பொன்முடி

தீபாவளிக்கு எங்காவது போகலாமென்று அஜிதன் சொன்னான். அஜிதன் விஷ்ணுபுரம் வாசித்துக்கொண்டிருந்தமையால் ஏதாவது பெரிய கோயிலாகச் செல்ல பிரியப்பட்டான். ராமேஸ்வரம் ,திருப்புல்லாணி, திரு உத்தரகோச மங்கை செல்லலாமென்று திட்டமிட்டோம்.

நான் இணையத்தில் ராமேஸ்வரம் விடுதிகளைப்பற்றி பார்த்தேன். விடுதிகளுக்கு இணையத்தில் பயங்கர விளம்பரம். ஆனால் அவற்றைப்பற்றி பயணிகள் எழுதிய குறிப்புகளில் மனமுடைந்து கண்ணீர் விட்டு எழுதியிருந்தார்கள். ஒருநாளுக்கு இரண்டாயிரம் ரூபாய் வாங்கும் விடுதியில் வெந்நீர் காலையில் ஆளுக்கு ஒரு பக்கெட் மட்டும்தான் என்பது விதியாம். மின்சாரம் போனால் ஏசி, விளக்கு ஏதும் கிடையாதாம். மெழுகுவத்தி கொடுப்பார்களாம்.

அஞ்சிப்போய்த் திட்டத்தை மாற்றினோம். மலையாள இயக்குநர் ஒருவரைக்கூப்பிட்டு எங்கே செல்லலாம் என்று கேட்டேன். பொன்முடி போகலாம் என்றார். ‘பொன்முடியில் என்ன இருக்கிறது?’ என்றேன். ‘பொன்முடி…’ என்றார்

ஆகவே கிளம்பத் திட்டமிட்டோம். பொன்முடியில் வழக்கமான சுற்றுலா எதையும் கேரள அரசு அனுமதிப்பதில்லை. அரசுப்பொதுப்பணித்துறை விடுதி ஒன்றும் கேரள சுற்றுலாத்துறை விடுதி ஒன்றும் மட்டுமே உள்ளன. தனியார் விடுதிகள் இல்லை. அரசுவிடுதியில் ஒன்பது அறைகள். கெ.டி.சி விடுதியில் எட்டு குடில்கள். அவ்வளவுதான். காலை வந்து மாலை திரும்பிச்செல்பவர்கள்தான அதிகம். அவர்களுக்குத் தலைக்கு இருபது ரூபாய் கட்டணம்.

கெ.டி.சி.யின் சூழுலா விடுதிகள் மிகமிகச் செலவேறியவை. சூழுலாமையங்களில் உண்மையான ஆர்வமற்ற பெருங்கூட்டம் வராமல் தடுக்க அவர்கள் அதை ஒருவழியாகக் கொண்டிருக்கிறார்கள். அந்தப்பணத்தால் பழங்குடிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. காடுகளும் பேணப்படுகின்றன. திருவனந்தபுரத்தில் கெ.டி.சி மையத்திற்குச் சென்று சினிமா தயாரிப்புமேற்பார்வையாளர் ஜித் எங்களுக்கு அறைகளை முன்பதிவுசெய்து தந்தார்.

[ Common Kestrel]

காரில் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து நெடுமங்காடு வழியாகப் பொன்முடி சென்றோம். ஒருகாலத்தில் நெடுமங்காட்டை ஒட்டியே காடு இருக்கும். அதுதான் மேற்குமலைத்தொடரின் நுனியிலிருக்கும் முதல் ஊர். இப்போது அதற்குமப்பால் உள்ள விதுரா முக்கியமான ஊராகிவிட்டது. விதுராவுக்குப்பின்பு மலைக்கிராமங்கள்.

மேற்குமலைத்தொடர் கண்ணுக்குப்பட ஆரம்பித்தது. இந்தியாவின் வேறெந்த மலையும் இப்படி பச்சைக்குவியலாக இருக்காது. உச்சிமலைகளில் மட்டும் ஆங்காங்கே பாறைமுகடுகள். பச்சைச் சடைமயிர் சிலிர்த்து அமர்ந்திருந்தன. வானிலிருந்து பொழிந்த இளவெயிலை மலைகள் உள்ளே இழுத்துக்கொள்வதுபோலத் தோன்றியது

இருபத்துமூன்று சாலைவளைவுகள் வழியாக ஆயிரம் அடி உயரத்துக்குச் சென்றால் பொன்முடி. மேற்குமலைத்தொடரின் கடைசி சிகரம் என பொன்முடி சொல்லப்படுகிறது. இரு சிகரங்கள். ஒரு சிகரத்தின் உச்சிநுனியில் விடுதிகள் உள்ளன. மறுசிகரம் ஒரு பெரும்பள்ளத்துக்கு அப்பால் தீண்டமுடியாத தனிமையுடன் தூங்கியதுபோல நின்றது. கீழே இருந்தே மலையுச்சியின் விடுதிகளைக் காணமுடியும். ஏதோ மணிமுடி அணிந்திருப்பதுபோல விடுதிவரிசை தெரியும்.

