சாதி,சமூகம்-கடிதம்

அன்பின் ஜெ..

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்தப் பொருள் பற்றி எழுதியிருக்கிறீர்கள்.. உங்கள் தரப்பின் எல்லாத் திசைகளையும் அணைத்து எழுதியிருக்கிறீர்கள்.

இத் தலைப்பில், லௌகீக இயங்குதளத்தில் சில விஷயங்கள் சொல்ல இருக்கின்றன எனக்கு.

நிச்சயமாக, “க” அவர்களின் தன்னிரக்கம் தவிர்க்கப் பட வேண்டியது. அதே சமயம், அவமதிப்பை எதிர்கொள்வது ஒரு அவசியமான skill தான்.

உதாரணமாக, இந்த வாரம், சென்னையில் சதுர்மாஸ்ய விரதம் கொண்டு தங்கியிருக்கும் ஸ்ருங்கேரி ஸ்வாமிகளைப் பார்க்க என் மகனைக் கூட்டிக் கொண்டு சென்றேன். அதற்கு சில வாரங்கள் முன்னால், அவர் “ஸத் சிஷ்யன்” என்னும் தலைப்பில், மிக எளிதான மொழியில், மிக அருமையாகப் பேசியிருந்தார். எங்கள் மகனோடு உரையாடலில், இது பற்றிப் பேசியிருந்தோம்.

பின், இந்த வாரம், குருவுக்கு பாத பூஜை செய்யலாம் என்று அவனை அழைத்துச் சென்றோம். எல்லாக் குழந்தைகள் போல அவனுக்கும் பல கேள்விகள் இருந்தன. அவன் மனுஸ்ம்ருதியைப் பற்றிச் சொல்லிவிட்டு, ஏன் “பாத பூஜை” செய்கிறோம் என்று கேட்டான்.

அவனுக்கு மனுஸ்மிருதி ஒரு காலாவதியான தத்துவம் என்று விளக்கி விட்டு, பாத பூஜை என்பது, குருவின் முன் தன் அனைத்து அகங்காரங்களையும் நீக்கி விட்டு, முழுமையாக அவர் முன் தன்னை அர்ப்பணிப்பது என்று சொல்லிவிட்டு, ஜென் கதையான, overflowing tea cup கதையையும் சொல்லி அழைத்துச் சென்றோம்.

சங்கராச்சாரியரின் சன்னிதியில் சட்டை அணிந்து செல்ல அனுமதில்லை. இருவரும் அங்க வஸ்திரம் அணிந்திருந்தோம். மகனைப் பார்வையிட்ட அந்தப் பூசாரி, “உபநயனம் செய்ய வில்லையா.. பாத பூஜை செய்ய முடியாது” என்று சொலலி விட்டு என்னைப் பார்த்தார். என் அங்கவஸ்திரத்துக்குள் பூணூல் தெரியவில்லை போல. அதற்குள் பூஜை செய்ய உட்கார்ந்தாயிற்று. என் அங்கவஸ்த்ரத்துக்குள் அவர் பூணூலைத் தேடிக் கொண்டிருப்பது போல் எனக்குள் மனவிஸ்கி (எவ்வளவு நாள் தான் பிராந்தியையே உபயோகிப்பது?)

மனதுக்குள்”நீ என்ன ஸாரே.. உங்க ஆச்சாரியார்.. அவங்க பாட்டன் பூட்டனுக்கே இந்த பித்துப் போனதில்லை..” என்று சிரித்துக் கொண்டேன். எல்லா (எனதும் சேர்த்து)உடலுக்குள்ளும் கொஞ்சம் மலம் இருக்கும் என்று சொன்ன தத்துவ ஞானி கமலஹாஸனை நினைத்துக் கொண்டேன். பாத பூஜை கொஞ்சம் மனம் குவியாமல்தான் நடந்தது.

‘உபநயனம்” என்னும் சொல், அவனைச் சுருக்கி விட்டது. பூஜைக்காகத் தயாராக நின்ற அந்த சிறுவனின் மனதில் வருத்தம்தான்.

