காந்தியின் வழி:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

உங்கள் இணையப்பதிவுகளை ஆர்வமாகப் படித்து வருகிறேன். தமிழில் எழுதாமைக்கு மன்னிக்கவும்/.

உங்கள் எழுத்துக்களில் உள்ள தீவிரமும் அடர்த்தியும் மிகவும் பாதிக்கின்றன. காந்தியைப்பற்றிய என்னுடைய புரிதல்களும் விளக்கங்களும் கிட்டத்தட்ட உங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகின்றன என்பதைக் கவனித்தேன். என் இணையப்பக்கத்தை கவனிக்கும்பை கோருகிறேன்
  
http:quixoticmahesh.blogspot.com.

மகாத்மா தன் போரில் பயன்படுத்திய ஆயுதம் அகிம்சை என்று சொல்லமுடியுமா? அதை உடல் வன்முறை இன்மை என்று தானே சொல்ல முடியும்? பிறர் மேல்- அமைப்பு அரசு தனிமனிதர்கள்- தார்மீகமான அழுத்தத்தை அளிப்பதுதானே அது? அதுவும் வன்முறை அல்லவா?
 
கீதையில்  இருந்து அவர் எப்படி அகிம்சையை எடுத்துக்கொண்டார்?  கீதையில் அர்ஜுனன் எப்படி நான் என் சொந்த ரத்தத்தைச் சார்ந்தவர்களைக் கொல்வேன் என்று கேட்டபோது அர்ஜுனனுக்கு கிருஷ்ணன்  உன்னுடைய உறவினர் யார், நானே எங்கும் இருக்கிறேன் என்று சொன்னார். நானே பிறந்து இறந்து பிறக்கிறேன் என்றார். இந்தை எப்படி காந்தி அகிம்சை என்றார்? அவரது தார்மீக வன்முறை என்பது சைவப் பிராமணர்கள் ஊன் உண்ணும் மக்கள் மேல் செலுத்தும் வன்முறைக்குச் சமானமானது அல்லவா?

மகாத்மா காந்திக்கு உண்மையான அக விடுதலை சாத்தியமாகவில்லை என்றே நான் நினைக்கிறேன். தத்துவார்த்தமாக புரிதலை நோக்கி அவர் வளரவில்லை என்று படுகிறது. இதில் ராஜாஜி மேலானவர் என்பது என் எண்ணம். ஆனால் காந்தி அவரை ஒரு மனசாட்சிக் காவலர் ஆக மட்டுமே வைத்திருந்தார்

அன்புடன்
பாலா. எஸ்

அன்புள்ள பாலா,

பாலாக்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே செல்வதனால் என்னால் நினைவு வைத்துக்கொள்ளவே முடியவில்லை.

உங்கள் கருத்துக்களில் உள்ள சில சிக்கல்களை மட்டும் முதலில் சொல்கிறேன். ஓர் விவாதத்துக்காக. கீதையை எப்படி அவர் பார்க்கிறார் என்று காந்தி அவரது கீதை உரைகளில் விரிவாகவே எழுதியிருக்கிறார்- அதை அனாசக்தி யோகம் என்று விளக்குகிறார். நீங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்கு அதில் பதில் மிகமிக விரிவாகவே உள்ளது.

இந்த வினாவையே சித்பவானந்தர் அவரது பெரும்புகழ்பெற்ற கீதை உரையில் கொலை நூலா என்ற தலைப்பில் மிக விரிவாக ஆராய்ந்திருக்கிறார்.  நான் கீதையைப் பற்றி எழுதியிருக்கும் விரிவான விவாதங்களிலும் இது விவாதிக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் ஒன்றை கவனிக்க வேண்டும். ராஜாஜியும் கீதையைப்பற்றி எழுதியிருக்கிறார். அவரும் காந்திய கோணத்தை அடியொற்றி அதை ஒரு அகிம்சை நூலாகவே காண்கிறார்.

அகிம்சை என்பதை உங்கள் விளக்கப்படி எடுத்துக்கொண்டால் கருத்துச் சொல்வது செயல்படுவது எல்லாமே ஹிம்சை ஆகிவிடுமே. யாரும் எதையும் ஹிம்சை என்று சொல்லிவிடலாமே. மனிதர்கள் எந்நிலையிலும் பிற மேல் தங்கள் கருத்துக்களை செலுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். கருத்துக்களின் அதிகாரமே மனிதர்களை இணைத்து சமூகமாக ஆக்குகிறது. செயல்படச்செய்கிறது. எந்த சிந்தனையாளரும் செய்வது  தன் கருத்துக்களை பிறமேல் பரப்பி அதன் மூலம் சமூகத்தை மாற்ற முயல்வதைத்தான். காந்தியும் அதையே செய்தார்.

ஆனால் இந்தவகையில் செயல்படும்போது பிறரது வாழும் உரிமை மீது தாக்குதல் தொடுக்கலாகாது. அப்படி தொடுப்பதையே ஹிம்சை என்று மரபு வகுக்கிறது. என் கருத்தை நீ ஏற்றுக்கொள்ளாவிட்டால் உன்னை வாழவிடமாடேன் என்பது. அதை தவிர்ப்பதையே காந்தி அஹிம்சை என்றார். என் கருத்து இது, இது முற்றிலும் உண்மை என நான் நினைக்கிறேன், இதன்பொருட்டு நான் என் உயிரையும் மாய்ப்பேன் என்பதுதான் அவரது வழிமுறை. 

