கடன்:கடிதங்கள்

இந்த டெலிபோன்ல கடன் குடுக்கறவங்க தொந்தரவு பெருந்தொந்தரவுங்க.. இப்பிடித்தேன் டெல்லியில இருக்கையில ஒரு நாளு, ஒரு புள்ள போன்ல, இந்த மாதரிங்க, உங்குளுக்கு எங்க பேங்க்ல இருந்து ஒரு கார்டு குடுக்க முடிவு பண்டியிருக்கறம்னாங்க.. அந்த புள்ள கொரலு நல்லாயிருக்கங்காட்டி, நானும் யதார்த்தமா என்ன கார்டு அம்மிணி கேட்டுட்டனுங்க..   அந்தப் புள்ள அப்படியே ஒரு 15 நிமிசம் புடிச்சிகிச்சுங்க.. நம்பளுக்கெல்லாம் ரெண்டு நிமிசத்துக்கு மேல யாராச்சும் பேசனாலே கண்ணக் கட்டிருங்க.. மூள சுச்ச ஆஃப் பண்ணிருவனுங்க .. என்ன பேசிச்சினே தெரிலீங்க. ஆனா குளு குளுன்னு இருந்திச்சிங்க..

 அப்ப மா, அந்தப் புள்ள மனசு நோவுமேன்னு, அது சொன்ன கார்ட வாங்கிட்டனுங்க.. சொல்றப்ப கார்டுக்கு சார்ஜெல்லாம் இல்லின்னு சொல்லிச்சிங்க.. அப்பறமா பாத்தா, நாலாயிர ரூவா சார்ஜ் போட்டிருந்துதுங்க. எனக்குக் கெட்ட கோபம் வந்திச்சிங்க. ஒடனெ போன போட்டனுங்க.. பாத்தா எங்கிட்ட பேசுன புள்ள அங்கில்லீங்.. கம்ப்யூட்டருதான் பேசுச்சுங்க.. அந்த பட்டன அமுத்து.. இந்தப் பட்டன அமுத்துன்னு ஒரே ரவுஸுங்க.. நெம்ப நேரங்கழிச்சு ஒரு பையன் லைன்ல வந்தானுங்க.. ஏண்டா.. என்ன கொழுப்பிருந்தா இந்த மாறி கேப்மாரித்தனம் பண்ணுவீங்கன்னு கேட்டனுங். மன்னிச்சுக்கங்கண்ணானுட்டு, மறுபடியி போன கம்ப்யூட்டருகிட்ட குடுத்துப் போட்டு ஓடிப் போயிட் டானுங்க.. நானுங் கொஞ்ச நேரம், அந்த பாழாப் போன கம்ப்யூட்டரு கோட மல்லாடுனுங்க..  அதுக்கப்புறம் இன்னொரு புள்ள லைன்ல வந்துதுங்க.. அந்தப் புள்ளகிட்ட எல்லாத்தியிம் சொல்லீட்டு, இப்புடீல்லாம் கேப்மாறித்தனம் பண்ற மாறி இருந்தா எனக்குக் கார்டும் வேணாம் ஒரு மயிரும் வேணாம்னு கோவமாச் சொல்லிப் போட்டனுங்க.. ந்தப் புள்ளையும் மன்னிச்சுக்கங்கண்ணா.. யாரோ தெரியாம பண்ணிட்டாங்க.. நா வேணா அந்த கார்டு சார்ஜு இல்லாம பண்ணிர்றென்னு சொல்லிச்சிங்க.. இருந்தாலும் எனக்குப் புடிக்கிலீங்க.. இல்லம்மிணி.. நீங்க பேசறதப் பாத்தா நெம்ப நல்லவிங்களாட்டமா ருக்குது.. இருந்தாலும் அந்தப் புள்ள செஞ்சது சரில்லீங்கண்ணு சொல்லிப் போட்டு, நீங்க கார்ட கேன்சல் பண்ணீடுங்கன்னு கராறா சொல்லிப் போட்டனுங்க.. துக்கு அந்தப் புள்ள அய்யிய்யோ அத நாம் பண்ண முடியாதுங்க .. நீங்க கார்ட நாலா ஒடச்சு எங்க பேங்கு ஆபிசுக்கு அனுப்பீருங்கன்னு சொல்லிட்டு போன வச்சிரிச்சிங்க..