இதுதான் உண்மை நிலை. இதைச் சொன்னால், நீ, உன் தந்தை, உன் பாட்டனார் செய்யவில்லையா என்று கேட்பீர்கள். செய்தார்கள். அதற்கான, பிராயச்சித்தம் – என்னால் முடிந்தவரை, மனிதரைக் கீழோர் மேலோர் என்று நடத்தாமல் இருத்தல், சமூகத் தட்டின் கீழ் நிற்பவர்களுக்கு உதவி செய்தல் முதலியன செய்யலாம். (எங்கள் வீட்டில் தங்கி வேலை செய்யும் பெண்மணியின் தங்கை மகனுக்கு உதவி செய்யும் போதுதான் அவர்களின் ஜாதி பற்றி அறிய நேர்ந்தது. நீங்களும், நானும் மகிழும் உண்மைதான் அது.)

ஆனால், இப்படியெல்லாம் நடந்து கொண்டால், நாட்டில் சாதிபேதம் இருக்காது என்றெல்லாம் நினைத்துக் கொண்டு, வண்டியில் நம்ம்ம்பி ஏறி உட்கார முடியாது. அது இருக்கும். இந்து மதத்தின் நிலைச்சக்திகளின் கர்ப்பக் கிருகத்தில் ஆலகால விஷமாக. சென்னை போன்ற பிராமணப் பெரும்பான்மை இருக்கும் நகரங்களில் மிக நாகரீகமாக. சிறு நகரங்களிலும், கிராமங்களிலும், பிராமணர்கள் அல்லாத ஜாதிகளில் மூர்க்கமாக.

சென்னை வந்த புதிதில், வாடகை வீடு பார்க்கச் செல்லும் போதெல்லாம், என் மனைவியை முன்னிறுத்துவேன். அவரிடம் சிரிக்கும் முகங்கள், என்னைப் பார்த்ததும் கொஞ்சம் சுருங்கும். “இந்த dog ஐப் பார்த்தால், நம்மாள் மாதிரி இல்லையே” என்ற ஒரு எச்சரிக்கைத் தொனி இருக்கும் பார்வையில். ”நாங்க வெஜிடேரின்களுக்குத் தான் வாடகைக்கு விடறது” என்பார்கள்.. நல்ல பிள்ளை மாதிரி தலையாட்டுவோம். இல்லையெனில், மாம்பலம், மயிலையில் வீடு கிடைக்காது.

அதே போல், கோவையில் படிக்கும் போது, பல்கலையின் மிகச் சிறந்த மாணவிகளில் ஒருவரான என் மனைவி, அவர் முற்படுத்தப்பட்ட ஜாதி என்னும் காரணத்தினால், அவர் ஒதுக்கப்பட்டார். அது கவுண்டர்கள் / நாயுடுக்களின் கோட்டை.

நடைமுறையில், இதை மிகச் சாதுர்யமாகத் தான் கையாள வேண்டும். இங்கு தத்துவங்கள், புரட்சி முழக்கங்கள் செல்லுபடியாகாது. ‘அய்யோ, நான் ஏழை.. பிற்படுத்தப் பட்ட ஜாதி.. அல்லது முற்படுத்தப் பட்ட ஏழை’ போன்ற ஒப்பாரிகள் வெறும் தோல்வியாளர்களுக்கே பொருந்தும்.

இங்கே செயல் திறன் தான், பாதிக்கப் பட்ட எல்லோருடைய ஆயுதமாக இருக்க வேண்டும். கூடவே தன்னம்பிக்கையும், தன் மேல் மரியாதையும். இதைத் தான் “க” அவர்களுக்குச் சொல்லுவேன்.

