திரு ஜெ
சமீபத்தில் நான் ஒரு கட்டுரையில் காந்தி தனது வாழ்நாளில் விமானத்தில் பயணித்ததில்லை என்று படித்தேன், எனில் லண்டன் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு எதன்மூலம் அவர் சென்றிருக்கக்கூடும் ? கப்பல் மூலம் ?
மேலும் தான் இறப்பதற்கு முன்தினம் கூட பெங்காலி மொழியைப் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டிருந்தார் என்று படித்தேன். அவரது பெருத்த வேலைப்பளுவுக்கிடையில் எப்படி இதுபோல் தள்ளாத வயதில் புதிய மொழியைக் கற்கமுடிந்தது. மேலும் மலைபோலக் கட்டுரைகளையும் எழுதித் தள்ளமுடிந்திருக்கிறது ? இது எப்படி சாத்தியம் ?!
– சுபா
அன்புள்ள சுபா
காந்தி வெளிநாட்டுப்பயணங்களைக் கப்பலில், பெரும்பாலும் மூன்றாம் வகுப்பில்தான் செய்திருக்கிறார்.
காந்தி எல்லாவகையான வாகனங்களிலும் பயனம்செய்திருக்கிறார். விமானத்தில் அவர் பயணம் செய்ததில்லை என்பது அச்சத்தினாலோ தயக்கத்தினாலோ அல்ல.
காந்திக்குப் பொதுவாகத் தொழில்நுட்பங்கள் மேல் ஐயம் இருந்தது. பெரும்பாலான தொழில்நுட்பங்கள் ஆடம்பரநோக்கங்களுக்காகவும் போருக்காகவுமே உருவாக்கப்படுகின்றன, அவசியத்தேவைகளுக்காக அல்ல என்று அவர் சொல்லியிருக்கிறார். இன்றுவரை அது உண்மை என்பதை நாம் காண்கிறோம்.
காந்தியின் இளமைக் காலகட்டத்தில்தான் விமானத்தில் பறப்பது அறிமுகமாயிற்று. விமானம் லண்டனில் எப்படி ஒரு பரபரப்பான செய்தியாக இருந்தது என்பதை காந்தி பதிவுசெய்கிறார். அந்தப் பரபரப்பையும் ஆர்வத்தையும் அவர் சந்தேகப்படுகிறார், நிராகரிக்கிறார்.
விமானங்கள் மூலம் என்ன நன்மை என்று அவர் கேட்கிறார். அதிவேக ரயில்கள் மூலம் என்ன நன்மை? போக்குவரத்துவசதியை மூர்க்கமாகப் பெருக்கிக்கொண்டே செல்வதனால் என்ன நன்மை? மனிதனின் வாழ்க்கை மேம்படுகிறதா , இல்லை இன்னும் செலவேறியதாகவும் சிக்கலானதாகவும் ஆகிறதா?
காந்தியர்கள் பல கோணங்களில் இக்கேள்வியைப் பின்னர் கேட்டுக்கொண்டிருப்பதை நாம் காணலாம். போக்குவரத்து வசதி இருக்கும் ஒரே காரணத்தால் ராஜஸ்தானிய சலவைக்கல் கேரள வீட்டுக்குப் பயன்படுத்தப்படுவதன் வீணடிப்புக்கு எதிராக எழுந்தது லாரிபேக்கரின் கட்டிடக்கலை. நம் உணவுமேஜையில் ஆஸ்திரேலிய ஆப்பிளும் அரேபிய திராட்சையும் ஏன் இடம் பெறவேண்டும் என்று மசானபு ஃபுகோகா கேட்பதை நாம் அவரது ஒற்றைவைக்கோல் புரட்சி என்னும் நூலில் வாசிக்கலாம்.
தொழில்நுட்பம் மனிதவாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கம் கொண்டதுதானா என்ற வினா இல்லாமல் பசுமைச்சிந்தனைகள் இல்லை. பெரும்பாலான தொழில்நுட்பங்கள் வெறுமே ஆர்வத்தால் உருவாக்கப்பட்டு வணிகநோக்குடன் பரப்பப்பட்டவை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுவார்கள். தொழில்நுட்பத்தை அதன் ஒட்டுமொத்த விளைவைக்கொண்டே மதிப்பிடுவார்கள்.
