பண்ணையார்

மாயவரத்தைச் சேர்ந்த ராஜசேகரன் [தாசில் பண்ணை] என்னுடைய நண்பர், வாசகர். ஆச்சாரிய ஹ்ருதயம் இனியவிளக்கம், சைவப்பெருவெளியில் காலம் இரு நூல்களின் ஆசிரியர். தமிழ்நாவலுக்கு நூற்றாண்டுவிழாவை மாயவரம் வேதநாயகம்பிள்ளை நினைவுநாளும் கொண்டாடியவர். விஷ்ணுபுரம் வெளிவந்த காலத்தில் அதை மிக ரசித்த அவர் அதைப்பற்றி விஷ்ணுபுரம் ஒரு பார்வை என்ற நூலையும் எழுதினார்

1999 செப்டெம்பர் ஒன்பதாம் தேதி கல்கி நூற்றாண்டுவிழாவை அவர் மாயவரத்தில் பெரிய அளவில் நடத்தினார். கூடவே விஷ்ணுபுரத்துக்கு ஒரு விமர்சனக்கூட்டமும் ஏற்பாடுசெய்தார். இரண்டுக்கும் நான் அழைக்கப்பட்டு சென்றிருந்தேன். சா.கந்தசாமி, சிவசங்கரி போன்ற எழுத்தாளர்கள் கல்கி நூற்றாண்டு விழாவுக்காக வந்திருந்தார்கள். மூப்பனாரும் தருமபுரம் ஆதீனமும் விழாத்தலைவர்கள்.

கல்கி படத்துடன் ஓர் ஊர்வலம். அதில் நான் சென்றபோது என்னருகே சா. கந்தசாமி வந்தார். நான் ‘யானையவிட்டு கொஞ்சம் தள்ளி வாங்க’ என்றேன். ‘ஏன்?’ என்றார் கந்தசாமி. ‘…இல்ல நாமெல்லாம் பாரதி பரம்பரைல்ல?’ என்றேன். மறுவாரம் ஜூனியர் விகடனில் அந்தப் பேச்சு டயலாக் பகுதியில் வந்திருந்தது. யாரோ அருகே காதுடன் நின்றிருக்கிறார்கள்.

கல்கியின் வீட்டை வாங்கி ஒரு நினைவில்லம் அமைப்பது அப்போதைய திட்டமாக இருந்தது . அதற்கான முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் சில சட்டச்சிக்கல்களால்அது நிகழவில்லை என பின்னர் அறிந்தேன்.அதன்பொருட்டு நாங்கள் ஒரு குழுவாக கல்கியின் சொந்த ஊரான புத்த மங்கலத்துக்குச் சென்றிருந்தோம். ராஜசேகரன் என்னை மூப்பனாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். மூப்பனார் அன்புடன் என் தோளில் கை வைத்து ‘சின்ன வயசா இருக்கீங்க’ என்று சிரித்தார்.

புத்தமங்கலத்தை நெருங்கியதும் மூப்பனார் அவரது கட்சிக்காரர்களை முழுக்க ஊருக்கு வெளியே நிறுத்திவிட்டார். எழுத்தாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் மட்டும் உள்ளே சென்றால்போதும் என்று சொல்லிவிட்டார்.

புத்தமங்கலம் காவேரிக்கரை ஓர சிற்றூர்களுக்கே உரிய அமைப்புள்ள ஊர் பழமை மாறாமல் இருந்தது. ஓர் எல்லையில் சிறிய சிவன் கோயில் மறு எல்லையில் சிறிய விஷ்ணுகோயில். இருபக்கமும் திண்ணை வைத்து ரேழியும் கூடமும் அங்கணமும் கொண்ட நீளமான வீடுகள். நாழியோடு போட்ட தாழ்ந்த கூரைகள். புழுதித்தரை. தஞ்சை அக்ரஹாரங்கள் அனைத்துமே எப்படியோ காவேரியை நினைவுக்குக் கொண்டு வருகின்றன

அந்த சின்ன ஊரில் இருந்து கிளம்பிய கல்கி தமிழகத்தின் ஒரு பெருநிகழ்வாக ஆன கதையை நினைத்துக்கொண்டிருந்தேன். அவரது காலகட்டத்தில் தமிழகமே அவரைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தது. அதற்குக் காரணம் அவரது எழுத்து மட்டுமல்ல. தேசவிடுதலைக்காக அவர் செய்த தியாகங்கள். அவரது சமூகசீர்திருத்தப் பணிகள். அவரது இசைத்தொண்டு. அவருக்குப்பின் அவரைப்போல சமகாலப்புகழ் கொண்ட ஓர் இலக்கியவாதி உருவாகவேயில்லை. காரணம் அதன்பின்பு வந்தவர்களெல்லாம் எழுதமட்டுமே செய்தார்கள்

