லாம முடியுமா?’ என்று ராஜா சிரித்தார்

‘சுத்தமா புதிய நெலத்திலே ஒரு பழையபாட்டக் கேக்கிறது பெரிய அனுபவம்.அந்தப்பாட்டே புதிசா ஆயிடுது’ என்றேன்

‘ஆமா… பாட்டுக்குள்ள அதுவும்தான் இருக்கு’ என்றார் ராஜா

‘இந்த சுகால்லாம் பாட்டுகள துல்லியமா ராகம்பிரிச்சு க் கேக்கிறாங்க…எனக்கு அப்டி இல்ல. எனக்கெல்லாம் பாட்டுன்னா அது கண்ணிலே தெரியறது மாதிரித்தான்…இல்லேன்னா கனவு மாதிரி…அதை சுவரம் சுவரமாப் பாக்க முடியறதில்லை’ என்றேன்.

’அப்டியும் கேக்கலாம்….அந்தக் காட்சிகளும் எப்டியோ பாட்டுக்குள்ளதான் இருக்கு’

‘இவர் ஒரே பாட்டைக் கேட்டுக்கேட்டுதான் ஒரு நாவலே எழுதியிருக்கார்’

‘அப்டியா?’ என்றார் ராஜா அவருக்கு நான் அதை முன்னரே சொல்லியிருந்தேன். நினைவில்லை

‘ஆமா. கண்டேன் எங்கும்னு ஒரு பாட்டு. நான் ஒரு நாலஞ்சுவாட்டி அதைக்கேப்பேன். அந்த மூட்ல ஒரு அத்தியாயம் எழுதிடுவேன். கொற்றவைங்கிற நாவல்…கண்ணகியைப்பத்தின நாவல். அந்தப்பாட்டைக் கேக்கிறப்ப பலவிதமான பிம்பங்கள். மணல்வெளியிலே ஒரு பழைய கோயிலிலே ஒரு செலையைப்பாக்கிற மாதிரி ஒரு கனவு…’

‘அந்தப்பாட்டிலேயும் ஒரு ஏக்கமோ தேடலோ இருக்கு’ என்றார் ராஜா. ‘அதைச் சொல்லித்தான் பாட்டே கேட்டு வாங்கினாங்க’

‘ஒருவருஷம் கேட்டிருக்கேன்…தினம் இருபதுவாட்டி’ என்றேன் ‘நாவல் முடிஞ்சதும் பேயும் இறங்கிருச்சு’

ராஜா சிரித்தார்.

சுகா

‘பல பாட்டுகளிலே எனக்கு சம்பந்தமில்லாத ஃபீலிங்ஸ் இருக்கு. உதாரணமா ’ஆட்டமா தேரோட்டமா’ங்கிற பாட்டு எனக்கு ஒரு டிவைன்ஃபீலிங்கைத்தான் தருது. அதிலே ஒரு இன்னொசென்ஸ் இருக்கிற மாதிரி’ என்றேன். ’சமீபத்திலே எம்பார் கண்ணன் உங்க பாட்டுகளை வயலினிலே வாசிச்ச ஒரு யூடியூப் லிங்கை கேட்டேன். லிரிக் இல்லாம வெறும் மெலடியா கேக்கிறப்ப பல பாட்டுகள் வேற ஒரு தளத்திலே இருக்கிறதா தோணிச்சு…உதாரணமா மாசிமாசம் ஆளான பொண்ணு….எங்கெங்கேயோ போய்ப் பறந்து அலையறமாதிரி தோணிச்சு’

‘பாட்டுக்கு லிரிக் தேவையே இல்லை. பாட்டு அதுக்குண்டான ஒரு எடத்திலே இருக்கு. லிரிக் அதை நம்ம உலகோட சேத்து வைக்குது. லிரிக்குவழியா பாட்டுக்குள்ள போய்ட்டு பாட்ட அப்டியே மறந்திரணும். ஏன்னா பாட்டுக்குப் பல அர்த்தம். லிரிக்குக்கு ஒரு அர்த்தம்தான்…’ ராஜா சட்டென்று நினைவுகளில் ஆழ்ந்தார். ’ஆனா சில சமயம் பாட்டும் வரியும் ஒண்ணாவே பிறந்துவரும். அண்ணன் பாவலர் பாடுறப்ப அப்டித்தான்…மெட்டுக்கும் வரிக்கும் வித்தியாசமே இருக்காது… ஆர்மோனியத்தை வச்சிட்டு அப்டியே நேரா பாட ஆரம்பிச்சிருவார்…’