நானும் அந்தக் கார்ட ஒடச்சு பேங்குக்கு அனுப்பீட்டு வேலயப் பாக்கப் போயிட்டனுங்க.. ஒரு மாசம் கழிச்சுப் பாத்தா மறுபடியிம் பேங்குல இருந்து பில்லு வருதுங்.. ஒரு படத்துல நம்ம கவுண்டமணி சொல்வாருங்குல்ல டேய் . என்னக் கொலகாரனாக்காதீங்கடான்னு, எனக்கு அந்த மாறி கோவம் ந்துதுங்க .. எனக்கு நெம்பக் கோவம் வந்துதுன்னா அழுது போடுவனுங்க.. அப்பறமா என்றா பண்துன்னு முழிச்சனுங்க.. அப்ப
ங்கோ வேல செய்யிர பையன் சொன்னானுங்க .. ஒரு வக்கீலு நோட்டிஸு அனுப்பிப் போடு சரியாப் போயிரும்னு..

 

நானும் ஒரு வக்கீ தேடிப் புடிச்சு, அவுருக்கு ஐநூறு ரூவா பீஸ் குடுத்து, ஒரு நோட்டிஸ் அனுப்புனங்க.. அதுக்கப்புறமேட்டி அவிங்க தொந்தரவு நின்னு போச்சிங்க.. இருந்தாலும், ஒரு புள்ள பேசுறது குளு குளுண்ணு இருக்குதுன்னு கேட்டதுக்கு ஐநூறு ரூவா தெண்டம் கட்டிட்டமேன்னு எனக்கு மனசுக்கு நெம்ப கஸ்டமாப் போச்சிங்க.. துல இருந்து, போன்ல இப்பிடி யாராச்சிம் கூப்புட்டாங்கன்னா, மன்னிச்சிக்கங்க அம்மிணி, உங்க சகவாசமே வேணாம்னு போன வச்சிர்றதுங்க.. அதுக்கு காசக் குடுத்துட்டு வேறெங்கியிம்ணாச்சி போலாங்க.. என்னங்க நாஞ்சொல்றது???

