விவசாயிகள்

 நகைச்சுவை

விவசாயிகள் இந்திய அரசியல் சட்டத்தாலும் , இந்திய குற்றநடைமுறைச் சட்டத்தாலும், ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதனால் அது ஒரு தொழில். இதைச் செய்பவர்கள் விவசாயிகள் என்று சொல்லப்படுகிறார்கள். வேறு எந்தத் தொழிலையும் குறிப்பிட முடியாதவர்களையும் விவசாயிகள் என்று சொல்லலாம் என்பது இந்தியக் காவல் துறை மரபு. எனவே இந்திய மக்களில் பெரும்பான்மையினர் விவசாயிகளாவார். விவசாயிகளின் நாட்டின் முதுகெலும்பைப்போன்றவர்கள்.

 

விவசாயம் செய்பவர்களைப் பல பிரிவுகளாக பிரிப்பது மரபாகும். இவர்களில் இருசாரார் உள்ளனர். விவசாயத்தில் தள்ளப்பட்டவர்கள், விவசாயத்தில் வந்து விழுந்தவர்கள். முந்தையவர்கள் கொஞ்சம் வளர்ந்தபின் தாய் தந்தையர்களால் இதில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பிந்தையவர்கள் இளம் வயதிலேயே தாய்தந்தையர்களால் இதில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.  அந்தத் தாய்தந்தையர்கள் அவர்களின் தாய்தந்தையர்களால் அவ்வாறு ஈடுபடுத்தப்பட்டவர்கள் இருப்பார்கள். இந்த வன்கொடுமை பல தலைமுறைகளாக இந்தியாவில் நீடிக்கிறது என்று உலக வங்கி ஆய்வுகள் தெரிவிக்கின்றன

 

இரண்டாவது வகை பிரிவினை அந்தஸ்து அடிப்படையிலானது. நிறைய நிலம் வைத்திருந்து நிறைய லோன் வாங்கி நிறைய  நிறைய நஷ்டம் அடைந்து கடன் நிலுவை வைத்திருப்பவர்கள் பெரு விவசாயிகள் என்றும் குறைவாக நிலம் வைத்திருந்து  குறைவாக லோன் வாங்கி குறைவாக நஷ்டம் அடைந்து குறைவாக கடன் நிலுவை வைத்திருப்பவர்கள் சிறுவிவசாயிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். பெரு விவசாயிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அவர்களைத் தேடி வந்து அளிக்கப்படும்.சிறு விவசாயிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் வங்கிகளில் பட்டியலாகவே ஒட்டப்படும். முந்தையவர்களை வேளாண் பெருங்குடி மக்கள் என்று சொல்வது தமிழ் மரபு. பிந்தையவர்களைக் குடியானவர்கள் என்றும். அவர்கள் இறந்த காலத்தில் குறிப்பிடப்படுவது கவனிக்கத்தக்கது.

 

விவசாயம் செய்தல் என்பது சமீபகாலமாக அரசாங்கம் பயன்படுத்துவரும் சொல்லாட்சி. நெடுங்காலமாக உழல்தல் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டது என்பதை சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம், அதனால் உழன்றும் உழவே தலைஎன்ற குறளால் அறிகிறோம். விவசாயியைப் பார்த்து நிலமென்னும் நல்லாள் நகும்என்றும்  குறள் குறிப்பிடுகிறது. உழவர்கள் அக்காலத்திலேயே கணக்கு பார்க்கும் கெட்ட வழக்கத்தையும் கொண்டிருந்தார்கள் என்பதை உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கோலும் மிஞ்சாதுஎன்ற பழமொழியில் இருந்து அறிகிறோம். ஆய்வாளர் அ.கா.பெருமாள் அவர்கள் அக்கால நாஞ்சில்நாட்டு உழவர்கள் உழவு முடிந்து களையெடுப்புக்காக செலவுக்கு உழக்கோலையும் அடமானம் வைக்கும் வழக்கம் இருந்தமைக்கு இந்தப் பழமொழியை ஆதாரமாகக் காட்டுகிறார்.