பாவலரின் ஒருபாடலை ராஜா பாடினார். ‘எப்டி இருக்கு வரி பாத்தீங்களா? அப்டியே ஒரு பாரதி பாட்டுக்குச் சமானமா இருக்குல்ல? அண்ணன் பாட்டுகளை ஒருதடவை கண்ணதாசனுக்குப் பாடிக்காண்பிச்சேன். அடடா அற்புதமான வரிகள்டா…அதுவே சந்தத்திலே போய் அமைஞ்சிடுது. சந்தத்தோடவே பிறந்து வந்திருக்கு…ஒரு மாணிக்கத்தை இழந்திட்டோமேன்னு சொன்னார்’

கொஞ்சநேரம் பேசியதுமே அதிகம் பேசிவிட்டோம், இது நம் ஏரியா இல்லையே என்ற எண்ணம் ஏற்படும்போல. இளையராஜா பாவலரின் பாடல்களைப் பாட ஆரம்பித்தார். அந்த இடமும் அந்த மங்கிய வெளிச்சமும் மறைந்துபோய் அவர் தேனியிலோ மதுரையிலோ ஒரு மேடையில் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் அமர்ந்து பாடிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. அவரது வயதில் ஐம்பதாண்டுகள் மறைவதுபோல

’பாவலர் குரல் பதிவு இருக்கா?’ என்றேன்

‘இல்ல…ஒரு ஸ்பூல்டேப்ரிக்கார்டர் அந்தக்காலத்திலே யாரோ அண்ணனுக்கு கிஃப்ட குடுத்தாங்க. அதை ராப்பகலாக் கேக்கிறது, பதிவுசெய்றது. அதைத் தலைமாட்டிலே வச்சுகிட்டே தூங்குறது…அது அப்டியே போச்சு. கட்சிப்பணிக்குன்னு எடுத்துக்கிட்டாங்க’

‘ஆல் இந்தியா ரேடியோல அவர் குரல் இல்லியா?’ என்றேன்

கே.பி.வினோத்

‘ஆல் இண்டியா ரேடியோவா? நல்ல கதை…அவரு கம்யூனிஸ்டில்ல?’ என்று ராஜா வருத்தமாகச் சிரித்தார். மீண்டும் பாவலரின் ஒரு பாட்டைப் பாடினார். ‘இது ஜீவா முன்னாடி பாடினது. ஜீவா வந்து அப்டியே கட்டிப்புடிச்சுக்கிட்டார். ஜீவாவப் பாத்திருக்கீங்களா?’

‘இல்லை. சுந்தர ராமசாமி நெறையச் சொல்லியிருக்கார்’

‘மேடையிலே பேசறதானா அவரை மாதிரி பேசணும்…ஒரு எடத்திலே கவிதையா இருக்கும். இன்னொரு எடத்திலே நகைச்சுவையா கொட்டும்… அப்ப பெரியபெரிய ஆட்கள்லாம் இருந்தாங்க…அப்பதான் ஜெயகாந்தன்கிட்ட பழக்கம். சிங்கம்ல? எழுத்தாளனோட நிமிர்வ அவர்ட்ட பாக்கணும்.ஜெயகாந்தனை சமீபத்திலே பாத்தீங்களா?’

‘இல்லை. அவரையும் பாக்கணும்’ என்றேன்

‘கூப்பிட்டிருந்தார். திருக்குறளைப்பத்தி நான் கொஞ்சம் எழுதி வச்சிருக்கேன். அதைப்பத்திக் கேள்விப்பட்டுக் கூப்பிட்டார். பேசினோம். குறளைப்பத்திப் புதிசா சொல்றியாமேன்னார். ஆமாங்கன்னு சொன்னேன். சரி, அதுவும் குறளிலே இருக்கட்டும்னு சொல்லி வச்சிட்டார்’ என்று ஒரு டைரியை எடுத்தார்.

முதல் பத்து குறள்களுக்கு தன்னுடைய எதிர்வினையை ராஜா குறள் வடிவில் எழுதியிருந்தார். அவருக்கு வெண்பா வடிவம் நன்றாகவே பழகியிருப்பது தெரிந்தது. ஒவ்வொரு குறளாக வாசித்துத் தன்னுடைய வரிகளை வாசித்தார்.

