அன்புள்ள ஜெயமோகன்,
உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். நாங்கள் கிட்டத்தட்ட பத்து பொறியியலாளர்கள் வெள்ளிக்கிழமை விடுமுறையில் சந்தித்துக்கொண்டு தமிழ் எழுத்தாளர்கள் எழுதுவதைப்பற்றி ஆர்வத்துடன் உரையாடுவதுண்டு. அவர்களில் நீங்களும் ஒருவர். ஆனால் நாங்கள் உங்கள் நூல்களைப்பற்றி விவாதிப்பதில்லை. ஆனால் நீங்கள் மறைமுகமாக தமிழர்களை இழிவுபடுத்தியும் தமிழ்ப்பண்பாட்டை குறைத்து பார்த்தும் எழுதுவதைத்தான் பேசிக்கொள்வோம். இதுவே இங்கே குவைத்தில் இருக்கும் பெரும்பாலானவர்களின் மனச்சித்திரம். வளைகுடாவில் வேலைபார்ப்பவர்களில் பெரும்பாலானவர்களும் இதையே சொல்கிறார்கள்.
இது ஏன் என்று தெரியவில்லை. இது நீங்கள் உங்கள் அபிமான மலையாள இலக்கியத்துடனும் மலையாளப் பண்பாட்டுடனும் தமிழ் இலக்கியத்தையும் தமிழ்ப்பண்பாட்டையும் ஒப்பிடுவதனால்தான். ஆகவே எங்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக இருக்கிறது. நீங்கள் தமிழ் பண்பாட்டையும் தமிழ் மக்களையும் இழிவு செய்கிறீர்கள்
இக்கடிதத்தை நீங்கள் புறக்கணித்து விடலாம்
அன்புடன்
ரவி
குவைத்
அன்புள்ள நண்பருக்கு,
என் இணையதளத்தில் அரசியல், வரலாறு, இலக்கியம், மாற்றுமருத்தும் சார்ந்து கிட்டத்தட்ட 3000 கட்டுரைகள் உள்ளன. இவை எவற்றைப்பற்றியும் எதுவுமே பேசுவதற்கு இல்லாத உங்கள் பொறியாளர்களுக்கு என் இணையதளம் பற்றிய இத்தகைய வம்புகள் மட்டுமே பேசுவதற்கு இருக்கிறது என்பதை வைத்தே அவர்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
நான் என் ‘·பேவரிட்’ ஆன மலையாளத்தை தூக்கி தமிழை இறக்குகிறேன் என்ற அந்தக் கருத்தே இந்த நபர்களுக்கு ஓர் எழுத்தாளனாக என்னை எளிய முறையில் கூட அறிமுகம் இல்லை என்றும், என் எழுத்து எதையுமே படிக்காமல் மேலோட்டமான அபிப்பிராயங்களை மட்டுமே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும் சான்று. இத்தகைய அறிவுஜீவிகள் அடிக்கடி திண்ணை விவாதங்களில் கருத்துக்களைச் சொல்வதுண்டு. ஆனால் என்னுடைய ஒரே ஒரு வாசகர் இருக்கும் அவையில் இதைச் சொல்லமுடியாது.
இந்தக் கருத்து உண்மையில் இவர்களின் அப்பட்டமான சாதிய- மதவாத- இனவத நோக்கின் வெளிப்பாடு. சாதிய, மதவாத, இனவாத நோக்கு கொண்டவர்களின் முக்கியமான மனச்சிக்கல் என்னவென்றால் பிறரும் அப்படி இருப்பார்கள் என்றே அவர்களால் எண்ண முடியும். பிறரையும் அந்த அடையாளத்தை வைத்தே பார்க்க முடியும். ஒருநாளும் அவர்களால் பிறர் அவற்றில் இருந்து விடுபட்டிருக்கலாம் என்று நம்ப முடியாது. அவர்கள் சிக்கிக்கொண்டிருக்கும் அந்த மனச்சிறையில் இருந்து அவர்களே வெளிவந்தால்தான் உண்டு.
