கத்தாழ கண்ணாலே

ஒரு குத்துப்பாட்டு கேட்டேன். ‘கத்தாழக் கண்ணாலே குத்தாதே நீ என்னெ..’. நல்ல பாடல். அதன் வரிகள் குத்துப்பாடல்களுக்கு உண்டான வழக்கமான வார்த்தைகளினால் உருவானவை. ஆனால் அதன் மெட்டமைப்பிலும் இசைச்சேர்ப்பிலும் ஒலிப்பதிவிலும் உள்ள நுட்பம் மீண்டும் மீண்டும் அதைக் கேட்கவைத்தது. மூன்று மெட்டுகள் ஒன்றுடன் ஒன்று தழுவிச்செல்லும் பாடல் இது. பாடலின் மெட்டுக்கு அப்பால் ஷெனாய் ஒலி ஒரு மெட்டு, பெண்குரலின் மெல்லிய ஹம்மிங் இன்னொரு மெட்டு. ஒரு குத்துப்பாட்டில் இத்தகைய நுட்பமான கற்பனையும் கடும் உழைப்பும் இருப்பது வியப்புக்குரியது.

இதே இசையமைப்பாளரின் ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்’ இதேபோல நுட்பமான ஒரு நல்ல பாடல். இப்பாடல்களை படமாக்கிய விதமும் நன்று. நிர்வாணமோ ரசாபாசமோ அதிகமில்லாமல் அசிங்கமான அசைவுகள் இல்லாமல் நளினமான துள்ளலான அசைவுகளினாலான நடனம்.

பொதுவாக ‘நல்ல’ படம் பார்க்கிறவர்கள் நடுவே குத்துப்பாடல்கள் ‘கெட்டவை’ என்று ஒரு எண்ணம் இருக்கின்றது. திரைப்பட இயக்குநர்களுக்கே கூட அப்படி ஓர் எண்ணம் உண்டு. குத்து பாட்டு இல்லாத படம் என்ற விளம்பரங்களை நாம் அதிகம் கண்டிருக்கிறோம். வெளிநாட்டு  குத்துப்பாடல்களை ரசிப்பது உயர் கலாசாரமாகவும் உள்நாட்டு குத்துப் பாடல்களை ரசிப்பது கீழ்க் கலாசாரமாகவும் நம் சூழலில் கருதப்படுகிறது.

குத்துப்பாடல்கள் ஒரு பண்பாட்டின் தவிர்க்க முடியாத அம்சம். மக்களுக்கு உற்சாகமும் களியாட்டமும் எப்போதும் தேவையாகின்றன. நேரடியாக சாத்தியமில்லாவிட்டால் கூட கற்பனையில் தேவைப்படுகிறது. அதன் முக்கியமான கருவி குத்துப்பாட்டு. தெம்மாங்குப் பாட்டுகள் ,பைலோ பாட்டுகள் அன்றைய குத்துப்பாட்டுகளே. கேரளத்தில் பலவகையான குத்துப்பாட்டுகள் உண்டு. குத்துப்பாட்டு என்றால் ‘போகத்தை நினைவுறுத்துவதும் நடனத்தன்மை கொண்டதுமான இசைப்பாடல்’ என்று சொல்லலாம்.

ஒன்று கவனித்திருக்கிறேன். நல்ல குத்துப்பாட்டில் இனிய மெல்லிசை [மெலொடி] ஒன்று இருக்கும். அது வேகமான தாளத்தால் சூழப்பட்டு அதிர்ந்து கொண்டிருக்கும். சொல்லப்போனால் நல்ல குத்துப்பாட்டில் ஒரு சோக மனநிலையும் எப்படியோ இழையோடுகிறது, அது அந்த மெல்லிசைமெட்டின் விளைவு. ‘கத்தாழைக் கண்ணாலே’ ஓர் இனிய மெட்டு. அதை அப்படியே இன்னிசைப்பாடலாக போட்டுவிடலாம்.