பொன்முடியை ஒட்டிய ஒரு சிறு மலையுச்சியை அடைந்து அங்கிருந்து மலைகளை இணைக்கும் ஒரு மலைச்சரடு வழியாகப் பொன்முடி விடுதிகளை அடைந்தோம். நாங்கள் செல்லும்போது உணவுநேரம். பிரியாணி மட்டும்தான். என் பிள்ளைகள் சைவ உணவுப்பழக்கம் கொண்டவை. சைவப்பிரியாணி இருந்தது. நாங்கள் கோழியையும் அவர்கள் காய்கறியையும் உண்டோம்.

பேக்கர்பாணியில் அங்குள்ள மலைக்கற்களைக்கொண்டே கட்டப்பட்ட அழகிய குடில்கள். நான்கு படுக்கைகள் கொண்ட ஒரு குடிலுக்குள் கழிப்பிடமும் சிறிய கூடமும் உண்டு. எல்லாமே மிகச்சுத்தமானவை. இந்தியாவின் எந்த விடுதியிலும் பொன்முடி விடுதி ஊழியர்களைப்போலப் பயிற்றுவிக்கப்பட்ட பிரியமான ஊழியர்களைச் சந்திக்க நேரவில்லை. காரணம் அவர்கள் அனைவருமே பழங்குடிகள். எந்த வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்யும் மனம் கொண்டவர்கள்.

சாளரத்துக்கு அப்பால் மலைச்சரிவு. அதற்கு அப்பால் அந்த இணைச்சிகரம். அதன் நான்குபக்கமும் மிகச்செங்குத்தானவை. ஆகவே அங்கே ஏறிச்செல்ல வழியே இல்லை. உச்சியில் பச்சைப்புல்வெளி பரந்து கிடந்தது. புல்மீது உருக்கி ஊற்றியது போல வெயில் வழிந்து கிடந்தது. அந்த மலைச்சிகரம்தான் இந்த இடத்தின் பெரிய சொத்து. அதைப்பார்க்கும் கணம் மனதில் ஒரு தனிமையும் தியானமும் கைகூடுகிறது.

சற்று நேரம் ஓய்வெடுத்தபின் மாலை நடை. மேற்கு மலைத்தொடர்களின் அடுக்குகள் பிரம்மாண்டமான ஒரு கரத்தால் விரித்துக்காட்டப்பட்ட சீட்டு அடுக்குகள் போலத்தெரிந்தன.அருகே தெரிந்த சீட்டில் அடர்ந்த பசுங்காடு. அதற்கப்பால் பாதி தெரிந்த சீட்டில் நீலநிறக் காடு. அதற்கப்பால் கால்வாசி தெரிந்த சீட்டில் நீலமேகவழிவங்கள். அதற்கப்பால் நீலநிறத்தீற்றலாக ஒரு சீட்டு.

சாலைக்கு ஒரு பக்கம் மலை செங்குத்தாகச் சரிந்து சென்றது. சரிவில் பச்சைப்புற்கள் தழைத்துக்கிடந்தன. அவற்றினூடாக மழைநீர் சென்ற வகிடு. சைதன்யா அதனூடாக இறங்கி நடக்க ஆசைப்பட்டாள். சரிவில் இறங்கும்போது உருளைக்கற்களிலும் புல்லிலும் கால் பிழைக்கும் ஒவ்வொரு கணமும் உடல் தன்னை உணர்வது உற்சாகமான அனுபவம். மலைவிளிம்பில் நின்றபோது கீழிருந்து அடர்ந்த மேகம் கொழுத்த திரவம் போலப் படர்ந்து நுனிதிரண்டு வந்து எங்களை மூடிக்கொண்டது

பொன்முடிக்கு மக்கள் வருவதற்கான முதற்காரணமே அங்கே குவியும் மேகம்தான். குறிப்பாக ஜூன் ஜூலை மாதங்களிலும் நவம்பர் டிசம்பர் மாதங்களிலும் கேரளத்தில் மழை பெய்யும்போது இங்கே மேகங்கள் திரள்கின்றன. பிரம்மாண்டமான ஒரு வெள்ளை லெக்ஹார்ன் கோழி தன் இறகைச்சரித்து நம்மை அள்ளிப் பொத்திக்கொள்வதுபோலத்தோன்றும் மேகங்களில் மூழ்கும்போது.

