தோசைக்கல்லை புக் ஷெல்பிலே வச்சது யாரு? இப்ப தெரிஞ்சாகணும்!

பிள்ளைகளின் சீருடைகளை இஸ்திரிபோட்டுக் கொண்டிருக்கும்போது அருண்மொழி ஒரு நாளும் தவறாமல் கடுமையான கடமையுணர்ச்சியுடன் செய்யும் ஒரு செயல், சாம்பார் விட்ட இட்டிலித்தட்டுகளைக் கொண்டுவந்து அதே மேஜையில் சட்டைகள் படும் தூரத்தில் வைத்துவிட்டு புயலெனத் திரும்பிச்செல்வது.

தூங்கி வழியும் புத்தர் போல அமர்ந்திருக்கும் அஜிதனுக்கும் காலை எழுந்ததுமே பொதுவாக நம் கல்விமுறையை எண்ணி சற்றே மனம் வெதும்பி விசும்பி முடித்து அஜிதனுடன் எவ்வகையில் சண்டைபோடலாமென சிந்திக்கும் சைதன்யாவுக்கும் உரத்த குரலில் கட்டளைகளைப் பிறப்பிப்பது, அடுப்பில் புகையும் சீழ்க்கை அடிக்கும் கருகும் வெடிக்கும் சீறும் பல்வேறு கலங்களை கட்டுக்குள் வைப்பது, வெளியே காது பறக்க எம்பி எம்பிக் குதித்து குரைத்தபடி ஏதோ கோரிக்கையை அயராது முன்வைக்கும் ஹீரோவை போய் பார்த்து ”என்ன இப்ப? நீ என்ன ஸ்கூலுக்கா போற? மூஞ்சியப்பாரு கறுப்பும் கண்ணுமா” என்று வைதுவிட்டு அதேமூச்சில் ‘ஜெயன் போறதுக்குள்ள ஈரத்துணிகளை எடுத்து வெளியப்போட்டிரு. மழைவருமோ என்னவோ ” என்று கூறி ‘மாமவ சதா ஜனனி’ என்று சம்பந்தமில்லாமல் ஏதோ முனகுவது என உள்ளும் புறமும் எங்கெங்கு நோக்கினும் பல்லாயிரம் கைகளுடன் தென்படும் அருண்மொழியை நோக்க நோக்கக் களியாட்டமாதலினால் நான் கவனிக்காமல் சாம்பாரில் சட்டையை சற்றே புரட்டி எடுத்து, ‘யாரும் கவனிக்கவில்லையே’  என்று நோக்கினேன்

அதற்கென்றே காத்திருந்த சைதன்யா ” அய்யே, என்னோட சட்டையிலே சாம்பார்…நான் ஸ்கூலு போமாட்டேன்…” என்று சொல்லி கூவ ”திரும்பி வாறப்ப நீ கொண்டு போறசாம்பாரும் உன் கூட்டுகாரி கொண்டுவாற சாம்பாரும் எல்லாம் பட்டிருக்கே… ” என்று நான் சொல்ல, ”மாட்டேன்…இந்த சட்டையைப் போட மாட்டேன்” என்று சைதன்யா அடம்பிடிக்க ”எத்தனை வாட்டி சொல்றது அருணா, தட்டைக் கொண்டு வந்து இப்டி வைக்காதேன்னு…”என்று நான் கத்த, நேத்தைக்கு என் மேத்ஸ் நோட்டுமேல வச்சிட்டாங்கப்பா…” என்று அஜிதன் குறைபட, அனைத்துக்கும் ஒட்டுமொத்தப் பதிலாக பதிலாக அருண்மொழி ”… வெந்நீர் போடறதுக்கு போட்டு வைச்ச ஹீட்டரை யாரு அணைச்சது? ஜெயன், உங்கிட்ட இது பத்தாயிரம் வாட்டி சொல்லியாச்சு…அறிவே கெடையாதா? இனி எப்ப தண்ணி சூடாகி எப்ப அவள அனுப்பறது. எந்திரிச்சு மூச்சா போடி மூதேவி…” என்பாள். ”நான் ஸ்கூலுக்கு போமாட்டேன்” என்று பதில்பெறுவாள்.

