‘XXX’ தொல்காப்பியம்

நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழறிஞரும் வழக்கறிஞருமான நா. விவேகானந்தன் எம்.ஏ.பி.எல்., தொல்காப்பியத்தில் அகப்பொருள் என்ற தலைப்பில் ஒரு உரைநூலை ஆக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே திருக்குறள் காமத்துப் பாலுக்கு உரை எழுதியவர். இரு பாகங்களாக கைவல்ய நவநீதத்துக்கு உரை எழுதியிருக்கிறார். பகவான் இராமகிருஷ்ணர் பரம்பொருளை அடைந்தது எப்படி, இயேசுவின் யோகம், திருக்குறள் அகழ்வாராய்ச்சி போன்ற பலநூலகளை இயற்றியவர்.

தொல்காப்பியம் முற்றிலும் அகப்பொருளை சொல்லுகிற ஒரு இலக்கண நூல் என்பது இவர் ஆய்ந்து தெளிந்த முடிவாகும். இவர் இதற்கென தொல்காப்பியப் பாக்களை நுணுக்கமாக ஆய்வு செய்து உப்பக்கம் கண்டிருக்கிறார். மூதறிஞர் கலைஞர் ஆக்கிய திருக்குறள் அகப்பொருள் ஆய்வுகளே தனக்கு வழிகாட்டியாயின என்று முன் பக்கத்திலேயே ஆசிரியர் இதை உருக்கமாக சொல்லியிருக்கிறார். இந்நூலை முக்கியமான தமிழ்ச் சான்றோர் புகழ்ந்தேத்தியுள்ளனர் என்பது முற்றிலும் இயல்பேயாகும். நல்லாசிரியர்,கவிஞர், வெண்பாவேந்தன் [முன்னாள் தமிழ்த் துறைதலைவர், தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி, அருப்புக் கோட்டை.] அவர்கள் தன் சாற்றுகவியில் இங்கனம் சாற்றுகிறார்.

ஒன்பான் இயல்களிலும் ஓவியக் காட்சிபோல்
இன்ப அகப்பொருளை ஏற்றிவைத்த _நின்பெருமை
எண்ணி மகிழாதார் இல்லரென்பேன் எந்தமிழின்
புண்ணியத்தால் நீ பிறந்தாய் பார்!

கல்லூரிப் பாடத்தில் கட்டாயம் சேர்த்திட்டால்
எல்லாரும் போற்றி எதிர் கொள்வார் -வல்லவரே
வேகமாய் ஆயும் விவேகானந்தா உன்னால்
தாகம் தணியும் தமிழ்!

முனைவர் எஸ் செல்லையா பிள்ளை எம் ஏ., ஏ எம் ஏ, எம் ஃபில், பி. ஹெச்.டி [நாகர்கோவில் தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி இலக்கிய ஆய்வுத்துறை தலைவர்] அவர்களோ உரையாசிரியரின் துணிச்சலையும் அறிவாற்றலையும் புகழ்ந்து உச்சி முகர்ந்து இவ்வாறு ஏத்துகிறார். “புறத்திணையியல் உட்பட்ட அனைத்து ஒன்பது இயல்களுமே அகப்பொருளை சிறப்புற விளக்குகின்றன என்பதை எடுத்துக் காட்டுகிறார்… தமிழ்கூறு நல்லுலகம் இவ்வரிய உரையை படித்து இன்பம் பெறும் என நம்புகிறேன்.”

செந்தமிழ் சுடர்,கவிஞர் விஸ்வதிலகன் எம். ஏ,பி.எட் [மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் பணி நிறைவு.செயலாளர் கன்யாகுமரி மாவட்டக் கம்பன் கழகம்] இங்ஙனம் விதந்து கூறுகின்றார். “மிகப்பொல்லாதவர் ஐயா இந்த தொல்காப்பியர் என வியந்து கூறும்படியாக தொல்காப்பியரை நம் கண்முன் நிறுத்திக் காட்டுகிறார் இந்நூலாசிரியர்.”