அப்போது ஓர் ஆச்சரியமான விஷயம் நடந்தது. புத்தமங்கலத்தில் தையல்தொழில் செய்யும் ஒருவர் என்னை அடையாளம் கண்டுகொண்டு அருகே வந்து என்னுடைய நாவல்களைப் படித்திருப்பதாகச் சொன்னார். விஷ்ணுபுரம்கூட வாசித்திருந்தார். அன்று விஷ்ணுபுரத்தைத் தமிழகத்தின் மிகத்தேர்ந்த சிலவாசகர்கள்தான் வாசித்திருந்தார்கள். அது எனக்கு அன்று புல்லரிக்கச்செய்யும் அனுபவமாக இருந்தது. கல்கியின் ஊரிலேயே எனக்கு ஒரு வாசகர்.

கல்கி சிறுவனாக இருந்த காலத்தில் அவரது வீட்டுத் திண்ணையில் கதாகாலட்சேபங்கள் செய்வதுண்டு என்று பொன்னியின் புதல்வன் நூலில் அவரது வரலாற்றாசிரியரான சுந்தா எழுதியிருக்கிறார். அந்தத் திண்ணையைப் பார்த்தபோது சிறிய உடலுக்குள் ஊக்கம் கொப்பளித்த அந்த அபூர்வமான சிறுவனைப் பார்க்க முடிந்தது.

அந்த வீட்டில் கல்கியின் சித்திவழி உறவினர்கள் இருந்தார்கள். அங்கே சுவர்களில் இருந்த சென்ற நூற்றண்டு கறுப்புவெள்ளை ஓவியங்களை இன்றும் நினைவுகூர்கிறேன். பெரும்பாலான பாட்டிதாத்தாக்கள் காமிராவைநோக்கிப் பதைப்புடன் பார்த்தார்கள். உடல்கள் விரைப்புடன் நின்றிருந்தன. காமிரா ஒரு காலத்துளை. அவர்கள் அந்தச் சிறு துளை வழியாக இருபதாம் நூற்றாண்டைப்பார்ப்பதுபோலிருந்தது. அத்துளை வழியாக நாம் சென்ற நூற்றாண்டைப் பார்ப்பதுபோல மறுகணம் தோன்றியது.

அங்கே ஒருபுகைப்படம் எடுத்துக்கொண்டோம். அனைவரும் வரிசையாக அமர்ந்துகொண்டார்கள். நான் அச்சூழலுக்குக் கொஞ்சம் அன்னியமாக உணர்ந்ததனாலும் என் பராக்கு பார்க்கும் புத்தியாலும் கொஞ்சம் விலகிச்சென்றுவிட்டேன். மூப்பனார் என்னை நினைவுகூர்ந்து ‘எங்க எழுத்தாளர் தம்பி எங்க?’ என்று கேட்டார். யார் யாரோ கூப்பிட்டார்கள். நான் சென்றபோது இடமில்லை. மூப்பனார். அவரது மடியில் என்னை அமரச்செய்தார். அடுத்த புகைப்படத்துக்கு நான் சங்கடத்துடன் சா.கந்தசாமியின் மடிமீது அமர்ந்துகொண்டேன். அந்த சங்கடச்சிரிப்பு படம் கல்கியில் பிரசுரமானது.

மூப்பனார் என்னை இருமுறை வாய்தவறுதலாக ‘ஜெயகாந்தன் தம்பி’ என்று சொன்னார். பிறகு ‘ஜெயகாந்தனை நான் உங்க வயசிலே பாத்திருக்கேன்’ என்றார். நான் அவரிடம் புன்னகையிலேயே அதிகமும் பேசினேன்.