அன்புடன்

பாலா

வணக்கம் குரு.,
   இப்ப உங்களுக்கு பாத்தீங்கன்னாக்க!!! மீசையிலியாகவும், நிர்மீசையாகவும், அ-மீசையாகவும்… நீங்கள் மீசையை துறந்த பிறகு உங்களால் இலக்கியத்திற்க்கு அளிக்கப்பட்ட  கலைச்சொற்கள் தான் இம்மூன்றும் எனபடுகிறது!!?
     என்ன இருந்தாலும் “மக்கு கணவன்”களை அதிகம் கிண்டல் செய்து அவர்களின் மானசீகமான வசைக்கு நீங்கள் பலியாவதாகபடுகிறது!! வாரமொருமுறை உங்கள் நகைச்சுவை கட்டுரை வாசித்த பிறகு அந்த வாரம் முழுவதும் அதை பற்றி (சிந்திக்க?) சிரிக்க வைத்துவிடுகிறது! பாகுபாடில்லாமல் அனைத்து தரப்பையும் கிண்டல் செய்யும் பணி தொடரவேண்டுமென்பதே எங்களின் ஆவல்..:-)
பணிவன்புடன்
மகிழவன்.
அன்புள்ள ஜெ
நிர்மீசைகள் செய்யும் அட்டகாசம் கொஞ்சமில்லை. என்ன ஒரு தளுக்கு . நமக்காகவே உயிர்வாழ்கிறார்கள் என்று நம்பவைக்கிறார்கள். அதெல்லாம் லோன் கையில் கிடைக்கும்வரைத்தான். அதன்பிறகு அவர்கள் ஆளே மாறிவிடுகிறார்கள். ஒன்றுமே கேட்க முடியாது. எல்லாம் ரூல்ஸ்  என்று சொல்லிவிடுவார்கள். லோன் விசயத்தில் நீங்கள் சில முக்கியமான கருத்துக்களை எழுதவில்லை. அனுபவம் கம்மி. அஞ்சுலட்சம் லோன் வாங்கி விட்டு பத்துவருசம் இன்ஸ்லால்மெண்ட் அடைத்த பிறகு என்ன மிச்சமிருக்கிறது என்று பார்த்தால் பத்துலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் என்பார்கள். எத்தனை கட்டினாலும் கடன் அப்படியேதான் இருக்கும். அது கடலில் போட்டாலும் கரையாத சிவலிங்கம் மாதிரி. அதேபோல இன்னொரு விசயம் லோனுக்கு தவணையை கட்டவில்லை என்றால் விடுதேடி வருபவர்களின் ஜபர்தஸ்து. அடிக்காத குறை. வண்டி இருந்தால் எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். அவர்களைப்பற்றி எங்கேயும் கம்ளெயிண்ட் செய்ய முடியாது. ஏனென்றால் அவர்களுக்கும் வண்டிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அவர்கள் வந்து நம்மை மிரட்டுகிறார்களே அவர்கள் செய்யும் அந்த வெலைக்கான சம்பளத்தையும் நாமேதான் கொடுக்க வேண்டும். அதை நம் தவணையுடன் சேர்த்து பிடித்துக் கொள்வார்கள். இந்தக்கொடுமையை கேட்க நாட்டிலே நாதி இல்லை
ஸ்ரீனிவாசன்
சென்னை
அன்பு ஜெ
நீங்கள் லோன் பற்றிய கட்டுரை உண்மையான நிகழ்ச்சி. லோன் எடுத்தால் அதன்பின் என்னென்னமோ வேடிக்கைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். முக்கியமாக நாம் ஒருமுறை செல்லும்போது நமக்கு பேசி உறுதிமொழியெல்லாம் கொடுத்து அனுப்பும் அதிகாரிகளும் ஊழியர்களும் எவருமே மறுமுறை போனால் இருக்க மாட்டார்கள்.  இந்திரன் மாறிக்கொண்டே இருப்பான் என்றும் இந்திராணி மட்டுமே அப்படியே இருப்பான்  என்றும் சொல்வார்களே அதே போல. லோன் மட்டும் அப்படியே  இருக்கும். இப்போது என்ன பிரச்சினை என்றால் மொத்த கடனையெ அப்படியே கைமாற்றி விடுகிறார்கள். நாம் கடன் வாங்கின கம்பெனி ஒன்று, கடனை அடைக்க வேண்டிய கம்பெனி மாறிக்கொண்டே இருக்கும். இதிலே இப்போதுள்ள இன்னொரு பிரச்சினை லேபிள்கள். நோ இண்டிரெஸ்ட் ஸ்கீம் என்று நக்கலாக எழுதியிருந்தீர்கள். அது நக்கலே இல்லை. அதேபேரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் ஸ்கீம்கள் இரண்டு பேங்குகளில் இருக்கின்றன
அன்பு பரமசிவம்
ஜெமோ,
 
கடன்;  எல்லா வரியிலும் வேதனையும் நகைச்சுவையும்  இழைந்த்தோடச் சொன்ன உங்கள் கட்டுரையை படித்து முடித்தும் பல முறை ரசித்தேன்.

இதுக்கு அமெரிக்கால ஆடோமொபய்லு இன்டஸ்டிரி  எப்படி இருக்கு தெரியும்ல… ன்னு சம்பந்தம் இல்லாம எதாவது கண்டன கட்டுரை வராம இருக்கனுஞ் சாமி..
 
