நம் சமூகத்தில் எப்போதும் காந்தி மீதான ஒரு விமர்சனமும் கசப்பும் இருந்துகொண்டிருக்கிறது. முதன்மையாக அது அரசியல்காரணங்களுக்காக உருவாக்கப்படுகிறது. காந்தியை அறிந்துகொள்ள முயலாமல் நிராகரிப்பது அவ்வரசியலின் அடிப்படைத்தேவைகளில் ஒன்று. இடதுசாரிகள் வலதுசாரிகள் பிரிவினைவாதிகள் சாதியவாதிகள் என அவர்கள் பலதரப்பினர்.
காந்தி இந்திய அரசமைப்பின் அடையாளமாக, பாடநூல்களில் சம்பிரதாயமாக அறிமுகமாகிறவராக இருப்பதனால் இளையதலைமுறை அவரை நிராகரிப்பதை ஒருவகை அமைப்புமீறலாக எடுத்துக்கொள்கிறது. ஒரு முதிரா வயதில் காந்தியை எதிர்த்துப்பேசுவது சிகரெட் பிடிப்பது, தண்ணியடிப்பது போல ஒரு இளமையின் மீறலாக எண்ணப்படுகிறது.
ஆனால் இந்தியச்சூழலில் படைப்பூக்கமும் சமூக அர்ப்பணிப்பும் கொண்ட முதன்மை மனங்களுக்கு எப்போதுமே காந்தி ஆதர்சமாகவே இருந்திருக்கிறார். காந்தியை அவர்கள் தங்கள் கோணத்தில் அறிய முயன்றபடியேதான் இருந்திருக்கிறார்கள். காந்தி அவர்களுக்கு ஒரு சவால்.
சென்ற தலைமுறையில் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் , தி.ஜானகிராமன்போன்றவர்கள் காந்தியால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்கள். அவர்கள் காந்தியைப்பற்றி எழுதியவை முக்கியமானவை. அதற்கு முந்தையை தலைமுறையில் க.நா.சுவும் , சி.சு.செல்லப்பாவும் சங்கர்ராமும் ந.சிதம்பரசுப்ரமணியமும் காந்தியை வெவ்வேறு கோணங்களில் அணுகிவர்கள். அதற்கு முந்தைய தலைமுறையில் புதுமைப்பித்தனும் கு.ப.ராஜகோபாலனும் ந.பிச்சமூர்த்தியும் தங்கள் கோணங்களில் காந்தியை அணுகியவர்கள்.
அந்த மரபு இன்றும் தொடர்கிறது என்பதை எஸ்.ராமகிருஷ்ணன், பாவண்ணன் ஆகியோர் காந்தி பற்றி எழுதிய இக்கட்டுரைகள் காட்டுகின்றன