அடுத்த நாள் காலையில் ஒரு திருமணம். அந்தக் கல்கி நிகழ்ச்சியில் வந்திருந்த ஒரு இலக்கிய ஆர்வலர் இல்லத்தில். அவர் எல்லாரையும் வருந்தி அழைக்க செல்லும்படியாயிற்று. அன்று மூப்பனாரின் ஓர் இயல்பை நான் கவனித்தேன். அவர் திருமண மண்டபத்தின் உள்ளே நுழையும்போது உள்ளூர் நாதஸ்வரக்கலைஞர் வெளியே நின்று வாசித்துக்கொண்டிருந்தார். வழக்கம்போல எவருமே அவரைப் பொருட்படுத்தவில்லை. மூப்பனார் அவர் முன் நின்றார். கொஞ்சநேரத்தில் யாரோ நாற்காலி போட்டார்கள். கண்மூடி இருபதுநிமிடம் ஒரு கீர்த்தனையை அவர் வாசிக்கக் கேட்டார். இன்னொரு கீர்த்தனை வாசிக்கச்சொல்லி கேட்டபின் பின்பக்கம் கைநீட்டினார். எவரோ ரூபாயை அவர் கையில் வைத்தார்கள். அவருக்குப் போர்த்தப்பட்ட ஒரு சால்வையை அந்த நாதஸ்வரக் கலைஞருக்குப் போர்த்தி ரகசியமாக கையில் நூறுரூபாய்த்தாள்களை செருகியபின் உள்ளே சென்றார்.

அந்த நாதஸ்வரக் கலைஞர் கண்ணீர் மல்கி நிற்பதைக் கண்டேன். அவரது வாழ்க்கையின் முதல் அங்கீகாரமாக இருக்கலாம்,கடைசி அங்கீகாரமும் அதுவாகக்கூட இருக்கலாம். அது ஒரு நிலப்பிரபுத்துவ காலப் பண்புநலன். ஆனால் அது ஒரு உயர்ந்த விஷயமாகவே எனக்குப்பட்டது. மூப்பனார் தஞ்சையில் எல்லா நிலையிலும் ஒரு பண்ணையாராகவே தெரிந்தார். தோரணை,பேச்சு எல்லாமே. நிலப்பிரபுத்துவம் இன்று இல்லை. அது சென்ற காலத்தின் அமைப்பு ஆனால் நெடுங்காலம் நீடித்த ஓர் அமைப்பு அதற்கான விழுமியங்களையும் நெறிகளையும்கூடத்தான் உருவாக்கி வைத்திருக்கும். நிலப்பிரபுத்துவகாலத்தின் எதிர்மறை அம்சங்களைக் கணக்கில் கொள்ளும்போது அதன் சாதமகான அம்சங்களை நாம் மறந்துவிடுகிறோம்.

நிலப்பிரபுத்துவம் கலைகளையும் இலக்கியத்தையும் பேணியது. அதை தன் கடமையாகவும் ஆசாரமாகவும் சிறப்பாகவும் எண்ணியது. நாம் இன்று கொண்டாடும் பேரிலக்கியங்களையும் பெரும் கலைச்செல்வங்களையும் உருவாக்கியது நிலப்பிரபுத்துவமே. இன்று நிலப்பிரபுத்துவத்தை முதலாளித்துவத்தாலும் ஜனநாயகத்தாலும் நாம் நீக்கம் செய்திருக்கிறோம். அப்போது நிலப்பிரபுத்துவ ரசனைகளையும் விழுமியங்களையும் விட மேலான ரசனையையும் விழுமியங்களையும் நாம் உருவாக்கியிருக்க வேண்டும். அது நிகழவில்லை.

இன்று கலைகளும் இலக்கியமும் அவற்றில் அக்கறையே இல்லாத பெரும்பான்மையினரின் தயவுக்கு விடப்பட்டிருக்கின்றன. நிலப்பிரபுத்துவம் சரிய ஆரம்பித்த ஒரு நூற்றாண்டுக்குள்ளாகவே இங்கே கலையிலக்கியங்களிலும் மரபார்ந்த சிந்தனைகளிலும் பெரும்சரிவு காணக்கிடைக்கிறது. தொழில்நுட்பத்தையும் கேளிக்கையையும் தவிர வேறெதற்கும் சமூக ஆதரவில்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.

இந்நிலையை இதன் தொடக்க காலகட்டத்திலேயே பாரதி சுட்டிக்காட்டியிருக்கிறார். பிரபுக்களின் காலம் மறைந்தது, இனி உயர்கலைகளையும் இலக்கியத்தையும் பொதுமக்களே காக்கவேண்டும் என்று தன் நூல் வெளியீட்டொன்றின் முன்னுரையில் நம்பிக்கையுடன் அவர் கோருகிறார். பெரும் ஏமாற்றத்தை அந்த பொதுமக்கள் அவருக்கு அளித்தனர். அதையும் அவர் பதிவு செய்தார்.

