நடைபயணி

2002 ல் சிவகாசியில் நான் ஒரு கல்லூரியில் பேசுவதற்காகச் சென்றிருந்தேன். கல்லூரிகளில் பேசுவதென்பது மிகத் துன்பமான அனுபவம். அக்கல்லூரியில் நமக்குத்தெரிந்த ,நம் மீது உண்மையான பிரியம் கொண்ட வாசகர் எவரேனும் இல்லை என்றால் கல்லூரிகளைத் தவிர்ப்பதே நல்லது என்பது என் அனுபவம்.

ஏனென்றால் தமிழகத்துக்கல்லூரிகளைப்போலப் பாமரர்கள் உலவும் இடத்தை எங்குமே பார்க்கமுடியாது. வேறு எந்த அலுவலகத்திலும், ஏன் கருப்பட்டியோ கருவாடோ மொத்தவிற்பனைசெய்யும் இடத்தில்கூட, ஒரு குறைந்தபட்ச அறிவார்ந்த தன்மை இருக்கும். தினத்தந்தி வாசித்துவிட்டாவது தங்கள் கருத்துக்களைச் சொல்வார்கள். சென்ற இருபதாண்டுகளில் எழுத்து வாசிப்பு விவாதம் எதிலும் குறைந்ந்தபட்ச ஈடுபாடில்லாத, வேறு எந்த வேலைக்கும் லாயக்கில்லாத காரணத்தாலேயே ஆசிரியர்களாக வந்த பெருங்கூட்டம் நம் கல்லூரிகளை ஆக்ரமித்திருக்கிறது

அதைவிட தனியார் கல்லூரிகளின் தாளாளர்கள் என்ற அசட்டுப் பண்ணையார்களின் அலம்பல் தாங்கமுடியாது. அனேகமாக அவர் ஏதேனும் வியாபாரியாக, அல்லது அரசியல்வாதியாக இருப்பார். அந்தக்கல்லூரி அவரது கல்விவணிகவளாகமாக இருக்கும். சிலசமயம் அவர் பரம்பரைத் தாளாளராக இருப்பார். கல்லூரியை ஒரு கௌரவத்துக்காக நடத்திக்கொண்டிருப்பார்

அந்த வளாகத்துக்குள் அவர்கள் ஒருவகைக் குறுநில மன்னர்கள். அவர்களின் தாழ்வுணர்ச்சி ஊறிய மனத்துக்கு ஆறுதலாக அங்கே உள்ள அனைவருமே சந்தனம் பூசிவிட்டபடியே இருப்பார்கள். ஒருகட்டத்தில் அந்தப்புகழுரைகளை அவர்களே நம்பி தங்களை சேரசோழபாண்டிய வம்சம் என நினைத்துக்கொள்வார்கள். கல்லூரிக்குள் எந்தக் கல்வியாளர் வந்தாலும், எந்த சிந்தனையாளர் வந்தாலும் அவர்களை தங்களை விட ஒருபடி கீழே அமரச்செய்து அதைத் தங்களுக்குக் கிடைத்த வெற்றியாக எண்ணிக் குதூகலிப்பார்கள். அந்த சாதனையாளரை விட தாங்கள் ஒருபடி மேல் என்று தங்கள் மாணவர்களுக்குக் காட்டிவிட்டதாக எண்ணிக்கொள்வார்கள்

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவர்களின் அபத்தமான தந்திரங்களை எழுத்தாளர்கள் ஒரு சபை நாகரீகம் கருதி ஏற்றுக்கொண்டு பேசாமல் சென்றுவிடுவார்கள். பிரபஞ்சன் அவருக்கிழைக்கப்பட்ட நுண்ணிய அவமதிப்புகளை சொல்லியிருக்கிறார். சுந்தர ராமசாமி அவ்வாறு அவமதிக்கப்படுவதை நானே கண்டிருக்கிறேன். மேடைக்கு ஓர் அசட்டு வைஸ்சான்ஸலர் வெள்ளைஅங்கியும் தொப்பியுமாக நுழைந்தபோது நாலைந்து அல்லக்கைகள் சுந்தரராமசாமியை வலுக்கட்டாயமாக எழுப்பி நிற்கவைத்துவிட்டதைக் கண்டு நான் கொதித்திருக்கிறேன்.