 

வேளாண்குடிமக்கள் பொதுவாகப் பொறுமையாக இருப்பது அவசியம். பொறுத்தார்  பூமியுழுவார் என்ற பழமொழி இதையே சொல்கிறது. இந்தப் பழமொழிக்கு பாடபேதங்களும் உண்டு. எங்கும் இவர்கள் தங்கள் தனியடையாளத்துடன் திகழ்தல் வேண்டும். ஆகவே பெரிய முண்டாசு இவர்களின் இயல்பாக உள்ளது. முண்டாசு இல்லாதவர்களுக்கு சில வங்கிகள் லோன் அளிப்பதில்லை. கை இல்லாத பனியன் சட்டை, காமராஜர் சட்டை போன்றவற்றையும் மேல்துண்டையும் அணிதல் பெரு விவசாயிகளின் அடையாளம். இவர்கள் பொதுவாக அடர்ந்த தொங்குமீசையுடனும் காணப்படுவார்கள்.

 

விவசாயிகளுக்கு உதவி அவர்களைத் திறம்பட வேளாண்மை செய்ய வைக்கும்பொருட்டு நம் அரசு வேளாண் விஞ்ஞானிகளை உருவாக்குகிறது. இவர்கள் மண்ணில் எதையெல்லாம் போடவேண்டும் என்றும் பின்னர் அவற்றையெல்லாம் ஏன் போடக்கூடாது என்றும் விவசாயிகளுக்குத் தெளிவாக விளக்கும் திறன் கொண்டவர்கள். கோரைப்புல்குளத்தைக் கண்டு இத்தனை செழிப்பாக வளர்ந்த நெல்லுக்கு என்ன அடியுரம் போட்டீர்கள்என்று கேட்கும் இளைஞனை அல்லது இளைஞியை வேளாண் அறிவியலாளர் என்று உடனே உணர்ந்து விவசாயிகள் மரியாதை அளிப்பார்கள்.

 

வேளாண் அறிவியலாளர் விவசாயிகளை அறிவிலிகளாக நடத்த வேண்டும். அறிவு என்றால் ஆங்கிலம். உழவை மிக்ஸ் என்றும் மறு உழவை ரீமிக்ஸ் என்றும் இவர்கள் சொல்வதை விவசாயிகள் மகிழ்ந்து நோக்குவதுண்டு. இச்சொற்களை வானொலியில் சொல்லும்போது பதிலுக்கு இன்னும் சிக்கலான தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தவும் வேளாண் அறிவியலாளர்கள் பயின்றிருக்கிறார்கள். விவசாயிகள் பொதுவாக சற்றே அவசர வேலைகள் உள்ளவர்களாதலால் நீண்ட பெயர்களை வசதியாகச் சுருக்கிக் கொள்வதுண்டு. பயிற்சி வழி தொடர்புத் திட்டம் என்பது தொடப்பு என்றும் ஊரக வளர்ச்சி முகமை என்பது மொகம்என்றும் சுருங்கியதை ஏற்றுக்கொண்ட வேளாண் அறிவியல் மணிகள் அசோஸ் பைரில்லம்என்பது  அசோக்குப்பயஎன்று ஆனதை ஏற்க சற்றே திணறினார்கள்.

 

நம் நாட்டில் விவசாயிகளிளுக்கு தொலைக்காட்சி வானொலி முதலியவற்றின் மூலம் தாய்வரம் தந்தவரம் தாவரம் போன்ற  கருத்துக்கள் புகட்டப்படுகின்றன. வேளாண்நிபுணர்கள் தொலைக்காட்சிகளில் வந்து சரிந்து அமர்ந்துகொண்டு இப்ப நீங்க ஆக்சுவலா எனிடைம் ஆஸ் யுவர் கன்வீனியன்ஸ் இதைச்செய்யலாம். சப்போஸ் அட் எ கிவன் டைம் இது சரியா  வர்க் ஆகலீன்னாக்கூட நீங்க பானிக் ஆகாம அதுக்குண்டான ரெமிடீஸை நீங்களே செஞ்சுக்கலாம்.எண்டோசல்பேன் எப்டி கெமிக்கல்லா ரியாக்ட் பண்ணுதுன்னாக்கா எண்டமாலஜியிலே இதுக்கு நாங்க… ஆக்சுவலா இதை நாம வேற ஒரு ஆங்கிளிலயும் பாக்கலாம். சொல்லப்போனா ஆல் தீஸ்  ஆர் ஜஸ்ட் ·பஸ்ட் ஹாண்ட் ஆக்டிவிடீஸ்.. அல்டிமேட்லி அவர் பர்ப்பஸ் என்னன்னாக்க….என்ற வகையில் சொல்லும் சிந்தனைகளை அவர்கள் போதிய அளவில் கூர்ந்து கவனிப்பதில்லை என்று வியன்னாவை மையமாக்கி ஆய்வுநடத்தும் வேளாண் ஆய்வு அமைப்பு தன்னுடைய அரசு சாரா அமைப்புகள் மூலம் கண்டறிந்துள்ளதாக அந்த அரசுசாரா அமைப்புகளே வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

