மீசை, மீண்டும் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,
தங்களது மீசை கட்டுரையை பார்த்ததும் ரொம்ப நாளாக கேட்க வேண்டிய விஷயம் நினைவுக்கு வந்தது.  உங்கள் தோற்றம் பற்றி உங்களுக்கு உள்ள மதிப்பீடு என்ன?  எனக்கு உங்கள் புகைப்படத்தை எப்போது பார்த்தாலும் ஒரு பயம் ஏற்படும், ஏதோ ஒரு தலைமை ஆசிரியரை பார்த்த உணர்வு அடி வயிற்றிலிருந்து கிளம்பி நெஞ்சை அடைக்கும். பதிவுகளில் உள்ள புகைப்படங்களில் உங்கள் முகத்தை பார்ப்பதை தவிர்த்து விடுவேன்.  வலிமையான ஆளுமையுடையவரைப்போல் தோற்றம்.  மீசை இல்லாத முகமும் ஏறக்குறைய அப்படியே! ஒருவேளை உங்களை நேரில் சந்திக்கும்போது பயத்தில் பேசாமலேயே போய்விடுவேனோ என்ற எண்ணமும் எனக்கு உண்டு!  (இதை தோற்ற விமரிசனமாக இல்லாமல், இயல்பாக எடுத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்).
அன்புடன்,
கணேசன்.

அன்புள்ள கணேசன்

உங்கள் கேள்வியை நானே என்னை நோக்கி கண்ணாடியில் பார்த்துக் கேட்டுக்கொண்டேன். கொஞ்சம் உள்ளுக்குள் தொலைந்துபோன தன்மை, கொஞ்சம் அசட்டுத்தனம் இரண்டும் கலந்த முகமாக தெரிகிறதே ஒழிய கடுமை ஏதும் தெரியவில்லை. என் நண்பர்கள் எப்போதுமே என்னிடம் நான் இன்னும் கொஞ்சம் ‘சீரியஸாக’ இருக்கலாம் என்றே சொல்லி வருகிறார்கள்.

புகைபப்ட நிபுணரான நண்பரிஅம் கேட்டேன். எனக்கு கண்பிஅச்சினை இருப்பதனால் பெரும்பாலான படங்களில் கண்களைச் சுருக்கிக் கொள்கிறேன், இதனால் கடுமையான தோற்றம் வந்து விடுகிறது என்றார். அத்துடன் நான் புகைபப்டம் எடுக்கப்படும் உணர்வு இல்லாமல் இயல்பாக இருக்கும் ஒருபடமே இன்னமும் எடுக்கப்படவில்லை என்றார்

புகைப்படங்களை நம்பாதீர் என்று சொல்லவில்லை, தயவுசெய்து நம்புங்கள் என்றே சொல்கிறேன்

ஜெ

ஜெயமோகன்

மீசையை எடுத்தபின் அலி போல இருக்கிறாய். வாழ்த்துக்கள்

சேவா

அன்புள்ள சேவா

ஒரே விஷயம் மூன்று மின்னஞ்சல்களில். நீங்கள் சகோதரர்கள் என நினைக்கிறேன்.

மூன்றாம் பாலினம் அழகாக இருக்கக்கூடாதா என்ன? நன்றி
ஜெ

 

அன்புள்ள ஜெ,

வணக்கம்.

நலம். நலமா?

