வலியெழுத்து

கீதாவை நான் சந்தித்ததுமே நான் கவனித்தது அவருடைய மழலையைத்தான். மலையாளக்கவிஞரும் என் குருநாதருமான ஆற்றூர் ரவிவர்மாவின் இல்லத்தில். என்னைக் கண்டதுமே சிறுமிகளுக்குரிய ஆர்வத்துடன் என்னை நோக்கி வந்து படபடப்பும் சிரிப்புமாகத் தனக்குப் பிடித்தமான எழுத்தாளர் நான்தான் என்று சொன்னார். ‘என் ஆதர்சம்…என்னுடைய சொந்த எழுத்தாளன்!’ என்று விசித்திரமான மழலையில் குழறினார்

ஆனால் கீதா ஒரு சாதாரண வாசகி அல்ல. ‘இது கீதா ஹிரண்யன்’ என ஆற்றூர் அறிமுகம் செய்தபோது நான் ஆச்சரியத்துடன் ‘அப்படியா? நீங்களா அது?’ என்றேன். மலையாளத்தின் முக்கியமான இளம் சிறுகதையாசிரியராக கீதா உருவாகி வந்துகொண்டிருந்த காலம் அது. கீதா மலையாளத்தில் நான் எழுதிய அனைத்தையும் படித்திருந்தார்.’என்னால் பேசவே முடியவில்லை. நிறைய பேசவேண்டும், ஒன்றுமே தோன்றவில்லை’ என்று தத்தளித்தார்.

கீதாவின் முகமும் உடலும் வெளிறியிருந்தன. மன எழுச்சியால் முகம் சிவந்து சிவந்து அணைந்தது. படபடப்பான பதின்பருவப்பெண் போலிருந்தாள். என் பார்வையைச் சந்திக்காமல் அடிக்கடி கண்களைத் திருப்பிக்கொண்டார். நான் முதலில் அந்தப் பதற்றத்தை விசித்திரமாக உணர்ந்தாலும் பின்பு அதை ரசிக்க ஆரம்பித்தேன். அந்தக் கொஞ்சல்பேச்சுக் கூட இனியதாக ஒலிக்க ஆரம்பித்தது

நான் கீதா எளிதாகும்பொருட்டு நிறையப்பேசினேன். ஆனால் அவர் சமநிலை கொள்ளவேயில்லை.அவர் அசாதாரணமான வழிபாட்டுணர்வுடன் என்னைப்பார்த்துக் கொண்டிருந்தார். என்னுடைய சில படைப்புகளைப்பற்றிச் சொன்னார். நான் அவரது சிறுகதைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தபோது வெட்கத்துடன் பேச்சை மாற்றினார்.

அவர் சென்றபின்புதான் ஆற்றூர் ரவிவர்மா சொன்னார், அவரது வெளிறிய தோற்றத்துக்குக் காரணம் புற்றுநோய் சிகிழ்ச்சைதான் என்று. முதலில் அவர் நாக்கில் மெல்லிய தடிப்பாக வந்த புற்றுநோய் தொண்டைவரை இறங்கிவிட்டிருந்தது. நெடுநாட்களாகக் கடும் வலியில் அவர் துன்புற்றுக்கொண்டிருந்தார். மலையாளம் முதுகலைப் படிப்பை முடித்துக் கல்லூரி ஆசிரியையாகப் பணியாற்றிய கீதா தொடர்ந்து அப்பணியைச் செய்யமுடியாத நிலை.

இன்று யோசிக்கிறேன், அப்போது இன்னும் இருவருடங்களில் கீதா ஹிரண்யன் இறந்துவிடுவார் என்று எனக்குத் தெரிந்திருந்ததா? ஆம் என்று சொல்லவே தோன்றியது. அவரைப் பார்த்தபோதே முள்நுனியில் தயங்கும் பனித்துளிக்குரிய ஒரு தற்காலிகத்தன்மை மனதில் தோன்றியது. அல்லது அந்த வெளிறல். அந்த வெளிறலை நான் எவரிலெல்லாம் கண்டேனோ அவர்களெல்லாம் இறந்திருக்கிறார்கள். .

