அசோகமித்திரனின் இரு கதைகள்

ஆர்வி அவரது இணையதளத்தில் நான் தேர்வு செய்த அசோகமித்திரன் கதைகளைப்பற்றி எழுதியிருந்தார். அதை ஒட்டி அக்கதைகளில் இரு கதைகளைப்பற்றி சொல்புதிது குழுமத்தில் ஒரு வினாவை எழுப்பியிருந்தார்.

காந்தி – இது எனக்கு ஒரு சிறுகதையாகவே தெரியவில்லை.

பார்வை – புரியவில்லை.

இவை இரண்டும் ஜெயமோகன் தேர்ந்தெடுத்த அசோகமித்திரன் சிறுகதைகளில் இருக்கின்றன. என்னதான் சொல்ல வருகிறார்? ஜெயமோகன் கோனாரே, நோட்ஸ் கொடுங்க!

ஆர்வியின் வினாவை ஒட்டி நிகழ்ந்த விவாதத்தில் நான் எழுதிய குறிப்பு இது

*

காந்தி

காந்தி கதையின் முதல்சிறப்பு அது சிறுகதை என்ற சம்பிரதாய வடிவை மீறிச்செல்கிறது என்பதே. அவ்வகைக் கதைகள் பலவற்றை அசோகமித்திரன் வெற்றிகரமாக எழுதியிருக்கிறார். ‘நூலகத்துக்கு செல்லும் வழியில் ஒரு கிரிக்கெட் விளையாட்டைப் பார்க்க நின்றபோது’ ‘நூலகத்திலே..’ போன்ற கதைகள் உதாரணம்

எழுபதுகளில் கதை என்ற வடிவை மீறி எழுதுவது ஒரு முக்கியமான ஆர்வமாக இருந்தது.சா.கந்தசாமி போல கதைவடிவை மீறியாகவேண்டும் என்று வாதிட்டவர்கள் அன்று இருந்தார்கள். அதற்குக் காரணம் கதைக்குள் ஆசிரியனே இருக்கக் கூடாது என்ற உணர்வு அன்றிருந்தது. கதைவடிவம் என்பது ஒரு தொழில்நுட்பம் என்றும் அதனுள் அமையும் கதைகளில் அந்த வடிவத்தை உருவாக்குபவனாக எழுத்தாளன் இடம்பெறுகிறான் என்றும் அவர்கள் வாதிட்டார்கள்

ஆகவே கதையைத் ‘தன்னிச்சையாக’ அமைக்க முயன்றார்கள். வெறும் நிகழ்ச்சிகளைப்போல அமைந்த கதைகளை சா.கந்தசாமி ,சுந்தர ராமசாமி ,அசோகமித்திரன் போன்றவர்கள் எழுதினார்கள். அந்தப்போக்கின் அடுத்த கட்டமே வெறும் உணர்வுகளாக, அல்லது சிந்தனைகளாக மட்டுமே அமையக்கூடிய கதைகள்

அதாவது கதை என்பது வாழ்க்கையின் இயல்பான தருணமொன்றை மொழியில் கைப்பற்றுவது மட்டுமே என்ற நம்பிக்கை. அது நவீனத்துவ எழுத்தின் ஒரு முக்கியமான கலைக்கோட்பாடு. அந்த அழகியல் கொண்டவை காந்தி போன்ற கதைகள்.

இந்தக்கதையில் வெறும் எண்ணங்கள் மட்டுமே உள்ளன. அவையே ஒரு கதையை உருவாக்குகின்றன. இது கதை என்பதைவிட எண்ணங்களின் உணர்வுகளின் ஒரு துண்டு மட்டுமே. ஒருமனிதனின் அகவுலகின் ஒரு தருணம் அல்லது ஒரு கீற்று மட்டுமே இது என்று வாசித்தால் இதை அணுகத் தடை இருக்காது.

இந்த எண்ணங்கள் ஒரு கட்டுரை அல்ல. இது ஒரு மன ஓட்டம். ஆகவே இந்த மன ஓட்டம் என்னென்ன விஷயங்களைப் பின்னிப்பின்னிச் சொல்லிச்செல்கின்றது என்பது முக்கியமானது. எப்படி பின்னிச் செல்கிறது என்பது அதைவிட முக்கியமானது. மனதின் ஒரு தருணத்தைச் சொல்லிவிட்டமையால் இது இலக்கியப்படைப்பு. மிக நுட்பமாகச் சொல்லியிருப்பதனால் ஒரு சாதனை

பிறகதைகளை வாசிப்பதுபோல இது என்ன சொல்கிறது என்று மட்டுமே பார்ப்பதனால்தான் இது பிடிபடாமல் போகிறது. பிற கதைகளுடன் ஒப்பிட்டு தொடக்கம் முடிவு என்ன என்று பார்ப்பதனால் கதையாக அல்லாமலாகிறது.

