எஸ்.வி.ராஜதுரை-கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

நேற்று உங்கள் தளத்தில் நுழைந்து சமீபத்திய கடிதங்களில் வாசித்த தருணத்தில் மிகுந்த கவலைக்குள்ளானேன். எனக்கு வாசிப்புச் சுகத்தை அளித்த உங்கள் எழுத்துக்களுக்கு முரணான நேற்றைய தகவல் என்னைப் பெரிதும் பாதித்தது.

ஆனால் உங்களை அக்கடிதம் பாதித்திருக்கக் கூடாது. நீங்கள் அறிவுத்தளத்தில் இயங்கி வருபவர். எல்லா சஞ்சலங்களையும் எளிதில் கடக்கக் கூடிய மனநிலையை அறிவு சார்ந்து இயங்கும் உங்களுக்கு கொடுத்திருக்கும். நீங்கள் எனக்கு அறிமுகமான நாள் தொட்டு மிகப் பெரிய ஆளுமையாகயாகவே உங்களை அவதானித்து வருகிறேன். இந்த வழக்கறிஞர் நோட்டீஸ் உங்களை, உங்கள் ஆளுமையை அசைத்துவிடாது என்று உறுதியாக நம்புகிறேன்.

எஸ். வி ராஜதுரையின் கட்டுரைகளை உயிர் எழுத்தில் தொடர்ந்து வாசித்திருக்கிறேன். அறிவுலகம் அவர் போற்றப்படவேண்டிய ஆளுமையாகவே பார்க்கிறது. உங்களுக்கு வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பியது அவரின் சுயமான முடிவாக இருக்க முடியாது. திரைக்குப் பின்னால் இருக்கும் சிலர் இதற்கு ஊக்கியாக இருக்கக் கூடும் என்றே கருதுகிறேன். அந்தத் திரையை விளக்கி நிதானமாகப் பார்க்கவேண்டும்.அவரின் இந்த முடிவு என் போன்றவரின் வாசகர்களுக்கும் மிகுந்த வெறுப்பை உண்டாக்க்கி இருக்கலாம். உங்கள் மேல் உள்ள கோபத்திலிருந்து அவரும் விரைவில் மீண்டு விடுவார் என்றே நம்புகிறேன்.

கோ.புண்ணியவான் , மலேசியா.

அன்புள்ள புண்ணியவான்,

நலம்தானே?

நேற்று ஓர் இணையதளத்தில் எஸ்.வி.ராஜதுரை அந்த வக்கீல் நோட்டீஸை வழக்கை வெல்வதற்கான உத்திகளில் ஒன்று என நியாயப்படுத்தி எழுதியிருக்கிறார். அவரது மனம் இருக்கும் இருளை உணர முடிகிறது. ஆம், நீங்கள் சொல்வதுபோல அவர் மீண்டு வரட்டும்.

இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?

ஜெ

ஜெ,
நலமே.
என் வலைத்தளத்தில் மலேசியத் தேர்தல் அரசியல் சார்ந்த கட்டுரைகளை எழுதி வருகிறேன் http://kopunniavan.blogspot.com/. மற்றபடி பிரதி மாதமும் மலேசிய இதழ்களில் வெளியாகும் சிறுகதைகளில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் நடுவர் குழுவில் பணியாற்றுகிறேன்.

கோ. புண்ணியவான்

*

அன்புள்ள ஜெயமோகன்

உங்கள் இணையதளத்தில் எஸ்.வி.ராஜதுரை அனுப்பிய வக்கீல் நோட்டீஸைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சொல்லப்போனால் நான் பார்த்ததிலேயே மிகக்கேவலமான மொழியும் மனநிலையும் வெளிப்பட்ட நோட்டீஸ் அது.

ஆனால் அதை நீங்கள் இணையதளத்தில் வெளியிட்டிருக்கவேண்டுமா என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஏனென்றால் நீங்கள் நினைப்பதுபோல இதை வாசித்ததுமே நம்மவரின் நியாய உணர்ச்சி ஒன்றும் கொழுந்துவிட்டெரியப்போவதில்லை. உங்களை எதிரியாக நினைப்பவர்கள் நன்றாகவேண்டும் என்று கொண்டாட்டம்போடுவார்கள். நீங்கள் டிவிட்டர் ஃபேஸ்புக் பக்கம் வந்தால் அதைக் காணலாம்.

