கேள்வி பதில் – 03

தங்களுக்கு எழுத்துத்துறையில் ஈடுபடக்கூடிய அந்த நம்பிக்கையைத் தந்ததின் பின்னணியில், ஏதாவது சம்பவம் அல்லது கட்டுரை போன்ற ஏதாவது அன்றி யாரவது ஒருவரின் உந்துசக்தி இருந்திருந்தால் அதைப்பற்றி எம்முடன் பகிர்ந்து கொள்வீர்களா?

— சத்தி சக்திதாசன்.

என் எழுத்தார்வத்தின் மூலசக்தி என் அம்மா கெ.பி.விசாலாட்சி அம்மா [கெ–காளிவளாகம். தரவாட்டுப் பெயர். பி-பத்மாவதி அம்மா. பாட்டியின் பெயர். கேரளத்தில் முதலெழுத்தில் அப்பா வரும் மரபு அக்காலத்தில் இல்லை.] மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர் அம்மா. அவரது அண்ணா கெ.பி.கேசவபிள்ளை பழைய கம்யூனிஸ்டு தொண்டர். பிற்பாடு ஆரியநாடு கேசவபிள்ளை என்ற பேரில் புகழ்பெற்றார் [வலது கம்யூனிஸ்டு]. அம்மா இறுதிவரை கம்யூனிஸ்டு. ஆனால் கட்சி உடைந்தது அவரால் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்தது. இ.எம்.எஸ், எம்.என்.கோவிந்தன் நாயர், தோப்பில் ஃபாசி ஆகியோரின் தலைமறைவு வாழ்க்கை எங்கள் அம்மாவின் குடும்ப வீடுகளில் நிகழ்ந்தது. அம்மா அப்போது சிறுபெண். அக்கால உத்வேகத்தால் ஈர்க்கப்பட்டு மலையாளம், தமிழ், ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் ஏராளமாக வாசித்தார். மங்களோதயத்தில் [மலையாளம்] மூன்று கதைகள், கலைமகளில் ஒருகதை எழுதினார். பிடித்த எழுத்தாளர்கள் வைக்கம் முகமது பஷீர், எஸ்.கெ.பொற்றேக்காட், தாக்கரே, எமிலி புரோண்டி, கடைசி காலத்தில் ஹெமிங்வே. தமிழில் ஜெயகாந்தனை ஓரளவு பிடிக்கும். தி.ஜானகிராமனை அம்மா பொருட்படுத்தவில்லை. [‘சரஸ்வதிதேவிக்கு லவ் லெட்டர் எழுதும் விடலைப்பையன்’ என்று ஒரு கடிதத்தில் எழுதினார்.] அப்போது புதுமைப்பித்தன் மௌனி எல்லாம் பரவலாகத் தெரியவராத காலம். ஆகவே அவர் அவர்களைக் கேள்விப்பட்டிருக்கவில்லை. எங்கள் வீட்டில் 5000 நூல்கள் உள்ள நல்ல நூலகம் இருந்தது.

நான் எழுத்தாளர் ஆகவேண்டும் என்பது அம்மாவின் ஆசை. என் சிறுவயது முதல் எனக்கு வேறு ஓர் இலக்கு இருந்ததே இல்லை. இரண்டாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் ‘பெரிதாக வளர்ந்தால் எழுத்தாளர் ஆவேன்’ என்றேன். [ஒரு பையன் சுண்ணாம்புக் காளவாய் வைப்பேன் என்று சொன்னது நினைவுக்கு வருகிறது] மதுரம் டீச்சர் ஆச்சரியப்பட்டு என்னை குறுக்குவிசாரணை செய்து வீடு தேடிவந்து அம்மாவின் தோழி ஆனார்கள். 1991ல் ‘ரப்பர்’ வந்தபோது எனக்கு டீச்சர் நீண்ட கடிதம் எழுதியிருந்தார். நான் பிற்காலத்தில் பல பெண் அறிஞர்களைச் சந்தித்திருக்கிறேன். அம்மாவுக்கு சமானமாக குர் அதுல் ஐன் ஹைதர் [உருது], மாதவிக்குட்டி [மலையாளம்] இருவரையுமே சொல்லமுடியும். அம்மா ஒரு மேதை, அதில் ஐயமே இல்லை. அம்மாவுடன் எனக்கிருந்த உறவு ஒருவகை நரம்புநோய் போல அவ்வளவு தீவிரம். நான் ஊரில் இல்லாதிருந்த நாள்களில் தினமும் எனக்குக் கடிதம் எழுதுவார்கள். பல கடிதங்கள் இன்றைய பெண்ணிய ஆய்வுகளைவிட ஆழமான இலக்கிய ஆய்வுகள். இன்று நான் ஒரு துண்டுகூட கைவசம் வைத்திருக்கவில்லை என்பதை மீண்டும் மீண்டும் எண்ணி வருந்துகிறேன். அம்மாவிடமிருந்து ‘தப்ப’ வேண்டும் என்ற எண்ணமே ஒருவேளை என்னை அலைய வைத்திருக்கலாம். அம்மா, அப்பாவின் மூர்க்கமான அன்பினாலும் ஆணாதிக்க வெறியாலும் அழிக்கப்பட்டது ஒரு பெரும் கொடுமை. இந்திய வரலாற்றில் ஆயிரம் வருடங்களில் அப்படி அழிக்கப்பட்ட பல்லாயிரம் மேதைகளில் ஒருவர் அம்மா. அம்மாவின் கதையை எழுதுவதை இருபது வருடக் கனவாக வைத்திருக்கிறேன். ‘அசோகவனம்’.

எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. சைக்கிள் படிக்க நான் ஆர்வத்துடன் முயன்ற அன்று அம்மா என்னிடம் சொன்னாள், “எழுத்தாளர்களுக்கு இயந்திரங்கள் மீது ஆர்வம் வரக்கூடாது” என. அப்போது நான் ஒருவரிகூட எழுதவில்லை. ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். என் எழுத்து அம்மாவின் விதை முளைத்ததுதான். இது அம்மாவுக்கு நான் செய்யும் ஓயாத அஞ்சலி.

அம்மாவின் தற்கொலையினால் நிலைகுலந்து உள்ளும் புறமும் அலைச்சலில் இருந்த என்னை இலக்கியத்துக்குள் மீட்டவர் சுந்தர ராமசாமி. சமரசமற்றவனாக நாம் நம்மை அந்தரங்கமாக உணரும்போது ஏற்படும் கர்வத்தைப் போல சுகமானதாக ஏதும் இல்லை என்று அவரிடமிருந்து கற்றேன். அவரிடம் நான் கண்ட குறைகள் அனைத்தையும் மீறி அவரது ஆளுமை என் மனதில் ஒளிவிட்டபடியேதான் இருக்கிறது. மனிதர்கள் ஆறுகள் போல. நுரைபொங்கப் பெருவெள்ளம் போகும் காலமும் உண்டு, மணல்வெளுத்து விரியும் காலமும் உண்டு. ஆயினும் சுந்தர ராமசாமி தமிழ் வரலாற்றின் சுடர்களில் ஒன்று. அவரது பிற்காலச் சிறு சரிவுகளில் பெரும்பாலானவை தன் குழந்தைகள்மீது தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட பெரும்பாசம் கொண்ட இந்தியத் தந்தை அவர் என்பதிலிருந்து முளைத்தவையே. ஒரு கோணத்தில் அவையும் அவரது மகத்துவத்தின் அடையாளங்களேயாகும்.

இலக்கியத்துக்கும் வாழ்வுக்குமான நுட்பமான சமநிலையை எனக்குக் கற்பித்தவர் மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா. சமநிலைக்குலைவிலிருந்தே கலை உருவாகிறது. ஆனால் அன்றாட சமநிலைக் குலைவல்ல, ஆழமான ஆன்மீகச் சமநிலைக்குலைவே மேலான கலையை உருவாக்கும் என எனக்கு அவர் தன் வாழ்வு மூலம் கற்பித்தார். இசை, செவ்வியல்கலைகள், திருவிழாக்கள், அரசியல்போராட்டங்கள், இலக்கியம், உணவு, குழந்தைகள், ஓயாத பயணம், தத்துவம் என ஒவ்வொரு தளத்திலும் சரியான சமநிலையுடன் அவர் வாழும் வாழ்வு பெரும் முன்னுதாரணம்.

