காந்தி ஓஷோ மற்றும் சிலர்

அன்புள்ள ஜெ

நான் உங்கள் தொடர்ந்த வாசகன்

நான் சமீபத்தில் சுவாமி சுகபோதானந்தாவின் ‘Personal Excellence through Bhagavat Geetha’ என்ற மூன்று நாள் நிகழ்ச்சியில் பங்குபெற்றேன் அதில் அவர் சொன்னார். ‘Hurting one’s self is also kind of violence.’

காந்தியடிகளின் உண்ணா நோன்பை (தன்னை வருத்திக் கொள்தல்) இத்துடன் இணைத்துப் பார்க்கையில் அதுவும் ஒரு’ violence’ தானோ (உண்ணா நோன்பு – நல்ல விஷயத்திற்காக இருந்தாலும்) என எண்ணுகிறேன்.

தயவு செய்து நேரம் கிடக்கும் போது எனக்கு விளக்கவும்.

அன்புடன்
சேது வேலுமணி

***

அன்புள்ள சேது வேலுமணி,

இந்திய சிந்தனைமரபில் ஓஷோ ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்தார். புனிதம், பக்தி, அர்ப்பணம், என்ற அளவில் மட்டுமே இந்திய சிந்தனைகளைப் பார்த்து வந்த ஒரு பாரம்பரியமே நமக்கிருந்தது. இந்தியஞான மரபைப் பிற உலகசிந்தனைகளில் இருந்து துண்டித்து ஒரு தனித்த பிராந்தியமாக அணுகும் மனநிலை கொண்டிருந்தோம். ஓஷோவின் பங்களிப்பென்பது இந்த உறைநிலையை உடைத்துக் கலக்கியதுதான்.

ஓஷோ நாம் புனிதம் என்றும் மகத்துவம் என்றும் எண்ணிய எல்லாவற்றையும் வேண்டுமென்றே தலைகீழாக்கினார். நாம் நம்பிவந்தவற்றை எல்லாம் வேண்டுமென்றே மறுத்தார். நம்முடைய சிந்தனைகளுடன் உலகசிந்தனைகளை மூர்க்கமாக ஒன்றுகலந்தார். அதன்மூலம் நாம் சிந்தித்தே ஆகவேண்டிய ஒரு கட்டாயத்தை உருவாக்கினார். நாம் நம் தேடலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வாசிக்கவும் சிந்திக்கவும் கடந்துசெல்லவும் கற்பித்தார். குருநாதர்கள் அவர்களின் வரலாற்றுப்பணியை அவர்களே தீர்மானிக்கிறார்கள்.

ஓஷோ இளையதலைமுறைக்காகப் பேசியவர். ஆகவே அவர்களின் மொழியில் அவர்களின் படிமங்களில் அவர்களின் பாவனையில் பேசினார். ஆகவே அவருக்கு மிகப்பெரிய ஒரு ரசிகர்வட்டம் அமைந்தது. பின்னாளில் பலர் அவரது வழியைக் கடைப்பிடிப்பது படித்த இளையதலைமுறையைச் சென்றடைய எளியவழி என்று கண்டுகொண்டனர். வெற்றியும் பெற்றனர்.

அவர்கள் ஓஷோ முன்வைத்த கருத்துக்களை, அவற்றின் நோக்கம் பயன் எதைப்பற்றியும் கவலைப்படாமல், தாங்களும் சொல்ல ஆரம்பித்தனர். ஓஷோ பேசியதில் ஓர் உள்ளார்ந்த தர்க்கம் இருந்தது. அவர் தொடர்ச்சியாக நம்பிக்கைகளையும் அறிவார்ந்த உறுதியான நிலைப்பாடுகளையும் தகர்த்து அந்தந்தக் கணத்தில் நிகழும் திறப்பை முக்கியமானதாக முன்வைத்தார். அந்த தொடர்ச்சியை உணராமல் உதிரிவரிகளாக அவரது கருத்துக்களை எடுத்தாள்கிறார்கள். அவற்றை இன்றைய நவீன நிர்வாகவியல்- சுயமுன்னேற்றக் கருத்துக்களுடன் குழைத்து ஒரு பேக்கேஜ் ஆக்கி முன்வைக்கிறார்கள்