அவர்கள் வாய்க்கு நீங்களே அவலைக் கொடுத்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்

செல்வராஜ்

அன்புள்ள செல்வராஜ்,

என் ‘எதிரிகளை’ ப் பற்றி எனக்கும் நன்றாகவே தெரியும். அவர்கள் என்னை எதிரிகளாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். என் எதிரிகளை அவர்களே தீர்மானித்துக்கொள்ள நான் விடுவதில்லை. எதிரி என்ற அங்கீகாரத்தை எவருக்கும் அளிப்பதுமில்லை. அதற்கான தகுதியை அவர்கள் வளர்த்துக்கொண்டால் எதிர்த்தரப்பாக நான் பொருட்படுத்துவேன். ஆகவே அவர்களின் குரல்கள் அவர்களே தங்கள் சொந்த அறைக்குள் எழுப்பிக்கொள்ளும் சத்தங்கள் மட்டுமே.

எனக்கு எதிராக எழுதுபவர்களில் இருசாரார் உண்டு. உண்மையிலேயே என்னுடைய கருத்துக்களுடன் ஆழமாக முரண்படக்கூடியவர்கள். அவர்களை நான் எப்போதுமே கூர்ந்து கவனிக்கிறேன். அவர்களுக்கு ஒரு கருத்தியல்தரப்பு, ஒரு நம்பிக்கை உள்ளது. அவர்கள் அதனடிப்படையிலேயே எதிர்வினையாற்றுவார்கள். அத்தகையோருக்கு எஸ்.வி,ராஜதுரையின் ஆபாச வக்கீல்நோட்டீஸ் அருவருப்பையே அளிக்கும் என்று நான் அறிவேன். அவர்கள் எதிர்வினை அவர்களுடைய கோணத்தில் அதை நிராகரிப்பதாகவே இருக்கும்

வெற்றுப் பொறாமையாலும் சழக்காலும் சத்தம்போட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெரும்கும்பல் உண்டு. அவர்கள்தான் நீங்கள் சொல்வதுபோல கொண்டாடக்கூடியவர்கள். அவர்களைப்பற்றி எனக்கு என்ன கவலை?

மேலும் இது என்னுடைய பிரச்சினை மட்டும் அல்ல. இதிலுள்ளது ஓர் அறப்பிரச்சினை. நாளை இது எந்தக்குடும்பத்துக்கும் நிகழலாம். இந்த வழக்கத்தை இப்படியே அனுமதிக்கலாமா என ஒவ்வொருவரும் அந்தரங்கமாக முடிவெடுத்தாகவேண்டும்

ஜெ

*

அன்பு ஜெயமோஹனுக்கு வணக்கம். திரு.ராஜதுரையின் தாக்குதல் குறித்த தங்கள் பதிவுகளைப் படித்த போது தமிழ் சிந்தனைச் சூழலில் வளர்ந்து வரும் மிகவும் மலினமானதும் பிற்போக்கானதுமான மனப்போக்கைக் காண இயன்றது. இது ஒரு பனிமலையின் முகடு மட்டுமே. பெரியவர் ஜெயகாந்தனும் அடிப்படையில் இடது சாரி சிந்தனை கொண்டவரே. அவரும் இவரும் இரு துருவங்கள்.

அன்று இத்தனைக்குப் பிறகும் தாங்கள் மார்க்ஸிய சிந்தனைத் தளத்தில் ராஜதுரையின் பங்களிப்பு பற்றிய தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் பதிவு செய்திருப்பது தங்கள் சீரிய மற்றும் பெருந்தன்மையான மனப்பாங்கைக் காட்டுகிறது. மார்க்ஸியத்தை சகிப்புத்தன்மை அற்றவர்களும், விமர்சனம் விவாதங்களை மூர்க்கத்தனமாக நிராகரிப்பவர்களுமே தோற்கடித்தனர். இது ரஷியா, சீனா மற்றும் இந்தியாவுக்கும் பொருத்தம். ஜனநாயக வழி முறைகளை முற்றிலுமாக நிராகரிப்பது என்பது மார்க்ஸிய வழி நடப்போரின் அடிப்படைத் தகுதி என்பது போல ஆகி விட்டது. சோஷலிஸம் வெற்று கோஷமாகப் போனதற்குக் காரணமும் அதுவே.