ஒட்டுமொத்தமாக காலைநேர ரகளையில் ஒவ்வொருவரும் இன்னொருவர் தவறுகள் மீது முட்டிமோதி குற்றம் சாட்டுவோம்.”அம்மா அப்பா நான் நேத்து போட்ட அழுக்குச் சட்டையை அயர்ன் பண்ணி வைச்சிருக்காங்க..” ”ஜெயன் என்ன இது…இங்கதானே சட்டையை எடுத்து வச்சே?” ”டேய் நீ எதுக்குடா அழுக்குச் சட்டையை உள்ள போடுறே? வெளியே கொண்டு போடணும்னு நேத்தைக்கும் சொன்னேன்ன?” ”இவ தான் அப்பா என்னோட பைனாக்குலரை எடுத்து கிங் ·பிஷர் பாக்கணும்னு சொன்னா…” இல்லப்பா அவன்தான் நீ கலர் பென்சில் குடுத்தேன்னா பைனாகுலர் குடுக்கிறேன்னு சொன்னான்” ”நான் எப்படி சொன்னேன்? எப்ப சொன்னேன்? மூஞ்சி, சைதாபேட்டை…” ”சைதாப்பேட்டை உங்க அப்பன்” ”அப்பா உன்னை சொல்றாப்பா” ”டேய் அஜி நீ கெளம்பறியா இல்லியா?” என்று எங்கெங்கோ திசைமாறி செல்லும் பேச்சின் இறுதியில் மீண்டும் அதே சிக்கல்….

”அப்பா ,ஒம்பது மணியாயாச்சு. நான் இதே சட்டைய போடவா?” ”போட்டுட்டு போடா. பத்தாம்கிளாஸ் பயக்களையெல்லாம் பொண்ணுக பாக்க மாட்டாங்க” ”அப்பா நீ ஒழுங்கா இரு. எங்கிட்ட வேணாம்” ”ஜெயன் அழுக்கான சட்டைன்னா காலரைப்பாத்தே தெரிஞ்சுக்கிடலாம். ஒருவாட்டி பாத்தாத்தான் என்ன?” ”அயர்ன் பன்றப்ப பாத்தேன், சரி பண்ணியாச்சுன்னு நெனைச்சுகிட்டேன்…” ”வெளங்கும். இல்லாட்டி மோந்து பாக்கிறது?” ”பின்ன, இவங்க போடுற அழுக்கையெல்லாம் மோந்து பாக்கிறதுதானே என் வேல?” ”என் செல்லங்கள மோந்து பாக்க நீயெல்லாம் குடுத்து வச்சிருக்கணும்ல?”. ”அருணா,நான் எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன், வாஷிங் மெஷின்லே சட்டையைப்போடுறதுக்கு முன்னாடி பஸ் டிக்கெட் இருக்கான்னு பாருன்னு…நீ பாத்தியா? நீலச்சட்டையை பாரு எப்டி இருக்குன்னு…” ”அதெல்லாம் பாத்துத்தான் போடுறது. சிலசமயம் எப்டியோ இருந்திடுது” ” ஏன் பணம் மட்டும் ஒருநாளும் அப்டி இருக்கிறதுல்ல?” ”பெரிய பணம்.ஜெயன் இந்த பாத்திரத்திலே இருந்த கஞ்சித்தண்ணி எங்க? புடவைக்கு போடணும்னு எடுத்து வைச்சேன். கொட்டிட்டியா? அய்யோ இந்த வீட்டிலே ஒண்ணுமே ஒரு ஒழுங்கா இருக்காதே…” ”கஞ்சித்தண்ணிதானே அந்தா இருக்கு…” இதுவா? நான் மோர்னு நினைச்சேன். அப்ப மோர் எங்க?”

