மருத்துவம்:கடிதங்கள்

அன்பின் ஜெ.மோ
இந்த இடுகையினைப் பார்த்தீர்களா – http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/0e6c03241b3e4a75
வெள்ளை சர்க்கரையை விட வெல்ல சர்க்கரை பன்மடங்கு மேலானது என்பதை ஆதாரத்துடன் நிறுவியுள்ளனர்.
(சர்க்கரையே தவிர்க்கப் படவேண்டியது உங்களது வாதமாயிருப்பினும், நாங்களெல்லாம் அவ்வளவு வ(ள)ரவில்லையே!)

இதைக் குறித்துத் தங்களின் அனுபவத்தை தயவு செய்து பகிர்ந்து கொள்ள முடியுமா?

அன்புடன்
வெங்கட்ரமணன்

அன்புள்ள வெங்கட்ரமணன்

உங்கள் கடிதத்துக்கு கீழே டிவிட்டர் என்று வருகிறது. அது ஏதோ தொடர்பு வலை என நினைக்கிறேன். இந்தக்கடிதம் அதிலும் பிரசுரமாகுமா என்ன?

*

வெள்ளைச்சர்க்கரை அல்லது சீனி என்பது ஓர் உணவு அல்ல. அது ஒரு ரசாயனப்பொருள். தன் முக்கியமான தீங்கே அதை உடல் செரித்துக்கொள்ள வேண்டியதில்லை என்பதுதான். நேராகவே அது செல்களுக்குச் சென்றுவிடுகிறது. இக்காரணத்தால் அதன் மீ£தான கட்டுப்பாட்டை நம் உடல் இழந்துவிடுகிறது. அதை எந்த அளவுக்கு செரித்து உள்ளே அனுப்புவது என்பதை நம் உடல் அறிவதில்லை. செல்களில் சர்க்கரை தேவைக்கு அதிகமாகவே தேங்குகிறது. அந்த அளவு குறையும்போது உடனே சர்க்கரை உள்ளே செல்லவேண்டும் என்ற எண்ணம் நமக்கு வருகிறது.

சர்க்கரை போடாமல் டீ குடிக்க பழகினால் டீ மீதான அடிமைத்தனம் குறைவதை காணலாம். நாம் உண்மையில் டீ குடிக்கும் விருப்பை அல்ல சர்க்கரை சாப்பிடும் விருப்பையே அடிக்கடி அடைகிறோம். டீ வேண்டும் என்று தோன்றும்போது பதிலுக்கு நீங்கள் சர்க்கரைநீரை குடித்துப்பாருங்கள் அதே நிறைவு ஏற்படுவதைக் காணலாம். மேலும் சர்க்கரை குடலில் எளிதாக  அமிலமாக மாறுகிறது. நாற்பது வயதுக்குப்பின் உருவாகும் குடல் அமிலத்தன்மைக்கு சீனி அளவுக்கு கெடுதலான இன்னொன்றுதான் இருக்கிறது, பால்.

நான் டீ அதிகமாக குடித்துவந்தேன். பின்னர் டீயின் அளவை குறைத்தேன். மாக்ரோபயாட்டிக்ஸ் ஆசானாகிய நித்யாவின் மாணவர் டாக்டர் தம்பான் எனக்கு அதன் விதிகளை சொல்லிக்கொடுத்தார். அதன்படி நான் அதிகமும் கருப்புகட்டி- பனைவெல்லமே – பயன்படுத்துகிறேன். விருதினருக்கு கொடுப்பதில்லை.  தப்பாக நினைக்கிறார்கள். அது செரிமானச்செயல்பாடு வழியாகச் செல்வதனால் உடலில் குவிவதில்லை. வயிற்றில் அமிலத்தன்மையை பனிவெல்லம் மிகவும் கட்டுப்படுத்துகிறது.

ஏதோ ஒரு இடத்தில் நீங்கள் வயிற்று அமிலக்கட்டுப்பாட்டுக்கு மாத்திரை பயன்படுத்துவதாக எழுதிருந்தீர்கள். அவை எல்லாமே கண்டிப்பாக சிறுநீரகத்துக்கு கெடுதல்செய்பவை என்றே டாக்டர் சொல்கிறார். எளிய மாத்திரைகள் நேரடியாகவே கால்ஷியப்படிவை உருவாக்குகின்றனவாம். அதற்கு பேசாமல் சீனி, பால் இரண்டையும் தவிர்க்கலாம். வயிறுமுட்ட உண்பதை தவிர்க்கலாம். இரவில் குறிப்பாக.

சமீப காலமாக சீன பச்சை டீ குடிக்க ஆரம்பித்தேன். வெறும் வெந்நீரில் பச்சை டீ இலை.  என்ன ஒரு அற்புதமான பானம்! 

ஜெ

 

மீட்சிகட்டுரை சிலிர்க வைத்தது !  அதை படிக்கும் போது விஷ்ணுபுரத்தில் நீங்கள் படைத்த வேததத்தன் பாத்திரம் ஏனோ நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை. 
 