22 ஆண்டுகளில், பிராமணக் கம்பெனிகளில், பிராமணன் அல்லாதவனாக, பஞ்சாபிக் கம்பெனிகளில் மதராஸியாக, ஒரு ஒதுக்கப் பட்டவனாக, புலம்பி, அது கை கொடுக்காமல், ஒரு நல்லாசிரியனின் கைகளில் விழுந்து, “செயல் திறனே” எனது முகம் எனத் தெளிந்து, எழுந்து நிற்க 15 ஆண்டுகள் ஆயிற்று. எனது, அனுபவம், “க” அவர்களுக்கு அவர் லௌகீக வாழ்க்கையின் நேரத்தை மிச்சப் படுத்த உதவட்டும் என்னும் எண்ணத்தினால் இதை எழுதுகிறேன்.

அதே சமயத்தில், செயல் திறன் லௌகீக வெற்றியில் முடியும் போது, அதை மிகச் சாதுர்யமாகக் கையாளவும் தெரியவேண்டும். இதன் மிகச் சிறந்த உதாரணங்களாக பராக் ஓபாமாவையும், ரஹ்மானையும் சொல்லலாம்.

தனது வெற்றியை, அமெரிக்கா என்னும் மண் எல்லோருக்கும் தரும் சம வாய்ப்பு என்று, தம் நாட்டின் பெருமையாக ஓபாமா சொல்வது உலகின் மிக Smart ஆன statement. இன்றும் அமெரிக்காவில் சம உரிமை என்பது நடைமுறையில் உண்மை இல்லை. ஆனால், இச்சமமில்லா நிலையை உடைத்துக் கொண்டெழும் வீரிய வித்துக்களைத் தடை செய்ய முடியாத சட்ட உரிமைகள் இன்று உள்ளன. அவர் வெற்றி பெற்ற இரவை மீண்டும் நினைத்துக் கொள்கிறேன். உலகின் அடிமைத் தளைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து, அவர்களின் பிரதிநிதி, லௌகீக உலகின் தலைநகரில் முடி சூடிக் கொண்ட அந்த வரலாற்றுக் கணத்தை எப்போது நினைத்துக் கொண்டாலும், மனம் நெகிழ்கிறது. அவர், பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள நடந்து வரும் அந்தக் காட்சியைக் கண்ட போது, ‘மண்ணுலகில், இன்று தேவன் இறங்கி வருகிறான்’ என்ற பாடல் மனதில் ஒலித்தது.. (என்ன இருந்தாலும், நாம் சினிமாச் சமூகமல்லவா?). உள்ளூர் ஒப்பீட்டில் சொல்ல வேண்டுமெனில், எம்.எஸ் அம்மா, ம்யூசிக் அகாடமியின் தலைவரானதைச் சொல்லலாம்.

அதே போல் ரஹ்மானின் அந்த ஆஸ்கர் பேச்சு. ‘எனக்குப் பல வழிகள் இருந்தன. நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன். இங்கே வந்தேன்’. இந்த மூன்று வாக்கியங்கள், அவர் பெற்ற ஆஸ்கர் விருதை விட அதிக மதிப்புடையதாக நான் கருதுகிறேன். ஏனெனில், ஆஸ்கர் விருது பெற்று, உலகின் வெளிச்சத்தில் அவர் நிற்கும் அந்தக் கணம், அவர் ஒரு இசையமைப்பாளாராக மட்டும் மக்களால் பார்க்கப் பட மாட்டார். ஒரு இஸ்லாமியராகவும் அவர் பார்க்கப் படுவார். இஸ்லாமியர் என்றால் தீவிரவாதி என்று பார்க்கும் லௌகீக உலகுக்கு முன் ‘அன்பு’ என்னும் ஆயுதத்தை அவர் பிரயோகித்தார். முழுக்க உடையணிந்த ஜார்ஜ் மன்னருக்கு முன் அரையாடையில் சென்ற அந்த குஜராத்திக் கிழவரைப் போல். இசை வாழ்க்கையில் அவர் பாதையை மேலெடுத்துச் செல்ல அது நிச்சயம் ஒரு பாஸிட்டிவ் மூவ்.

