என் பெயர்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ

என் பெயர் கதையை நான் இதுவரை வாசித்ததில்லை. வெளிவந்து 12 வருடங்கள் ஆகியிருக்கின்றன

நீங்கள் சமீபத்தில் பொதுவெளியில் பெண்கள்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் நீட்சியாகவே இந்தக்கதையை வெளியிட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்

அத்தகைய உயர் ஆய்வு மையத்தில் ஒரு பெண் பெண் என்ற ஒரே காரணத்துக்காக சுயத்தை இழந்து அடிமையாக நேர்வதும் அதை மறுக்கையில் அவளுக்கு ஏற்படும் அழிவும் தீவிரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது

ஆனால் கொஞ்சம்கூடக் குரலை உயர்த்தாமல், பிரச்சாரம் செய்யாமல் கதை எழுதப்பட்டுள்ளது. ஆகவே கதையின் கலையழகு அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்

அதனால் இந்தக்கதையை ஒரு பெண் தான் யார் என்று கண்டுகொள்ளக்கூடிய ஒரு நிமிசம் என்று இன்னொரு கோணத்திலே செய்து வாசிக்கலாம். என் பெயர் என்ற தலைப்பும் அதையே குறிப்பிடுகிறது என்று நினைக்கிறேன்

பலிபீடத்தில் சாகக்கூடிய ஆடுதான் அந்தப்பெண்மணி. ஆனால் அந்த பலி அவள் தன்னை தான் யார் என்று கண்டுகொண்டதனால்தான் என்று நினைக்கிறேன்.

நீங்கள் எழுதிய அற்புதமான கதைகளில் ஒன்று ஜெ

வாழ்த்துக்கள்

சாந்தி

அன்புள்ள சாந்தி,

நன்றி

அதிகம்பேரால் கவனிக்கப்படாத கதை இது. என் கதைகளில் மிக அமைதியான படைப்புகளில் ஒன்று

நீங்கள் சொல்வது சரி. அது ஒடுக்குமுறை பற்றிய கதை அல்ல, மீறி எழுவதைப்பற்றிய கதை

ஜெ

அன்பு ஜெ,

நலம் தானே?

என் பெயர் சிறுகதை படித்தேன். இந்தியர்களின் கீழே அலுவலத்தில் வேலை பார்க்கும் ஒவ்வொருவரின் அனுபவமும் இப்படித் தான் இருக்கிறது.

எனது பொறியியல் வாழ்வின் ஆரம்பகட்டத்தில் நானும் விவரம் புரியாமல் ‘ஒழுங்காக வேலை செய்தால் போதும்..மேலே வந்துவிடலாம்’ என்று நம்பியிருக்கிறேன்..இந்தியச் சூழல் என்றால் மொழியும், தமிழ்ச் சூழல் என்றால் ஜாதியும் மேலே வருவதற்கு முக்கியக் காரணியாக இருக்கின்றன.

அதுவும் இந்திய உயரதிகாரர்களிடம் இருக்கும் ‘ஜமீன்தார்’ மனப்பான்மை அருவருக்கத்தக்கது. ‘என் பெயரில்’ கூட காஃபி எடுத்துத் தராததால் தான் கிடா வெட்டு நடத்தப்பட்டதோ என்று அஞ்சுகிறேன்.

ஒரு கம்பெனியில் வேலை செய்யும்போது மூன்று விஷயங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது..

ஒன்று, எது கம்பெனிக்கு நல்லது என்பது.
அடுத்து, எது நம் பாஸுக்கு நல்லது என்பது.
மூன்றாவதாக, எது நமக்கு நல்லது என்பது.

கடைசி இரண்டும் ஒன்றோடொன்று கலந்தவை தான். இரண்டாவதைப் பூர்த்தி செய்தாலே மூன்றாவதும் பூர்த்தி ஆகிறது. கம்பெனியின் நலம் என்பது, நம் அரசியல்வாதிகள் மக்கள்நலன்மேல் கொன்டிருக்கும் ஆர்வத்தை ஒத்தது.

ஆனால் இந்தியர் தவிர்த்த பிற அதிகாரிகளிடம் வேலை பார்க்கையில், நாம் தாழ்ந்து போகும் அவசியம் ஏற்படுவதில்லை. கொரியன் -சைனீஸ் என்றால் கடின உழைப்பை எதிர்பார்க்கிறார்கள். அமெரிக்க அலுவலக வாழ்க்கை மிகவும் நட்புரீதியானது.

ஏனோ, நம் மக்கள் இன்னும் ஜாதீய, ஜமீன்தார்த்தன எண்ணத்தில் இருந்து வெளிவர மறுக்கிறார்கள்.

பொறியியலில் டிசைன் என்பது Trail & Error சார்ந்தது என்ற அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல், தப்புக்காக மேலும் கீழும் குதிப்பவர்களே அதிகம். ஆனால் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த முதல்நாளே பிக்பாஸ் ‘Never fear to make mistake’ என்றார். அதையே இப்போதுவரை பின்பற்றுகிறேன். எனக்குக் கீழே வேலை செய்வோருக்கும் அதையே சொல்கிறேன்.

நல்ல கவிதை என்பது நம் அனுபவத்தோடு உரையாடுவது என்று ஒருமுறை சொன்னீர்கள்..இந்தக் கதையைப் படித்ததும் நான் பொங்கிக் கொட்டுவதைப் பார்த்தால், நல்ல கதையும் அப்படித் தான் என்று தோன்றுகிறது.

அன்புடன்
செங்கோவி

அன்புள்ள செங்கோவி,

இந்தியாவின் எந்த அமைப்பும் அதிகாரம் அதிகமானதாக ஆகும்தோறும் நிலவுடைமை மனப்பான்மை மிக்கதாக ஆகிறது. பண்ணையார்களும் அடிமைகளும்தான் அங்கே இருப்பார்கள். அலுவலகங்களில் ஜனநாயகமெல்லாமே அடித்தளத்தில்தான். மேலே செல்ல செல்ல ‘கும்பிடுறேன்சாமி’ தான்

நிலப்பிரபுத்துவத்தின் முதல் அடிமைகள் பெண்கள்

ஜெ

அன்புள்ள எழுத்தாளருக்கு
வணக்கம்

ஆய்வை யோகம் போல் செய்யும் விஞ்ஞானிகள் புகழ்ச்சியைப் பொருட்படுத்துவதில்லை. அங்கீகாரம் அவர்களுக்கு சிறு துரும்பு. எதை செய்தாலும் மற்றவர்களின் புகழ்ச்சிக்காக செய்பவர்களே அங்கீகரிக்கப்படுகிறார்கள். பத்மா அங்கீகாரத்திற்காக உயிர் பற்றிய பயம் இல்லாமல் மகிழ்ச்சி அடைவது அவரின் இருபது ஆண்டு ஆராய்ச்சியின் முடிவு ஒன்றுமில்லை என்பதினால்.

தண்டா

அன்புள்ள தண்டா

ஆம், அதுவாகவும் இருக்கலாம். ஓர் அறிவியலாளராகத் தான் தோற்றுவிட்டோம் என்னும் உணர்வும் அவளிடமிருந்திருக்கலாம்

ஜெ

முந்தைய கட்டுரைமுதுமையும் அலோபதியும்
அடுத்த கட்டுரைகாடன்விளி [சிறுகதை]