கல்யாணத்துக்கு முன்னர் நான் ஒழுங்கின்மையை என் வாழ்க்கை ஒழுங்காகக் கொண்டிருந்தேன். ஒழுங்கு என்பது நாம் அறிந்த வரிசைமுறையையும் தர்க்கத்தையும் கொண்டது. ஒழுங்கின்மை என்று நாம் சொல்வது நமக்குத்தெரியாத ஒழுங்கை. பிரபஞ்சத்தில் எல்லா நிகழ்வுகளுக்கும் உள்ளார்ந்த காரணம் கண்டிப்பாக இருக்கும். இதை விரிவாகச் சிந்தித்து என்னை தொகுத்துக் கொண்டிருந்தமையால் நான் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. ஒழுங்குவாதத்தின் அப்போஸ்தலரான சுந்தர ராமசாமிதான் மிகவும் கஷ்டப்படுவார். அவரது வீட்டு மாடியிலிருந்த விருந்தினர் அறையில் நான் காலையில் இடுப்பில் சுற்றப்பட்ட டவலோடு சுழன்று சுழன்று வர, அவர் மூக்கு சிவந்து கன்னங்கள் சிவந்து கடைசியில், ”என்ன தேடுறீங்க?” என்றார்.” சீப்பு சார்…சீப்பு எங்க வச்சேன்னே தெரியல்ல…” ”பனியன் போடுவேளா?” ”போடுவேன் சார்” ”அப்ப அதைப்போட்டுண்ட அப்றம்தானே சீப்பை தேடணும்? மொதல்ல அதைப் போடுங்கோ. போடுறப்ப நெதானமா யோசியுங்க”

பனியன் போட்டபோது நான் யோசித்தேன்.” சார், தகழி எண்ணைக்குமே நேரடியா மார்க்ஸியத்தைப் பேசுற கதாபாத்திரங்களை எழுதினதில்ல, பாத்தீங்களா?” ”நீங்க இப்ப சிந்திக்க வேண்டியது சீப்பைப்பத்தி” ”உண்மைதான்” என்றேன். ”சீப்பை வழக்கமா எங்கே வைப்பீங்க?” ”ஷேவிங் பாக்ஸிலே” ”ஷேவிங் பாக்ஸ் எங்கே?” ”ஷேவ் பண்ணின எடத்திலே” ”அங்க பாத்தேளா?” ”பாத்தேன் சார், காணும்” ”ஷேவ் பண்ணிட்டே எங்கயாவது போனீங்களா?” ”ம்ம்ம், சும்மா போயி வேப்பமரத்தைப் பாத்தேன்…” ”வேப்பமரத்துகிட்ட போய் பாருங்க” சீப்பு கிடைத்தது. நான் பரபரப்பானேன். ”இப்ப என்ன?” ”சட்டை சார்…” ”சட்டைய எடுத்துட்டு வெளியே எங்கியும் போகலியே?” ”இல்ல சார்… இருங்க கீழ நீங்க கூப்பிட்ட சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தேன். அப்ப…” ”சரி மாடிப்படிச் சுவரிலே பாருங்க”

நாங்கள் கெ.பி.ரோட்டில் நடக்கச்செல்லும்போது சுந்தர ராமசாமி சொன்னார்.”இண்ணைக்கு தமிழ் நாட்டிலே முக்கியமான கலாச்சாரப்பிரச்சினை ஒண்ணை தீக்கணுமானா நீங்க உடனடியா கல்யாணம் செஞ்சுக்கணும்…” ”சார்!” ”கண்டிப்பா. பெண் உதவி இல்லாம உங்களால வாழ முடியாது” நான் சற்றே யோசித்து ”வை·ப் வந்தா இதெல்லாம் சரியாயிருமா?” ”கண்டிப்பா. அவங்களுக்கு ஒரு சென்ஸ் அ·ப் ஒர்டர் இருக்கு. அது சின்ன வயசிலேருந்தே சொல்லிச் சொல்லி வளக்கிறதனால வரக்கூடியது. ஒரு சமையலறைய கொஞ்சமாவது ஒழுங்கா வச்சுக்கலேண்ணா சமையலே பண்ண முடியாது….ஸோ, சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கிடுங்க….”