மேகங்களைப்போலவே சட்டென்று பெய்யும் மழையும் இங்குள்ள முக்கியமான கவர்ச்சி. பாறைகள் சுவர்கள் எல்லாம் பச்சைபபசி. யானைமத்தகம்போல விதவிதமான பூவடிவங்கள் கொண்ட பாறைகள். எல்லாச் செடிகளும் மழைக்காடுகளுக்குரிய சாறு நிறைந்த பசுமை கொண்டவை. சற்றே வெயில் வந்தாலும் அவை வாடிக்குழைந்து இனிய தழைமணம் பரப்ப ஆரம்பிக்கின்றன.

அங்கே வானைத் தொடும்படி நின்ற ஒரு மர உச்சியில் சிறகை மடித்து அமர்ந்திருந்தது கெஸ்ட்ரால் வகைப் பருந்து அது என்றான் அஜிதன். சிறகை அசைத்து வானில் அசையாமல் நிற்கக்கூடிய இரு பறவைகள்தான் இந்தியாவில் உள்ளன. இன்னொன்று தேன்சிட்டு. அந்தப்பறவை வானில் ஒரு சரடில் கட்டித் தொங்கவிடப்பட்டதுபோல நிற்பது ஆச்சரியமாகவே இருந்தது.

இரவு இருட்டுவது வரை அந்தமலைச்சரிவில் நின்றபின் திரும்பிவந்தோம். மாலை ஆறுமணிக்கே நன்றாக இருட்டிவிட்டது. காரணம் மொத்த ஊரையும் ஒரு மழைமேகம் உண்டுவிட்டதுதான். குளிர் இருந்தது. ஆனால் ஸ்வெட்டர் போடுமளவுக்கு எப்போதுமே குளிர்வதில்லை. அறைக்குத்திரும்பினோம். மாலை டீக்கு சூடான வாழைப்பழபஜ்ஜி கொண்டுவந்தார்கள்.

இரவு நெடுநேரம்வரை பிள்ளைகளுடன் பேசிக்கொண்டிருந்தேன். என் இளமை நினைவுகள். திருவனந்தபுரம் வந்து பார்த்த சினிமாக்கள். குறிப்பாக புரூஸ் லீ. அங்கிருந்து தல்ஸ்தோய். அங்கிருந்து செவ்வியலுக்கும் நவீனத்துவத்துக்குமான உறவு. அங்கிருந்து மீண்டும் திருவனந்தபுரம். அந்நகருக்கும் என் அப்பாவுக்குமான உறவு. இரவு பன்னிரண்டு மணிக்குத் தூங்கினோம்

காலை ஆறுமணிக்கு எழுந்து மீண்டும் அதே சாலையில் நடை. பொன்முடியில் ‘பார்ப்பதற்கு’ ஏதும் இல்லை. இரண்டு மலைகளைச் சுற்றிக்கொண்டு மூன்று கிலோமீட்டர்தூரம் செல்லும் ஒரு தார்ச்சாலை ஒரு மலைச்சிகரத்தில் சென்று நின்றுவிடும். அந்த முனையில் நின்று கீழே விரிந்துகிடக்கும் பச்சைப்பெருவெளியைக் காணலாம். அதன்மேல் வெயிலும் மேகமும் மாமாறி மாறிப்போடும் உடைகள் மெல்ல மெல்ல விலகுவதைப் பார்க்கலாம்.

காலைநடை செல்லும்போது ஒரு செடியில் வண்ணத்துப்பூச்சிகள் அப்பியிருப்பதைக் கண்டோம். சிறிய மஞ்சள்மலர்க் கொத்துகள் கொண்ட செடி. ஆனால் பெரும்பாலான இதழ்கள் உதிர்ந்துவிட்டிருந்தன. அதைச்சுற்றி அதே செடி ஏராளமாக நின்றது. ஆனால் அந்தச்செடியில் மட்டும் நூற்றுக்கணக்காக வண்ணத்துப்பூச்சிகள். வண்ணத்துப்பூச்சி என்று சொல்லமுடியாது. வண்ணமே இல்லை. அவை பூச்சியுலகின் வரிக்குதிரைகள் போல. கறுப்புவெள்ளைப் பட்டைகள் கொண்ட சிறகுகள்