அன்புடன்,
வினோத்
 

அன்புள்ள வினோத்,

நலம்தானே? மலேரியாவில் இருந்து விடுபடுவிட்டீர்கள் என நினைக்கிறேன். அந்தக்கட்டுரையில் என்னைக் கவர்ந்த விஷயம் மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே உருவான உறவுதான். சிகிழ்ச்சை ஒரு சேவை என்ற நிலை இருக்கும்போது மட்டுமே சாத்தியமாவது அது

ஜெ

 

கெ.பி.வினோத்

 

அன்புள்ள ஜெ

கங்காதரன்நாயரைப்பற்றிய உங்கள் பதிவை வாசித்தேன். அவர் ஒரு சிரந்த மருத்துவராகவேரிருக்கவேண்டும். கட்டுரை முடிவில் ஆயுர்வேதத்தின் வலிமை பலவீனம் இரண்டையும் பற்றி எழுதியிருந்தீர்கள். நான் என் சொந்த வாழ்க்கையில் ஆயுர்வேதத்தினால் பலமுறை பயன்பெற்றவன்.

உங்கள் கட்டுரையை வாசிக்கும்போது ஒன்று தோன்றியது, இத்தகைய அபூர்வமான ஞானத்தை எப்ப்டி பிரபலப்படுத்துவது? இதே நிலையில் கஷ்டப்படும் பிறருக்கு எப்பை இதைக் கொண்டுசேர்ப்பது? அலோபதி மருத்துவத்தில் அதற்கான அமைப்புகள் உள்ளன, இதழ்கள் உள்ளன. அவர்களுக்கு மருந்துகளை தரப்படுத்துவதற்கும் அமைப்புகள் உள்ளன

ஆயுர்வேதத்துக்கு அப்பை ஏதேனும் ‘தரப்படுத்தல் அளவை’ உள்ளதா? அத்தகைய மருந்துகளை பரவலாகக் கொண்டுசேர்க்க வேண்டும். எத்தனை மருத்துவர்கள் கங்காதரன் நாயர் மேற்கொண்டதுபோன்ற ஒரு விரதத்தை கடைப்பிடிக்கமுடியும்? ஒரு ஜோடிக்குழந்தைகளுக்காக ஒரு வருடத்தைச் செலவிட முடியும்?

சமீபத்தில் ஹிமாலயா நிறுவனம் சில ஆயுர்வேத மாத்திரைகளை வெளியிட்டிருப்பதைக் கவனித்தேன். அத்தகைய ‘பேக்கேஜிங்’ மற்றும் வினொயோகம் இன்று அவசியமாகதேவைப்படுகிறது .என்ன நினைக்கிறீர்கள்?

[பிகு: எனக்கு ஹிமாலயன் டிரக்ஸில் எந்த பங்கும் இல்லை))]

வெங்கட்

அன்புள்ள வெங்கட்

இது ஒரு முக்கியமான சிக்கல்தான். கங்காதரன் நாயர் சுபாஷ்-சுரேஷ் வாழும் இடத்துக்கு சில கிலோமீட்டர்கள் தள்ளித்தான் வாழ்கிறார். ஆனால் அந்தக்குழந்தைகளை அமெரிக்க டாக்டர் பார்த்த பிறகுதான் அவர் கேள்விப்படுகிறார்.  ஆயுர்வேத சிகிழ்ச்சையில் இன்றிருக்கும் முக்கியமான பிரச்சினை இது

ஆனால் ஆயுர்வேதம் அல்லது சித்த மருத்துவம் ஒருபோதும் அலோபதி போல தரப்படுத்தப்பட முடியாது. அவற்றின் அடிப்படைக் கோட்பாடே வேறு. இன்ன நோய்க்கு இன்னமருந்து என்னும் எளிமையான வாய்ப்பாடு ஆயுர்வேதத்தில் இல்லை. நோயாளியின் இயல்பு, வாழ்க்கைமுறை ,சூழல் ஆகிய பலவற்றையும் கருத்தில் கொண்டு அந்நோயாளிக்காகவே மருந்தை தயாரிக்க வேண்டியிருக்கிறது. ஆயுர்வேத மருந்துகளில் ஒரு சிறு பகுதியை மட்டுமே  தரப்படுத்தி பரவலாக வினியோகம் செய்ய முடியும். மையமான மருந்துகள் நோயாளி- மருத்துவர் உறவினால் உருவாக்கப்படுபவையே.

அதை கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை சிறப்பாகச் செய்து வருகிறது. ஹிமாலயன் குறித்து எனக்கு தெரியாது. ஆனால் கோட்டக்கல் மருந்துகள் மிக நம்பகமானவை. எனக்கும் பங்குகள் ஏதும் இல்லை

ஜெ
 

மீட்சி

மனமெனும் நோய்..