நான் சிந்தனை செய்தபின் ”எல்லாரும் இதுக்காகத்தான் கல்யாணம் பண்ணிக்கிறாங்களா?” என்றேன். ”இதுக்கும்கூடத்தான்… இல்லேண்ணா நீங்க ஒரு பெரிய பிரச்சினையா மாறிடுவீங்க. ரொம்ப கஷ்டம்…” ‘அப்டியா சார்?” ”நான் மத்தவாளைச் சொன்னேன்.” சுந்தர ராமசாமி ஜே.ஜேயில் இருந்து அரவிந்தாக்ஷ மேனனை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தவர். அந்நகர்வு அவரது மனைவி வந்த பிறகே தொடங்கியது என்றார். நானும் கல்யாணம் செய்துகொள்ள முடிவு எடுத்தேன்.

சில நாட்களிலேயே பெண் அகப்பட்டது. தெய்வீகக்காதலேதான்.ஒழுங்கைப்பற்றி அவளிடம் பேசவில்லை, கண் அழகாக இருந்தது. தஞ்சாவூர் தமிழ் வேறு. உடனே கல்யாணம்.  கல்யாணமான சில நாட்களிலேயே அருண்மொழி என் ஒழுங்கின்மையை சரி செய்யும் பொறுப்பை எடுத்துக் கொண்டாள். ”நீ உருப்படணுமானா ஒண்ணு சொல்றேன் ஜெயன், இந்த நகம் கடிக்கிற பழக்கத்தை விடணும். எழுதுறப்ப எதுக்கு வேஸ்ட்தாளைச் சுருட்டி அப்டி வீசுறே? ஓரமா போட்டா போராதா? கழட்டின துணிகளையெல்லாம் அப்டி வீசிப்போட்டா என்ன அர்த்தம்? இதுவரை நீ பேண்டை ஒழுங்கா கழட்டி நான் பாக்கலை. ஒரு காலு உள்ள ஒரு காலு வெளியேன்னுதான் கழட்டறே. வெக்கமா இல்ல? புஸ்தகங்களை மட்டும் பத்திரமா ஜாக்கிரதையா வைக்கிறே, ஏன் அதை மாதிரி பாத்திரங்கள வச்சா என்ன கேடு? தோசைய தின்னுட்டு தட்ட அப்டியே தள்ளி மேஜைக்கு அடியில வச்சுட்டு போயிட்டே. நாலு நாளா அது அங்க நாறிட்டிருக்கு….என்ன ஜெயன் கேக்கிறியா இல்லியா? உங்கிட்ட இருக்கிற முக்கியமான கெட்ட குணமே இதுதான். ஏதாவது ஒண்ணு சொன்னா எங்கியாச்சும் பாத்துட்டு என்னமாம் யோசிக்கிறது…”

மகிழ்ச்சியாக இருந்தது, என்னிடம் உள்ள முக்கியமான ஒழுங்குக்குறைபாடுகள் ஒவ்வொன்றாக வெளியே இழுத்துபோடப்பட்டு சலவைக் கணக்குபோல பட்டியலிடப்பட்டன. அவற்றை தீர்க்கும் வழிமுறைகளும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டன. எனவே இதுதான் குடும்ப வாழ்க்கையா? ஆகா!

ஒரு சிறு சிக்கல். இதே வேலையை நானும் செய்ய வேண்டியிருந்தது. ”அருணா காம்பவுண்டு சுவர் மேல தட்டில் உளுந்து இருக்கே, நீயா வைச்சே?” ”அய்யோ, கல்லு பொறுக்கிட்டே மாமிகிட்டே பேசிட்டிருந்தேன். அடுப்பை அணைக்க வந்து அப்டியே மறந்துபோச்சு.சித்த எடுத்துட்டு வரியா?” .”அங்கிள் உங்கவீட்டு துணியெல்லாம் பறந்து எங்க வீட்டுக்கு வந்திட்டுது இந்தாங்க” சிறுமி போனதும் ”ஏன், ஒரு கிளிப் போட்டா என்ன அருணா, அவ்ளவு காத்தடிக்குது?” ”போடணும்னுதான் நெனைச்சேன்ன்ன்ன்..” .” நெனைச்சா போராது, போட்டாத்தான் காத்துல பறக்காது.சரியான கருத்துமுதல்வாதியா இருக்கியே”