காலைநடை முடிந்து வந்து குளித்து உடைமாற்றிவிட்டு நடந்தே மலையின் உச்சி எல்லை வரை சென்றோம். நான்குபக்கமும் விரிந்த பச்சை. குவிந்த பச்சை. மேலே ஒளிபெற்ற மேகங்கள். அன்று பகலில் மழை பெய்யவில்லை. இளவெயில் பகல் முழுக்க இருந்தது. மலைச்சரிவுகளில் பகல் முழுக்க அலைந்துகொண்டே இருந்தோம். பின்மதியம் திரும்பி வந்து சாப்பிட்டு ஒருமணிநேரம் ஓய்வெடுத்துவிட்டுத் திரும்பிச்சென்றோம்.

மாலையிலும் அதே செடியில் அதே வண்ணத்துப்பூச்சிகள் அப்பியிருப்பதைக் கண்டோம். அங்கே அதன் தாய் மொத்தமாக முட்டையிட்டிருக்கலாம். ஆகவே அதே செடியை அவை தாய்வீடாகக் கருதுகின்றன என்றான் அஜிதன். அவை எல்லாம் சகோதரர்கள். ஒரே உள்ளம் கொண்ட நூற்றுக்கணக்கான உடல்கள். உடல்களா, சிறகுகள்தானே வண்ணத்துப்பூச்சி என்பது. உடல் அச்சிறகுகளை இயக்கும் ஒரு இயந்திரம் மட்டும்தானே?

ஒருபாறை முனையில் அமர்ந்து அந்தி அடங்குவதைக் கண்டோம். கீழே செறிந்த சோலைக்காட்டுக்குள் பறவைகள் கூச்சலிட்டுக் களியாடின. மேகம் பளிங்கு மலைகளாக எழுந்து நிற்க அப்பால் சூரியன் இருப்பது தெரிந்தது. மெதுவாக மேகங்கள் பொன்னொளி கொண்டன. பின் சிவந்தன. கீழிருந்து ஏறிவந்த மேகக்கூட்டம் புதர்கள் நடுவே பாலின் அலை போல பரவி வந்தது. வானை மறைத்தது. பனிப்படலத்தில் சூரியன் பாலில் கரைவதுபோல கரைந்து மறைய மொத்த பனிப்படலமும் இளஞ்செந்நிறத் திரையாக எங்களைச் சூழ்ந்து நின்றது. அப்பால் பறவைகளின் குரல் நீருக்குள் ஒலிப்பதுபோலக் கேட்டது

பின்பு மெல்லத் திரை விலகியது. யானைமேலிருந்து வெண்பட்டு சரிவதுபோல. மீண்டும் மேகங்கள். அவை இப்போது மேலும் சிவந்து கனத்திருந்தன. இன்னொருமுறை மேகப்படலம் மூடியபோது மேகத்துக்கு அப்பாலிருந்து வந்த காற்று கண்ணுக்குத்தெரியாத பூந்துடைப்பத்தால் மேகப்பிசிறுகளைக் கூட்டிக் குவித்துக் கிழக்காக ஒதுக்குவதைக் கண்டோம்.

மேகத்தின் கீழ் விளிம்பில் உருகிக் கொதித்துச் சொட்டும் உலோகத்துளி போல சூரியன் திரண்டு நின்றது. கனத்து கனத்து மெல்ல சொட்டி முழுவட்டமாகியது. சிவந்து சிவந்து அடுத்த மேகத்தில் அமர்ந்து மெல்லமெல்ல எரித்து இறங்கி மறைந்தது.

முழு அமைதியில் ஓர் அஸ்தமனம். சூரியன் அணையும் தருணம் வாழ்க்கையைப்பற்றிய ஒரு நிறைவை அளிக்கிறது. எத்தனை எத்தனையோ பழைய அஸ்தமனங்கள் அதில் வந்து படிந்துகொள்கின்றன. ஒற்றைப்பெரும் நிகழ்வாக அது உள்ளூர உருவம் கொள்கிறது.