அதே போல் இடதுசாரி அல்லாதவர் அனைவரும் வலது சாரி என்னும் முத்திரை குத்தி அவர்களது ஆளுமையைக் கொச்சைப் படுத்தும் போக்கும் இருக்கிறது. தற்போது அவர் கேள்விக்குள்ளாக்கி இருப்பது எப்படி என் நிதி ஆதாரம் பற்றி நீ கேட்கலாம்? ஊடகத்தில் அதுவும் எழுத்தாளராக இயங்குபவருக்கு நிதி உதவி எங்கே இருந்து வருகிறது எதற்காக வருகிறது என்பது கண்டிப்பாக விவாதத்துக்கு உள்ளாக்கப் பட வேண்டிய விஷயமே. இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. ஏனெனில் அந்த விவரம் தெரியாமல் அவரது கருத்துக்களைப் படிப்பவர் ஏமாற்றப் படுகிறார், மூளைச் சலவையும் செய்யப் படுகிறார்.

அரசாங்கம் ஒருவரது கருத்து உரிமையைப் பறித்து அவர் மீது தாக்குதல் நிகழ்த்தும் போது அது விரிவான கண்டனத்துக்கு உள்ளாகிறது. தங்களுக்கு நிகழ்ந்தது போன்ற சிந்தனைத் தளத்தின் தரம் தாழ்ந்த ஆளுமைகள் அவதூறும் அவமானமும் செய்யும் போது பல அறிவு ஜீவிகள் மௌனமே சாதிக்கின்றனர். இத்தகைய மௌனங்களே தமிழ்ச் சூழலை மீட்டெடுக்க இயலாத கீழ் நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதை மறந்து விடுகின்றனர்.

அன்பு

சத்யானந்தன்

அன்புள்ள சத்யானந்தன்,

இந்தவகைத் தாக்குதல்கள் அவற்றின் இலக்கை அடையப்போவதில்லை. மாறாக சூழலில் கருத்துக்களுக்குப் பின்னணியாக உள்ள நிதிவலை பற்றிய கவனத்தை அதிகரிக்கவே செய்யும்

இந்தியாவைச் சுற்றியிருக்கும் நாடுகளின் அரசியல் குறித்த ஒரு விரிவான வாசிப்பை நான் தொண்ணூறுகளில் செய்தேன். அப்போதுதான் நாம் இங்கே பேசும் கருத்துக்களில் கணிசமானவை நம் மனதில் அரசியல் நோக்குடன் வெளியே இருந்து விதைக்கப்படுபவை என்ற புரிதலை அடைந்தேன்

இந்த கருத்துக்கள் மீது எச்சரிககை கொண்டிராத ஒரு சமூகம் அதற்கு மிகப்பெரிய விலையைக் கொடுக்கவேண்டியிருக்கும். ஆப்ரிக்காவும் ஆசியாவும் நம் முன் கண்கூடான உதாரணங்களை அள்ளியள்ளி வைக்கின்றன

என் மனதுக்கு உண்மை எனப்படுவதை இங்கே தொடர்ச்சியாக முன்வைக்கிறேன். எந்த எழுத்தாளனும் ஒருவகை ‘விசில் புளோயர்’ தான். அவமதிப்பும் வசைகளுமே அவனுக்குக் கிடைக்கும். ஆனால் எனக்கு என் பணியைச் செய்கிறேன் என்ற நம்பிக்கை இருக்கிறது

ஜெ

*

ஜெ,

எஸ்.வி.ராஜதுரை வக்கீல் நோட்டீஸ் என்ற பேரில் அனுப்பியிருக்கும் ஆபாச் சொற்களையும் அவதூறுகளையும் கண்டு மிகுந்த மனவருத்தம் கொண்டேன். இத்தகைய செயல்களைச் செய்யக்கூடிய ஒருவரின் தனிப்பட்ட நேர்மையும் தரமும் எத்தகையது என ஊகிக்க முடிகிறது.

இந்த வகைச்செயல்பாடுகள்மூலம் உங்களைப்போன்ற ஒருவரைத் தளர்த்திவிடமுடியாது என நான் அறிவேன். இருந்தாலும் இதில் இருந்து நீங்கள் உளரீதியாக விரைவில் வெளியே வரவேண்டுமென விரும்புகிறேன்

எஸ்.ஆர்.நீலகண்டன்

அன்புள்ள நீலகண்டன்,

என்னை இது உளரீதியாக பாதிக்கிறது என்பது உண்மை. அது ஒரு எழுத்தாளனின் வீழ்ச்சியைக் கண்ட வருத்தம். எத்தனை வருட அறிவுலகச் செயல்பாடு இருந்தாலும் இவர்கள் அகத்தே அந்தப்பண்பாட்டை அடைவதேயில்லையா என்ற சஞ்லம். அதற்கு அப்பால் இதிலுள்ள நேரடியான அவதூறும் வசையும் அளிக்கும் மன அழுத்தம்