நீங்கள் நம்பிக்கொண்டிருப்பதற்கு நேர் எதிராகவே இன்றுவரை என் செயல்பாடுகள் இருந்திருக்கின்றன என்பதை உணர என் ஆக்கங்களை வெறுமே அவ்வப்போது புரட்டிப்பார்த்தாலே போதும். தமிழ் இலக்கியமரபின், பண்பாட்டுமரபின், தொல்வரலாறின் ஆழங்களைப்பற்றி தொடர்ந்து பேசுபவனாகவே நான் கடந்த இருபதாண்டுக்காலமாகச் செயல்பட்டிருக்கிறேன். இத்துறையில் செயல்படும் அறிஞர்கள் அனைவருடனும் நேரடியான தொடர்புள்ளவன், அவர்களிடம் எப்போதும் விவாதத்தில் இருப்பவன்
தமிழ்மரபின் நுட்பங்களையும் சிறப்புகளையும் வெளிப்படுத்துவன என்று தமிழறிஞர்கள் கருதும் ‘கொற்றவை’ முதலிய பெரும் படைப்புகளை எழுதியிருக்கிறேன். தமிழிலக்கிய மரபைப்பற்றில் என் இணையதளத்திலேயே பலநூறு பக்கங்களுக்கு ஒருவர் வாசிக்கமுடியும். தமிழ் மரபின் தொன்மை பெருமை ஆகியவற்றை பற்றி என் அளவில் அறிந்த, எழுதும் நவீன இலக்கியவாதி எவரும் இன்று தமிழில் இல்லை.
நான் எழுதவரும்போது நவீன இலக்கியம் என்பது தமிழின் பண்பாட்டு ஆழங்களை உதாசீனம் செய்தாகவே இருந்திருக்கிறது. இன்றும் அப்போக்கே தொடர்கிறது. இதற்கு எதிராக நேரடியான கடும் விமரிசனங்களை பக்கம்பக்கமாக எழுதியிருக்கிறேன். தமிழின் இலக்கிய முன்னோடிகளை இதன்பொருட்டு மிகக் கடுமையாக விமரிசனம் செய்து எழுதியிருக்கிறேன். ஒன்றிரண்டல்ல, அப்படி இருபது நூல்கள் வரை இன்று அச்சில் கிடைக்கின்றன. நவீன இலக்கியம் ஆக்கும் சமகால இலக்கியவாதிகளுக்கு தமிழின் தொல்மரபிலும் பண்பாட்டிலும் ஈடுபாடில்லாமையைக் குறித்து பலநூறு முறை எழுதியிருக்கிறேன்.
தமிழ் மக்களின் பண்பாட்டையும் இலக்கிய மரபையும் அதன் நுண்மைகளுடன் அறிமுகம்செய்தே மலையாளத்தில் ஏராளமாக எழுதித்தள்ளியிருக்கிறேன். சங்க காலம் முதல் சமகாலத்தமிழ் வரை. அதற்கு மறுபக்கமாக மலையாள இலக்கிய- அறிவுலக மரபில் உள்ள ஐரோப்பிய கருத்துக்கள் சார்ந்த போலித்தனங்களையும் சம்ஸ்கிருதம் சார்ந்த மேட்டிமைத்தனக்களையும் விமரிசனம் செய்து கடுமையாக எழுதியிருக்கிறேன். பல வருடங்கள் ஆங்கில ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. கடுமையான விமரிசனங்களை சந்தித்தும் இருக்கிறேன். இன்றும் சராசரி மலையாள வாசகன் என்னை அக்கருத்துக்களை ஒட்டியே நினைவுகூர்வான்.
நான் மலையாள இலக்கியம் தமிழிலக்கியத்தை விட மேலானது என்று சொல்கிறேன் என்று எண்ணுபவர்கள் அடிகக்டி எழுதுகிறார்கள். தமிழில் ஒருவருக்கு வாசிக்கும் பழக்கம் இல்லை, கருத்துச்சொல்லும் பழக்கம் மட்டுமே இருக்கிறது என்பதற்கான முக்கியமான ஆதாரம் அது. ஏன் என்றால் இருபது வருடங்களாக அதற்கு நேர் மாறாகவே நான் மீண்டும் மீண்டும் சொல்லி வந்திருக்கிறேன். சொல்லப்போனால் மலையாள இலக்கியம் சார்ந்து தமிழ் தீவிர வாசகர்கள் நடுவே இருந்த பிரமையை உடைத்தவனே நான்தான்.