முதுமையில் பேரிலக்கியவாதிகளிடம்கூட அற்பத்தனமும் கர்வமும் நிறைவதை சி.சு.செல்லப்பாவிடமும் கேரளச் சிந்தனையாளர் எம்.கோவிந்தனிடமும் கண்டு, இலக்கியம் எங்கே கொண்டு செல்லும் என்ற ஆழமான பதற்றம் அடைந்த காலகட்டத்தில் நான் நித்ய சைதன்ய யதியைக் கண்டடைந்தேன். அன்று பிறந்த குழந்தைபோல ஒரு மனிதர் ஒவ்வொருநாளும் விழித்தெழுவதைக் கண்டேன். சென்ற காலங்களின் நிழலே இல்லாத கண்களை அவரிடம் மட்டுமே சுடரக்கண்டேன். என் மூன்றுவயது மகனைவிட அவரிடம் உயிர்த்துடிப்பு ததும்புவதை அறிந்தேன். முதல் மூவரும் எனக்கு இலக்கியத்தின் மேன்மையைக் கற்பித்தார்கள். நித்ய சைதன்ய யதி இலக்கியம் எத்தனைச் சிறிய விஷயம் என்று கற்பித்தார். மனிதர்கள் எவ்வளவுதூரம் போகமுடியும் என்பதற்கு அவர் எனக்கு உதாரணம்.

துள்ளலும் துடிப்பும் நிரம்பிய 19 வயது பெண்ணாக அருண்மொழிநங்கை எனக்கு அறிமுகமானாள். இப்போது 13 வருடங்கள் தாண்டிவிட்டிருக்கின்றன. காதல், தாய்மை என அவள் மனம் விரிவதைக் கண்டு கொண்டிருக்கிறேன். மனிதர்கள் மீது அவளுக்கு உள்ள உண்மையான பிரியம், நுட்பமான இலக்கிய ரசனை, இயற்கைமீதான பற்று ஆகியவை ஒவ்வொரு கணமும் வாழ்க்கை எவ்வளவு பொருள் பொதிந்ததாக உள்ளது என்று எனக்குக் காட்டுகின்றன. என் வாழ்வின் அன்றாட இன்பங்கள் அனைத்துமே அவளிலிருந்து தொடங்குகின்றன. என் இலக்கியம் இந்த ஒளிமிக்க தனிவாழ்விலிருந்து உருவாவது. எதிர்மறைக் குணங்கள் எதையுமே நான் அவளிடம் காணவில்லை என்றாலோ, சந்தித்த முதற்கணம் முதல் இந்நிமிடம் வரை குன்றாத பெருங்காதலே அவள் மீது எனக்குள்ளது என்றாலோ எவரும் நம்பப்போவது இல்லை. அவளைச் சந்திப்பதற்குமுன் ஒரு மனிதர் பிற மனிதரை அப்படி பித்துபிடித்தது போல வருடக்கணக்காக நேசிக்கமுடியும் என நானும் இம்மிகூட நம்பியது இல்லை. காதல் என்பதே மனிதனுள் படைப்பூக்கத்தை நிறைக்கும் பெரும்சக்தி.

எழுதவந்த காலத்தில் இலக்கியத்துக்கும் கருத்தியலுக்கும் இடையே உள்ள உறவை எனக்குத் தெளியவைத்த ஞானி, நவீன இலக்கியத்துக்கும் செவ்விலக்கியத்துக்கும் இடையே உள்ள உறவை புரியவைத்த பி.கெ.பாலகிருஷ்ணன் [மலையாள வரலாற்றாசிரியர்], என்னை தன் இதழ்மூலம் முன்னிலைப்படுத்திய கோமல் சுவாமிநாதன் என நான் அடைந்த ஆசிரியர்கள் பலர்.

ஒரு படைப்பாளியாக நான் மிகச் சாதகமான நிலையில் இருப்பவன். என் படைப்புகளை உள்ளறிந்து வாசித்த ஒருவாசகரின் கடிதமாவது வராமல் ஒருநாள்கூடக் கடந்துபோவது இல்லை. என் பிரசுரகர்த்தர் வசந்தகுமார், என் பிரதிமேம்படுத்துநர் எம்.எஸ் எல்லாருமே தமிழ்ச் சூழலில் ஒருவர் எதிர்பார்க்கச் சாத்தியமே இல்லாத திறனும் தீவிரமும் கொண்டவர்கள். புதுமைப்பித்தன் முதல் சுந்தர ராமசாமி வரை எவருமே தமிழில் என்னளவு சாதகமான சூழலில் எழுதியதில்லை.

பின்னணியில் எவருக்குமே ஒரு சம்பவம் அல்லது ஒரு நபர் இருப்பது இல்லை. ஒர் எழுத்தாளர் ஒரு சூழலின் முக அடையாளம் மட்டுமே.

முந்தைய கட்டுரைகேள்வி பதில் – 02
அடுத்த கட்டுரைகேள்வி பதில் – 04