இபப்டியே சிக்கல்கள். புத்தகவிளிம்புகளை மடிப்பது, புத்தகங்களை குப்புறக் கவிழ்த்துவது, புத்தகத்திற்குள் சீப்பு, பொரிக்காத பப்படம், சீனிக் கரண்டி முதலியவற்றை வைப்பது, சமையல் பாத்திரங்களை புத்தக அடுக்குகளுக்குள் வைத்து மறப்பது, அலாரம் கடிகாரத்தை பீரோதுணிகளுக்குள் வைத்து மறந்து அது நேரமில்லா நேரத்தில் அலற வீடே கலவரமடைவது என முடிவில்லாத சிக்கல்கள். சமையலறை அருண்மொழியின்  நனவிலி போல. எது எங்கே இருக்கிறதென அவளுக்கே தெரியாது. இருக்கிறதா என்றும் தெரியாது.  ஆனால் அதனதன் நேரத்தில் எப்படியோ கைக்கு வந்துவிடும். ஊழ்வினை உருத்து…

அதற்கு அவள் வாய்க்குள் நாக்கு போல சமையலறைக்கு உள்ளே கொதித்து குமிழியிட்டு கொந்தளித்து சுழன்றோடி ”எங்கே வச்சேன்? எங்க போச்சு? இது ஒண்ணு…வச்சா வச்ச எடத்துல இருக்காது….” என்று தனக்குத்தானே பேசி செயல்பட்டபடியே இருக்க வேண்டும். பால்கொதித்து வழிவதும், பாத்திரங்கள் கருகி உருகி புகைந்து நான்காம் வீட்டு பாட்டி வந்து சத்தம்போடுவதும் பெரும்பாலான நிகழ்வுகள். ”அந்த பாட்டி என்னை ஒழுங்கே இல்லாத பொண்ணுன்னு சொல்லிட்டாங்க ஜெயன். ஒரு மாதிரி இருக்கு” ”அந்த தாத்தாட்டே போய் கேட்டுப்பாரு. பொலம்புவாருண்ணு நெனைக்கிறேன்”

மெல்ல மெல்ல தராசு சமனமடைந்தபோது குடும்ப வாழ்க்கை ‘நதியோட்டமாக’ [பிரயாகை கங்கை] போக ஆரம்பித்தது. அவள் என் குறைபாடுகளைச் சொல்லும்போது நான் அவள் குறைபாடுகளைச் சொன்னால் போதும் என்ற சகஜச்சமநிலை உருவாயிற்று. அதற்கேற்ப, ஆச்சரியமாக, இரு பக்கமும் இரு தவறுகள் எப்போதும் சேர்ந்தேதான் நிகழும். ”ஜெயன் பால்பாயின்ட் பேனாவை பாக்கெட்டிலே வைச்சு சட்டையை அப்டியே கழட்டி வெயிலிலே போட்டுட்டு போயிருக்கே. அங்க பார் உருகி வழிஞ்சு…. அவ்ளவுதான் அந்த சட்டை , எனக்கென்ன?” என்பதற்கு ”அடுப்பிலே என்ன போட்டே ? ரயில் எஞ்சின் நாத்தம் வருது?” என்று பதில் சொல்வேன்.