இந்திய ஞானமரபையும் இந்தியப் பண்பாட்டையும் முழுக்க இந்த உதிரி வரிகள் வழியாக அறியும் ஒருவர் அவற்றைப் பற்றிய உறுதியான முடிவுகளுக்கே முதலில் வருகிறார். மேற்கொண்டு எதுவும் தெரியாமலேயே அவர் நின்றுவிடுகிறார். அந்த முன்முடிவுகளை எவரேனும் உடைக்க முனைந்தால் அவரது அகங்காரம் புண்படுகிறது. அதை அவர் தனக்கெதிரான போராகப் புரிந்துகொண்டு முரண்படுவார், மேலும் இறுகிக் கொள்வார்.

இன்று நம் சிந்தனையுலகில் தத்துவார்த்தமாக சிந்திக்கக்கூடிய இளைஞர்கள் சந்தித்தாக வேண்டிய மிகப்பெரிய சிக்கலாக இது மாறிவிட்டிருக்கிறது.

நீங்கள் குறிப்பிட்ட அந்த வரி ஓஷோ சொன்னது. காந்தியைப் பற்றிய ஓஷோவின் பேச்சு ஒட்டுமொத்தமாகவே சீண்டும் நோக்கம் மட்டுமே கொண்டது. அதற்குமேல் எந்த மதிப்பும் அதற்கு இல்லை.

சிந்தித்துப் பாருங்கள். நான் உண்ணாநோன்பு இருப்பதும், பக்கத்து வீட்டுக்காரனை செருப்பாலடிப்பதும் ஒரேபோன்ற ‘வன்முறை’ என்று ‘தத்துவார்த்தப்படுத்து’வது வழியாக எதைச் செய்ய முயல்கிறோம். பக்கத்து வீட்டுக்காரனை அடிப்பதை சாதாரணமானதாக ஆக்குகிறோம். எவ்வளவு வெளிப்படையான ஒருவிஷயம் இது! இதிலென்ன விவாதம்?

சிந்தனை என்பது கையிலிருக்கும் ஒன்றைக் கண்ணை மூடிக்கொண்டு துழாவிப் பார்ப்பது அல்ல. அது தெளிவை நோக்கிச் செல்லவேண்டியது. சிந்திப்பதன் மூலம் நாம் அடைவது என்ன என்று பார்த்தாலே அது சிந்தனையா இல்லை வெற்று அகங்கார விளையாட்டா என நமக்குப்புரிந்துவிடும்.

தன்னை வருத்துவது வன்முறை. சரி, அப்படியே யோசித்துப் பார்க்கலாமே. என் கருத்தை நான் சொல்வது வன்முறை, அது மற்றவர்களை வற்புறுத்துவது அல்லவா? நான் பிறரிடம் அன்பு செலுத்துவதும் வன்முறை. ஏனென்றால் அது அவர்கள் என்னை திருப்பி நேசிக்கும்படி கட்டாயப்படுத்துகிறது. ஒருவருக்கு உதவிசெய்வது வன்முறை, ஏனென்றால் அவர் நன்றியுடன் இருக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்

விவசாயம் வன்முறை. பொருளுக்கு விலைபோட்டு விற்பதும் வாங்குவதும்கூட வன்முறைதான். ஏனென்றால் அந்தப் பொருளை அந்தவிலைக்குள் அடக்குகிறோம் இல்லையா? சாப்பிடுவதும் வன்முறை. வாழ்வதே வன்முறை. இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்.

அதன் அடுத்தபடி, ஆகவே வன்முறை தப்பில்லை. அது எங்கும் இருக்கிறது. தயங்காமல் அதைச் செய்யலாம் என்பதுதான். அறிவைக் கொண்டு அறியாமையை நெய்வது மிக எளிது.