கல்லூரிகளில் பல்கலை மானியக்குழு கணக்கு காண்பிப்பதற்காக அமைக்கப்படும் இலக்கியநிகழ்ச்சிகளுக்குச் சென்றால் வெள்ளந்தியான பேராசிரியர்களையும் வெள்ளாட்டுக்கூட்டம் போன்ற மாணவர்களையும் கண்டு இந்தியாமீதும் தமிழ்மீதும் நம்பிக்கையை இழக்க நேரிடும். சிவகாசியில் எனக்கு அதுதான் நிகழ்ந்தது. என்னை மேடையில் அமரச்செய்து நாடகத்தனமாக ஏதோ சொல்லி வரவேற்றார்கள். நான் உரையாற்றி முடித்ததும் ‘கலை கலைக்காகவா மக்களுக்காகவா?’ ‘நீங்கள் ஏன் பாமரரும் படித்துணர்வதுபோல எழுதக்கூடாது?’ என்பதுபோன்று எல்லா கல்லூரிகளிலும் எல்லா அசடுகளும் ஐம்பதாண்டுக்காலமாகக் கேட்டுவரும் கேள்விகள்

தலைமை உரை நடந்துகொண்டிருந்தபோது வெள்ளைவெள்ளை உடையில் தாளாளர் உள்ளே நுழைந்தார். அதற்கு முன்னரே ‘நாட்டாமை கெளம்பியாச்சு..’ போன்ற அறிவிப்புகள் வெளியே ஒலித்ததை நான் கேட்டேன். மெல்ல, மிகமெல்ல, மிகமிகமெல்ல தாளாளர் நடந்து வந்துகொண்டே இருந்தார்.. சினிமாவின் ’ஸ்லோமோஷன்’ போல ஒரு மனிதர் நடக்கமுடியுமென்பதே எனக்கு திகிலாக இருந்தது. அவர் வந்ததும் அரங்கமே எழுந்து நின்றது. தலைவர் பேச்சை நிறுத்திவிட்டுத் தாளாளர் புகழ்பாட ஆரம்பித்தார்.

அவர் அவ்வளவு தாமதமாக, அரங்கின் மறு எல்லையில் தோன்றியதன் நோக்கமே எல்லாரையும் எழுந்துநிற்கச்செய்வதுதான். இரண்டாம்தர அரசியல்வாதிகள் எப்போதும் செய்யும் உத்தி அது. என் ரத்தம் முழுக்க தலைக்குள் பாய்ந்தது. நான் எழுந்திருக்கவில்லை. மேடையில் இறுக்கமாகக் கைகளைக் கட்டியபடி அமர்ந்திருந்தேன்.

தாளாளர் என்னைப்பார்த்தார். ஓரக்கண் பார்வை கூர்மையாக என்னை வருடிச்சென்றது. நேராகச்சென்று அவருக்குப் போடப்பட்டிருந்த சிம்மாசனம் போன்ற இருக்கையில் அமர்ந்தார். அவர் உள்ளே வருவதற்கு முன் அந்த இருக்கை மேடையில் இருக்கவில்லை. ஒரேபோலத் தோன்றிய சாதாரண இருக்கைகள்தான் இருந்தன. அவர் அமர்ந்ததும் தாளாளர் அவருடைய கடுமையான பணிச்சுமைகளுக்கு நடுவே வந்து நிகழ்ச்சியை கௌரவித்தமைக்குத் தலைவர் கண்ணீர் மல்க நன்றி சொல்ல ஆரம்பித்தார்.

தாளாளர் அவரது உரையில் நான் அங்கே வந்தது பேசியது எதையுமே குறிப்பிடவில்லை. என்னைத் திரும்பியும் பார்க்கவில்லை. நான் புன்னகையுடன் பேசாமல் அமர்ந்திருந்தேன். ஆனால் மாணவர்கள் முழுக்க ரகசியமாகச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். தாளாளருக்கு உலா,தூது,கலம்பகம், பிள்ளைத்தமிழ், பரணி என்று பாமாலை சூட்டிக்கொண்டே இருந்தார்கள் பேராசிரியப்பெருமக்கள். அதைக்கேட்டால் அவர்கள் அவரைப்பற்றி அரைமணிநேரம் முன்புதான் கேள்விப்பட்டதுபோலத் தோன்றும்.