பல கட்டுரைகளில், பல பேட்டிகளில் மீண்டும் மீண்டும் இதை சொல்லியிருக்கிறேன். மீண்டும் மீண்டும் விவாதித்திருக்கிறேன். அச்சில் குறைந்தது 300 பக்கம் இதுபற்றி நான் பேசியது இன்று கிடைக்கும். கேரளத்தின் வாசிப்புச்சூழலின் அளவு பெரிது. அங்குள்ள பொதுவான அறிவுத்தளம் சராசரித்தமிழை விட மேலானது. அதற்குக் காரணம், மிஷனரிகள், நாராயணகுருவின் இயக்கம், இடதுசாரி இயக்கம். அவற்றின்மூலம் உருவான கல்விப்பரவல்.
ஆனால் செவ்வியல் மரபு இல்லாமல் மேலைமரபுகளை எளிதாகத் தாவிப் பற்றிக்கொள்வதனால் ஆழமான இலக்கிய இயக்கங்கள் அங்கே உருவாகாமல் போயின. அலைகள் எளிதாக வந்து செல்கின்றன. சராசரித்தனம் விரிவானது. ஆழம் குறைவு. நான் மலையாளத்தில் பஷீர், தகழி, ஓ.வி.விஜயன், எம்டி,சகரியா போன்ற சிலரையே முக்கியமானவர்களாக எண்ணுகிறேன். என் ஆதரிச இந்திய எழுத்தாளர்களின் பட்டியலில் வங்க- கன்னட – உருது எழுத்தாளர்களே உள்லனர். மலையாள எழுத்தாளர் எவரும் இல்லை. இதை இந்த இணையதளத்தின் கட்டுரைகளிலேயே மீண்டும் மீண்டும் காணலாம்.
மலையாளம் அச்சு ஊடகம் நிறைந்த மொழி. இந்திய அச்சிதழ்களில் இருபது சதவீதம் அந்தச்சின்ன பகுதியில் அச்சாகின்றது. கணிசமான மலையாள எழுத்தாளர்களின் பிம்பங்கள் ஊடகங்களால் விரிவாக்கம் செய்யப்பட்டவை. ஜான் ஆபிரகாம் குறித்து இதை எழுதியிருக்கிறேன். ஏன், கமலாதாஸ் அஞ்சலியில்கூட இதைத்தான் சொல்லியிருக்கிறேன். ஓர் எழுத்தாளராக கமலாதாஸை வண்ணதாசனுடன் ஒப்பிடால் கமலாதாஸ் மிகச்சாதாரணமாக இருப்பதை ஓரு நல்ல வாசகன் எளிதில் உணரலாம்.
மலையாளச் சிறுகதையும் புதுக்கவிதையும் தமிழ்ச் சிறுகதையும் புதுக்கவிதையும் அடைந்த நவீனத்துவ வளர்ச்சியை அடையவில்லை என்றும் அதற்கான பண்பாட்டு காரணங்களையும் சுட்டிக்காட்டி நான் கேரள இதழில் முன்வைத்த கருத்துக்கள் சார்ந்து ஐந்து வருடம் விவாதங்கள் நடந்திருக்கின்றன. குறைந்தது நூறு கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஏன்,கிட்டத்தட்ட பத்து வசைக்கவிதைகள் கூட எழுதப்பட்டிருக்கின்றன.
இக்கோணத்தில் விவாதங்களை முன்னெடுப்பதற்காக இதுவரை இருபது தமிழ்- மலையாள இலக்கிய உரையாடல் அரங்குகளை நடத்தியிருக்கிறேன். அவற்றின் விளைவுகள் மலையாளக் கவிதைகளில் ஆழமான பாதிப்பைச் செலுத்தியிருப்பதை விமரிசகர்கள் எழுதியிருக்கிறார்கள். நக்கலாக ‘குற்றாலம் எ·பக்ட்’ என்றும் எழுதியிருக்கிறார்கள். [ஆரம்பக் கூட்டங்கள் குற்றாலத்தில் நடந்தன] இந்த விவாதங்கள் தமிழில் மலையாளக்கவிதைகளுடன் சேர்த்து நான்கு நூல்களாக வெளிவந்துள்ளன. இவ்விவாதங்கள் திண்ணை உட்பட இணைய தளங்களில் ஏராளமான பக்கங்கள் வாசிக்கக் கிடைக்கின்றன.