காந்தி இக்கதையின் ஒரு நிமித்தம் மட்டுமே. கடிகாரத்தைப்பற்றிக்கூடக் கதை எழுதப்பட்டிருக்கலாம். வேறு கதைகளில் அப்படியும் எழுதியிருக்கிறார் அசோகமித்திரன். நூலகத்திலே கதையில் ஒருவன் கையில் வைத்திருக்கும் செய்தித்தாளைப்பற்றி இன்னொருவன் யோசித்துக்கொண்டே இருப்பான்.

இக்கதையில் இருவர் இருக்கிறார்கள். ‘அவன்’, ‘நண்பன்’. அவன் காந்தி மீது பற்றுள்ளவன். நண்பன் காந்தியை வெறுக்கிறவன். இரண்டுக்கும் பெரிய காரணங்கள் இல்லை. பெரும்பாலும் சுயபிம்பம் சார்ந்த கருத்துநிலைகள் அவை. இப்படிப்பட்ட வெறுப்புகள் விருப்புகள் வழியாகவே அவர்கள் தங்கள் ஆளுமையை, அடையாளங்களைத் திரட்டிக்கொள்கிறார்கள்.

அப்படிப்பார்த்தால் இந்தக்கதை காந்தியைப்பற்றியதே அல்ல. நண்பன் அவனை இப்போது வெறுக்கிறான். அவனைப்பற்றி அவதூறு பரப்பித்திரிகிறான். அவன் ஒருகாலத்தில் இவனுடன் நெருக்கமாக இருந்தவன். அவன் உள்ளூர நல்லவன் என்றும் இவனுக்குத்தெரியும்.

அந்த வெறுப்பைப்பற்றித்தான் அவன் யோசிக்கிறான். அதைப் புரிந்துகொள்ள முயல்கிறான். ஏன் மனிதர்கள் வெறுக்கிறார்கள் என யோசிக்கிறான். அந்த யோசனைக்கு மையமாக இருக்கிறது காந்தி என்ற படம்- பிம்பம்

தன்னைப்போன்ற ஒரு சாதாரண மனிதனை மட்டும் அல்ல, காந்தி போன்ற ஒரு மனிதரையே மனிதர்கள் வெறுப்பால் எதிர்கொள்கிறார்கள் என்ற உணர்வே அவன் அடைவது. ஏன்? அதைச் சொல்லவேமுடியாது. மானுட வெறுப்பை காரணகாரிய ரீதியாக விளக்கவே முடியாது.

கதை முழுக்க அதைச் சுட்டிக்காட்டும் வரிகள் வந்தபடி உள்ளன . ‘உள்ளிருக்கும் கசப்புத்தான் வெளியிலும் கசப்பாக உணர்வளிக்கிறது என்று அவனுக்குத் தெரியாமலில்லை….’ நண்பன் கசப்பைப் பரப்ப இவன் கசப்பை விரும்பிக் குடிப்பவனாக இருக்கிறான்.

‘அபிப்ராயங்கள் பற்றிச் சந்தேகம் கொண்டு, சந்தேகம் கொள்ள வைத்துப் பேசலாம், விவாதிக்கலாம், மாற்றிக் கொள்ளலாம், மாற்ற வைக்கலாம். ஆனால் நம்பிக்கைகளை மாற்ற முடியுமா” என்று கதை சுட்டிக்காட்டுகிறது. கருத்துக்களால் அல்ல நம்பிக்கைகளால்தான் மக்கள் தங்களைக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். அதை அவர்கள் மறுபரிசீலனை செய்வதே இல்லை.