காந்தி சொன்னதும் செய்ததும் இந்தவகை வெற்று மூளையோட்டல்கள் வழியாகப் பெற்றவற்றை அல்ல. நடைமுறை யதார்த்தங்களில் நேரடியாகப் பங்குபெற்று, அதிலிருந்து பெற்ற அறிதல்களைக் கொள்கைகளாக ஆக்கி, உலகளாவிய தளத்தில் போட்டுப் பார்த்து, மானுட உண்மைகளாக முன்வைத்தவர் அவர்.

உலகியல் நலன்களுக்காகவும், அகங்காரத்துக்காகவும் ஒருவரை ஒருவர் கொன்றழிப்பது மானுடனின் இயல்பு. அந்த இயல்புக்கு எதிரான வளர்ச்சியையே நாம் பண்பாடு என்கிறோம். அந்தப் பண்பாட்டின் அடிப்படை விதி என்பது அந்த வன்முறையைக் கட்டுப்படுத்துவதுதான். இனக்குழுக்கள் தங்களுக்குள் வன்முறையை வரைமுறைப்படுத்திக் கொண்டன. சமூகங்கள் தங்களுக்குள் வன்முறையைக் கட்டுப்படுத்திக் கொண்டன.

அதற்காகவே அறம். ஒழுக்கம், நீதி என்றெல்லாம் கருத்துநிலைகள் உருவாக்கிக் கொள்ளப்பட்டன. அந்தப் பரிணாமத்தையே நாம் வரலாற்றில் மானுடத்தின் வளர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன் ஓர் உச்சநிலை, ஓர் இலட்சியநிலை, தான் முழுமையான அகிம்சை என்பது.

அகிம்சை என்பது என்ன என்று அதை முன்வைப்பவர்கள் வரையறை செய்திருக்கிறார்கள். அந்த வரையறையைக் கொண்டே நாம் அதைப் பற்றி விவாதிக்க வேண்டும். நாமே சொந்தமாக ஒரு வரையறையை அளித்துக் கொண்டு அவர்களை மறுத்துப் பேச ஆரம்பிப்பது எவ்வகையிலும் தர்க்கமுறை அல்ல

அகிம்சை என்ற சொல் சமண – பௌத்த மதங்களால் வரையறை செய்து முன்வைக்கப்பட்டது. ஐந்து மாவிரதங்கள் என பௌத்தமும் சமணமும் சொல்லும் நெறிகளில் முதன்மையானது அகிம்சை. [அகிம்சை, சத்தியம், அஸ்தேயம், பிரம்மசரியம், அபரிகிரககம்] அதற்கு முன்பே இந்திய சிந்தனை மரபில் இருந்த அகிம்சை என்ற கோட்பாட்டுக்குத் திட்டவட்டமான வடிவத்தை இந்த மதங்கள் அளித்தன.

அந்த வரையறை என்பது ‘தன் சுயநலனுக்காகப் பிற உயிர்கள் மீது எவ்வகையிலும் வன்முறையைச் செய்யலாகாது’ என்பதே. அது முழுக்க முழுக்கப் புறவயமான உடல்சார்ந்த வன்முறை மட்டும்தான். அதுதான் வெளிப்படையானது.

புறவுலகில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளில் முதன்மையானதாகவே அகிம்சை பௌத்த-சமண மரபுகளில் சொல்லப்பட்டிருக்கிறது. எந்த வகையிலும் அகவயமாக அது விளக்கப்படவில்லை. அது ஒன்றும் அதி நுட்பமான ஆன்மீகக் கருத்துநிலையும் அல்ல. உள வன்முறை, சுய வன்முறை போன்றவை எல்லாம் ஒப்புநோக்கி அளக்க வேண்டியவை. வெறும் கருத்துக்கள் அல்லது உணர்வுகள் அவை. உடல்வன்முறை என்பது நேரடியானது அப்பட்டமானது.