காந்தி விமானத்தை இரு காரணங்களுக்காக நிராகரிக்கிறார். ஒன்று அது அபத்தமான ஒரு பயணம். அன்று மனிதனை இருக்கையுடன் சேர்த்துக்கட்டிவைத்து வான்வெளியில் மேலும் கீழும் அலைக்கழிக்கும் இம்சையாகவே அது இருந்தது. அதை அவர் அருவருக்கிறார்
அடுத்தபடியாக விமானப்பயணம் மிகமிகச் செலவேறியது. அது பயன்படுத்தும் எரிபொருள் அளவு மிகப்பெரியது. ஒருதனிநபருக்காக ஒரு கிராமமே பயணம் செய்யத்தேவையான எரிபொருளை அது எரித்தழிக்கிறது. காந்திய தரிசனம் அதை ஏற்றுக்கொள்ளாது
காந்தியின் வாழ்க்கையின் பிற்பகுதியில் அவர் விமானப்பயணம் வசதியானதாக ஆவதை அறிந்துகொண்டார். அப்போதும் அவரிடம் இரண்டாவது விமர்சனம் இருந்துகொண்டிருந்தது. இன்று அவர் இருந்திருந்தாலும் விமானப்பயணம் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று என்றே எண்ணியிருப்பார். அதேசமயம் அதை ஒரு மூடப்பிடிவாதமாகவும் கொண்டிருக்கமாட்டார். இன்றியமையாத தேவை என்றால் விமானப்பயணம் மேற்கொள்ள அவருக்குத் தயக்கமிருந்திருக்காது
*
காந்திக்குக் கற்றுக்கொள்வதிலிருந்த ஆர்வத்துக்கு எல்லையே இல்லை. அது பெரும்பாலான மேதைகளுக்குரிய இயல்பு. எந்நேரமும் அவர் கற்றுக்கொண்டே இருந்திருக்கிறார். சத்தியசோதனையிலேயே பார்க்கலாம். கப்பலில் நுழைந்ததுமே அந்தக்கப்பல் இயங்கும் விதம் பற்றி இயந்திர அறைக்குள் சென்று தெரிந்துகொள்கிறார். அவருக்கு இயந்திரங்கள், நவீன அறிவியல் அனைத்திலும் ஆர்வமிருந்தது.
காந்தி அதிகமாக வாசிக்கக்கூடியவரல்ல. ஆனால் அவர்காலகட்டத்தின் அனைத்து நவீனச் சிந்தனைகளையும் அவர் முக்கியமானவர்கள் சொல்லிக் கேட்டுப் புரிந்துகொண்டிருக்கிறார். லோகியாவிடமிருந்து மார்க்ஸியத்தை அவர் கற்றுக்கொண்டதை உதாரணமாகச் சொல்லலாம்
அவர் மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கான மன அமைப்பு கொண்டவரல்ல. மொழி என்ற அமைப்பில் ஆர்வம் கொண்டவர்களும் செவிப்புலன் சார்ந்த நுட்பம் கொண்டவர்களுமே எளிதில் மொழியைக் கற்றுக்கொள்ள முடியும். அதாவது இலக்கண ஆர்வலர்களும் இசை ரசிகர்களுமே மொழியைக் கற்றுக்கொள்வதில் நிபுணர்கள். காந்திக்கு இலக்கணமும் இசையும் கடைசிவரை பிடிகிடைக்கவில்லை
ஆனாலும் அவர் கற்றுக்கொண்டே இருந்தார். தமிழை ‘உயிரைப்பணயம் வைத்து’க் கற்று நாலைந்து வரி எழுத ஆரம்பித்தார். கடைசிக்காலத்தில் வங்கமொழி. அது அவரது ஆர்வத்தின் சான்று
ஜெ