மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
”காந்தியின் சீடர்களின் செல்வம்” படித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நேருவைப் பற்றி நிறைய எதிர்மறைக் கருத்துக்களை மட்டுமே கொண்டிருந்த எனக்கு தங்களின் இந்தப் பதிவு, “மூதாதையரின் குரல்” மற்றும் http://www.gandhitoday.in இணைய தளத்தில் இருந்த “அப்போது காந்தி வந்தார்” பதிவுத் தொடர் ஆகியவற்றின் மூலம் ஒரு நல்ல தெளிவு கிடைத்தது. மிக்க நன்றி.
நேருவைப் பற்றி நடுநிலையாக எழுதப்பட்ட நூல்களை எனக்கு தயவு செய்து பரிந்துரைக்க முடியுமா? மேலும் நேருவின் “Discovery of India” புத்தகத்தையும் படிக்க உத்தேசித்திருக்கிறேன். தங்களின் கருத்தையும் அறிய விரும்புகிறேன்.
அன்புடன்,
கணேஷ் பெரியசாமி.
அன்புள்ள கணேஷ்
நேருவைப்பற்றி நடுநிலையுடன் மதிப்பிட்டு எழுதப்பட்ட நூல்கள் அனேகமாக இல்லை என்றே நினைக்கிறேன். ஒருபக்கம் புகழ் இன்னொரு பக்கம் வசை.
எனக்கே நேருவை சரியானபடி காட்டிய நூல் அவரது சகல அந்தரங்கங்களையும் அம்பலப்படுத்தி எழுதப்பட்ட எம் ஓ மத்தாய் எழுதிய நேரு யுக நினைவுகள்தான். அது தமிழிலும் வந்துள்ளது என்றார்கள்
ஒட்டுமொத்தமாக நேருவின் பின்னணிச்சூழலைப் புரிந்துகொள்ள ராமச்சந்திர குகா எழுதிய காந்திக்குப்பின் இந்தியா இரு தொகுதிகளும் முக்கியமானவை
ஜெ
”திருப்பூரில் கதர் வியாபாரிகள் சங்கத்தார் காந்தியைக் கண்டு தம் குறைகளை முன்வைத்தார்கள். கதர் விற்பனை குறைந்துபோனதைப் பற்றியும் மூலதனம் முடங்கிப்போனதைப்பற்றியும் சொல்லி வருத்தப்பட்டார்கள். கதரின் திசையைநோக்கி வழிநடத்திய காந்திக்கு அவர்கள் வாழ்வுக்கு வழிசொல்லும் பொறுப்பும் இருக்கிறது என்பதுபோல அவர்கள் பேச்சு அமைந்திருந்தது. இதுவரை அகில இந்திய சர்க்கா சங்கத்தாரிடமிருந்து கிடைத்துவந்த உதவிகள் திடீரென நின்றுவிட்டதால் கதர் உற்பத்திக்கும் தொழிலுக்கும் பெரிய ஆபத்து ஏற்பட்டுவிட்டது என்று முறையிட்டார்கள். நூல் நூற்பதையும் கதர் விற்பனையையும் முக்கியப்படுத்திப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்த காந்தியிடமிருந்து ஆதரவான முடிவை எதிர்பார்த்து அவர்கள் அப்படிப் பேசினார்கள். அந்த எண்ணத்துக்கு மாறாக, அவர்களுடைய தோல்விக்கான காரணத்தை அலசி முன்வைக்கும் விதமாகப் பேசத் தொடங்கிவிட்டார் காந்தி. “இந்தியாவிலேயே முதன்முதலாக கதர் இயக்கத்தில் ஈடுபட்டது தமிழ்நாடு. அதிலும் திருப்பூர் தலைமை வகித்து இந்தியாவின் மற்ற பாகங்களுக்கெல்லாம் கதரை உற்பத்தி செய்து அளிக்கும் இடத்தில் இருந்தது. கதருக்கு கிராக்கி அதிகமாகவே பல வியாபாரிகள் சீக்கிரமாகப் பணம் திரட்டிவிடவேண்டும் என்கிற ஆசையில் தொழில்முறையில் ஒழுங்கீனமாக நடக்கத் தொடங்கினார்கள். இதுவே