தன் கருத்துக்களுக்கு எதிரானவர்களை அவர் வசை பாடவில்லை. அவர்களை நிராகரிக்கக்கூட இல்லை. அவர்களுக்கு முன்னால் தன் கருத்துக்கள் மேல் தனக்கு இருக்கும் அசைக்கமுஇயாத நம்பிகையை முன்வைத்தார். தன் கருத்துக்களை வலியுறுத்த ஒருவர் செய்யக்கூடிய அதிகபட்ச செயல் அதுவே. அதுவும் கந்தியின் கண்டுபீப்பு அல்ல. பல நூற்ராண்டுகளாக சம்ண முனிகள் செய்துவந்த வழி அது.

நூற்றாண்டுகளாக பூமி மீது இருந்துவந்த வழிமுறை தன் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் கொண்டவர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பது என்பதே. அஹிம்சை அதற்கு எதிரானது. அ·தன்றி கருத்தே இல்லாமல், கருத்தே சொல்லாமல் இருப்பதல்ல.

தன் வாழ்நாள் முழுக்க காந்தி விவாதித்துக்கொண்டிருந்தார். விவாதங்களில் தன் கருத்துக்கு எதிராக ஒரு கருத்து நிறுவப்படும் என்றால் அதை அவர் ஏற்றுக்கொள்ள தயங்கியதே இல்லை. சாதிமுறை இந்திய ஞானமரபின் அம்சம் என்று நம்பிய அவர் நாராயணகுருவின் உரையாடல் மூலம் அதை தெளிவுபடுத்திக்கொண்டு தூக்கி வீசினார். அப்படி பல்வேறு காலகட்டங்களில் அவர் தன்னிடமிருந்து கழட்டி வீசிய சிந்தனைகள் பல.

அந்த வன்முறையற்ற கருத்துப்பரிமாற்றத்தையே அகிம்சை என அவர் சொல்கிறார். ராஜாஜியை காந்தியை விட ஆன்மீக மேம்பாடு கொண்டவர் என்று சொல்கிறீர்கள். நான் அதை கொஞ்சமும் ஏற்கவில்லை. ராஜாஜிக்கு  காந்தி அளவுக்கு வன்முறை இல்லாத ஜனநாயகத்தில் நம்பிக்கை இருந்ததா என்பதே ஐயம்தான். ராஜாஜி அதிகார விருப்பு கொண்ட, ஆனால் நேர்மையான , நாட்டு நலம் நாடிய, ஆனால் மக்களைப்புரிந்துகொள்ளும் வல்லமை இல்லாத ஒரு அரசியல் ராஜதந்திரி மட்டுமே.

என் அளவில் காந்தியை ஆன்ம விடுதலை அடைந்த ஒரு ஞானகுருவாகவே பார்க்கிறேன். கீதை ஞானவிடுதலை பெற்ற நிலையின் பல்வேறு முகங்களைப் பற்றிச் சொல்கிறது. செயலின்மையும் அதில் உண்டு. செயலும் உண்டு. காந்தி ஒரு கர்மயோகி

ஜெ

 

அன்புள்ள ஜெ.மோ,
இந்த வரம் என் மாமா( மாமனாரும் அவரே..) இங்கு வந்திருந்தார். அவருக்கு தங்கள் காந்தியின் துரோகங்கள் ..பற்றிய பதில்ஐ காண்பித்தேன். அவநம்பிக்கையுடன் படிக்க ஆரம்பித்து ஆழமாய் வாசித்தார். அவர் காந்தியின் ஸ்ட்ராங் simpathiser. சுபாஷ்  பற்றிய காந்திஇன் கருத்துகளில் தனக்கு ஒரு நெருடல் இருந்ததாகவும் இப்போது அதுவும் தெளிவாகி விட்டதாகவும் தெரிவித்தார். தங்களுக்கு என் பாராட்டுதல்கள் மற்றும் வாழ்த்துகள். தொடர்க உமது பணி!
அன்பன்,
சத்திய நாராயணன்.
அன்புள்ள சத்தியநாராயணன்
நன்றி.காந்தியை புரிந்துகொள்வதற்கு அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் வேறு என்ன செய்திருக்க வேண்டும், அதைச்செய்தால் என்ன நடந்திருக்கும் என்று மட்டும் சிந்தனைசெய்தால் போதும். மிகச்சிக்கலான ஒரு குஇமைச் சமூகத்தை  து உருவாகி வந்துகொன்டிருந்த ஆரம்ப காலத்தில் வழிநடத்தியவர் காந்தி. பேதங்கலும் அவநம்பிக்கைகலும் உள்முரண்க்ஜளும் நிறைந்த சமூகம் அது. அவர் ஒரு மாபெரும் ஒருங்கிணைக்கும் புள்ளியாகவே செயல்பட்டார்
நம்மில் பலர் காந்தியை அவருக்கு எதிரான பிரச்சாரம் மூலமே அறிந்தவர்கள்
ஜெ
முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைடி.ஆர்.நாகராஜ்,குகா-அர்விந்துடன் உரையாடல்