சுந்தர ராமசாமியிடம் சொன்னேன்.”சார், இப்ப எனக்கு என்ன மாற்றம்ணா சின்ன சின்ன தப்புகள்லாம் கண்ணிலே படுது” ” உண்மையிலே நம்ம கண்ணில படறதுதான் முக்கியம். நமக்கே தெரிஞ்சுதுண்ணா படிப்படியா மாத்திண்டுடலாம்.” ”சார் எனக்கு அருண்மொழி பண்ற தப்புகள் மட்டும்தானே கண்ணிலே படுது?” சுந்தர ராமசாமி முகம் சிவந்து வேறு பக்கம் பார்த்தார். பண்பானவராதலால் மனதில் கூட ”வெளங்கினாப்லதான்” என்று சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

அதன் பின் குழந்தைகள் பிறந்தன. அஜிதன் சிறுவயதிலேயே எங்கள் இருவரின் சின்னச் சின்ன தப்புகளை வாரிசுரிமையாகப் பெற்று வளர்ந்தான். ஒரு பொம்மையை எடுக்க சிரித்தபடி வாயில் கோழை வழிய தவழ்ந்து சென்று செல்லும் வழியில் இன்னொன்றை பார்த்து அதை துரத்திப் போய் நெருங்கி அதனருகே உள்ள இன்னொன்றை எடுத்து வாயில் வைத்துக் கடிப்பான். செருப்பை கடிப்பது, புத்தகங்களை கரம்புவது, மேஜை விரிப்பை இழுத்து மொத்த இலக்கிய உலகையும் குப்புறச் சரிப்பது, மண்ணை அள்ளி தன் தலையில் போட்டுக் கொண்டு மகிழ்வது, வண்டுகளை பிடித்து வாயில் போட்டுக் கொண்டு மோனநிலை அடைவது, ஒரு துளி முக்கி சிறுநீரடித்து உடனே ஜட்டி மாற்றப்பட்டதும் தாராளமாக பெய்ய ஆரம்பிப்பது, டாக்டர் வீட்டுக்குப் போனால் பக்கத்து இருக்கை பாட்டி வைத்திருக்கும் மருந்து சீட்டை வாங்கி வாயில் போட்டு ஊறவைப்பது என அவன் எப்போதும் தப்பான செயல்களையே செய்துவந்ததாகவே நினைவு.

”உன்னைய கொண்டு வந்து சேர்ந்திருக்கு…எப்டித்தான் ஒண்ணொண்ணா கண்டுபிடிச்சு செய்றானோ…” என்று அருண்மொழி கத்த பதிலுக்கு நானும் அவன் அவளுடைய பிழைகளின் மானுடவடிவம் என்று சொல்வேன். சைதன்யா பதினாறடி பாய வந்து சேர்ந்தாள். அதன் பின் நாய்கள் வந்தன. பொதுவாக நாய்கள் ஒழுங்குமரியாதையுடன் இருக்கும் என்பது நம்பிக்கை. இவையோ சைதன்யாவால் வளர்க்கப்பட்டவை. நூலைப்போல சேலை.

ஹீரோ வெளியே தேடி எடுத்த குப்பையை மிகக் கவனமாக வீட்டுக்குள் கொண்டு வந்து போடும். அனேகமாக மறுபிறப்படைந்து இதே வளாகத்தில் வாழும் எலியின் பழைய உடல். கொடியில் இருந்து விழுந்த சட்டையை தன் கென்னலுக்குள் கொண்டு போய் விரித்து படுத்துக் கொள்ளும் டெட்டி. இருவருமே என் உள்ளாடைகள் எங்கிருந்தாலும் பொக்கிஷமாக எண்ணி எடுத்து பதுக்கி விடுவார்கள். ஓணானைக் கொன்றால் அதை என் உணவுத்தேவைக்காக வீட்டு முன்பு கொண்டுவந்து போட்டு கூப்பிடவேண்டும் என்று டெட்டி நினைக்கிறான்.

மொத்தத்தில் வீடு எப்போதுமே அதிர்ந்து கொண்டிருக்கும். ஒவ்வொருவரும் பிறரை ஒழுங்கு பண்ண கத்திக் கொண்டிருப்போம். ”சைது படிக்கிறியா இல்லியா? அங்க என்ன சிரிப்பு?” என்று நான் கத்த ”அப்பா நீ டீ டம்லரை கம்ப்யூட்டர் பக்கத்திலே வச்சிருக்கே” என்று சைதன்யா சொல்ல அருகே அஜிதன் ”அப்பா இவ என் பேக் மேலே காலைப்போடுறா” என்பான். பதிலுக்கு ”என்னோட ரப்பரைக் காணும் அப்பா. இவந்தான் எடுத்தான்.” என்பாள். ”ரப்பர்னா அது கண்டிப்பா ஹீரோ தான் எடுத்து கொண்டுபோயிருப்பான். இந்நேரம் கடிச்சு பீஸ் பீஸாக்கியிருப்பான்” என்பான் அஜிதன்.