பார்ப்போம். கருத்துலகச் செயல்பாட்டின் இதுவும் ஒரு பக்கம்

ஜெ

*

அன்புள்ள ஜெ.எம்,

எஸ்.வி.ராஜதுரை அளித்த வக்கீல் நோட்டீஸில் அவரது மொழியையும் வசைகளையும் கண்டு மிகுந்த மனக்கொந்தளிப்பு அடைந்தேன். அந்த வசைகளில் உள்ளவை சிற்றிதழ்ச்சூழலில் இருந்து கிடைக்கும் விஷயங்களை உள்நோக்கத்துடன் திரிப்பவை. அவற்றை அவர் மட்டுமே செய்யமுடியும் என்பது உண்மைதான்.

நான் எஸ்.வி.ராஜதுரை மீது மதிப்புள்ள வாசகன். அவர் ஏன் இப்படி ஒன்றைச் செய்தார் என்று புரியவில்லை.

நாதன்

அன்புள்ள நாதன்,

அவர் ஏன் அப்படிச்செய்தார் என்று அவரே சொல்லியிருக்கிறார். வழக்கு வலுவாக நிகழ்வதற்கு தேவையாக இருந்ததனால் வழக்கறிஞர் மூலமாக அந்த அவதூறுகளும் வசைகளும் எழுதப்பட்டன என விளக்குகிறார். அது தேவையான நடவடிக்கைதான் என வாதிடுகிறார்

ஒரு மனிதன் வன்மம் கொண்டால் இறங்கும் எல்லைக்கு அளவே இல்லை

ஜெ

*

மதிப்புக்குரிய ஜெயமோகன்,

கடந்த சில நாட்களாக எஸ்.வி.ஆர். தொடர்பான பதிவுகளைக் கண்டு வேதனை அடைந்தேன். இரண்டு மாதங்களாக உங்களுக்கு மன உளைச்சலைக் கொடுக்கும் அளவுக்கு இந்தப் பிரச்சினை பெரிய விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. நீங்கள் உலகத்தர உரத்த சிந்தனையாளர். உங்கள் நேரமும், அவதானிப்பும் இது போன்ற அற்ப நிகழ்வுகளில் விரயமாவதில் இழப்பு உங்கள் வாசகர்களுக்கு மட்டுமே. என்னைப் போன்ற படித்த மூடர்களை அடுத்த கட்ட வாசிப்புக்கு அழைத்துச் செல்லும் உங்கள் உயரிய பணியில், அந்நிய நிதி/எஸ்.வி.ஆர். தொடர்பான பதிவுகள் தேவையற்ற தடைக்கற்கள். ஒரு குறுகிய வட்டத்தையே சென்றடையும், தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தப் பதிவுகளால், தமிழ் படிக்கும் மொத்த சமுதாயத்துக்கும் சென்றடையும் வீரிய நேர்மறை சிந்தனைகள் ஓரிரண்டு நாட்களுக்குப் புறந்தள்ளபட்டாலும் அது சரியல்ல.

நீங்கள் சமநிலையில் இந்த விபத்தைக் கடக்கும் திறனால் நாங்கள் கற்பதை விட, ஆன்மிகம், இலக்கியம் பற்றிய மேல் தள சிந்தனைகள் உயரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். ‘தேர்வு செய்யப்பட்ட சிலர்’ பலராக மாறும் வாய்ப்பை உருவாக்கும் உங்கள் பேனாவை, ‘உன் மனைவி உட்பட அனைவரையும் சந்திக்கு இழுப்பேன்’ போன்ற கீழ்த்தர மிரட்டல்களைப் பற்றி எழுதிப் பாழாக்க வேண்டாம் என வேண்டுகிறேன்.

பணிவன்புடன்,

லக்ஷ்மணன்

அன்புள்ள லட்சுமணன்

இந்த விஷயம் சார்ந்து தொடர்ந்து நண்பர்கள் கடிதங்கள் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கடிதங்களை இங்கே முடித்துக்கொள்ளலாமென நினைக்கிறேன். காரணம் நீங்கள் சொல்வதுதான். இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. இதன் எல்லையை இது அடைந்துவிட்டது. நன்றி

ஜெ

முந்தைய கட்டுரைஎஸ்.வி.ராஜதுரையின் பங்களிப்பு…
அடுத்த கட்டுரைஉடையார்-கடிதம்