நான் மெல்ல கீழே இறங்கினேன். எப்படியும் என்னை எவரும் வழியனுப்பி வைக்கப்போவதில்லை என்பது தெரிந்தது. நானே போய்விடலாம் என நடந்தபோது கூட்டத்தில் இருந்து வந்த உயரமில்லாத மெலிந்த மனிதர் சிரித்தபடி வந்தார். கிராமத்து விவசாயி போன்ற தோற்றம். கையில் ஒரு தோல்பை

‘வணக்கம்…நல்லாப் பேசினீங்க’ என்றார்

நான் வணங்கினேன். அவர் தன்னை ‘ஜெகன்னாதராஜா’ என்று அறிமுகம் செய்துகொண்டார்.

பன்மொழிப்புலவர் மு.கு.ஜகன்னாத ராஜா.நான் அவரை நன்கறிவேன் என்று சொன்னதும் ‘அப்டியா…அப்டியா? ராஜபாளையத்துக்கு வாங்க’ என்றார். ’வருகிறேன்’ என்றேன். ‘இங்க காலேஜிலே எப்டி?’ என்றேன்

‘உங்களப்பாக்கத்தான் வந்தேன்’ என்றார். அது எனக்களிக்கப்பட்ட பெரிய கௌரவம் என நினைத்தேன்

ஜெகன்னாதராஜா மொழியாக்கம்செய்த ஆமுக்த மால்யதா என்ற நூலை நான் அப்போது வாசித்திருந்தேன். ஆண்டாளைப்பற்றி விஜயநகர மாமன்னர் கிருஷ்ண தேவராயர் எழுதியது அந்நூல். சூடிக்கொடுத்தமாலை என்று தமிழில் சொல்லலாம். அதைப்பற்றி அவரிடம் சொன்னேன். அவருக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும்

‘இதையெல்லாம் நவீன இலக்கியவாதிகள் படிக்கிறாங்களா என்ன?’ என்றார்.

‘நாங்க படிக்காம பின்னே இந்தப் பேராசிரியர்களா படிக்கப்போறாங்க?’ என்று கேட்டேன். உரக்கச் சிரித்தார்.

ஓரமாக ஒதுங்கி நானும் அவரும் பேசிக்கொண்டிருந்தோம். நான் ஆந்திரத்தில் கோதாவரிக் கரையில் உள்ள சில ஆலயங்களில் ஆமுக்தமால்யதாவை ஓர் ஆசாரமாக சிலர் பாடிக்கேட்டிருப்பதைப்பற்றிச் சொன்னேன். நாம் சொல்லும் ஒவ்வொரு சிறுதகவலுக்கும் கண்களை விரித்து ஆச்சரியம் காட்டுவார். அதன்பின் அதனுடன் தொடர்புடைய அதைவிடப்பெரிய ஒரு தகவலைச் சொல்வார்

ஜகன்னாதராஜாவிடம் நான் பேசியபோது பிராகிருதம் குறித்து என் ஐயங்களை விவாதித்தேன். சம்ஸ்கிருதத்துக்கு முந்தைய மொழிவடிவமா பிராகிருந்தம் என்று கேட்டேன். அப்படித்தான் பொதுவாக சொல்வார்கள்.

இல்லை என்றார் ஜெகன்னாதராஜா. சம்ஸ்கிருதத்தின் எதிர்ப்பதம் பிராகிருதம் என்பதனால் அப்படிச் சொல்கிறார்கள். சம்ஸ்கிருதம் என்பது முன்னாலிருந்த வேத கால மொழியிலிருந்து அறிவுச்செயல்பாட்டுக்காக செய்யப்பட்ட நூல்மொழி. பிராகிருதம் மக்கள் பேசிக்கொண்டிருந்த மொழி.