காந்தியைப்பற்றிய மிகச்சிறந்த இருவரையறைகள் இந்தக்கதையில் உள்ளன. ‘அந்த வெள்ளிக்கிழமையன்று மாலை குண்டடிப்பட்டுச் சாகும்வரை சுயசுத்திரிகரிப்புத் தவத்தைத் தவறவிடாதவர். மனித இயல்பின் சபலங்களையும் பலவீனங்களையும் தெள்ளத் தெளிவாக உணர்ந்தவர்’

‘தான் நேற்றிருந்தவனில்லை, ஒவ்வொரு கணமும் மறுபிறவி எடுக்கக் கூடியவன் – மாற்றம் கொள்ளக் கூடியவன் – உயரக்கூடியவன் – என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் முன்கணம் களங்கமுற்றதை இந்தக் கணம் பகிரங்கப்படுத்தத் தயங்காதவர்’

அப்படிப்பட்ட காந்தியை வெறுக்க நியாயங்களை வலிந்து உருவாக்கும் மனிதமனத்தின் தேவைதான் என்ன? அதன்மூலம் அந்த ஆளுமை எப்படி தன்னைக் கட்டி எழுப்பிக்கொள்கிறது? வெறுப்பு என்பது ஒரு கூரிய கத்தி. அதைக்கொண்டு மனிதர்கள் தங்கள் எல்லைவிளிம்புகளை வெட்டிக்கொள்கிறார்கள். அதன்மூலம் தங்கள் அடையாளங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள்

அதை உணர்ந்தவர் போல காந்தி புன்னகைசெய்துகொண்டிருக்கிறார் என கதை முடிகிறது. அந்தக் கடைசி வரி மானுட அடையாளங்களின் வெறுமையை, பொருளின்மையை சுட்டிக்காட்டும் ஒரு அழகிய படிமம் ‘அவன் எதிரே அரைக்கோப்பையளவில் ஆறிக்குளிர்ந்து போயிருந்த காபி மீது காற்று வீசும்போது நூற்றுக்கணக்கான நுணுக்கமான கோடுகளின் நெளிவுமூலம் காபி திரவத்தின் மேற்பரப்பில் பரவிய மெல்லிய ஏடு தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது’

வாழ்க்கையில்ஒரு வெறுப்பை நேருக்குநேர் சந்திக்க நேர்ந்தால் அதைப்பற்றி யோசித்து கடைசிப்புள்ளிக்கு சென்று முட்டி நின்றால் இக்கதை புரியும். அப்போது வரும் திகைப்பு சாதாரணமல்ல. நாம் நன்கறிந்த உலகில், நமக்குள்ளேயே கூட நாம் சற்றும் அறிந்திராத இந்த பூதம் இருக்கிறதா என்ற திகைப்பு நம்மை மூழ்கடிக்கும். சொல்லிழந்து நிற்போம்

நான் பலநூறு முறை அப்படிச்சென்று நின்றிருக்கிறேன்


பார்வை

பார்வை நவீனத்துவக் கலைமரபின்படி வெரும் நிகழ்ச்சிகளின் கோவையாக மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. ஆசிரியர் கதைக்குள் தென்படக்கூடாது என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார். ஆகவே கதையை ஒரு வடிவுக்குள் அமைக்க அவர் எந்த முயற்சியையும் எடுத்துக்கொள்ளவில்லை.

இத்தகைய கதைகளுக்கு மேல் திறக்கும் நம்முடைய சிந்தனைகளை உண்மையில் அக்கதையில் உள்ளவை என்று கொள்ளவேண்டியதில்லை. படைப்பு உருவாக்கும் சிந்தனைகள் படைப்புக்குச் சொந்தமானவை,ஆனால் படைப்புடன் பிணைக்கப்படாதவை

பார்வை என்றகதையில் கதை அளிக்கும் குறிப்புகளை மட்டும் பார்த்தால்போதும் முதல் குறிப்பு என்பது தலைப்புதான். வெறும் நிகழ்வு மட்டுமான கதைக்கு அளிக்கப்பட்டிருக்கும் தலைப்பே ஆசிரியர் அந்தக் கதையை சுற்றிச்சுற்றிக் கட்டியிருக்கும் மையம். பார்வை என்பதே கதைக்கரு

யாருடைய பார்வை? மூன்றுபார்வைகள் கதையில் உள்ளன. ஒன்று அந்த வீட்டுக்கார அம்மாளின் பார்வை. வாழ்க்கை பற்றி, வெளியுலகம் பற்றி. இரண்டு, அந்த விற்பனைப்பெண்ணின் பார்வை. மூன்று அவள் சொல்லும் கதையில் உள்ள வாழ்க்கைப்பார்வை. இந்த மூன்று பார்வைகளையும் சொல்லிக் கதையை முடிக்கிறார் அசோகமித்திரன்