இம்மட்டோ எனின் டாக்டர் பூதலிங்கம் எம்.ஏ,பி.ஹெச். டி அவர்கள் [முதல்வர் சர்தார் ராஜா கலை அறிவியல் கல்லூரிகள் வடக்கன்குளம்] “மாணவர்களுக்கு இது ஒரு வைரச்சுரங்கம்.ஆய்வாளர்களுக்கு இது ஓர் அறிவுக்களஞ்சியம்” என்று நெக்குருகி பாராட்டுகிறார். தமிழ்ப்பணி, திருக்குறள் ஞாயிறு, அருண்மொழிச் செல்வர், முனைவர் பா.வளன் அரசு [மூன்னாள் தமிழ் துறைதலைவர் தூய யோவான் கல்லூரி,பாளையங்கோட்டை] அவர்கள் புகழ்ந்து சொல்லும் அணிந்துரையே இவற்றுக்கு மகுடமென திகழாநிற்கிறது. “தொல்காப்பியத்தை புதுப்பார்வையுடன் மதுகை நோக்கில் ஆராயத்தூண்டும் இந்நூல் மாணவரும் அறிஞரும் ஆழ்ந்து கற்கவேண்டும் எனத் தெளிவுறுத்துகிறது” என்கிறார் அச்சான்றோர்.

இவ்வளவு பெருமையுள்ள அளவிற் பெரிதான இந் நூலினை சுருக்கமாக சொல்வது அதற்கு இழைக்கும் தீங்கெனவே அறிஞர் கூறுவர்.அனைவரும் கற்று உணர்ந்து செயலில் காட்டி வாழ்வாங்கு வாழ வழி வகுக்கும் முதனூல் இது. இதன் ஆய்வுமுறையை தெளிவாக்கும் சில குறிப்புகளையும் சில எடுத்துக்காட்டுகளையும் சொல்லி அமைவதே என் போன்ற எளியேனுக்கு இயல்வதாகும்.

தொல்காப்பிய அருஞ்சொற்களுக்கு இதுகாறும் பழமைவாதிகள் கூறிவந்த பொருளை மறுத்து ஆசிரியர் புதுப்பொருள் கண்டடைகிறார் என்பது முதற்கண் குறிப்பிடத்தக்கது. ஐவகை நிலம் என்பது உண்மையில் நிலமல்ல என்கிறார் ஆசிரியர்.நிலம் என்பது கன்னிப்பெண்ணையே குறிக்கும் உவமச் சொல்லாகும்.பூ என்பது பூழை என்ற சொல்லுக்கு உவமமாகும்.பூழை என்பது துளை என்பதன் வேறு சொல்.பூவை அணிந்தவன் என்பது புணர்ச்சியையே குறிப்பிடும். தொல்காப்பியர் பொருள் என்று குறிப்பிடுவது பெண்ணின் பிறப்புறுப்பையே. பெண்ணுறுப்பை ஆசிரியர் நூலில் இளமைப் பொருள் என்று சொல்கிறார். அவ்வுறுப்பின் ஆழத்தை அடிப்படையாக கொண்டு பெண்களை ஐந்து பெரும் பிரிவுகளாக தொல்காப்பியர் கூறுவதாக ஆசிரியர் பிரித்துக் காட்டுவது எண்ணி எண்ணி இன்புறத்தக்கது.

இதே போல பொழுது என்பதை ‘புணர்ச்சிக்கு ஏற்ற காலம்’ என்றும் உரிப்பொருள் என்பதை ‘காம உறுப்புகளின் இயக்கம்’ என்றும் ஆசிரியர் பொருள் கொள்கிறார். பல சொற்கள் தொல்காப்பியரால் சரியாகவே கூறப்பட்டபோதிலும் பிற்கால பண்டிதரால் திரிபுசெய்யப்பட்டன என்று ஆசிரியர் கூறுவது சிந்திக்கதக்கது. உதாரணமாக ‘தொடை’ என்பது பெண்ணின் தொடையையே குறிக்கும். “வாயிற் மறுத்தல்” என்பது வாய்வழிப் புணர்ச்சிக்கு மறுத்தல் என்று தெளிவுற இருந்த போதிலும் புலவர் அவற்றை வேறுபட்டு பொருள் கொண்டமை குறித்து ஆசிரியர் கூறுவது பலவகையானும் முக்கியமான ஓர் ஆய்வாகும். அதைப்போல கைக்கிளை என்பது கையால் செய்துகொள்ளப்படும் சுய இன்பமே என்று ஆசிரியர் ஐயம் திரிபற விளக்கி சொல்வது வியத்தற்பாலது.