கீதா பெண்ணெழுத்து என்று மலையாளத்தில் பிற்காலத்தில் அடையாளமிடப்பட்ட ஒருவகை எழுத்தின் தொடக்கப்புள்ளிகளில் ஒருவர். பெண்விடுதலைக்கான எழுத்து அல்ல அது. பெண்களின் உணர்வுகளை எழுதுவது. பாலியல் சார்ந்தும்கூட. கீதாவின் எழுத்தில் அந்த சுதந்திரம் எப்போதும் இருந்தது. கீதா மறைந்தபின் அவரது கதைகளை வாசித்தபோது அவற்றில் இருந்த பாலுணர்வு எனக்கு ஓர் அந்தரங்க அதிர்ச்சியை அளித்தது. கீதா அவற்றை எழுதும்போது அதியுக்கிரமான வலியில் இருந்தார். வலியாக மட்டுமே உடலை உணர்ந்துகொண்டிருந்தார்.

GitaHiranyan

அன்று முதல் சந்திப்பிலேயே கீதாவிடம் நான் அதைப்பற்றி கேட்டேன். ’நீங்கள் பாலியலை எழுதுவதற்கு அது உடனடியாக கவனிக்கப்படும் என்பது காரணமா?’ என்று. சீண்டும் நோக்குடன் கேட்ட கேள்விதான். உண்மையில் நான் அவர் முகம் சிவப்பதைக் காண விரும்பினேன். சிவந்த மலர்ந்த முகத்துடன் கீதா சொன்னார் ‘அய்யே…என்னை யார் கவனித்தால் என்ன கவனிக்காவிட்டால் என்ன? நான் என்னுடைய சந்தோஷத்துக்கல்லவா எழுதுகிறேன்?’

‘அப்படியா?’ என்றேன். அது நான் குறிப்பாக எதையும் சொல்ல விரும்பாதபோது சொல்லும் வார்த்தை.

‘என் பதின்பருவத்தில் எனக்கு என் பாலியல்தன்மை பெரிய சுமை என்று தோன்றியது. இந்த உடம்பு இப்படி இல்லாவிட்டால் பஸ் ஏறி மானந்தவாடிக்கோ தலைக்காவேரிக்கோ சுதந்திரமாகப் போகலாமே என்று தோன்றியது…ஆனால் நோய் வந்தபின் அந்த எண்ணமே மாறிவிட்டது. இன்னொரு ஆரோக்கியமான பெண்ணை உருவாக்கி அவளுடைய பாலுணர்வுக்குள் செல்லும்போது எனக்குப் பெரிய விடுதலையுணர்ச்சி ஏற்படுகிறது…’

நான் அதை விசித்திரமாகவே பார்த்தேன். ஏனென்றால் நான் பாலுணர்வை எழுதுவது அதை ஆராய்வதற்காக மட்டுமே. ’ எனக்குப் பாலுணர்வு வேறுமாதிரி…மொழியில் அள்ளியதுமே அது கொஞ்சம் அன்னியமாகிவிடுகிறது…’ சட்டென்று ஓர் உவமை வந்தது. ‘சோதனைச்சாலையில் சோதனைக்குழாயில் விந்து மலம் எல்லாம் எடுத்துவைத்திருப்பார்கள். அதை ஆராய்வதற்காக எடுத்ததுமே அது அருவருப்பில்லாத ஒன்றாக ஆகிவிடுகிறது. மனத்தடை இல்லாமல் அதை ஆராய முடிகிறது’

‘அய்யே’ என்றார் கீதா. சட்டென்று சிரித்து ‘எப்படி இப்படி ஒரு உதாரணம் சட்டென்று சொல்ல முடிகிறது? எனக்கு இது தோன்றுவதே இல்லை. என் கதைகள் எல்லாமே நேரடியாக சம்பவங்களைச் சொல்வதாக இருக்கின்றன’

‘அதுதான் பெண்ணெழுத்தோ என்னவோ? ’என்றேன். அதற்கும் சிரித்தார்

அதன்பின் எட்டு மாதம் கழித்து நான் மீண்டும் கீதாவைச் சந்தித்தேன். திரிச்சூர் கேரள சாகித்ய அக்காதமி கூடத்தில் ஒரு நிகழ்ச்சியில். நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே என்னைத்தேடி வந்தார். ‘நான் நிகழ்ச்சிக்கு இருக்க மாட்டேன்…என்னால் உட்கார்ந்திருக்க முடியாது. உங்களைப்பார்க்கத்தான் வந்தேன்’