 

இன்றைய விவசாயிகள் நுண்ணுயிரி உரம் போன்றவற்றைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதை மூத்த விவசாயிகள் ஏற்பதில்லை.இம்முறை தங்கள் பாரம்பரியத்துக்கு எதிரானது என்றும் இவற்றால் நிலவளம் குறைந்து எல்லாமே குட்டிச்சுவராகப்போய்விடும் என்றும் இவர்கள் கருதுகிறார்கள். ஆனால் இளைய விவசாயிகள் இதெல்லாம் மூத்து நரைத்த  பழமைவாதிகளின் பிலாக்கணம் என்றும் விஞ்ஞானம் முன்னோக்கித்தான் செல்லும் என்றும் சொல்கிறார்கள். மரபுவாதிகளான முதியவர்கள் தங்கள் இளமைக்காலத்தில் யூரியா, அம்மோனியம் சல்பேட் போன்றவற்றைப் பயன்படுத்தி எப்படி மண்ணைப் பொன்னாக்கினோம் என்றும் அக்காலத்தில் மழையும் மும்மாரி பெய்தது என்றும் குலதெய்வங்களும் சந்தோஷமாக இருந்தன என்றும் வெத்திலைபாக்குக் கடைகளில் அமர்ந்து பேசி மறுகுகிறார்கள்.

 

வேளாண்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பது நம் இந்திய அரசின் கொள்கை. தொல்துறையிலும் வணிகத்துறையிலும் உள்ள கடைசிகட்ட ஊதியமாவது விவசாயிகளுக்குக் கிடைக்கவேண்டும் என நம் அரசு வகுத்துள்ளது. ஆகவே ஒரு மூட்டை கத்தரிக்காயின் விலை அதை சந்தையில் சுமந்துகொண்டு வைக்கும் தொழில்துறை கடைநிலை உழைப்பாளியின் ஊதியத்தின் அளவுக்கும் அதில் ஒரு கிலோவை விற்கும் சிறுவணிகரின் லாபம் அளவுக்கும் இருக்க வேண்டும் என்று வகுத்துள்ளது. இந்த நிலை எதிர்காலத்தில் உருவாவதற்கு அரசு ஆவன செய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

நூறு மாங்காயின் உற்பத்திச்செலவில் இருந்து  நூறுமாங்காய்க்கான சுமைகூலி போக்குவரத்துச்செலவு ஆகியவற்றையும் நூறு மாங்காய்க்கான வணிக லாபத்தையும் கழித்தால் வருவது ஒரு மாங்காயின் சந்தைவிலை. ஆகவே  ஒருமாங்காயின் சந்தைவிலை என்பது அதை உற்பத்திசெய்த விவசாயிக்கு ஒரு மாங்காயில் கிடைக்கும் விலையின் நூறுமடங்காகும் என்பதே இதன் சூத்திரமாகும். இந்த சூத்திரம் சிக்கலாக இருப்பதாக எண்ணுபவர்கள் வேளாண்மைசெய்யத்தான் லாயக்கு.  

 

விவசாயிகள் வணிகர்களால் கொள்முதல் பண்ணப்படுவதில் அநீதிகள் உள்ளன என்பது அரசால் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. கரும்பு காய்ந்து சுள்ளியான பிறகும் மரவள்ளி முற்றி வேரான பிறகும் நெல் சரிந்து முளைத்தபின்னரும் கொள்முதல்செய்வதென்பது இந்தியாவில் வழக்கமாக இருக்கின்றது. இதன்மூலம் தேசிய இழப்புகள் ஏற்படுவதனால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்கு இழப்பீடு அளிக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது.