அது சரி ஜெமோ, நம்மூர்ல இன்னொரு காமெடி நடக்கு தெரியுமா இப்ப..
நான் போன தடவ வீட்டுக்கு போயிருந்தப்ப(சுசீநதிரம்)  , அம்மா வோட மொபைலுக்கு ஒரு கால்.. “ஹல்லோ நீங்க சதானந்தனா…?”
“இல்ல, அது எங்க அப்பா” …
“சார் உங்க அப்பாட்ட குடுங்க.. நாங்க கம்பெனில இருந்து பேசறோம் (சத்தியமா இப்படி தான் ச்சொன்னா.. என்ன எளவு கம்பெனியோ ..).”
“என்னயி..? புரியல…”
“சார் உங்க அப்பா அம்மா வ பெஸ்ட் ஜோடியா செலக்ட் பண்ணிருக்கோம் (வெளங்கிரும் நானும் எங்க அம்மா வும் அப்பா கிட்ட இருந்து தனியா பிரிஞ்சு வந்து 8 வர்ஷம் ஆச்சு  ) ” …
“அதெப்படிங்க செலக்ட் பண்னீங்க.. ?”
“குலுக்கல் முறையில.. ” (அதானே, அப்படி தான் பெஸ்ட் ஜோடிய இந்த காலத்துல செலக்ட் பண்ண முடியும்னு நெனைக்கேன்..)
“ஓ… அயிக்கு..?”
“அவங்க எங்க கம்பனிக்கு வந்தா, ஒரு கிப்டு குடுபோங்க…”

அயிக்கப்புறம் என்ன.. அறுத்து கிழிப்பு தான்.. நான் கொடுத்த கொடயில… அவங்க பெரிய ஆப்பிசர் (??!!!) வாங்கி.. “கம்பெனில இருந்து பேசும் பொது இந்த மேரி லாம் பேச கூடாலியா..” ன்னு கடைசி வர கம்பெனி பேர சொல்லவே இல்ல..

இது பெரிய மோசடி ஜெமோ! இது வர சென்னைல தான் இந்த மாதிரி “கம்பெனி” எல்லாம் இருந்தது.. இப்ப சின்ன கிராமங்களுக்கும் வலைய விரிக்க ஆரம்பிச்டாங்க. சென்னைல இந்த மாதிரி ‘சோசியல் க்ளப்’ , ‘டூரிஸ்ட்  க்ளப்’, ‘கார்பரேட்  க்ளப்’ ன்னு நிறைய இருக்குது. பெஸ்ட் கபிள், லக்கி நம்பர் ன்னு போன் பண்ணி, ஒரு சொப்பு டப்பா  (நிஜமாவே சொப்பு டப்பா வாங்கின கதை எல்லாம் எனக்கு தெரியும்), இல்ல டிபின் பாக்ஸ் பரிசா கொடுத்த அப்புறம் ஆரம்பிக்கும் 2 மணி நேர மூளைச்சலவை. (இதுக்காவே 1 மாதம் பயிற்ச்சி நடக்குது வேலை செய்றவங்களுக்கு). அதுக்கப்புறம் எப்படியும் உங்கள வாழ்நாள் சந்தாதாரர் ஆக்கிடுவாங்க. வெறும் 7000 ருபாய் கொடுத்து நீங்க சேர்ந்த்துட்டா  போதும். வருஷம் ஒரு முறை வெளிநாட்டு பயணம், சென்னையில்  உள்ள அவங்க க்ளப் க்கு இலவச அனுமதி எல்லாம் உண்டு.   
அங்க உள்ள போன அப்புறம் தான் ஒவ்வொன்னயும் தொடறதுக்கு 5000 ரூபாய்னு புரியும். இவங்கள நல்லவன்னு நம்ப்பி வெளி நாடு மட்டும் போய்டீங்க…அப்புறம் நீங்களே யோசிச்சுக்குங்க..
 
நம்ம ஊரு மாதிரி சின்ன சின்ன ஊருகள்ள ‘சீட்டு’, ‘மீட்டர் வட்டி’ மாதிரி வீடையே முழுங்கற சவம் எல்லாம் ‘சுய உதவி குழு’ மூலமா அழிஞ்சி்ட்டு வருதேன்னு சந்தோஷ பட்ட சமயத்துல இது மாதிரி நடக்குது..

இருக்ரவனுகிட்ட அடிங்கடா…

கேரளாவுல ஒன்னு சொல்லுவாங்க, ‘இல நக்கி பட்டிட செரி நக்கி பட்டி’ னு..

அன்புடன்,
ஆனந்த்

முந்தைய கட்டுரைகிளி சொன்ன கதை : 4
அடுத்த கட்டுரைவாக்களிக்கும் பூமி 4, அறிவியலரங்கம்