மேலும் களைத்திருந்தார். மெலிந்த வெண்கழுத்தில் மூச்சு தங்கச்சங்கிலியை அசைத்துக்கொண்டிருந்தது. இதோ என் கண்ணெதிரே உதிர்ந்துவிடுவார் என்பதுபோல.என்ன கேட்பது? ஆனால் நானறியாமல் அந்த முட்டாள்தனமான கேள்வியை என் வாய் கேட்டுவிட்டது ‘உடம்பு எப்படி இருக்கிறது?’

கீதா சிரித்தார். நான் கண்ட பெண்சிரிப்புகளில் மிக வசீகரமான சிரிப்பு. என்ன அர்த்தம் அந்தப்புன்னகைக்கு என இன்றும் வியக்கிறேன். ‘பரவாயில்லை’ என்றபின் சட்டென்று எல்லாப் பற்களையும் காட்டி சிரித்து ’அப்படித்தானே சொல்லவேண்டும்? அதுதானே நாட்டுநடப்பு?’ என்றார்

நான் ‘சாரி’ என்றேன்.

கீதா சிரித்து ‘பரவாயில்லை, ஆண்கள் அசட்டுத்தனமாகப் பேசுவது பெண்களுக்குப்பிடிக்கும்’என்றார்

‘என்ன எழுதினீர்கள்?’

‘ஒரு கதை…கொஞ்சம் நீளமானது..முடிக்கமுடியுமா என்று தெரியவில்லை. தினமும் அதை எடுத்துவைத்துக் கொஞ்சநேரம் பார்ப்பேன்…’.

‘விட்ட இடத்திலிருந்து கதையைத் தொடங்க முயலக்கூடாது….சம்பந்தமில்லாத இடத்தில் இருந்து தொடங்கினால் முடித்துவிடலாம்’ என்றேன்

‘முடிக்காவிட்டால்தான் என்ன?’ என்றபின் கீதா நான் பாஷாபோஷிணி இதழில் எழுதிய கட்டுரை-கதைகளைப்பற்றிப் பேச ஆரம்பித்தார். அதே பதின்பருவத்து வேகத்துடன். ‘அய்யோ….என்ன ஒரு ஸ்டைல்…எல்லா வரியையும் வாசித்தாகவேண்டும் போல எழுதும் வேறு எழுத்தே மலையாளத்தில் இல்லை…’

அந்தவாரம் நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். பெண்களுக்குச் சிறந்த உடை எது என்று கேட்டபடி ஆரம்பமாகும் அந்தக்கட்டுரை தாவணி, சேலை, சுடிதார் என பல உடைகளில் பெண்கள் எப்படி ஒவ்வொருவகையில் அழகாக இருக்கிறார்கள் என்பதைச் சொல்லி முன்செல்லும். கடைசியில் ஒரு நினைவுக்குறிப்பு. சென்னை எக்மோர் ரயில்நிலைய மேம்பாலத்தில் நான் செல்லும்போது ஒருவன் என் மேல் முட்டி என் கையிலிருந்த தாள்கள் சிதறி விழுந்தன. ஜீன்ஸும் சட்டையும் அணிந்த இளம்பெண் ஒருத்தி அழகிய இளம்குதிரை போல எதிரே வந்தவள் இனிய புன்னகையுடன் அதை எடுத்து என் கையில் தந்துவிட்டுச் சென்றாள்.

’அழகு என்பது நமக்குப்பிடித்தமான ஒன்றின் வெளிப்பாடு. நாம் உள்ளூர விரும்புகின்றவை விழுமியங்கள்தான். சுதந்திரம்போல மகத்தான விழுமியம் ஏதுமில்லை. பெண்களுக்கு ஜீன்ஸ் அளவுக்கு அழகான உடை ஏதுமில்லை. அது அச்சமின்மையை வெளிப்படுத்துவதுபோல வேறெந்த உடையும் வெளிப்படுத்தவில்லை’ என அக்கட்டுரை முடியும்

கீதா ‘அற்புதமான கட்டுரை…நானே ஜீன்சை அப்படியெல்லாம் நினைத்ததில்லை…நான் இனிமேல் ஜீன்ஸ்போட முடியாது.என் மகள் போடும் வயது ஆகவில்லை….அவள் ஜீன்ஸ் அணிந்து குதிரைபோல நடப்பதைப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்’ என்று சொன்னார். சொல்லும்போதே மீண்டும் முகம் சிவந்தது.

