அன்புள்ள ஜெ.
ரொம்ம்ம்ப நாள் கழித்து உங்களுக்கு எழுதுகிறேன். வலைத்தளத்தை தினம் படிக்கிறேன், எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையிலான அந்தரங்கமான, தீவிரமான உரையாடல் இருக்கிறது ஆனால் கடிதம் எழுத கொஞ்சம் தயக்கம் – எண்ணங்களைத் தொகுத்து, கருத்துக்களை செம்மை செய்து உருப்படியான கடிதங்கள் எழுத வேண்டும் என்கின்ற மனத்தடை பெரிய காரணம்.
சில வாரங்களுக்குள் ஊருக்கும் (ராஜபாளையம்) என்னுடைய கல்லூரிக்கும் (ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி) போய் வந்திருக்கிறீர்கள். கொஞ்சம் வருத்தம் தான், உங்களை நேரில் பார்க்க முடியாதது. எனக்கு இப்போது கலிபோர்னியா வாசம். அம்மா (பாரததேவி) பார்த்துப் பேசிக் கொண்டிருந்ததை சொன்னார்கள், மகிழ்ச்சியாக இருந்தது.
தற்போது விஷ்ணுபுரம் வாசித்துக்கொண்டு இருக்கிறேன். அபாரமான ஆரம்பத்துக்குப்பிறகு ஒருவித ஏமாற்றத்தோடு நகரை சுற்றி வந்துகொண்டிருந்தேன். இருநூறு பக்கங்களுக்கப்புறம் எங்கேயோ உயிர்த்தெழுந்து வந்துவிட்டது. இப்போது கௌஸ்துபம் முடியும் தருவாய். அலுவலக நேரம் போக ஒரு கையில் புத்தகத்தோடு தான் இருக்கிறேன். விவாதங்களில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டிருப்பதால் (!) வேறு வேலைகளில் அவ்வளவாக நாட்டம் இல்லை.
அருண்
அன்புள்ள அருண்,
ஆம், எழுதும் சிலரைப்போலவே எழுதாத பலரும் என்னுடன் உரையாடலில்தான் இருக்கிறார்கள். அது எனக்குத்தெரியும் என்பதனால்தான் நான் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.
சிலசமயம் இந்தத் தொடர்ச்சியான இணைய எழுத்தின்மீது ஒரு சந்தேகமும் தயக்கமும் வருகிறது. இதை நிறுத்திவிடுவதைப்பற்றி நான் பலமுறை எண்ணியிருக்கிறேன். இந்த எழுத்தின் மிகப்பெரிய சிக்கல் இதை எழுதியே ஆகவேண்டிய பொறுப்புதான். நான் எழுதவந்த காலம் முதலே நிறைய எழுதிக்கொண்டிருப்பவன் என்றாலும் இது அதிகம்.
ஆனால் தமிழ்ச்சூழலில் இது எனக்கான ஓர் ஊடகத்தை உருவாக்கி அளிக்கிறது. இப்படி ஒரு சுதந்திரமான ஊடகம் தமிழில் எழுத்தாளர்களுக்கு அமைந்ததில்லை. ஒன்று சிற்றிதழ்களில் ரகசியமாக எழுதுவது அல்லது பெரிய ஊடகங்களின் நிபந்தனைகளுக்குச் சமரசம் செய்துகொண்டு அவர்களுக்கு எழுதிக்கொடுப்பவராக மாறுவது என்ற இரு வாய்ப்புகளே இருந்தன. இன்று இந்த ஊடகம் என்னை விடுதலைசெய்திருக்கிறது
தமிச்சூழலில் தொடர்ச்சியாக வாசிக்கக்கூடிய இடத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர்கள் மிகக்குறைவு. வாசிப்பே குறைவாக இருக்கையில் ஓர் எழுத்தாளனை தொடர்ச்சியாக முழுமையாக வாசிப்பதும் அவனுடைய மொழி மற்றும் படிம உலகுக்கு பழகிக்கொள்வதும் அனேகமாக நிகழ்வதில்லை. இந்த ஊடகம் அந்த சாத்தியத்தை உருவாக்குகிறது. சென்ற காலங்களில் என் மொழியோ படிமங்களோ புரியவில்லை என்ற குறை சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கும். இணையதளம் கொஞ்சம் வாசிக்க ஆரம்பிப்பவர்களைக்கூட இதற்குப் பழக்கிவிடுகிறது
ஆகவே வேறு வழியில்லை. இந்த உரையாடலைத் தொடர்ந்தேயாகவேண்டியிருக்கிறது. தமிழில் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தங்களுக்காக மட்டும் அச்சு ஊடகங்களை வைத்திருந்தார்கள். கோவை ஞானியின் தமிழ்நேயம் ஓர் உதாரணம். இந்தத் தளம் அதன் மின்வடிவம் எனலாம்.