இனி இக்கட்டுரையில் பழமைவாதிகள் தொல்காப்பியப் பாக்களுக்கு அளிக்கும் பொருளும் நம் நூலாசிரியர் அளிக்கும் புதுப்பொருளும் சில எடுத்துக்காட்டுகள் மூலம் காட்டப் படுகின்றன.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே

[அகத்திணையியல் 5]

பழைய உரை

மாயோன் மேவுவது காடுடைய நிலம். சேயோன் மேவுவது மேகம் சூழ்ந்த மலை உள்ள நிலம். தேவர் குல மன்னன் மேவுவது மிகுதியான நீர் உள்ள நிலம்.வருணன் மேவுவது மணல் நிறைந்த நிலம். இந்த நான்கு நிலங்களும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்று முன்னோர் சொன்ன முறைப்படி சொல்லப்படும்.

புது உரை [திரு விவேகானந்தன் அருளியது]

மாயோனின் குணமுள்ளவன் மேய [புணர்ந்து அனுபவிக்க] விரும்பும் பெண் காடு போன்ற இளமைப்பொருள் உடையவள். சேயோனின் குணம் உள்ளவன் மேய்வதற்காக மலைபோன்ற இளமைப்பொருள் உள்ள பெண். வேந்தனைபோன்றவர்கள் மேய வயல் போல ஊற்று உள்ள இளமைப்பொருள் உள்ள பெண். வருணனை போன்றவர்கள் மேய மணற்பாங்கான நிலம் போன்ற இளமைப்பொருள் உள்ள பெண் என்று பெரியோர் சொல்லியுள்ளனர்.

***

திணை மயக்குறுதல் கடிநிலை இலவே
நிலன் ஒருங்கு மயங்குதல் இல்லென மொழிப
புலன் நான்கு உணர்ந்த புலமையோரே

[அகத்திணயியல் 14]

பழைய உரை

திணைக்குரிய செயல்கள் மாறுபடுவதை தவிர்க்க முடியாது. ஆனால் நிலங்கள் ஒன்றோடொன்று மயங்கி கலப்பது கூடாது.பொருளிலக்கணம் அறிந்த அறிஞர் இவ்வாறு கூறுவர்.

புது உரை

ஐவகை பெண்கள் தங்கள் ஒழுக்கம் கெட்டு கைக்கிளை போன்ற ஒழுக்கங்களை செய்வது தவிர்க்கக் கூடியதல்ல. அதேசமயம். ஒரு பெண்ணின் இளமைப்பொருள் இன்னொரு பெண்ணின் இளமைப்பொருளை தேடி மயங்காது என்பார்கள் ஐவகை இளமைப்பொருள்களைபற்றி நன்கு அறிந்தவர்கள்.

***

உரிப்பொருள் அல்லது மயங்கவும் பெ

அகத்திணையியல் 15

பழைய உரை

ஆனால் தனக்குரிய உரிப்பொருள் [உயிருறுப்பின் தொடர்பு] இல்லாத சமயம் ஒரு இளமைப்பொருள் இன்பத்துக்காக வேண்டி வேறு ஒரு பெண்ணின் இளமைப்பொருளை தேடி மயங்கலாம்.

***

வேந்து வினை இயற்கை வேந்தன் ஒரீஇய
ஏனோர் மருங்கினும் எய்து இடன் உ

அகத்திணையியல் 36

பழைய உரை

பிரிவு என்பது வேந்தர்க்காக தலைவன் தூது முதலிய வினைகளை ஆற்றுவதனாலும் வேந்தனைத்தவிர அமைச்சர் முதலியோருக்காக அச்செயல்களை ஆற்றுவதனாலும் நிகழலாம்.

புதிய உரை

உயிருறுப்பு செய்ய வேண்டிய செயல்களை வேறு உறுப்புக்கள் [நாக்கு, விரல்] செய்து தலைவி அகப்பொருள் காண்பதற்காக புணர்விலிருந்து பிரிவதும் உண்டு.

