அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்களின் ‘அசோகமித்திரனின் இரு கதைகள்’ கட்டுரையைப் படித்த பிறகு, ‘காந்தி’ எனும் உன்னதமான படைப்பைக் கூர்ந்த பார்வையுடன் மீண்டும் படித்தேன். அதன் முழு தரிசனத்தை உணர முடிந்தது. மிக்க நன்றி. RV சொன்னது போல நீங்கள் தமிழ் நவீன இலக்கியத்துக்கு ஒரு கோனார் நோட்ஸ்.
கீழே குறிபிட்டுள்ள கதையில் வரும் பகுதியைப் படித்து, வெகு நேரம் அது பற்றி சிந்தனையில் இருந்தேன். போர் பற்றி இது போன்ற பார்வை எனக்குப் புதிதாக இருந்தது. இந்த சில வரிகள் மனதில் சொல்ல முடியாத பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இது வரை நடந்த யுத்தங்களை எல்லாம் அர்த்தமிழக்கச் செய்யும்படியான வார்த்தைகள். போர் வீரர்கள் எல்லாம் வெட்கப்படும்படியான சொற்கள்.
“காட்டுமிராண்டிகளாக மனிதர் வாழ்ந்த காலத்தில் ஒருவன் முகத்தை இன்னொருவன் அறிந்துதான் கொலை செய்திருக்கிறான். இன்று கொலையாளிக்கு அவன் யாரை எவ்வளவு பேரைக் கொலை செய்யப்போகிறான் என்று தெரியாது. அவன் வரையில் அவன் விசையைத் தள்ளுபவன். கொலை செய்யப்படுபவர்களுக்கும் அவர்களுடைய முடிவுக்கு எவன் உண்மையான காரணம் என்று தெரியாது. அப்படித் தெரிந்தாலும் அவன் பல ஆயிரம் மைல்களுக்கப்பால் ஒரு சுரங்க அறையில் மிகவும் பத்திரமாக, மிகவும் பத்தியமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பான். அங்கு அவன் கூட இருக்கும் நாய் பூனைகளிடம் கருணையின் வடிவமாக இருப்பான்.. ”
நன்றி,
பாலா
அன்புள்ள பாலா
அசோகமித்திரன் அவரது இளமையில், அவரது ஆளுமையுருவாக்கத்தின் ஆரம்பப்பகுதியில், உலகப்போர் சார்ந்த கொடுமைகளை அறிந்திருக்கலாம். அவரது சிந்தனைகளை அது வெகுவாகவே பாதித்திருக்கிறது. அவரது பல சிறுகதைகளில் இந்த உணர்ச்சிகள் பல வகையாக வெளிப்படுகின்றன
ஜெ
இனிய ஜே எம் ,
தேவதேவனின் ”இரவெல்லாம் விழித்திருந்த நிலா ”தொகுதியில்
பிற வேளைகளிலெல்லாம் வண்ண வண்ண மலர்கள்
கருக்கல் வேளைகளில்
தீவிரமாய் ஒளிர்வன வெண்ணிற மலர்கள்தான்
எனும் கவிதை ஒன்றினை வாசிக்கும் போது அந்தியின் சுவை அறிந்தோர் மட்டுமே ,தேவதேவன் எனும் வெண் மலரை தரிசிக்க முடியும் என எண்ணிக்கொண்டேன் . உங்கள் வரிகள் ஒன்றினில் பேரிலக்கியங்கள் கண்டெடுக்கப் படாமல் நெடுநாட்கள் கிடப்பது அதன் இயல்பு என்று வாசித்திருக்கிறேன் . தேவதேவன் இன்னும் முழுமையாக நம் சூழலில் உள்வாங்கப்படாத நிலையின் பின்புலம் என்னவாக இருக்கும் ?தேவதேவனின் கவிதைகள் போலவே ,அவரது சிறுகதைகளும் எனக்கு விருப்பமானவை .ஒரு ரசனை விமர்சகராக தேவ தேவனின் கதைகளை அதன் எந்த சிறப்புக் கூறினால் மதிப்பிடுவீர்கள்
கடலூர் சீனு .
அன்புள்ள சீனு
தேவதேவனைப்பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறேன்.
ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தனியாகச்சுட்டிக்காட்டுவேன். தமிழில் எழுதிய எல்லா நவீனக் கவிஞர்களும் இருப்பின் துயரை, கசப்பை மட்டுமே எழுதியிருக்கிறார்கள். தேவதேவன் மட்டுமே மானுட இருப்பின் கொண்டாட்டத்தை பரவசத்தைப்பற்றி மட்டும் எழுதியிருக்கிறார். துயரம் தீண்டாத பெருவெளி அவரது கவிதைகள்
அந்த ஒளியில் துலங்குபவை அவரது மலர்கள்
ஜெ