 

விவசாயத்துக்கு மேலே விவசாயிகளுக்குப் பல தேசியக் கடமைகள் இருக்கின்றன. முதலில் அவர்கள் நம் தேசத்தின் சொத்துகள். அடமானம் வைக்க அவர்கள்தான் இருக்கிறார்கள். தேசிய ஒருமைப்பாடு, ஊரக வளர்ச்சி முதலியவற்றை அவர்கள்தான் செய்யவேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் கடமையும் அவர்களுக்கு உண்டு. இதைத்தவிர அவர்கள் நேரம் கிடைத்தால் நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்க வேண்டும்.

 

விவசாயிகள் இந்தக் கடமைகளை உணராமல் தற்கொலைசெய்துகொள்வது ஆபத்தான போக்கு என்று பிரதமர் கருத்து தெரிவித்தார். தற்கொலை செய்ய எண்ணமுடைய விவசாயிகள் ஏன் ராணுவத்தில் சேர்ந்து காஷ்மீருக்கும் மேற்குவங்காளத்துக்கும் சென்று நாட்டுக்காக அதைச் செய்யக்கூடாது என்று அவர் உணர்ச்சிகரமாகக் கேட்டார். எதிர்காலத்தில் விவசாயிகளின் கடன் மனுக்கள் மேல் அவர்கள் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள் என்ற உறுதிமொழி வாங்கப்படும் என்றும் அதை மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் வங்கி ஆலோசனைக்குழு தெரிவித்தது

 

தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் தங்கள் மாடுகள் நாய்கள் மனைவிகள் போன்ற வாயில்லாப்பிராணிகளையும் சேர்த்தே கொல்ல முனைவதை மேனகா காந்தி கடுமையாகக் கண்டித்தார். விவசாயிகள் தற்கொலைசெய்வதன் மூலம் அனாதையாகும் அவர்களின் நாய்களை உரியமுறையில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். கடந்த நான்குவருடங்களில் ஆயிரம் விவசாயிகள் தங்கள் பூச்சிமருந்தைக் குடித்து உயிரிழந்திருப்பதே தங்கள் மருந்து பயனற்றது என்ற குற்றச்சாட்டுக்கு பதில் என போயர் ஆண்ட் மேயர்நிறுவனம் தெரிவித்தது.

 

தேவைக்கு மேல் உற்பத்தியைப் பெருக்குவதில் முனைந்து நிற்கும் ஒரே உற்பத்தியாளர்என்று நிபுணர்களால் வரையறை செய்யப்பட்டுள்ள விவசாயிகள் பொதுவாகக் கூட்டம் கூட்டமாக கிராமங்களில் வாழ்கிறார்கள். குலசாமிக்குப் பொங்கல் போடுவது, வாரம் தோறும் சந்தை, சாதிக்கலவரம் போன்ற கலாச்சார நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுகிறார்கள். தேர்தல்களில் இவர்கள் வாக்களிக்க வைக்கப்படுகிறார்கள். சமீப கால ஆய்வுகளின்படி ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்னரும் இவர்களின் மொழிவளம் அதிகரிக்கிரது என்பது கண்டடையப்பட்டிருக்கிறது. பணப்புழக்கம், பற்றாக்குறை, பொருளாதார இறுக்கம், அகவிலை போன்ற சொற்களை இவர்கள் இவ்வாறுதான் கற்றுக்கொள்கிறார்கள்.