***

வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட்டு அயர்ந்த காந்தளும்

அகத்திணையியல் 63

பழைய உரை

ஆநிரைகளை மீட்க வந்த வீரர்களிடம் வெறியின் இயல்பறிந்த வலிமையான நுனியுள்ள வேலேந்திய வேலன் வெறியாட்டு ஆடி அதனால் அவனணிந்த காந்தள் மலர் மாலை கசங்குதல்

புதிய உரை

காம களியாட்டத்தின் சிறப்பினை அறிந்த வலிமையான வேலைப்போன்ற உயிருறுப்பை எதிர்த்த புணர்வில் பழக்கமில்லாத குறிஞ்சி நிலப்பெண்ணை விடாது உயிருறுப்பு காந்தள் பூவாகிய சிவந்த இளமைப்பொருளினுள்ளில் காமவிளையாட்டு ஆடிய ஆட்டத்தினால் அவள் இளமைப்பொருள் அயர்வு அடைந்தது.

***

அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றத்தானும்

புறத்திணையியல் 65

பழைய உரை

வஞ்சி திணையில் படை நாட்டை கைப்பற்ற ஊர்ந்து செல்லும் வழியில் எதிர்த்த வீரர்களை அழிப்பது

புதிய உரை

புணர்வுக்கு சென்ற தலைவனின் கைகளும் ஏனைய உறுப்புகளும் மெதுவாக பக்கத்தில் ஊர்ந்து சென்று நிமிர்ந்து நின்ற மார்பகங்களையும் ஏனைய உறுப்புகளையும் பற்றி வெற்றிபெறுதல்

***

பொருளின்று உய்த்த பேராண் பதக்கம்

[புறத்திணையியல் 65]

பழைய உரை

எதிர்த்தவர்களை பொருட்படுத்தாது துணிச்சலுடன் நாடு பற்ற செல்லும் அரசனின் மிகப்பெரிய ஆண்மை

புதிய உரை

எதிர்நின்ற உறுப்புகளையெல்லாம் ஒரு பொருட்டாக கருதாது தலைவனின் உயிருறுப்பு தலைவியின் இளமைப்பொருளை நோக்கி செல்லும் ஆண்மை

***

வருவிசை புனலை கற்சிறைபோல
ஒருவன் தாங்கிய பெருமையானும்

[புறத்திணையியல் 65]

பழைய உரை

வேகமான வெள்ளம் கல்லணைக்குள் பாய்வதுபோல தன்னை எதிர்த்தவர்களை ஒருவனே நின்று எதிர்க்கும் பெருமைநிலை

புதிய உரை

வேகமாக பாயும் வெள்ளம் கல்லணைக்குள் பாய்வதுபோல தலைவனின் உயிருறுப்பில் இருந்து இளமைப்பொருளுக்குள் மிக வேகமாக பாய்ந்த விந்துவை முல்லை நிலப்பெண் தனி ஒருவளாக தாங்கி வெற்றி பெற்ற பெருமைப்படத்தக்க நிலை

***

அறத்தோடு நிற்ம் காலத்து அன்றி
அறத்தியல் மரபு இலள் தோழி என்ப

பொருளியல் 203

பழைய உரை

தலைவி அறத்தோடு நிற்கும் காலத்து அன்றி தோழி தானே அறத்தோடு நிற்கும் மரபு இலள்

புதிய உரை

ஒருவர் நின்றுகொண்டு தருமம் செய்வதாகவும் மற்றவர் முட்டங்காலிட்டு அத்தருமத்தை பெறுவதாகவும் இருக்கும் நிலையில் தலைவியும் தோழியும் கொள்ளும் புணர்வு முறையில் [ இதை அறத்தோடு நிற்றல் என்பது மரபு] நிற்பது தலைவிக்கு மரபு தோழிக்கு மரபல்ல.