மலையாளத்தின் செவ்வியல் பின்னணியாக தமிழ்ச்செவ்வியலையே கொள்ள வேண்டும் என்று கூறும் சிறிய அறிஞர்மரபு ஒன்று அங்கே உண்டு. மறைந்த எம்.கோவிந்தன் அதன் முதல் அறிஞர். அவரது மாணவர் ஆற்றூர் ரவிவர்மா மலையாளத்தில் என் ஆசிரியர். இந்த மரபை ஒட்டியே நான் கேரளத்தில் விரிவான கருத்து விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறேன். சங்க இலக்கியங்கள், கம்பராமாயணம், பக்தி இலக்கியங்கள், நவீன கவிதை ஆகியவற்றை மலையாளத்தில் மொழியாக்கம்செய்து வெளியிடும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். அவற்ரைப்பற்றி எழுதியிருக்கிறேன்.
இதன் பகுதியாக சங்க இலக்கியத்தை மலையாளப் பொது வாசகர்களுக்காக அறிமுகம் செய்யும் பொரூட்டு எழுதப்பட்டதுதான் ‘சங்கசித்திரங்கள்’ அது ‘மாத்யமம்’ வார இதழில் வந்த தொடர். பின்னர் அது விகடனில் தொடராக வந்தது. ஒருபோதும் ஒரு மலையாள எழுத்தாளனாக நான் மலையாளத்தில் என்னை அடையாளம் காட்டிக்கொண்டதில்லை. தமிழ் எழுத்தாளனாகவே அடையாளம் காட்டிக்கொள்வேன்.
ஆனால் இதற்காக தமிழிலக்கியம் மீதோ தமிழ்ப்பண்பாடு மீதோ என் விமரிசனங்களைச் சொல்லவும் நான் தயங்குவதில்லை. ஒரு எழுத்தாளன் எந்தச் சூழலின் பகுதியாகச் செயல்படுகிறானோ, எந்தச் சூழலை நோக்கிப் பேசுகிறானோ, அந்தச் சூழலை விமரிசனம் செய்யாமல் இருக்க முடியாது. இலக்கியத்தின் அடிப்படையான பண்புகளில் ஒன்று சமூக விமரிசனம். அது இல்லாமல் இலக்கியம் இல்லை. அந்த சமூக விமரிசனத்தை எல்லாம் பண்பாடை இழிவுபடுத்துதல் என ஒரு கும்பல் கருதுகிறது என்றால் அவர்கள் அந்த எழுத்தாளனிடம் எழுதாதே ஓடு என்று சொல்கிறார்கள் என்றே பொருள்.
எனக்கு உங்களைப்போன்றவர்களின் சான்றிதழ் தேவையில்லை. உங்கள் குழுக்களிலும் அடையாளங்களிலும் எனக்கு அங்கத்தினர் பதவி தேவை இல்லை. எந்த அடையாளத்தையும் நான் சுமக்கச் சித்தமாக இல்லை. எந்தபேரணியிலும் நான் கொடியுடன் வரப்போவதில்லை. நீங்கள் என்னை புறக்கணித்தால் அதனால் எனக்கு கொஞ்சமும் இழப்பில்லை– இழப்பு உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும்தான்.
என் வாசகர்களின் தரமும் நிலையும் வேறு. அதை நீங்கள் தொட இன்னும் வெகுதூரம் முன்னகர வேண்டும்.
ஆனால் எவர் எந்த அவதூறு செய்தாலும், திரிபுவேலைகளில் ஈடுபட்டாலும், நன் தரமாக எழுதுவது வரை அவை எனக்கு ஒரு பாதிப்பையும் உருவாக்கப்போவதில்லை. என் வாசகர்கள் தலைமுறையாக வந்துகொண்டே இருப்பார்கள். அது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிக்கொண்டிருக்கிறது. இந்த அவதூறுகள், டீக்கடைக் கிசுகிசுக்கள், அரைவேக்காட்டு விமரிசனங்களை இன்று நேற்றா பார்க்கிறேன். இருபது வருடங்களாக இதிலேயே வளர்ந்து வந்தவன் நான்.
