வரவுப்பெட்டி

புத்தாயிரத்தில் எனக்கு கணிப்பொறி கையில் கிடைத்தது. நான் ஒரு முறைகூட நேரில் சந்தித்திராத அமெரிக்க வாசகர் ஒருவர் வாங்கி அன்பளிப்பாக அளித்தார். கிட்டத்தட்ட அறுபதாயிரம் ரூபாய். அப்போது எனக்கு அது மிகபெரிய தொகை – இப்போது பெரிய தொகை. நண்பர் நீலகண்டன் அரவிந்தன் கணிப்பொறி வாங்க உதவினார். எனக்கான மின்னஞ்சலை அவர்தான் உருவாக்கி அளித்தார். ஆரம்பத்தில் எனக்கு மின்னஞ்சல்களே வரவில்லை. ஆகவே தினமும்  அ.முத்துலிங்கம் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி அவரிடமிருந்து பதிலை பிடுங்கினேன். உற்சாகமாக இருந்தது

பின்பு ·பாரம் ஹப் என்ற  விவாத தளத்தில் நுழைந்து கருத்துக்கள் சொல்ல ஆரம்பித்தேன். அறிமுகம் இல்லாத காரணத்தால் சொந்தப்பேரில் சொந்த மின்னஞ்சலில் எழுதினேன். திண்ணை இணையதளத்திலும் அப்போது ஒரு விவாதக்களம் இருந்தது. அதிலும் எழுதினேன். அவ்வளவுதான் தினமும் என் வரவுப்பெட்டி நிறைய கடிதங்கள். பெரும்பாலும் கண்களை பிதுங்க வைக்கும் வசைகள். நான் எப்போதுமே வசைகள் நடுவே வாழ்ந்தவன். ஆனால் இணையவசைகளை கணேசபுரம் சந்தையில்கூடக் கேட்டதில்லை.

தொடர்ச்சியாக நான் இணையத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன். திண்ணையில் அனேகமாக எல்லா வாரமும் எழுதியிருக்கிறேன். பின்பு ஒரு விஷயத்தைக் கண்டுகொண்டேன் , திண்ணையின் விசித்திரமான ஜனநாயகம் ஒரு விபரீத விளைவை உருவாக்குகிறது. நாம் அதில் ஒரு கட்டுரையை தீவிரமாக எழுதினால் உடனே அதற்கு எதிர்வினையாக பத்து வசைகளையும் அவதூறுகளையும் அதில் அச்சேற்ற வாய்ப்பளிக்கிறோம். நம் கட்டுரையின் முக்கியத்துவம் மூலம் அந்த வசைகளுக்கும் முக்கியத்துவத்தை சம்பாதித்து அளிக்கிறோம். அதற்கு பதில் சொல்லப்போனால் அந்த வசைகளின் எண்ணிக்கையும் முக்கியத்துவமும் அதிகரிக்கும்.

ஆகவே திண்ணையில் எழுதுவதை மட்டுப்படுத்திக் கொண்டேன். ஆயினும் வேறு வழி இல்லை, அதுவே ஒரே மின் ஊடகம்.  என்னைப்பற்றிய மிக மோசமான வசைகள் திண்ணையில் தான் இப்போதும் சாஸ்வதப்படுத்தப் பட்டுள்ளன. மலையாள மனநோயாளி என்ற அடுக்குமொழி அதில் முக்கியமானது.  கருணாநிதி அவர்களைப் பற்றிய விமரிசனம் விவாதமாக ஆனபின் முதல் மின்முகவரியைக் கைவிட்டு விட்டேன். இல்லையேல் ரீடி·ப் காரர்கள் அதை நிறுத்தியிருப்பார்கள்.

வசைகளைத் தவிர்த்தால் தினம் இருபது வாசகர் மின்னஞ்சல்கள் வரை எனக்கு வரும். அவற்றில் பல மின்னஞ்சல்கள் மிகவும் தீவிரமானவை. இணையம் எனக்கு நிறைய வாசகர்களை உருவாக்கித்தந்தது என்றே எண்ணுகிறேன். வெவ்வேறு ஆட்கள் எழுதுவதை நான் எழுதுவது என எண்ணி வரும் வசைகள் தனி. முன்பு இணையத்தில் பிரியதர்சன் என்று ஒருவர் எழுதியிருந்தார். ஜீவா என்று ஒருவர், அவர் இப்போதும் எழுதுகிறார். சூரியா, அவர் இப்போது இயக்குநர். இதைத் தவிர விவாதமேடைகளில் ஜெயமோகன் என்ற பேரில் போய் சிலர் ஏதாவது வம்பாக எழுதிவிட்டுப்போக அதற்கான வசைகள்