ஊர் உலகம் சுற்றிக்கொண்டிருப்பீர்கள். “நீங்கள் அமெரிக்க செல்கிறீர்கள்..” என்று எனது மகன் அபிஷேக்கிடம் சொன்னேன். உடனே அவன் என்னிடம்,”யு.எஸ்.ஏ.யில் இருக்கும் சித்தப்பா சுபாஷைப்பார்ப்பாங்களா?” என கேட்டான். (சுபாஷ் அமெரிக்காவில் உள்ள வின்ட் மில் கம்பெனியில் இன்ஜினியராக் இருக்கிறார்). நீங்கள் அமெரிக்கா செல்வது குறித்து நானும்  மீனாவும், அபிஷேக்கும் பேசிப்பேசி மிக‌வும் ச‌ந்தோஷ‌ப்ப‌ட்டோம். ந‌ம‌து ஊரு எழுத்தாளர் உல‌க‌ம் சுற்றுவ‌து எங்க‌ளுக்கு பெருமைக்குரிய‌ விஷ‌யம்.
நேற்று மோட்டார் சைக்கிளில் மீனாவுட‌ன் பார்வ‌தி புர‌ம் தாண்டி செல்லும்போது “உங்களின் அண்ணன் பாலசங்கர் பார்வ‌தி புர‌த்தில் உங்க‌ளுக்கு வீடு வைக்க இட‌ம் பார்த்த‌போது உங்க‌ள்ம‌னைவி உங்களிடன் நாம‌ என்ன‌ விவ‌சாய‌ம் ப‌ண்ணவா இட‌ம் வாங்கியிருக்கோம்” என்ற‌து ஞாப‌க‌த்துக்கு வ‌ந்த‌து. இன்று பார்வ‌தி புர‌த்தில் சாமான்ய‌ப்ப‌ட்ட‌வ‌ன் நில‌ம் வாங்க‌ணும்னா யானை விலை குதிரை விலை கொடுக்கணும்.
குமுத‌த்தில் “ப‌ழ‌சிராஜா” சினிமா குறித்த‌ உங்க‌ளின் பேட்டி வ‌ந்த‌ அன்று உங்க‌ள் வீட்டுக்கு க‌ன்னியாகும‌ரி மாவ‌ட்ட‌  பிர‌ஸ் கிள‌ப் ஆண்டும‌ல‌ர் த‌ருவத‌ற்காக‌ வ‌ந்த‌போது உங்க‌ள‌து முக‌த்தில் மீசை இல்லாத‌தைப்பார்த்து ச‌ற்று அதிர்ந்தேன். என‌க்கு உள்ளுக்குள் குறுகுறுப்பு… ‘ஏன் சார் மீசை எடுத்தீங்க‌? ணு கேட்க‌ணும்னு நெனைச்சேன்.  வாய் வ‌ரை வார்த்தை வ‌ந்த‌து. அப்புற‌ம் .. அவ‌ரு மீசை அவ‌ரு எடுத்தாரு..இதுல‌ நான் என்ன‌ கேள்வி கேக்குற‌துனு ம‌ன‌சை சமாதான‌ப்ப‌டுத்திட்டு… உங்க‌ளின்
ஆஸ்திரேலிய‌ ப‌ய‌ண‌ம், இல‌ங்கை பிர‌ச்ச‌னை என‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் பேசி விட்டு வந்தேன்.

இன்று உங்க‌ள் வெப்சைட்டை க்ளிக்கினால் “மீசை”..
ப‌டித்ததும்தான் புரிந்த‌து. நீங்க‌ள் முடியெடுத்த‌ க‌தை. அப்போ  உங்க‌ளின் மீசையிலா முகத்தை உங்க‌ள் குடும்ப‌த்தைத்த‌விர்த்து முத‌லாவ‌தாக‌ பார்த்த‌ வெளி ஆள் நான்தான் போல‌.
சின்ன‌ வ‌ய‌சிலேயே தெளிவான‌ ஆளுன்னு உங்க‌ளைப்ப‌த்தி எல்லோருக்கும் ந‌ல்லா தெரியும். இப்போ மீசை எடுத்த‌ பின்னாடி ரொம்ப‌ க‌ம்பீர‌மா என் க‌ண்க‌ளுக்குத்தெரியுறீங்க.. ..
ந‌ம்ம‌ ஊர் பாஷையில‌ சொல்ல‌ணும்னா “ஆளு இப்ப‌த்தான் ப‌க்குவ‌த‌யா தெரியுதாருல்லா..!”

ச‌ரியான‌ வ‌ய‌சுல‌.. ச‌ரியான‌ நேர‌த்துல‌தான் முடியெடுக்க‌ முடிவு செய்திருக்கீங்க‌.. ஜெ.

அமெரிக்க‌ ப‌ய‌ண‌த்தை இனிதே நிறைவு செய்து ஊருக்கு வாருங்க‌ள்..நேரில் பார்த்து பேச‌வேண்டும்.
அன்புட‌ன்,

திருவ‌ட்டாறு சிந்துகுமார்
அன்புள்ள சிந்துகுமார்,
மீசையை எடுப்பது இத்தனை பண்பாட்டு முக்கியத்துவம் மிக்க விஷயம் என்று தெரிந்திருந்தால் முன்னரே செய்திருக்கலாம்., நானே நீங்கள் தடுமாறுவதைக் கவனித்தேன். ஆனால் கெத்தாக இருந்துவிட்டேன்
அதென்ன சீனிவாசன் கூட இருக்கும் படம்? எல்லா மின்னஞ்சலிலும் அனுப்புவீர்களா? சீனிவாசன் இதற்காக ஏதாவது விளம்பரகக்ட்டணம் அளிக்கிறாரா?
 
ஜெ
அன்புள்ள ஜெ
பத்தினிப்பெண்ணுக்கு மீசை சார்ந்து என்ன அணுகுமுறை இருக்கவேணும் என்று காட்டியிருக்கிறார்கள் உங்கள் துணைவியார். வாழ்க
ஜெயராமன்
 
முந்தைய கட்டுரைசாருவின் வசைகள்
அடுத்த கட்டுரைமீண்டும் கமலா, கடிதங்கள்