சுகா மீண்டும் ராஜாவிடம் அவரது பாடல்களின் சில சுவரக்கணக்குகளைப் பேச ஆரம்பித்தார்.

நேரமாகிவிட்டதை உணர்ந்தோம். வெளியே நிறையப்பேர் காத்திருப்பார்கள். எப்போதும் அவரது நேரத்தை அதிகமாக எடுத்துக்கொள்பவனாகவே இருந்திருக்கிறேன். அவர் அதை மட்டுப்படுத்திக்கொள்வதில்லை. சூழல் நினைவு எனக்கு வருவதுதான் கணக்கு

‘சரி நாங்க கெளம்பறோம்’ என்றேன்

‘கெளம்பணுமா?’

‘ஆமா…இவருக்கு வேலை இருக்கு’ என சுகாவை மாட்டிவிட்டேன்.

‘ஆமாமா…இவருக்கு வேலை இருக்கும்’ என குறும்பாகச் சிரித்தார் ராஜா

வெளியே வந்தோம். கூடத்தில் இசைக்கலைஞர்கள் வயலின்களை வாசித்துப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

‘அப்டியே ஜெயகாந்தனைப் பாத்துட்டுப்போலாமே…பாத்து ரொம்ப நாளாச்சு…சொல்லிட்டே இருக்கோமே ஒழியப் போறதில்லை’ என்றேன்

சுகா ’எனக்குத் தலைமேலே வேலை மோகன்.ஆனா இப்ப விட்டா நடக்காதுன்னு தோணுது..போயிருவோம்’ என்றார்

ஜெயகாந்தனின் பழைய வீட்டை இடித்துப் புதியதாகக் கட்டியிருந்தார்கள். நான் அங்கே ஒருமுறை சென்றிருந்தாலும் எனக்குப் பொதுவாக இடங்கள் நினைவிருப்பதில்லை. வினோத் அடையாளம் கண்டுகொண்டார். ஆனால் ஒரு சந்தேகம். வீட்டுப் பெயர் காதம்பரிதானா?

எதிரில் இருசக்கரவாகனத்தைத் துடைத்துக்கொண்டிருந்தவரிடம் ‘ஜெயகாந்தன் வீடு எங்கே இருக்கு?’ என்றார் வினோத்

‘ஜெயகாந்தனா? இங்க அப்டி யாருமே இல்லியே’

‘இந்த வீடா?’ என்றார்

‘இல்லீங்க…இந்தத் தெருவிலே அப்டி யாருமில்லை’

ஆனால் சுகா சொன்னார் அதுதான் ஜெயகாந்தன் வீடு என்று. உள்ளே நுழைந்தோம். அடுக்குமாடிக் குடியிருப்பு. பக்கவாட்டில் செல்லும் வழியில் ஜெயகாந்தனின் குடியிருப்புப்பகுதி இருந்தது. முன்பு தனி வீடாக இருந்தபோது அதற்கு ஓர் அடையாளமும் தனித்துவமும் இருந்தது. மாடியில் அவரது ’மடம்’. ஓலைக்கொட்டகைக்குள் பெஞ்சுகள் மேஜைகள். அந்த இடமே இப்போது நினைவுகளாக மாறிவிட்டிருந்தது. பலநூறுபேரின் இனிய, மகத்தான நினைவுகளாக.

ஜெயகாந்தன் இருந்தார். அவரது இரண்டாவது மனைவி வந்து எங்களை வரவேற்றார். ஜெயகாந்தனின் இலக்கியத்தோழி அவர். என்னையும் சுகாவையும் அடையாளம் கண்டுகொண்டார். ஜெயகாந்தன் வந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தார். அவரது கைகளைப்பற்றி வணக்கம் சொன்னேன். முதுமையின் நடுக்கம் கொண்ட கைகள். ஆனால் ஆரோக்கியமாக இருப்பதாகவே தோன்றியது. சரியாக நினைவுகள் இல்லை என்றார்கள். ஆனால் எங்களை நினைவுகூர்ந்தார். இன்றையகாந்தி நூலை வாசித்ததை ஞாபகப்படுத்திக்கொண்டார்

‘இப்ப யாரும் வர்ரதில்லியா?’ என்றேன்

‘இல்ல…இப்ப இவருக்குப் போக இடமில்லை. இங்க ஃபேமிலிக்குள்ள யாரும் வர்றதில்லை…நாப்பதுவருஷமா இலக்கியத்தையும் குடும்பத்தையும் பிரிச்சுத்தான் வச்சிருக்கார். நான் ஒருமுறைகூட மேலே மடத்துக்குப் போனதில்லை. வீட்டைக் காலி பண்றச்சதான் போய்ப்பாத்தேன். அடாடா இந்த எடம் இப்டியா இருக்குன்னு நினைச்சுகிட்டேன். அவர் நண்பர்களுக்கும் வீட்டுக்கும் சம்பந்தமில்லை. தனி எடமில்லைன்னானதும் அவங்க நின்னுட்டாங்க’

‘என்ன பண்றார்?’