விஷ்ணுபுரம் வாசிக்கிறீர்கள் என்பதறிந்து மகிழ்ச்சி. நீங்கள் சொல்வதைப்பார்த்தால் அதன் தத்துவம்- குறியீடுகள் பால் கவனம்கொண்டு வாசிப்பது தெரிகிறது. அதில் மிக லௌகீகமான பகுதிகளும் உண்டு. அவையும் நாவலை உருவாக்கும் முக்கியமான கூறுகளே
ராஜபாளையத்தில் பாரததேவியைச் சந்தித்தது நிறைவூட்டுவதாக இருந்தது. நிலாக்கள் தூரதூரமாய் நூலில் இருந்து எவ்வளவு தூரம்!
ஜெ
ஜெயமோகன்
வணக்கம்.
முன்னரே படித்ததுதான் “பண்ணையார் “ என்றாலும் திரும்பப் படிக்கக் கிடைத்தமைக்கு நன்றி. கடந்த பல நாட்களாக தமிழக ஊர் நினைவு, 15 வருடங்களாக போக முடியவில்லை. உறவினரின் அகால மரணமும் ஒரு காரணம்.
தாசில் பண்ணை ராஜசேகரன் அவர்களை 1981இல் கடைசியாகப் பார்த்தது; அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த பெற்றோர்களை வாழ்த்த தாமதமாக சீர்காழியில் எங்கள் வீட்டுக்கு வந்து, வருந்திச் சென்றார். அவருடைய மேலையூர் பள்ளியிலுள்ள கட்டிடங்கள் எனது அப்பா மேற்பார்வையில் கட்டப்பட்டவை. ராஜசேகரன் ஏதோ ஒருவகையில் உறவினரும் கூட. உங்கள் பண்ணையார் கட்டுரை பூம்புகார் கடற்கரை, தரங்கை, மாயவரம், பேரளம், திருக்கண்ணப்புரம், திருவாரூர் என மனதை அலைக்கழிக்க வைத்தது. ஒருவகையில் வருத்தமே என்றாலும் உங்களுக்கு நன்றிகள்.
நிற்க.
கடந்த ஜுலை 11-15 வரை நாஞ்சில் எங்களுடன் தங்கியிருந்தார். சில படங்களை இங்கே காணலாம்:
https://plus.google.com/photos/101982181257581682858/albums/5764890880672254849
வரும்காலத்தில் உங்களையும், வண்ணதாசனையும் (இங்கு வந்தார் என்றால்) எங்கள் இல்லத்தில் உபசரிக்க ஆவல் உளது.
அன்புடன்,
வாசன் பிள்ளை
அன்புள்ள வாசன்,
நாஞ்சில் உங்களுடன் நின்ற படங்களை முன்னரே பார்த்ததுபோல உணர்ந்தேன். நாஞ்சிலுடன் பழகுவது ஓர் அரிய அனுபவம். ஒருபக்கம் ஒரு சாதாரண விவசாயியாகவும் மறுபக்கம் நவீன வியாபாரியாகவும் தெரிவார். ஒருபக்கம் ஒரு குடும்பத்தலைவனாகவும் மறுபக்கம் முழுமையான எழுத்தாளனாகவும் தோற்றமளிப்பார்.
சந்திப்போம்
ஜெ