சரிவுக்குக் காரணம். இதற்கிடையில் நாடு முழுக்க பல இடங்களில் சர்க்கா சங்கங்கள் உருவாகி கதர் உற்பத்தியைத் தொடங்கிவிட்டார்கள். இதனால் திருப்பூர் கதருக்கு வரவேற்பு குறைந்துபோய்விட்டது. மேலும் திருப்பூர் கதரில் பலவித ரகங்கள் இல்லை. மற்ற இடங்களில் சந்தைக்குத் தேவைப்படும் விதத்தில் கதர் உற்பத்தியில் மாற்றம் கொண்டுவந்து வெற்றி பெற்றார்கள். நீங்கள் அப்படி செய்வதில்லை. அதுவே உங்கள் தோல்விக்குக் காரணம். இந்திய சர்க்கா சங்கம் எவ்வளவு காலம் உங்களுக்கு உதவி செய்யமுடியும்? பத்து ஆண்டுகள் தொடர்ந்து உதவி செய்தபிறகுகூட நீங்கள் உங்கள் தொழிலை லாபகரமாகச் செய்யத் தெரிந்துகொள்ளவில்லை என்றால் நீங்கள் வியாபாரத்துக்குப் பொருத்தமான்வர்கள் அல்ல என்றுதான் நான் நினைப்பேன். கால நிலையைக் கவனித்து சமயத்துக்கு ஏற்றமாதிரி துணிகளைத் தயாரித்து விற்பனை செய்தால் உங்கள் தொழிலுக்கு ஒருபோதும் இடையூறு நேராது” என்று உபதேசம் செய்து அனுப்பிவைத்துவிட்டார்.“
பாவண்ணின் கட்டுரையின் மேற்சொன்ன பாரா இன்றும் எவ்வளவு உண்மையாக இருக்கிறது.
இன்றும் ஈரோடு, சென்னிமலை, பவானி பகுதி நெசவாளர்களின் நிலை முன்னேறாததற்கு இந்த “மாறா” குண வியாதி ஒரு முக்கிய காரணம். வட இந்தியாவில், கையால் நெய்த கார்ப்பெட்டுகளுக்கு ஒரு பெரும் சந்தை உண்டு. ஆனால், அவை, வெவ்வேறு வடிவங்களிலும் நிறங்களிலும் (குறிப்பாக sober நிறங்களிலும்) தேவைப் படுகின்றன. ஆனால், இங்கே கடந்த 40 ஆண்டுகாலமாக, உற்பத்தி செய்யப்படுவதெல்லாம், கறுப்பு, சிவப்பு பச்சை நிறங்களால், மயில், பறவைகள் போன்ற படங்கள் வருமாறு நெய்யப் படும் வகைகள்தான். அதே போல், ஒரே மாதிரித் துண்டுகள். நுகர்வோரின் மாறும் தேவைகளைக் கொஞ்சம் கூடக் கவனிக்காமல், மணலுள் தலையை மூடிக் கொள்ளும் மூர்க்கத் தனம். அதே சமயம், தொழில் நலிகிறது என்னும் ஒப்பாரி.
காந்தி என்னும் பனியாதான் இதை நுட்பமாகக் கவனித்துச் சொல்லியிருக்கின்றார். மாறும் சந்தைக்கேற்ப மாற வேண்டும் என்னும் நவீன சிந்தனை. தொழிலில் நேர்மை வேண்டும் என்னும் தர்மம். சலுகை உரிமையல்ல என்னும் கறாரான பார்வை.
காந்தியை அறிந்து கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் ஆச்சரியத்துடனும், கண்களில் நீருடனும் முடிகிறது.
பாலா
அன்புள்ள பாலா,
காந்தியை நடைமுறை நோக்கில் இருந்து ஒருபோதும் பிரித்துப்பார்க்கமுடியாது
இருவகை அரசியல்வாதிகளுண்டு. தனக்கு ஆதரவாளர்களை உருவாக்கிக்கொள்பவர்கள். தன் மக்களை வழிநடத்துபவர்கள்.
முதல்வகையினர் மக்களுக்கு பிடித்ததையே பேசுவார்கள். இரண்டாம் வகையினர் மக்களுக்கு தேவையானவற்றைப் பேசுவார்கள். அது பெரும்பாலும் அவர்களுக்குப் பிடிக்காததாகவே இருக்கும்
ஜெ