”அவந்தான் ரப்பரை எடுக்கிறான்னு தெரியுமே அப்றம் எதுக்குடீ கீழ வைக்கிறே, எத்தனை ரப்பர் வாங்கிறது ? இனி உனக்கு ரப்பர் கெடையாது” என்பாள் அருண்மொழி. ”ரப்பர் இல்லேண்ணா நான் ஸ்கூலுக்கு போகல்லை”- சைதன்யாவுக்கு உலக நிகழ்வுகள் அனைத்தும் பள்ளிசெல்வதைத் தவிர்க்கும் காரணங்களாக ஆகமுடியும். ”அருணா நீ சும்மா கத்தாதே…என்னால இங்க படிக்க முடியலை” என்பேன் ” சரித்தான், உக்காந்து இண்டர்நெட்டு படி, எவனாவது காஞ்சபய உனக்கு அறிவே கெடையாது, எழுதப்படிக்கவும் தெரியாதுண்ணு திட்டியிருப்பான்…”.

உண்மையிலேயே ஓர் அறிவுஜீவி அப்படித்தான் சொல்லியிருந்தார். நான் சோகமாக ”நீ சும்மா இருக்கியா இல்லியா? நானே நொந்துபோயிருக்கேன்…” என்றேன். அருண்மொழி ‘ஒண்ணு சொல்லவா? நீ எப்ப எல்லாத்தையும் ஒழுங்கா வச்சுகிட ஆரம்பிக்கிறொயோ அப்பதான் உருப்படுவே….நீ எழுதினதே உனக்கு ஞாபகமில்ல’ என்றாள்.

எனினும் யாராவது விருந்தினர் வந்துவிட்டால் வீடே ஒழுங்காகி விடும். இது எப்படி என்பது பல கோணங்களில் யோசித்தும் புரிந்துகொள்ள முடியாதது. எல்லாம் அதனதன் இடத்தில் இருக்கும். யாரும் எதையும் தேடுவதில்லை. குறைசொல்லி கத்துவதில்லை. எல்லாமே சுத்தம். குழந்தைகள் தேவதைச்சாயலுடன் இருக்க ஹீரோ கூட பதவிசாக வந்து மோந்து பார்த்துவிட்டு சிம்ம கம்பீரத்துடன் படுத்திருப்பான்.

என்ன நடக்கிறது? சமீபத்தில் ஈழ எழுத்தாளர் மௌனகுரு வருவதற்கு முன்னர் ஒருநாள் முழுக்க வீட்டை ஒழுங்குபடுத்தும் பணி. குறைசொல்லி கூச்சல்கள்,வசைகள், பிள்ளைகள் நடுவே அடிதடி, கூடத்தின் நடுவே ஹீரோ உட்கார்ந்து குதவாயை நக்குதல் என உச்ச கட்ட ரகளை. பின்னர் வரும் இரண்டுமூன்று நாட்களின் சிக்கல்கள் அந்நாளிலேயே தீர்ந்து காலியாகிவிடுகின்றன போலும். அதேசமயம் மறுபடி எப்போது தொடங்கலாம் என்று ஒவ்வொருவரும் விம்மி வெடித்து காத்திருப்போம்.

யோசித்துப் பார்த்தால் பயமாக இருக்கிறது. எங்கள் வீட்டில் எல்லாருமே மனம் திரும்பி சீராக மாறினால் பிறகு என்ன எஞ்சும்? குடும்ப வாழ்க்கை என்பதே பல்லாயிரம் தவறுகள்மூலம் உருவாகும் ஒரு சரி தானே?

[முதற்பிரசுரம் 2006, மறுபிரசுரம்]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 36