சாருவின் அவதூறு

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

அன்புள்ள ஜேஎம்,
நீங்கள் சினிமா கம்பெனிகளில் அவமானப்படுவதாக ஒருவர் சாரு ஆன்லைன் இணையதளத்தில் எழுதியதை வாசித்தேன். மொத்தமாக அந்தக்கடிதமே ஒரு பினாமி ஏற்பாடு என்று தெரிந்தது. ஆனால் அந்த ஒருவரி மட்டும் எனக்கு கொஞ்சம் மனக்கஷ்டத்தைக் கொடுத்தது. அப்படி இருந்தால் அது எவ்வளவு துரதிருஷ்டவசமானது என்று எண்ணிக்கொண்டேன். உங்கள் கருத்து என்ன?

பரணி செல்வம்

அன்புள்ள பரணிசெல்வம்,

இன்னும் கொஞ்சநாளுக்கு சாரு இந்த வகையில் பிஸியாக இருப்பார். இதைவைத்து வண்டியை ஓட்டுவார்.  அவருக்கு மனநிம்மதி கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்ப வாழ்த்துகிறேன்.

என்னை பேட்டி எடுப்பவர்கள் அனைவருமே ‘உங்களை கௌரவமாக நடத்துகிறார்களா?’ என்ற கேள்வியைக் கேட்பதுண்டு. நான் கௌரவமாகவே நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதில் உள்ளது. கூடுதலாக சினிமாக்காரர்கள் மரியாதை தெரியாதவர்கள் என்ற முன் எண்ணமும். அதற்குத்தான் இந்தப்பதில்.

நான் சினிமாவின் ஒரு மிகச்சிறிய பகுதியையே அறிந்திருக்கிறேன். என்னை ஏற்கனவே எழுத்தாளனாக அறிந்த, என் வாசகர்களாக இருந்த, சிலருடைய படங்களுடன் மட்டுமே எனக்கு தொடர்பு. நான் இதுவரை சினிமா தொடர்பாக சந்தித்த இயக்குநர்கள் மொத்தம் ஐந்தேபேர்தான். பாலுமகேந்திரா, பாலா, வசந்தபாலன், மணிரத்தினம், பரத்பாலா. வேறு ஒரு நண்பரால் அறிமுகம் செய்யப்பட்டு எங்காவது ஒரு ஹலோ சொல்லிய அளவுக்கு தெரிந்தவர்கள் என்றால்கூட ஒரு ஐந்துபேர்தான் இருப்பார்கள். மொத்த சினிமாத் தொடர்பே அவ்வளவுதான். இதைவிட முக்கியமாக நான் நேரில் சந்தித்த ஒரே தயாரிப்பாளர் அருண்பாண்டியன். ஒரு ஹலோ, கைகுலுக்கல் அவ்வளவுதான்.

என் சினிமாத் தொடர்புகள் மிகமிகக் குறைவானவை. அதிக தொடர்புகளை வைத்துக்கொள்வதும் இல்லை. நான் இருப்பது நாகர்கோயிலில். எல்லாவற்றுக்கும் மேலாக சினிமாவில் என்னைப்போன்ற ஒருவர் செய்யக்கூடியவை குறைவு என்றும் தெரியும். ஒருமாதிரி நடுவாந்தரப் படங்களை மட்டுமே என்னால் செய்ய முடியும். அதன் எல்லைகள் மிகக் குறைவானவை. இதுசார்ந்து அடுத்த வருடத்துக்கு அப்பால் திட்டம் ஏதும் இல்லை.

ஆனால் இந்தவகையான அவதூறுகளில் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். பொதுவாகவே இலக்கியவாதிகள் சார்ந்து அபரிமிதமான மரியாதையை சினிமாக்காரர்கள் கொண்டிருப்பதையே நான் கண்டிருக்கிறேன். காரணம் அவர்களில் பலர் நல்ல வாசகர்கள். இன்று நான் சந்திக்கும் மிகச்சிறந்த வாசகர்களில் ஒருசாரார் உதவி இயக்குநர்கள். எங்கே சென்றாலும் வாசகர்களுக்குரிய அந்த பிரகாசம் விரியும் புன்னகையைக் காண்பது மிக உவகை ஊட்டும் விஷயம்

சினிமாவில் மிகுந்த மரியாதை இன்றி பேசிய ஒருவரைக்கூட நான் கண்டதில்லை.  நான் பேசிய ஐந்து இயக்குநர்களுடனும் நான் சினிமாவைப்பற்றி பேசியது மிக மிகக் குறைவு. இலக்கியம்பேசியதே அதிகம். இலக்கியவாதிகள் ஒருவரை அவதூறு செய்வதற்காக சினிமாக்காரர்களை பண்பாடு அறியா பாமரர்கள் போலச் சித்தரிக்கும் இந்த வகை முயற்சிகள் அசிங்கமானவை.

முந்தைய கட்டுரைசமரச சினிமா
அடுத்த கட்டுரைசங்க காலம் கடிதங்கள்