அதே சமயம், செயல் திறன் இருந்தும் தோல்வியுறும் கணங்கள் உண்டு. அப்போது, ஜாதியும், மதமும் சுட்டிக் காட்டப் பட்டு, எள்ளல்கள் வரும். வலிக்கும். உடலில் அடிபட்டு, வலிக்கும் போது, அவ்வலியைச் சமாளிக்க, உடல், இன்பம் தோன்றும் ஹார்மோன்களை உற்பத்தி செய்து உதவும். அதே போல், மனம் வலிக்கும் போதெல்லாம், வலிந்து, அதை ஏற்றுக் கொண்டு சிரிக்கும் மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தோலைக் கொஞ்சம் தடியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில், வரலாறு வெற்றி பெற்றவர்களால் உருவாக்கப் படுகிறது.

அன்புடன்

பாலா

அன்புள்ள பாலா,

நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒன்றைத்தவிர.

நீங்கள் ஏன் சிருங்கேரி சங்கராச்சாரியாரிடமோ அல்லது காஞ்சி சங்கராச்சாரியாரிடமோ செல்ல வேண்டும்? அவர்கள் ஸ்மார்த்த பிராமணர்களின் மடாதிபதிகள். அவர்களுக்கு அவர்களின் மடம் சார்ந்த , சாதி சார்ந்த தொன்மையான ஆசாரங்கள் உள்ளன. அவர்கள் அதை எளிதில் மீறமுடியாது, ஏனென்றால் அந்த சம்பிரதாயங்களுக்காகவே அந்த மடங்கள் அமைந்துள்ளன.

நீங்கள் அங்கே சென்று பாதபூஜைக்காக நிற்கையில் ‘நானும் ஸ்மார்த்தனே’ என்று சொல்ல முற்படுகிறீர்கள். உண்மையா என அவர்கள் பூணூலைப் தேடுகிறார்கள்.

தமிழகத்திலுள்ள எல்லா மடங்களும் வெவ்வேறு சாதிகளுக்குரியவை. சைவ மடங்களில் சிவ தீட்சை இருக்கிறதா எனப் பார்ப்பார்கள். கூடவே எங்கே இருந்து வருகிறீர்கள் என்று கேட்பார்கள். அதன் வழியாக அவர்களின் ‘பூணூலை’ அவர்களும் தேடுவார்கள்

விஷ்ணுபுர ஆராய்ச்சிக்காக ஒரு சைவ மடம் சென்றபோது என் அப்பா பெயர் கேட்டார்கள். ‘பாகுலேயன்பிள்ளை’ என்று சொன்னதும் ஒருவர் கண்கள் மின்ன என்னை நூலகம் வரை கொண்டுசென்றார். ஆனால் வயசான இன்னொருவர் ‘அது நம்ம ஆளுங்க பேரில்லியே’ என கண்டுபிடித்துவிட்டார்.

குரு என்பவர் ஆசாரங்களைக் கடைப்பிடிக்கும் அமைப்பின் தலைவரல்ல. அப்படிப்பட்டவர் ஆசாரங்களைக் கறாராக கடைப்பிடிப்பவர்களுக்கு ஆசார விஷயத்தில் குரு, அவ்வளவுதான்.

ஆன்மீக குரு என்பவர் சீடனின் ஆன்மீக நாட்டத்தை மட்டுமே பார்ப்பவர். அவனுடைய அர்ப்பணிப்பையும் தேடலையும் மட்டுமே தனக்கான காணிக்கையாகக் கொள்பவர். அங்கே நீங்கள் தேடியிருக்கவேண்டும். அந்த சன்னிதிகளில் உங்கள் மகனை கொண்டு நிறுத்தியிருக்கவேண்டும்.