‘சும்மாதான் இருக்கார். டிவி பாப்பார். படிக்கிறது இல்ல. எழுதறதும் இல்ல’

‘பிள்ளைங்ககூட வெளையாடறது’ என்றார் ஜெயகாந்தன் சிரித்தபடி.

‘ஒண்ணுமே எழுதறதில்லையா?’

‘இவர் எப்பவுமே எழுதினதில்லை. சொல்லுவார் நான்தான் எழுதுவேன். அப்டியே மணிமணியா வார்த்தை வார்த்தையா சொல்லுவார். மூணுபுள்ளி காமா ஃபுள்ஸ்டாப் எல்லாம் சொல்லுவார். மொத்தக் கதையையும் அப்டியே சொல்லிடுவார். எங்கயாவது நிப்பாட்டினா நான்தான் தேடுவேன். அவர் நிப்பாட்டின வார்த்தையிலே இருந்து ஆரம்பிச்சிருவார்’

‘என் நண்பர்களும் எழுதியிருக்காங்க…நான் எப்பவுமே கையால எழுதினதில்லை’ என்றார் ஜெயகாந்தன் சிரித்தபடி

‘கதையை நல்லா சொல்வீங்க. சொன்னபடியே எழுதிருவீங்கன்னு சுந்தர ராமசாமி சொல்லியிருக்கார்’ என்றேன்.

‘ஆமா…மனசிலே கதை அப்டியே உருவாயிரும்’ என்றார் ஜெயகாந்தன்.

‘நான் பேசறதில்லை.. இப்ப இவர் பேசாமலேயே இருக்கார். அதனால நான் பேசறேன்’ என்றார் மாமி

‘எங்கியானும் ஒரு எடத்திலே எல்லாரையும் சந்திச்சா பேசுவார்’ என்றேன்

‘பேச ஒண்ணுமில்லை’ என்றார் ஜெயகாந்தன் சிரித்தபடி

‘மாடிக்கு இவரால ஏற முடியாது…தரை லெவல்லே ஒரு எடமிருந்தா நல்லா இருக்கும்’ என்றார் மாமி

‘சும்மா இருக்கவேண்டியதுதான்’ என்று ஜெயகாந்தன் சிரித்தார்.

நான் அவரையே பார்த்தேன். சிங்கம்போல என்று இளையராஜா சொன்ன அந்த ஜெயகாந்தனை நான் கண்டிருக்கிறேன். மடத்தில் இருந்தவரை சட்டென்று அவர் பேச ஆரம்பித்தால் அவருக்குள் இருந்த மேதை தன் காலகட்டத்தை நோக்கி உரையாற்ற ஆரம்பித்துவிடுவான். எரிமலை குளிர்ந்து கரும்பாறையானதுபோல இருந்தார். இல்லை, அந்தப்பாறை கனிந்து ஒரு குளிரோடையாக ஓடுவது போல. இந்த மனிதர் அந்த மனிதருக்குள் இருந்திருக்கிறார். அல்லது இவருக்குள் அவர் இருந்திருக்கிறார்

அரைமணி நேரத்திலேயே ஜெயகாந்தனிடம் விடைபெற்றுக்கொண்டோம். கிளம்பும்போது அந்த நடுங்கும் கைகளைப்பற்றி ’வரோம் சார்’ என்றேன். ‘பாப்போம் ‘ என்று சிரித்தார்.

திரும்பிச்செல்கையில் நினைத்துக்கொண்டேன். என் பெரும்பாலான சந்திப்புகளில் இருவரையும் சேர்த்துதான் பார்த்திருக்கிறேன் என. அவர்கள் மாறி மாறி நிரப்பிக்கொள்பவர்கள் போலும்.

முந்தைய கட்டுரைஅசோகமித்திரன், தேவதேவன்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇந்துஞானமரபில் ஆறுதரிசனங்கள் -கடிதம்