இந்த தருணத்தில்தான் நேசகுமார் என்பது நான்தான் என்ற அவதுறு. அதை யமுனா ராஜேந்திரன் உருவாக்கி மெனக்கெட்டு பரப்ப ஆரம்பித்தார். கொலைமிரட்டல். இணையத்தொடர்புகள் கண்காணிக்கப்பட்டன. நான் என் இரண்டாவது மின்முகவரியையும் கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டது.நீலகண்டன் அரவிந்தனும் நானும் ஒருவரே என்று ஒருவர் ஐபி ஆதாரத்தை அனுப்பியிருந்தார். ஆமாம் என்றேன். எச் ஜி ரசூலும் நான் தான் என்றேன். கலக்டர் அலுவலகம் முன்னால் இருக்கும் நெட் கார்னர் நிலையத்தை நடத்துவதும் நானே என்றும். [பலசமயம் பக்கத்து அறையில் ரசூல் இருப்பார். நான் அவரைப்பார்ப்பதே அங்கேதான்]

அப்போதுதான் இந்த மின்முகவரி. இதை நண்பர் ஹரன் பிரசன்னா உருவாக்கி அளித்தார். இந்த இணையதளம் சிறில் அலெக்ஸால் தொடங்கப்பட்டது. எம்.ஜி.ஆர்-சிவாஜி குறித்த கட்டுரைகள் விவாதமாக ஆயின. இதன் வருகையாளர் எண்ணிக்கை பதின்மடங்காகியது. இப்போது என் வரவுப்பெட்டியில் ஒரு நாளுக்கு சாதாரணமாக முந்நூறு மின்னஞ்சல்கள். சிலசமயம் ஐநூறு வரை.

இவற்றில் பல மின்னஞ்சல்களுக்கு அர்த்தமே இல்லை. ஆர்க்குட், ·பேஸ்புக்,டிவிட்டர், நட்பு கோரல் என பலவகையான இணையதளங்களில் உறுப்பினராவதற்கான அழைப்புகள் பலரால் அனுப்பப்பட்டுக்கொண்டே இருக்கும். இவற்றை நான் பார்ப்பதே இல்லை. இவற்ற்றை எந்த நம்பிக்கையில் அனுப்புகிறார்கள் என்றும் தெரியவில்லை.

இன்னொரு வகை மின்னஞ்சல்கள் வழிமொழியப்படுபவை. பொதுவாக துணுக்குகள், பொன்மொழிகள், ஊக்கமூட்டி வாசகங்கள் போன்றவற்றை நான் வாசிப்பதே இல்லை. இவற்றை எனக்கு அனுப்ப வேண்டாம் என்று கோரிக்கொள்கிறேன். இவற்றால் பெரும்பாலும் எந்த பயனும் இல்லை. எனக்கு ஒன்றை அனுப்புவதாக இருந்தால் அது எனக்கு பயன் தரும் என என் எழுத்துக்களை வாசிப்பதன் வழியாக புரிந்துகொண்டே அனுப்ப வேண்டும். யாருக்கு அனுப்புவதானாலும் இதுவே வழிமுறை. சில நண்பர்கள் அபூர்வமான சுட்டிகளையும் படங்களையும் அனுப்புவதுண்டு. அவை உதவிகரமானவை.

இவற்றை அழித்துவிட்டால் வாசிக்க வேண்டியவையாக நூறு முதல் நூற்றைம்பது மின்னஞ்சல்கள் வரை தங்கும். இவற்றில் ஒரு விஷயத்தை வாசித்துவிட்டு மிகச்சுருக்கமான சொற்களில் இணையத்துக்கே உரிய ஆங்கிலத்தில் அனுப்பப்படும் மின்னஞ்சல்களே அதிகம். அவை கருத்துக்கள் என்ற முறையில் முக்கியமானவை. அவற்றுக்கு நானும் அதே போல சுருக்கமான பதில்களை அனுப்புவேன். இவற்றில் ஒரேவரி வசைகளும் நிராகரிப்புகளும் உண்டு. அவற்றுக்கும் ஒரேவரி பதில் அனுப்புவேன். Hi, without mustache u look like a eunuch என்பது சமீபத்திய மின்னஞ்சல். Thank u என்று நான்.