சட்டென்று ‘நான் வருகிறேன்…போதும்’ என்றார் கீதா

‘ஏன்?’ என்றேன்

‘இன்றைய கோட்டா முடிந்தது…’ என்று சொல்லி நாக்கை சுட்டிக்காட்டினார். என் மனம் அதிர்ந்தது. அவ்வளவு நேரமும் கடுமையான வலியுடன் அதைச் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறார். எவ்வளவு பிரியமானவராக இருந்தாலும் பிறிதொருமனிதரால் வலியை உணர முடியாதென்பதன் குரூரத்தை நினைத்துக்கொண்டேன்

கீதா பழையபடம்

அதன்பின் நான் கீதாவைப்பார்க்கவில்லை. அவரது மரணச்செய்திதான் வந்தது. ஆற்றூர் ரவிவர்மா கூப்பிட்டு ‘கீதா போயி..’ என்றார். கீதா நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார். அவரைச்சுற்ற்யிருந்த ஒவ்வொருவரும் எண்ணிக்கொண்டுதான் இருந்தார்கள். கீதாவின் பிரியத்துக்குரிய கணவரும் மலையாள விமர்சகருமான பேராசிரியர் ஹிரண்யன் மனமுடைந்து போய்விட்டதாக ஆற்றூர் சொன்னார்

கீதாவின் ஒருவருட நினைவுநாள் அதே கேரள சாகித்ய அக்காதமி கூடத்தில் நடந்தது. அதில் சிறப்புப்பேருரை ஆற்றவேண்டும் என என்னை ஹிரண்யன் கேட்டுக்கொண்டார். 2003 இல் அந்தக்கூட்டத்தில் நான் பெண்ணெழுத்து என்னும் தலைப்பில் பேசினேன். கீதா பற்றிய நினைவுகளுடன்.

பெண்ணெழுத்து என்ற அடையாளம் இலக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கான பல்வேறு திறப்புகளில் ஒன்று. இம்மாதிரிஅடையாளங்களை நான் ஒரு பெரிய அண்டாவின் பிடிச்செவிகள் என்று சொல்வேன். எளிதாக அண்டாவைப் பிடித்துத் தூக்க அவை உதவுகின்றன. ஆனால் அண்டா என்பது அவை அல்ல. அண்டாவின் உள்ளே இருப்பதற்கும் அவற்றுக்கும் சம்பந்தமில்லை. எந்த அடையாளமும் இலக்கியத்தை முழுமையாக வகுத்துவிட முடியாது.

கீதா ஹிரண்யன் மலையாளத்தின் குறிப்பிடத்தக்க இளம் பெண்ணெழுத்தாளர். கண்டிப்பாகப் பெண்ணியவாதி. ஆனால் அவ்வடையாளங்கள் வழியாக நாம் அவரை வகுத்துக்கொள்வோமென்றால் அதன் மூலம் அவரது படைப்புகளின் பெரும்பாலான தளங்களை இழந்துவிடுவோம் என்றுதான் படுகிறது என அவ்வுரையை ஆரம்பித்தேன். ஆமாம், கீதா எழுதியவை பெண்ணெழுத்துக்கள் அல்ல. அவற்றை நான் இன்று ‘வலியெழுத்துக்கள்’ என்றுதான் சொல்வேன்

 

[மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2003, இணையவடிவம் Jun 9, 2008 ]

நினைவஞ்சலி : கீதா ஹிரண்யன், உடலிலக்கியம்

கீதா ஹிரண்யன் – ஒரு பழைய குரல்பதிவு

முந்தைய கட்டுரைசுசித்ராவின் ‘ஒளி’ புதிய தொகுப்புகளில் முதன்மை.
அடுத்த கட்டுரைமழைப்பாடல் வாசிப்பு