பொதுவாக இன்று பலமொழிகளை சம்ஸ்கிருதத்தில் இருந்து பிறந்தது [சம்ஸ்கிருத அபபிரஹ்ம்ஸம்] என்று சொல்கிறார்கள். மலையாளிகளில் சிலர் மலையாளத்தையே துணிந்து அப்படிச் சொல்வதுண்டு. என்று சொல்கிறார்கள்.ஆனால் இந்தியாவின் பெரும்பாலான மொழிகள் பிராகிருதத்தில் இருந்து வந்தவையே என்றார் ஜெகன்னாதராஜா

சம்ஸ்கிருதம் முழுமையான வளர்ச்சி அடைந்து பல கட்டங்களைத் தாண்டிய பின்னரும் பிராகிருதம் இருந்துகொண்டிருந்தது என்றார் அவர். பிராகிருதம் சம்ஸ்கிருதத்தின் பேச்சுவடிவம் என்பதே சரியாக இருக்கும் என்றும் பிராகிருதம் தொடர்ந்து சம்ஸ்கிருதத்துக்கு வேர்நிலமாக இருந்தது என்றும் சொன்னார். தெலுங்கு கன்னடம் இந்தி மைதிலி போஜ்புரி போன்ற பல மொழிகள் உருவானபின்னரே பிராகிருதம் அழிந்தது.

சிவகாசிக்கு வந்தபோது ஏதோ விளைபொருட்களை விற்பதற்காகக் கொண்டுவந்திருந்தார் போல. செல்பேசி அழைப்பு வந்ததும் ராஜபாளையத்துக்கு ஒருமுறை வரும்படி மீண்டும் அழைத்தபின் அவர் விடைபெற்றுச்சென்றார்

1933ல் ராஜபாளையத்தில் பிறந்தவர் மு.கு.ஜகன்னாத ராஜா. முறையான பெரிய கல்வி ஏதும் இல்லாதவரான ஜகன்னாத ராஜா ஏலக்காய் தோட்டம் வைத்திருந்தார். அதன் வருவாயில் வாழ்ந்தபடி மொழிகளைக் கற்றும் மொழியாக்கங்கள் செய்தும் வாழ்ந்தார். அவருக்கு தமிழ், பாலி, பிராகிருதம், தெலுங்கு, சம்ஸ்கிருதம் போன்ற பலமொழிகள் தெரிந்திருந்தன. உண்மையில் அவர் மறைவுடன் பாலியும் பிராகிருதமும் தெரிந்த கடைசித் தமிழரும் இல்லாமலாகிவிட்டார் என்று சொல்லலாம்.

எல்லாவகையிலும் ஜெகன்னாதராஜாவை ஒரு மொழியியல்பேராசிரியர் எனலாம். ஆனால் அவரை ஒரு கல்லூரியில் உரையாற்ற அழைக்கவே நம் கல்விச்சட்டங்கள் அனுமதிக்காது.மொழிகளைக் கற்பதிலும் கற்பிப்பதிலும் அவருக்கிருந்த ஆர்வம் எல்லையற்றது.

ஜகன்னாத ராஜா பிராகிருதத்தில் இருந்து கதாசப்தசதியை மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழ் வாசகர்களின் கவனத்துக்கு வந்தாகவேண்டிய நூல் இது. இந்தப் புராதன நூலில் உள்ள பாடல்களின் அமைப்பும் சரி, கூறுமுறையும்சரி, அப்படியே அகநாநூறையும் நற்றிணையையும் ஒத்திருக்கின்றன. திணை-துறை அமைப்புகூட பெரும்பாலும் உள்ளது. அதைத் தமிழுக்கே உரிய அழகியல் என நாம் சொல்வது எந்த அளவுக்கு சரி என்று சிந்திக்கச் செய்வது அந்நூல்.

இவரது வஜ்ஜாலக்கம் என்ற பிராகிருத நீதிநூல் தமிழினி வெளியீடாக வெளிவந்துள்ளது. குறள் உள்பட உள்ள தமிழ் நீதிநூல் மரபை ஆராய்பவர்கள் கருத்தில்கொண்டாகவேண்டிய நூல் இது. தீகநிகாயம் உட்பட ஏராளமான பௌத்த நூல்களைப் பாலி மொழியில் இருந்து மொழியாக்கம் செய்திருக்கிறார்.

நான் எழுதிக்கொண்டிருக்கும் அசோகவனம் நாவலுக்காக ஜகன்னாதராஜாவின் சேமிப்பில் இருந்து பல நூல்களை வசந்தகுமார் படி எடுத்து அளித்தார். ராணி மங்கம்மாளைப்பற்றிய நூல்கள், விஜயரங்க சொக்கநாதன் எழுதிய நூல்கள். அவை மதுரைநாயக்கர் வரலாற்றைப்பற்றிய புதிய தெளிவுகளை அளித்தன.தமிழகத்துக்கும் ஆந்திராவுக்கும் இடையேயான பண்பாட்டுப் பரிமாற்றம் பற்றிய தகவல்களின் களஞ்சியமாக இருந்தார் ஜகன்னாத ராஜா.