விரிவான மின்னஞ்சல்கள் பலவகை. முதலில் வசைகள். அவற்றை நான் ஓரிரு வரிகளுக்கு மேல் வாசிப்பதில்லை. ஆரம்பத்திலேயே கடிதத்தின் தொனி புரிந்துவிடும். பல வசைகளில் பதில்போட்டால் அந்தப்பதில் போய்சேரமுடியவில்லை, முகவரி தப்பு என்று திரும்பி வந்து விடும். இது என்ன தொழில்நுட்பம் என்று புரியவில்லை.

பொருட்படுத்தக்கூடிய கடிதங்கள் மூன்று தளங்களைச் சார்ந்தவை. ஒன்று,  ஒரு கட்டுரையுடன் முழுமையாக உடன்பாடு கொண்டு அதைப்பற்றி தன் கருத்துக்களைச் சொல்ல அனுப்பப்படுபவை. ஒரு கட்டுரையுடன் முரண்பாடு கொண்டு எழுதப்படுபவை இரண்டாம் வகை.கட்டுரையுடன் ஒரு பகுதி மட்டுமே உடன்பாடு கொண்ட கடிதங்களும் உண்டு

பொதுவாக இத்தகைய கடிதங்களுக்கு நானும் விரிவாகவே பதில் அனுப்புவேன். விரிவாக எழுத வேண்டும் என்று எடுத்து வைத்து வெகுவாக தாமதமாவதும் உண்டு. என்னை மறுக்கும் கடிதங்களுக்கு என் தரப்பை எழுதாமல் இருக்க மாட்டேன். பல சமயம் அந்த கடிதங்கள் விவாதங்களாக ஆகி தொடர்ந்து நீள்வதை இந்த இணையதளத்தில் நண்பர்கள் கண்டிருக்கலாம். 

கடிதங்களில் மிகப்பெரும்பாலானவை ஆங்கிலத்தில்தான். என் இணையதளத்தில் வரும் கடிதங்களில் பெரும்பாலானவர்களுக்கு நானேதான் தமிழ் மென்பொருளை அறிமுகம் செய்திருக்கிறேன். என் அனுபவத்தில் ‘சுரதா’ வை அனுப்பினால் மட்டுமே மேலதிக விளக்கங்களை அனுப்ப தேவை இருப்பதில்லை. ஆங்கிலத்தில் எழுதிய பலர் பின்னர் நல்ல தமிழில் எழுதியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் பிறகு வலைப்பூக்களைக்கூட ஆரம்பித்திருக்கிறார்கள். நான் தமிழ்க் கடிதங்களையே பிரசுரிக்கிறேன். ஆங்கிலக் கடிதங்கள் தமிழாக்கம் செய்யப்படும். ஆங்கிலமும் தமிழும் கலந்து கட்டி எழுதப்படும் கடிதங்களை செம்மைசெய்வேன் — நேரம் இருந்தால்.

மிகத்தீவிரமாக அறிமுகமாகிய பல வாசகர்கள் திடீரென நின்றுவிடுவது எல்லா எழுத்தாளர்களுக்கும் வழக்கமான விஷயமாகவே இருக்கும். நீடித்து தொடர்ந்து வாசிக்கும் வாசகர்கள்தான் உண்மையில் குறைவு. ஆனால் சமீபத்திய பொருளாதார நெருக்கடிக்குப்பின் என் இணையதளத்தின் தீவிரமான வாசகர்களில் ஒரு சாரார் அப்படியே சுவடில்லாமல் மறைந்து போனார்கள். அவர்கள் மீண்டு வருவார்களா என்பதே ஐயம்தான்.

மின்னஞ்சல்களில்கூட சில சுவாரசியமான விஷயங்கள் உள்ளன. இன்றும்கூட பாமினி எழுத்துருவில் கடிதம் வந்தால் அது ஈழத்தமிழராகவெ இருப்பார். கனடாவில் இருந்துகூட அதே பாமினியில்தான் எழுதுகிறார்கள். மிக அபூர்வமாக தமிங்கிலீஷில் மின்ஞசல் இப்போதும் வருகிறது. கடிதத்தை ஸ்கேன் செய்து அனுப்புகிறவர்களும் உண்டு. சமீபத்தில் பேரா மௌனகுருவின் தமக்கையின் கடிதம் அப்படி வந்தது.