உடல்மனம்

நோய்:கடிதங்கள்

நோய்:ஒருகடிதம்

ஹோமியோபதி:ஒருகடிதம்

மேயோ கிளினிக்:கடிதங்கள்

மேயோகிளினிக் :உடல்நலக்கையேடு

மாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கை

இயற்கை உணவு : என் அனுபவம்

நவீன மருத்துவம் மேலும் இரு கடிதங்கள்

கொட்டம்சுக்காதி

நவீன மருத்துவம்- இன்னொரு கடிதம்

நன்றி !  காய்சல் சரியாகிவிட்டது. உடம்பில் பழைய வலு வர இன்னும் ஓரிரு வாரங்கள் ஆகலாம்..

 

மிகச் சரியாக சொன்னீர்கள். எனக்கு வந்தது மலேரியா என்று இரத்த பரிசோதனையிலிருந்து நிரூபணமானது. மேலும் மலேரியாவின் அறிகுறிகளான மாலையில் கடுமையான காய்ச்சல், அதனுடன் கட்டுப்படுத்த முடியாத உடல் நடுக்கம் எல்லாம் இருந்தது.  நான் சென்ற மருத்துவ மனையில் என்னை சாத்தியமான அத்தனை சோதனைகளுக்கும் உட்படுத்தினார்கள்.  இதய இயக்கம் பதிவு செய்யும் “ Echo test “ உட்பட.   (discharge ஆகும் போது அது பதிவு செய்யப்பட்ட CD யும் கொடுத்தார்கள்).  மூன்று நாட்கள் – Rs. 42,000.  insurance இருந்தால் தப்பித்தேன். 

 

இதில் சிறப்பு என்னவென்றால்,  அவர்கள் எனக்கு மருந்து கொடுத்தது மூன்று வேளை மட்டுமே.  மலேரியாவுக்கான மொத்த மருத்துவமே அவ்வளவு தான் என்று பிற்பாடு என் தந்தை சொன்னார்.  சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு இது வந்த போது அரசு மருத்துவமனையில் அந்த மூன்று நேர மருந்தைக் கொடுத்து அப்போதே அனுப்பிவிட்டார்களாம்.  மலேரியா ஒரு செவ்வியல் தன்மை கொண்ட வியாதியாக எனக்குப் படுகிறது. 

 

இந்த மூன்று நாள் மருத்துவமனை வாசம் எனக்கு பல புதிய விஷயங்களை காண்பித்தது.  முதலில் என்னை பரிசோதித்த மூத்த மருத்துவர் படுக்கையில் இடது பக்கம் தலையை திருப்பச்சொன்னார்.  திருப்பினேன்.  வாய் வழியாக மூச்சு விடச் சொன்னார்.  எனது வயிற்றின் இடது புறத்தை மெல்ல அமுக்கினார்.  அவரது முகத்தில் ஆச்சரியம் கலந்த மகிழ்சி!  அவருடன் வந்த சிஷ்ய மருத்துவர்ளை அமுக்கிப்பார்க்கச் சொன்னார்.  அவர்கள் முகத்திலும் அதே உணர்ச்சி.  “என்ன ? வயிற்றுக்குள் குழந்தையை கண்டு பிடித்தீர்களா ? “ என்று கேட்டேன்.  எல்லோரும் சிரித்தார்கள்.  “உங்களது spleen வீங்கியுள்ளது –  ஓரு வாரத்திற்கு மேலாக நீங்கள் காய்சலை பொருட்படுத்தாமல் இருந்தது தான் காரணம் “என்றார். பிற்பாடு, Echo test- ன் முடிவும் இது தான் !

 

ஆக, மருத்துவர்கள் அனைத்தும் அறிந்தவர்கள்.  மருத்துவ மனைகள் வியாபார நோக்கில் இயங்குவது தான் பிரச்சனை எனப்படுகிறது. அன்று அந்த மூத்த மருத்துவரின் செய்கைகளைக் கண்ட போது, எனக்கு தென் திருவிதாங்கூரின் புகழ்பெற்ற வர்மாணிகள் ஞாபகம் வந்தார்கள்.  அவர்கள் மர்ம ஸ்தானங்களில் சுண்டி உடலுறுப்புகளின் செய்கைகளை நிர்ணயிக்கிறார்கள். இவர்கள் அதே செய்து மருத்துவம் செய்கிறார்கள். 

 

 

Discharge ஆனபின் ஐந்து நாள் கழிந்து தன்னை வந்து பார்க்ச் சொன்னார்.   இரண்டு வாரம் கழிந்து தான் எனக்கு சாத்தியமானது.  நான் தேறிவருவருவதாக சொன்ன அவர். எனது சிறுநீரில் பாக்டீரியா இருப்பதாகவும், அதற்காக மூன்று மாதம் மருந்து சாப்பிட வேண்டும் என்றும் சொல்லி மருந்து எழுதிக்கொடுத்தார்.  “டாக்டர், சிறுநீரில் பாக்டீரியா அல்லாமல் என்ன எதிர்பார்கிறீர்கள் “ என்ற என் அடிப்படைக் கேள்விக்கு அவர் பதில் தரவில்லை.  அவர் எழுதிய மருந்தை நானும் வாங்கவில்லை.

முந்தைய கட்டுரைஊமைச்செந்நாய் ஓர் எதிர்விமரிசனம்
அடுத்த கட்டுரைபாலகுமாரன்