நான் ஒருமுறை ராஜபாளையம் சென்று அவரைச் சந்தித்தேன். செல்பேசியில் அழைத்தபோது அவரே வந்து என்னை அழைத்துச்சென்று அவரது இல்லத்தில் இருந்த நூற்சேகரிப்பைக் காட்டினார். நான் அப்போதுதான் அம்பேத்கர் அவர்களின் புத்தரும் அவரது தம்மமும் என்ற நூலை ஆங்கிலம் வழியாகப் படிக்க ஆரம்பித்திருந்தேன். பௌத்தக் கலைச்சொற்கள் பற்றிய குழப்பம் எனக்கிருந்தது. நான் கேட்கக் கேட்க பதில் சொன்ன ஜெகன்னாதராஜா ஒருகட்டத்தில் நான் கேட்கச் சாத்தியமான கேள்விகளுக்கும் விளக்கமளித்தார். ஒரு கட்டத்தில் சம்ஸ்கிருதச் சொற்களுக்கும் பாலிமொழிச் சொற்களுக்கும் இடையேனான உறவின் விதிகள்கூட எனக்குப் பிடிபட ஆரம்பித்தன

அன்று அவர் தோட்டத்தில் ஏதோ விவசாயவேலை. நான் முன்னரே என் வருகையைச் சொல்லியிருக்கவில்லை. ஒருமணிநேரத்தில் நான் கிளம்பும்படியாயிற்று. அதன்பின் ஒவ்வொருமுறையும் அவரைச் சந்திக்க ராஜபாளையம் செல்லவேண்டுமென நினைப்பேன் என்றாலும் முடியவில்லை.

2008 ல் ஜெகன்னாதராஜா மரணமடைந்தார். அவரது மரணச்செய்தியை நான் கிட்டத்தட்ட ஒருமாதம் கழிந்தே அறிந்தேன். செய்தித்தாள்களில் செய்திகள் வரவில்லை. அவருக்கும் எனக்கும் பொதுவான நண்பர்களும் சொல்லவில்லை. தமிழினி இதழின் அஞ்சலிக்குறிப்பிலேயே அவரது மரணச்செய்தி என் கவனத்துக்கு வந்தது. அவரை நான் போதுமான அளவுக்குப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்ற இழப்புணர்வு ஓங்கியது. அப்போதும் அம்பேத்கரின் புத்தரும் அவரது தம்மமும் என் வாசிப்பில் இருந்தது. இன்னும் ஆழமாக உள்ளே சென்றிருந்தேன். இன்னும் அதிக ஐயங்களுடன் இருந்தேன்.

நான் ராஜபாளையத்துக்கு அதன்பின்னர் சென்றது 2012 நவம்பரில். ராஜபாளையத்தில் நாற்று என்ற அமைப்பு என்னை உரையாற்ற அழைத்திருந்தது. ராஜபாளையம் என்றதுமே ஜெகன்னாதராஜா நினைவுக்கு வந்தார். அம்பேத்கரின் மகத்தான நூல் கூடவே நினைவில் எழுந்தது. அன்று ‘அம்பேத்கரின் தம்மம்’ என்ற தலைப்பில் உரையாற்றினேன். நான் ஆற்றிய மிகச்சிறந்த உரைகளில் ஒன்று அது. அந்த அரங்கில் அதற்கு எத்தனை செவிகள் இருந்தன என எனக்கு தெரியவில்லை. நான் அதை ஜெகன்னாதராஜாவுக்காக நிகழ்த்தினேன்.

அன்று பேருந்தில் திரும்பும்போது எனக்கு நான் ஜெகன்னாதராஜாவைச் சந்தித்த கல்லூரி நினைவுக்கு வந்தது. அஞ்ஞானத்தை மதில்கட்டித் தேக்கி அதில் நம் குழந்தைகளை நீச்சல்கற்க விடுகிறோம். ஞானம் கையில் தோல்பையுடன் தெருவில் அமைதியாக நடந்துசெல்கிறது

முந்தைய கட்டுரைகடல் பற்றி
அடுத்த கட்டுரைஜெ சைதன்யாவின் பிரபஞ்சம்