இளையராஜா அவரது புகழ்பெற்ற ‘நிலா அது வானத்து மேலே’ பாடலை முதலில் தாலாட்டு மெட்டாகப் போட்டதாகவும் பின்னர் வேறு மெட்டில் தாலாட்டு [தென்பாண்டி சீமையிலே] அமைந்துவிட்டதனால் இதை குத்துப்பாட்டாக ஆக்கியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்

குத்துப்பாட்டுகளை நான் எப்போதுமே கவனித்து வந்திருக்கிறேன். என் உற்சாகமான மனநிலைகளில் அவை பிணைந்திருக்கின்றன. வாயில் அப்பாடல்கள் ஒலிப்பது என் இயல்பு. என் மனைவிதான் என்னை எச்சரித்தபடியே இருப்பாள். என்னை சந்திக்க வரும் வாசகர்களும் நண்பர்களும் என்னைப்பற்றி தப்பான எண்ணத்தை கொண்டுவிடுவார்கள் என. என்னை ‘சீரியஸ்’ ஆன ஆள் என்று எண்ணி வரும் வாசகர்களே அதிகம். என் வாழ்நாளில் அதிகபட்சம் மொத்தம் பத்துமணி நேரம் ‘சீரியஸ்’ ஆக இருந்திருக்க மாட்டேன். என் நெருக்கமான நண்பர்களுக்கு நான் குத்துப்பாட்டு முனகாமலிருந்தால்தான் ஆச்சரியம் ஏற்படும்.

குத்துப்பாட்டு நம்மை ஒருநாள் முழுக்க உற்சாகமான மனநிலையில் வைத்திருக்கிறது. அதில் உள்ள போகம் பற்றிய வரிகளைப் பற்றி மிதமிஞ்சி கவலைப்படுவதும் கொதிப்பதும் தேவையில்லை என்பதே என் கருத்து. போகம் எப்போதுமே பாட்டில் அடியோட்டமாக ஓடிக் கொண்டிருக்கும் சரடு. நம் நாட்டுப்புறப்பாடல்களில் உள்ள அளவுக்கு காமம் இன்னும் பிரபலக் கலையில் வரவில்லை. அது ஒருவகை அக வெளிப்பாடு. அதில் பெண்ணடிமைக் கருத்துக்கள் இருந்தால் கண்டிப்பது நல்ல காரியம், அவ்வளவுதான்.

எனினும் அப்பாடல்களைப் பற்றி தகவல்கள் சேகரிப்பதும் நினைவில் வைத்திருப்பதும் என் வழக்கம் அல்ல. அவை அப்படியே என் வழியாக கடந்து போய்விடும். இனிமேல் கொஞ்சநாள் ‘கத்தாழ கண்ணாலே’ தான்.

நினைவில் தங்கிய நல்ல குத்துப்பாடல்கள் சில. பிறவற்றை நண்பர்கள் சொன்னால் நினைவுபடுத்தி ரசிக்கலாம்.

1. மாமா மாமா மாமா! ஏம்மா ஏம்மா ஏம்மா..

2 ஓ.ரசிக்கும் சீமானே வா…

3. குல்லாபோட்ட நவாப்பு செல்லாதுங்க ஜவாப்பு

4 சின்னக்குட்டி நாத்தனா சில்லறய மாத்துனா

5.சித்தாட கட்டிகிட்டு…

6. என்னடி ராக்கம்மா புல்லாக்கு நெளிப்பு

7.  இன்னாடி முனியம்மா உன் கண்ணுல மையி

8.  தேன்கூடு நல்ல தேன்கூடு..

9  நினைத்தாலே இனிக்கும் சுகமே

10 ஆட்டமா தேரோட்டமா?

11. ஆசை அதிகம் வச்சு…

12. ஆசைய காத்துல தூது விட்டு…

13  பொன்மேனி உருகுதே

14 . நிலா அது வானத்து மேலே

15  ஆலகால விஷம் சிவனே..

16  குன்றத்துல கோயிலைக் கட்டி

17. வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்

18 கத்தாழ கண்ணாலே குத்தாதே நீ என்னை

முந்தைய கட்டுரைகேரள வன்முறைஅரசியல்
அடுத்த கட்டுரைகுத்துப்பாட்டு , இரு கடிதங்கள்