அமெரிக்கா மட்டுமல்ல இந்தியாவும் அதேபோல சமவாய்ப்புகளின் நாடுதான் என்றே நினைக்கிறேன். அமெரிக்கா வளர்ந்த நாடென்பதனால் வாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகம், அவ்வளவுதான்

இங்கு எல்லாருக்கும் ஒரே வாய்ப்பு என நான் சொல்லவில்லை. அது எங்குமே சாத்தியமல்ல. லௌகீக வாழ்க்கை என்பது முண்டியடித்து, முட்டிமோதி வென்று செல்வதற்கான ஒன்றாகவே உள்ளது. அதற்காக நான், நம்மவர் என ஒவ்வொருவரும் நினைப்பது இயல்பானது. பிறரை அவரது சாதியோ மதமோ இனமோ நிறமோ எதைக் காரணம் காட்டியாவது வெளியே தள்ள முனைவதும் வழக்கம்தான்.

அதைத் தனித்திறமைகள் மீறிச்சென்று தன் இடத்தை அடைய சட்டபூர்வமாக வாய்ப்புண்டா என்பதே முதல் கேள்வி. ஒரு குழுவாகத் திரண்டு உரிமைகளுக்காகப் போராடவும் வெல்லவும் சமூக அனுமதி உண்டா என்பது அடுத்த கேள்வி. அவ்விரு வழிகளும் அமெரிக்காவை விடவும் இந்தியாவில் அதிகமென்பதே என் எண்ணம்.

அமெரிக்கக் கறுப்பர்கள் ஒரு பெரும் சமூகமாக சட்டபூர்வமாக ஒடுக்கப்படுகிறார்கள் என நான் நினைக்கிறேன்.அவர்களை  குற்றச்சமூகம் என முத்திரையிட்டு, சிறு குற்றங்களுக்குக் கூட அவர்களை சட்டபூர்வமாகத் தண்டித்து, ஒட்டுமொத்த அடையாள அட்டையில் அவர்கள் செய்யும் குற்றங்களைப் பதிவுசெய்து, அந்த அட்டை வழியாகவே அவர்களை மதிப்பிட்டு அங்குள்ள அரசு அவர்களை சட்டபூர்வமாக ஒடுக்குகிறது.

அரசாங்க சட்டங்களாலேயே மறைமுகமாக உருவாக்கப்படும் கறுப்பர்சேரிகள் அங்குள்ளன, நான் சென்றிருக்கிறேன். ஏழெட்டுவயதுக்குள் எப்படியோ ஒரு குற்றமுத்திரையைப் பெற்றுவிடும் ஒரு கறுப்புக்குழந்தை வாழ்நாளெல்லாம் குற்றவாளி முத்திரையுடன் வாழ நேர்வதைக் கண்டிருக்கிறேன்.

இங்குள்ள ஒடுக்குமுறை சட்டபூர்வமானதல்ல. நமது அரசியல் சட்டம் ஒடுக்குமுறைக்கு எதிரானது. ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் வெளிப்படையாகவே நிலைகொள்வது. ஏனென்றால் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரால் உருவாக்கப்பட்டது அது.[அதை சிலர் இது பாரபட்சமானது என்று சொல்வதையும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்]

நம் ஒடுக்குமுறை சமூகரீதியானது. நூற்றாண்டுகளின் மனநிலையின் எச்சம் அது. அதைக் கருத்தியல் ஆற்றல் மூலம், ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம், பொருளியல்தள வெற்றிகள் மூலம் வென்றுசெல்ல எல்லா வாய்ப்புகளும் திறந்திருக்கின்றன. அவ்வெற்றி மெதுவானதாக இருக்க ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருங்கிணைய முடியாமல் அவர்களுக்குள் இருக்கும் பேதங்கள் முக்கியமான காரணம். ஒருங்கிணைய முடிந்த அனைவரும் மேலே சென்றிருக்கிறார்கள். அதற்கான நூற்றுக்கணக்கான உதாரணங்கள் கண்முன் உள்ளன.

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தியும் விமானமும்
அடுத்த கட்டுரைஎஞ்சும் இருள்