வாசகனாக நான் ஒரு குறிப்பு அளிக்கிறேன். அவள் சொல்லும் கதையில் ஒரு பெரிய அற்புதம் நிகழ்கிறது. அவர்கள் கிறித்தவ மதத்துக்கு மாறிவிடுகிறார்கள். ஆனால் அந்த அற்புதத்துக்குப் பின்னர்தான் அவள் வாழ்க்கை அவ்வளவு பரிதாபகரமாக இருக்கிறது. அப்படிஎன்றால்அந்த அற்புதத்தின் விளைவு என்ன? அது உண்மையில் நடந்ததா?

அத்தகைய பெரிய அற்புதத்தின் நிழலில் அவள் ஏன் அந்த அர்த்தமில்லாத வாழ்க்கையை வாழவேண்டும்? வண்ணங்கள் இல்லாத, எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கையை அவள் ஒரு அற்புதக்கதையால் வண்ணம் கொண்டதாக நம்பிக்கைக்கு இடமிருப்பதாக ஆக்கிக்கொள்கிறாள். அதைக் கருவியாகக் கொண்டு வாழ்க்கையை வாழமுயல்கிறாள்.

அசோகமித்திரன் கதையில் அளிக்கும் தெளிவான குறிப்பு என்பது அவள் சொல்லும் கதைக்கும் அவள் வாழ்க்கைக்கும் இடையே உள்ள முரண்பாடுதான்.மதங்கள் உருவாகும் முறையையே இந்தக்கதை சுட்டிக்காட்டிவிடுகிறது.

இந்த குறிப்புகளால் அக்கதை உங்கள் மனதில் எதை உருவாக்குகிறது? வாழ்க்கை- அதைப்பற்றிய பார்வைகள் பற்றிய சில பிம்பங்களை. அல்லது எப்படி வாழ்க்கை நடந்துபோகிறது என்ற ஒரு சித்திரத்தை. கதையை விடுங்கள். இப்படி ஒரு சம்பவம் உங்கள் வீட்டுத்திண்ணையில் நிகழ்ந்தால் நீங்கள் எப்படி அதைத் தொகுத்துக்கொள்வீர்கள்? அதுதான் இக்கதை.

*

இவ்விரு கதைகளையும் நான் விளக்க விரும்பவில்லை. வாசகனின் அனுபவத்துக்குள் அதிகமாகத் தலையிட்டுவிடுவேனோ என்ற அச்சத்துடன் மிகக் குறைவாகவே சொல்ல கவனமெடுத்திருக்கிறேன்.

நவீனத்துவம் இந்தக் குறைத்துச்சொல்லும் அழகியலை மிக வெற்றிகரமாகக் கையாண்டது. அசோகமித்திரன் அதன் முதன்மைப்படைப்பாளி. அவருக்கும் அவர்காலகட்டத்துப் பிற இலக்கியமேதைகளுக்கும் பொதுவாக இருந்த வாழ்க்கைநோக்கு நவீனத்துவத்தின் தத்துவமுனையாகிய இருத்தலியம்

வாழ்க்கை இப்படித்தான். பெரிதாக அதில் ஒன்றும் இல்லை. மனித வாழ்க்கைக்கு இலக்கோ நோக்கமோ தர்க்க ஒழுங்கோ ஒன்றும் கிடையாது. அவரவர் அவரவர் சக்திக்கேற்ப வளைந்து நெளிந்து விதவிதமான பாவனைகள் வழியாக வாழ்ந்தும் பிறர் வாழ்க்கையை கண்காணித்தும் இருந்து முடிகிறார்கள். ஏன் என்ற வினா எப்போதும் நம் சிந்தனைச்சிடுக்கில் நாமே சிக்கிக்கொண்டு அசைவிழப்பது வரைக்கும் மட்டுமே செல்லமுடியும்- என்பதுபோன்ற இருத்தலியல் சிந்தனைகளை வலுவாக வாசகன் மனதில் நிகழ்த்த இந்த வடிவம் உதவியது.


அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்


அசோகமித்திரன் சந்திப்பு

படிப்பறை படங்கள்

இருநகரங்களுக்கு நடுவே

முந்தைய கட்டுரைஇரு காந்திகள்
அடுத்த கட்டுரைபண்ணையார்