அகிம்சை என்பதன் பொருள் சக உயிர்கள் மீதான உடல்சார் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும் என்பதுதான். அது மிக எளிய நேரடியான அறிவுறுத்தல். ஒருவேளை மனிதகுலம் தோன்றியபின் உருவான முதல் அறமே அதுவாக இருக்கலாம். அந்த அறமே பிற அறங்களை உருவாக்கியது. ஆகவேதான் ஐந்துநெறிகளில் அது முதலில் இருக்கிறது

திருடாதே என்பதைப் போன்ற ஒன்றுதான் அது. ‘நெற்கதிரில் இருந்து நெல்லை எடுப்பதும் திருட்டுதான். பாலைக் கறப்பது திருட்டுதான். ஆகவே திருடாமல் வாழ மனிதனால் முடியாது. ஆகவே திருடுவது மனித இயல்பு.’ என்றெல்லாம் தத்துவப்படுத்த முயல வேண்டியதில்லை.

சக உயிர்கள் மீதான உடல்சார் வன்முறையைத் தவிர்ப்பது என்பது பார்க்க மிக எளிதாக இருந்தாலும் அது அடிப்படை உயிரியல்புடன் சம்பந்தப்பட்டதாகையால் கடைப்பிடிக்க மிகமிகக் கடினமானது. ஆனால் ஆன்மீகப் பயணத்துக்கு அது ஒரு தொடக்கம்.

ஆகவே அகிம்சையைக் கடைப்பிடிக்கப் பல்வேறு நடைமுறை வழிகள் உருவாக்கப்பட்டன. அதில் முக்கியமானது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வது. சக உயிர்மீதான வன்முறையை நம்மில் உருவாக்குவது நம்முடைய புலனின்ப நாட்டமும் அகங்காரமும்தான். அவ்விரண்டையும் உறுதியாகக் கட்டுக்குள் வைத்திருப்பது நம்மை வன்முறையற்றவர்களாக ஆக்குகிறது. விரதங்கள், தவங்கள் முதலியவை அந்த அடிப்படை இச்சைகளை ஒடுக்குவதற்கான முறைகளாக உருவாக்கப்பட்டன பௌத்த சமண மதங்களில் அவை மிகமிக முக்கியமானவை.

தன் அடிப்படை இச்சைகள் மேல் கட்டுப்பாடில்லாத எவரும் வன்முறையாளர்களாகவே நீடிக்கமுடியும். இங்கே சுயவன்முறை என சுட்டப்படும் அனைத்துமே பிறர்மீதான வன்முறையைத் தவிர்ப்பதற்காக கடைப்பிடிக்கப்படுபவை. என்னை நான் ஒடுக்குவது பிறரை ஒடுக்கவிழையும் என்னுடைய அடிப்படை இச்சைகளுக்கு எதிரான போராட்டமாகவே. என் வலியை நான் உணர்கையில் இன்னொரு உயிரின் வலியை உணர்கிறேன். என்னுடைய இச்சைகளை நான் அவதானிக்கையில் பிறருடைய இச்சைகளின் மூர்க்கத்தைப் புரிந்துகொள்கிறேன்.

ஒருவகை சுயவதை மனநிலை இல்லாமல் ஒருவர் தன்னைப் புரிந்துகொள்ள முடியாது. தன் ருசியையும், பசியையும் அறிவதற்கு ஒருவர் அவற்றுடன் போராடியே ஆகவேண்டும். மூர்க்கமாகத் தன் அகங்காரத்தைக் கிழித்துக் கிழித்து உள்ளே செல்லாமல் ஒருவர் தன் அந்தரங்கத்தை அறிய முடியாது. தன்னையறிதல் என்பதே நமக்குநாமே இழைக்கும் சுயவதைதான். ஏதேனும் ஒரு வாழ்க்கைத் தருணத்தில் நீங்கள் உங்களுக்கு எதிரான ஓர் உண்மையை உணர்ந்து கொண்ட அனுபவமிருக்குமென்றால் நான் சொல்வது புரியும்.

நம் ஞானிகள் அனைவரும் அத்தகைய ஆயிரக்கணக்கான சுயவதைகள் வழியாகத் தங்களை அறிந்தவர்களே. அதை வெறுமே சுயவன்முறை, அதுவும் வன்முறையும் ஒன்றுதான் என்றெல்லாம் சொல்லி நிராகரிப்பதென்பது என்னைப் பிறரை ஒடுக்குபவனாக ஆக்குவதற்கு மட்டுமே வழிவகுக்கும் என்று நான் உணர்கிறேன்.