இதில் ஓர் உணர்வுசார்ந்த மிரட்டல் உள்ளது. இன்னின்ன மாதிரி எழுதாவிட்டால் உன்னை தமிழ்விரோதி என்று சொல்லிவிடுவோம் என்ற மிரட்டல். தமிழ் விரோதி, இந்துத்துவர், சாதியவாதி, ·பாசிஸ்டு, பிற்போக்காளன் — என்னவேண்டுமானாலும் சொல்லுங்கள். அதையெல்லாம் ஒருபோதும் பொருட்படுத்த மாட்டேன். என்றும் எப்போதும் ஒரு முதன்மைத் தமிழறிஞனுக்குரிய, முதன்மையான படைப்பாளிக்குரிய, நிமிர்வுடன் மட்டுமே நான் தமிழைப்பற்றிப் பேசுவேன். தமிழை விமரிசிக்க முழுத்தகுதி எனக்குண்டு, ஏனென்றால் எனக்கு தமிழ் தெரியும். என்னை விமரிசிக்கவேண்டுமானால் உங்களுக்கும் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.
எழுத்துக்கூட்டி தமிழ் படித்துக்கொண்டு கும்பல் உணர்வால் மட்டுமே தமிழ் அடையாளம் பேசுபவர்கள் எவரிடமும் எனக்கு உரையாட ஏதுமில்லை. முந்நூறு வருடங்களுக்கும் மேலாக தமிழறிவின் பின்புலம் கொண்ட குடும்பத்தில் வந்தவன் நான். தமிழ் எவருடைய ஸ்தாவர ஜங்கம சொத்து அல்ல.
நீங்கள் எழுதும் கடிதங்களைக் கவனிக்கிறேன். நீங்கள் எதையுமே படித்ததில்லை. ஆகவே நான் யார் என்றே உங்களுக்கு எந்த மனச்சித்திரமும் இல்லை. ஆனால் ஒரு கசப்பு மட்டும் உள்ளது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஆதங்கத்துடன் எழுதுகிறீர்கள். உங்களுக்கு என்னதான் பிரச்சினை? நீங்கள் அதை யோசியுங்கள்.
ஒன்று, நீங்கள் என் எழுத்துக்களை வாசியுங்கள். கொற்றவை வரையிலான என் ஆக்கங்களை. அதன்பின் என் மீது உங்கள் கருத்துக்களை தர்க்கபூர்வமாக பதிவுசெய்யுங்கள். அதற்கு எவ்விதமானாலும் கருத்து மதிப்பு உண்டு. இல்லை, நான் பொருட்படுத்தத் தக்கவனல்ல, தவறான ஆள் என்று உறுதி இருப்பின் அப்படியே விட்டுவிடுங்கள். யார் உங்களை இதையெல்லாம் வாசிக்கச்சொல்கிறார்கள். யாரோ கொஞ்சபேர் வாசிக்கிறார்கள். விவாதிக்கிறார்கள். உங்களுக்கு என்ன? ஏன் இத்தனை மனக்கஷ்டம் கொள்கிறீர்கள்?
நீங்களும் உங்கள் அறிவுஜீவி நண்பர்களும் என்னைப்பற்றி என்ன கருத்து வைத்திருந்தாலும் அதைப்பற்றி எனக்கு ஒரு பொருட்டும் இல்லை.
அக்கருத்துக்களை எனக்கு எழுதி என் நேரத்தை மேற்கொண்டு வீணடிக்க வேண்டியதில்லை. எந்த எழுத்தாளனும் அவனை வாசிக்கும் வாசகர்களுக்காகவே எழுதுகிறான். வம்பாளர்களைப் பொருட்படுத்தினால் அவனால் எதையுமே செய்யமுடியாது
நன்றி
ஜெ
பிகு: இதே விஷயங்களை இதே இணையதளத்தில் விரிவாகச் சென்ற வருடமும் எழுதினேன். ஜெகத் என்பவர் நான் மலையாள மேட்டிமைவாதம் பேசுவதாக எழுதியதற்குப் பதிலாக. அக்கட்டுரையைப் படிக்காமல் நீங்கள் எழுதுகிறீர்கள். கொஞ்சநாள் கழித்து இந்த இரு கட்டுரைகளையுமே படிக்காமல் புதிதாக இதே வாதத்துடன் இன்னொருவர் கிளம்புவார். இதுதான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய துரதிருஷ்டம்.
விவாதங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? –கடிதம்
கேரளமும் சுதந்திரமும் ஒரு கடிதம்