அதன்பின் மூப்பனார் என்னுடன் சிலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டிருக்கிறார். பின் தொடரும் நிழல் , கன்யாகுமரி இருநாவல்களையும் படித்து சிறிய கடிதங்கள் எழுதினார். தொலைபேசியில் பேசும்போது ‘உங்க கிட்ட ஜெயகாந்தனோட அம்சமிருக்குன்னு சொன்னேன் இல்ல…எழுத்தில ஒண்ணும் இல்ல. பர்சனாலிட்டியிலே இருக்கு…’ என்றார். என் மனைவியின் ஊர் வடபாதிமங்கலம் அருகே புள்ளமங்கலம் என்றபோது மகிழ்ச்சியாகச் சிரித்து ‘அந்த ஊரிலே அத்தனை குடும்பமும் நமக்குத் தெரிஞ்சதுதான்…ஊரிலே இருக்கிறப்ப ஒருதடவை வாங்க …ஊரைக் காட்டறேன்’ என்றார்.

ஒருமுறை அவர் என்னை அழைத்தபோது நான் திருவையாறு இசைநிகழ்ச்சியில் இருந்தேன். இரண்டுநாள் முன்பு அவர் வந்து அந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்திருந்தார். அவரது குடும்பம்தான் அவ்விழா தொடங்கிய காலம் முதலே பந்தல்செலவைச் செய்து வருகிறது. நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்றபோது ‘சொல்லியிருக்கலாமே…’ என்று வருந்தினார். அவர் அப்போது சென்னைக்குச் சென்றுவிட்டிருந்தார்.

மூப்பனார் இந்தியாவின் பிரதமாராக ஒரு வாய்ப்பு வந்தது. அது மயிரிழையில் தவறிச்சென்றது. அதற்குக் காரணம் அவரது ஊர்க்காரரான மு.கருணாநிதி அவர்களின் உடன்பாடின்மை. அதன் பின் சிலமாதங்கள் கழித்து என் சிறுகதை ஒன்றை வாசித்துவிட்டுக் கூப்பிட்டார். அவர் பேசும்போது மிகக்கவனமாக குரலை கவனித்தாலொழிய ஒன்றும் புரியாது. ஆகவே நான் பதற்றமாகவே இருப்பேன். ‘பிரதமரா உங்களப் பாக்கமுடியாம போச்சு’ என்று சொன்னேன். சிரித்தபடி ‘வாங்க பாப்போம்…ஒரு நாவலா எழுதற அளவுக்கு விஷயமிருக்கு’ என்றார்.

அவர் என்னை மீண்டும் சந்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் தயங்கினேன். அவர் ஒருமுறை நாகர்கோயில் வந்தபோது அவரது கட்சிக்காரர் ஒருவர் என்னை அவர் வந்து சந்திக்கலாமா என்று கேட்க வந்தார். அப்போது நான் ஊரில் இல்லை. நான் அவரை மீண்டும் சந்தித்ததே இல்லை.

அதற்குக் காரணம் அவர் அப்போதிருந்த அரசியல் உச்சநிலை. பெரியமனிதர்களைச் சந்திப்பது குறித்து நடுத்தரவர்க்கத்தினனுக்கு இருக்கும் இயல்பான தயக்கம். அதிகார மையங்களை நான் எப்போதும் தவிர்த்தே வந்திருக்கிறேன்.ஆனால் அவருடனான என்னுடைய பேச்சுக்களில் அதற்கான முகாந்திரமே தென்பட்டதில்லை. அத்தகைய தயக்கத்துக்கே அவரிடம் அவசியமில்லை என்று பின்னர் ஜெயகாந்தன் சொன்னபோது கொஞ்சம் குற்றவுணர்ச்சி ஏற்பட்டது. சிவசங்கரி, மாலன் போன்ற பல எழுத்தாளர்கள் அவரிடம் மிக நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். அவருக்கு எழுத்தாளர்கள் மீது பிரியமும் மதிப்பும் இருந்திருக்கிறது.

மூப்பனாரின் அரசியலின் எல்லா எதிர்மறை அம்சங்களும் அவர் ஒரு பண்ணையார் என்பதனால் வந்தது என்பார்கள். அவரது ஆளுமையின் எல்லா நல்ல அம்சங்களும் அவர் பண்ணையார் என்பதில் இருந்து வந்ததுதான் என நான் நினைத்துக்கொள்வதுண்டு.

;

முந்தைய கட்டுரைஅசோகமித்திரனின் இரு கதைகள்
அடுத்த கட்டுரைபொதுவெளியில் பெண்