எல்லா கடிதங்களுக்கும் நான் பதில் போடுவதுண்டு– தாமதமானாலும். நீளமான கடிதம் என்றால், நீளமாக நான் எழுதப்போகும் கடிதம் என்றால் அதை எடுத்து வைப்பேன், தாமதமாகும். சில கடிதங்கள் ஸ்பாம் பெட்டிக்குள் போய் கிடந்துவிடும். அவ்வாறு சில கடிதங்கள் சமீபத்தில் சென்று சிக்கிக் கொண்டன. சில அழிந்தும் இருக்கலாம்.

சென்ற மார்ச் மாதம் முதல் நான் சினிமா வேலைகளுக்காக சென்னையில் இருந்தேன். அதன்பின் ஆஸ்திரேலியா. அதன் பின் திரும்பிவரும்போது ஈழப்போர். அதன் மனச்சோர்வில் பெரும்பாலான மினஞ்சல்களுக்கு பதில் போடவில்லை. அர்த்தமில்லாமல் எல்லா இணையதளங்களுக்கும் போய் மேய்வதிலேயே நேரம் வீணாகியது. வரப்புப்பெடி நிறைந்தபின் ஓர் ஆச்சரியம், பல கடிதக்கள் வாசித்த கடிதங்களின் அடியில் போய் தங்கி விட்டன. நேற்றுதான்  இருநூறுக்கும் மேல் கடிதங்களை அபப்டி கண்டுபிடித்தேன்.

சென்ற ஜூன் பதினைந்து முதல்தான் பழைய மின்னஞ்சல்களுக்குப் பதில் போட ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட ஆயிரத்தி எழுநூறு மின்னஞ்சல்கள். ஒருநாளில் நூறு மின்னஞ்சல்கள் வரை பதில் போட்டிருப்பேன். நான் மின்னஞ்சல்களை நகல் எடுத்து அனுப்புவதில்லை. அது பெரும்பாலான வாசகர்களுக்கு அவமதிப்பாக படுகிறது. ஆகவே அசுரவேக தட்டச்சுதான். பல கடிதங்கள் பிழை மலிந்த¨வையாக இருக்கும். வேறு வழியில்லை. கடிதங்களை இன்னொரு முறை படிக்கக்கூட நேரமில்லை.

சென்ற நாட்களில் பலருக்கு ஒரே நாளில் நான் எழுதிய நாலைந்து மின்னஞ்சல்கள் வந்திருக்கும். அடுத்த ஆகஸ்ட் பத்து வரை என்  இணையதளத்தில் கடிதங்கள் பகுதிக்கு தேவையான கடிதங்களை டிரா·ட் பகுதியில் சேமித்தாகிவிட்டேன்.

இதை ஏன் எழுதுறேன் என்றால் கடிதத்துக்கு பதில் வராதது கண்டு என்மேல் கடுமையாக மனத்தாங்கல் கொண்டு எழுதப்பட்ட பல கடிதங்கள் என் வரவுபெட்டியில் உள்ளன. ‘நீயும் பிறரைப்போல ஒரு இரட்டைவேடதாரி’ என்று ஒரு பெரியவர் எழுதியிருந்தார். கிட்டத்தட்ட நண்பர்கள் அளவுக்கு நெருக்கமாக ஆகிவிட்ட சில வாசகர்களும் வருத்தம் மற்றும் கோபத்துடன் எழுதியிருந்தார்கள்.

என் நோக்கம் எப்போதும் எனக்கு எதிர்வினையாற்றுபவர்களிடம் தொடர்பு வைத்திருப்பதே என்பதைச் சொல்லி விடவிரும்புகிறேன். நட்புடன் எழுதும் எவருமே எனக்கு நண்பர்கள்தான். தாமதம் என் சூழல் மற்றும் தனிப்பட்ட காரணங்களினால்தான். அவற்றைப் புரிந்துகொள்ளும்படி மின்னஞ்சல் அனுப்பும்  அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

முந்தைய கட்டுரைமலையாள இதழ்கள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைநியுஜெர்சி வாசகர் சந்திப்பு