இந்தியப்பெருநிலம் மாறுபட்ட இனங்கள், மொழிகள், மதங்கள், ஆசாரங்கள் கொண்ட மக்களால் ஆனது. இங்கே வன்முறை என்பது தீபோல பரந்து அனைத்தையும் அழிப்பதாக ஆகிவிடும். வன்முறை மறுப்பில் இருந்தே இந்தியாவில் நாம் எதைப்பற்றியும் யோசிக்கமுடியும். நாம் இன்று காணும் இந்தியப் பண்பாடென்பதே சமண பௌத்த மதங்கள் ஈராயிரம் வருடங்களுக்கு முன்னால் கொண்டுவந்த அகிம்சைக் கொள்கையால் மெல்ல மெல்ல மோதல்கள் தணிவிக்கப்பட்டு, உரையாடல்களும் சமரங்களும் நிகழ்ந்து உருவாகி வந்ததுதான்.

காந்தி இந்திய அரசியலில் அந்த நெடுங்கால வரலாற்றின் சாராம்சத்தை மீண்டும் கொண்டுவந்தார். அகிம்சை என்றபேரில் அவர் சொன்னது மோதல்களைத் தவிர்ப்பதையும், சமரசத்தையும்தான். அதுவே இந்தியாவிற்குரிய பாதை. வன்முறைக்கு எதிராக மனிதகுலம் நகர்ந்து சென்றடைய வேண்டிய இடம் அது. அனைத்து மனிதர்களும் சமமான உரிமைகளுடன் வாழ்வதற்கான வழியும் அதுவே.

காந்தி அகிம்சை என்று சொன்னது எந்த அர்த்தத்தில் சமணமும் பௌத்தமும் சொல்லினவோ அதே அர்த்தத்தில்தான். அது சுய ஒழுக்கத்தின் முதல்படி. பிறர்மீதான வன்முறையைத் தவிர்த்தல். அதற்கான வழி தன்னை அறிதலும் கட்டுப்படுத்திக் கொள்ளலும். பிறர்பொருட்டுத் தான் வலியை ஏற்றுக்கொள்ளலே அகிம்சையின் உன்னத நிலை. பிறர்மீதான வன்முறையைத் தவிர்ப்பதற்கான இன்றியமையாத வலி தன்னை வருத்திக் கொள்ளல். தன்னை வருத்திக் கொள்ளாதவன் பிறர்மீது வன்முறையை ஏவாமலிருக்க முடியாது.

கடைசியாக, கீதையை ஒருவர் உண்மையான அக்கறையுடன் பயின்றால் கீதை சொல்வதும் அதே அகிம்சையைத்தான் என்று உணர முடியும். அன்றாட லௌகீகத் தளத்தில் அது போரையும் அதன்விளைவான லாபங்களையும் விதந்தோதியபடி ஆரம்பிக்கிறது. அதற்கடுத்த படிகள் வழியாக வன்முறையை நிராகரித்து அகிம்சையை முன்வைக்கிறது. பரிபூர்ண வன்முறையின்மையே கீதையின் செய்தி. கீதை அதன் யோகாத்மமுறை- முரணியக்கமுறை- வழியாக முன்வைப்பது அதுதான்.

பக்கத்து வீட்டுக்காரனை செருப்பால் அடிக்காமலிருந்தால் என் மனம் வருந்துகிறது. அது சுயவன்முறை. அடித்தால் அது புறவன்முறை. இரண்டும் சமம்தான். ஆகவே அடிப்பதே மேல்’ என்றவகையான உளவியல் அணுகுமுறைகள் இந்திய ஞானமரபில் உருவாகி வந்தததற்கு முன்னரே காந்தியும் அம்பேத்கரும் நாராயணகுருவும் வள்ளலாரும் மரணமடைந்தது நல்ல விஷயம். வேறென்ன சொல்ல?

ஜெ

முந்தைய கட்டுரைஇந்துஞானமரபில் ஆறுதரிசனங்கள் -கடிதம்
அடுத்த கட்டுரைபிழை [சிறுகதை] 1