 

அவற்றை அவர்கள் தங்களுக்கே உரிய முறையில் பயன்படுத்துகிறார்கள். இப்ப யூரியா இல்லைன்னா ஒரு மாதிரி பற்றாக்குறை ஆயிடுதுங்க…வரப்பிலே புல்லு ஏறி ஒரு பொருளாதார இறுக்கம் ஆயிடுதுங்க பாத்தேளா? அப்பம் அருகு வெட்டல்லேன்னாக்க நஷ்டம் வந்துபோடும்…அததுக்கு அததுக்குண்டான அகவெலை இருக்கில்லா?” என்ற பருவத்தில் இவர்கள் நவீனச் சொல்லாடல்களுக்குள் வந்து சேர்கிறார்கள். இவர்களின் சமூகப்பயன்பாடு பன்முகம் கொண்டதாகும். இவர்களின் குடிசைகளில் தலைவர்கள் தொலைக்காட்சி காமிரா முன் தூங்குகிறார்கள். கயிற்றுக்கட்டிலில் அமர்ந்துகொண்டு  பச்சை வெங்காயத்துடன் சப்பாத்தியும் சாப்பிடப்படுகிறது. இவர்கள் ஆடும் நடனங்களில் அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி கூட ஆடிவிட்டு வண்டர்புல் என்று சொல்வதுண்டு.

 

நவீன வேளாண் அறிவியல் முரணியக்கத்தையே வேளாண்மைக்கான அடிப்படை விதியாகக் கொண்டிருக்கிறது. அதாவது மண் ஒரு சக்தி. இதற்கு நேர் எதிரான சக்தி உரம்.  உரம் மண்ணை அழிக்கப் போராடும்போது மண் உரத்தை உறிஞ்சி அழிக்க முனைகிறது. பயிர் மண்ணுக்கு எதிரான சக்தி. ஏனென்றால் அது மண்ணுக்கு எதிராகவே வளர்கிறது. ஆகவே உரமும் பயிரும் நட்பு சக்திகள். பயிருக்கு பூச்சி எதிர் சக்தி. ஆகவே பூச்சிக்கு மண் நட்பு சக்தி. பூச்சிமருந்துக்கு பூச்சி எதிர் சக்தி. ஆகவே பூச்சி மருந்து பயிருக்கு நட்பு சக்தி. ஆகவே அது மண்ணுக்கு எதிர்சக்தியாகவே இருக்க முடியும்.

 

மொத்தத்தில் இவ்வாறு நிகழும் வேளாண்மை என்னும் செயல்பாட்டுக்கு எதிர் சக்தியாக விவசாயி இருக்கிறான். விவசாயிக்கு எதிர் சக்தியாக வியாபாரி இருக்கிறார். வியாபாரிக்கு எதிர் சக்தியாக நுகர்வோர் இருக்கிறார். நுகர்வோருக்கு எதிர் சக்தியாக அரசாங்கம் காணப்படுகிறது. ஆகவே அது விவசாயிக்கு எதிராகவே இருக்க முடியும். அதே சமயம் அது மண்ணுக்கு ஆதரவானது. எனவே அது பூச்சிகளுக்கும் ஆதரவானது. இந்த எளிமையான வாய்ப்பாட்டை மிச்சிகன் பலகலைகழக பேராசிரியர் ஸ்டுவர்ட் மேட்வண்டர் உருவாக்கி இந்திய சிந்தனையாளர்களான எஸ்.ஆர்.ரங்கசாமி மற்றும் அழ.தமிழழகன் ஆகியோர் அதை இந்து நடுப்பக்கக் கட்டுரைகளிலும் ரூபா அன் கோ பேப்பர்பேக் நூல்களிலும் விளக்கியிருக்கிறார்கள். இதன் அடிப்படையில் மத்திய அரசு தன்னுடைய  வேளாண்கோட்பாடுகளை உலகவங்கி உதவியுடன்  உருவாக்கி வருகிறது.

 

நம்முடைய நாட்டில் விவசாயிகளின் எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கிறது. அவர்களின் நிலைமை நாளுக்குநாள் மேம்பட்டு வருகிறது. தொண்ணூறுகளில் தற்கொலைசெய்துகொண்ட விவசாயிகளுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாய்தான் அளிக்கப்பட்டது. இப்போது அது ஐந்துலட்சமாக ஆகியிருக்கிறது. வரும்காலத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்காக அவர்களின் வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அரசு அறிவிக்கவிருக்கிறது.

 

 

 

 

முந்தைய கட்டுரைமேலாண்மை அத்வைதம்-கடிதம்
அடுத்த கட்டுரையூத்து- கடிதம்