இருட்டியபின் திரும்பிவந்தோம். அன்றும் வெகுநேரம் குழந்தைகளுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர்கள் வாசித்த புத்தகங்களைப்பற்றித்தான் அதிகமும். அஜிதன் விலயன்னூர் ராமச்சந்திரனின் எல்லா நூல்களையும் வாசித்துவிட்டிருந்தான். உலகையே ராமச்சந்திரன் வழியாகப் பார்க்கிறானோ என்ற சந்தேகம் வந்தது. குழந்தைகள் ஒரு நூலை வாசிக்கையில் அந்நூலால் ஆக்கிரமிக்கப்படுகிறார்கள். அந்த முழுமையான சமர்ப்பணம் பிறகெப்போதும் அவர்களிடம் நிகழவதில்லை. ஆகவேதான் முதிரா இளமையில் அவர்களுக்குக் கிடைக்கும் நூல்கள் முக்கியமானதாக இருந்தாகவேண்டும்

சைதன்யா தல்ஸ்தோயின் போரும் அமைதியும் வாசித்திருந்தாள். அதன்பின் மார்க்யூஸின் நூறுவருடத்தனிமை வாசிக்கக் கொடுத்தேன். இரு நூல்களுக்கு நடுவே அவளே இயல்பாக ஒரு ஒற்றுமையைக் கண்டுபிடிக்கிறாளா என்று கவனித்துக்கொண்டிருந்தேன். அவளே அதன் பொது அம்சங்களைச் சொன்னபோது வியப்பாகவே இருந்தது. அதைவிட வியப்பு அவள் இரு வருடங்களுக்கு முன்பு வரை குழந்தைநாவல்களை வாசித்துக்கொண்டிருந்தவள் என்பதனால் அந்த மாந்திரீக யதார்த்தம் அவளுக்குப் பெரிய ஆச்சரியமெதையும் அளிக்கவில்லை, அதுவும் ஒருவகை யதார்த்தமாகவே இருந்தது என்பது.

புறவய யதார்த்தபோதம்தான் மிகுபுனைவை வாசிக்க மிகப்பெரிய தடை. நடைமுறையியில் அது முதிய வாசகர்களிடம்தான் உள்ளது. அது இலக்கியத்தால் அவர்களுக்கு உருவாக்கியளிக்கப்படுவதுதான். இயல்பான மனிதமனம் வாழ்க்கையையே விந்தைகளும் மாயங்களும் கொண்டதாகவே பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் வாழ்வதே மாயங்கள் கலந்த உலகில்தான். கருப்பசாமி பனைமர உயரமாக நின்றது என்று சொன்னால் நம்பக்கூடிய நம் பெற்றோர் முன் மார்க்யூஸ் ஒரு யதார்த்தவாத எழுத்தாளராகவே தோற்றமளிப்பார்

மறுநாள் காலையில் தீபாவளி. ஒரு வெடியொலி கூட இல்லாத ஒரு புகைவாடைகூட இல்லாத மிகமிக அமைதியான தீபாவளி. காலையில் கதவைத் திறந்தால் வெளியே ஒரு வெண்துணித்திரை தொங்குவதுபோலிருந்தது. மேகத்தைக் கையால் வீசிக் கிழித்துச் சென்றேன். மேகத்திலிருந்து நழுவி விழுந்தவன் போல வந்த வெயிட்டரிடம் டீக்குச் சொன்னேன்.

மீண்டும் ஒரு நீண்ட காலை நடை. மலைவிளிம்பில் சென்றமர்ந்து கீழே விரிந்து சென்ற பச்சை அடுக்குகளைக் கண்டோம். அந்த கெஸ்ட்ரால் பருந்து பறவை சிறகசைக்காமல் சுற்றி வந்தது. வானின் ஒரு கண்ணுக்குத்தெரியாத கிளையில் சிறகுபடபடக்க அமர்ந்திருந்தது

அஜிதன் ‘ஆ…நான் இப்பதான் இது பறக்கிறப்ப இதன் மேல்பக்கத்தப் பாக்கிறேன்’ என்று பரவசமடைந்தான். அது கீழே இரைதேட நாங்கள் அதன் சிறகுகளை மேலிருந்து பார்த்தோம். இரு கண்கள் போல சிறகுகள் மேல் நீள்வட்ட வடிவம் தெரிந்தது.

அந்த ஒற்றைச்செடியில் அப்போதும் வண்ணத்துப்பூச்சிகள் அப்பி இருந்தன. எங்கள் சலனத்தில் எழுந்து சுற்றிச் சுற்றிப்பறந்தன. அந்த மர்மத்தைத் தாண்டிச்செல்லவே முடியவில்லை. பன்னிரண்டு மணிக்கு கார் வந்தது. கீழே இறங்க ஆரம்பித்தோம். அப்போதும் அந்த வண்ணத்துப்பூச்சிகளைப்பற்றித்தான் நினைத்துக்கொண்டிருந்தோம். தாய்வீடு தாய்நாடு போல தாய்ச்செடி!


புகைப்படங்கள்

முந்தைய கட்டுரைகாந்தி கோயில்கள்
அடுத்த கட்டுரைஏழுநிலைப்பந்தல்