***

உயர் மொழிக்கிளவி உறழும் கிளவி
ஐயக் கிளவி ஆடூவிற்கு உரித்தே

பொருளியல் 233

பழைய உரை

உயர்வான சொற்களை கூறுதலும் மாறுபாடான சொற்களை சொல்லுவதும் கெஞ்சும் வகையில் பணிவாக பேசுதலும் ஆண்மகன் இயல்புகள்

புதிய உரை

நாவினால் தலைவியின் இளமைபொருளை புணரும் கூற்று,நாவினால் இளமைப்பொருளின்னுள்ளில் மேலும் கீழும் தடவும் கூற்று,பிச்சைபாத்திரம் போல நாவை வைத்துக் கொண்டு இளமைப்பொருளை நீவிவிடும் கூற்று ஆகியவை தலைவனுக்கு உரியவை.

***

போக்கியல் வகையே வைப்பு எனப்படுமே

செய்யுளியல் 441

பழைய உரை

சுரிதகம் வகைதான் வைப்பு என்று கூறப்படும்

புதிய உரை

தனக்கு என ஒரு மனைவி இருக்க வேறு ஒருத்தியுடன் போகும் முறைக்கு வைப்பு [வைப்பாட்டி] என்று பொருள்.

***

எண் இடை ஒழிதல் ஏதம் இன்றே
சின்னம் அல்லா காலை ஆன.

செய்யுளியல் 449

பழைய உரை

தனிச்சொல் இல்லாத இடத்து அம்போதரங்க எண் நடுவே இல்லாமல் ஆவதனால் குற்றம் இல்லை

புதிய உரை

தலைவன் புணர்ச்சிக்கு இல்லாத சமயம் எண் பகுதி [கந்துபகுதியே எண் எனப்படும். இது ஆங்கிலத்தில் கிளிடோரிஸ் எனப்படும் இது ஒன்று [1] போல கணப்படும்] உள்ளே சுருங்கி விடுவது குற்றம் ஆகாது.

இந்த சில வரிகள் கடலில் சிறுதுளிகளே என கற்றோர் ஊகித்திருக்க கூடும். வாயுறை வாழ்த்து என்பதை வாய்வழிப்பு ணர்ச்சி என்றும்,யாப்பியல் முழுக்கவே புணர்ச்சி வகைகள் தான் என்றும் தக்க ஆதாரங்களுடன் ஆசிரியர் நிறுவுகிறார். [இதில் எளியேனாகிய எனக்கு சிறு ஐயமுள்ளது. கிழவன் கிழவி என தொல்காப்பியர் தெளிவுறச் சொல்லியிருந்தும் கூட அவற்றை தலைவன் தலைவி என்ற பொருளில் எடுத்துக் கொள்வது சரியா? ] கருவிகள்,விலங்குகள் முதலிய அனைத்து விதங்களிலும் பண்டை தமிழன் காமகலைத் தேர்ச்சி அடைந்தான் என்பதைப் பார்க்கையில் இன்றைய XXX இணைய தளங்களுக்கே தமிழன்தான் முன்னோடி என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த அரிய உண்மையை அறியாமல் இணைய இறக்ககங்களில் தமிழ் மாணவர்கள் பணமும் நேரமும் வீணடிப்பதை என்னென்பது? இந்நூலை வழிமொழிந்துள்ள மூத்த ஆசிரிய பெருந்தகைகள் இவ்வுண்மையை மாணவர் சமூகத்துக்கு எடுத்துச் செல்ல முயலவேண்டும். அம்மட்டுமோ, இனி தமிழர் இல்லங்களிலெல்லாம் தொல்காப்பியம் அதன் இம்மெய்யுருவில் பயிலப்பட வழிவகை செய்தல் வேண்டும். தொலைக்காட்சி எனும் அயல் நாட்டு அரக்கியை நந்தமிழ் மண்ணிலிருந்து ஒழிக்க இதுவே சாலும் வழியெனலாம். முன்னுரை பகர்ந்த அச்சான்றோர் [தங்கள் மூத்த பிராயத்தையும் பொருட்படுத்தாமல் ] இதற்கு மூன்னுதாரணமாகி வழிகாட்டுவார்கள் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை!

தொல்காப்பியத்தில் அகப்பொருள்.நா விவேகானந்தன் எம் ஏ பி எல்.விவேகானந்தா பதிப்பகம், 47-A1 மேல சூரங்குடி, கோணம் அஞ்சல், நாகர்கோவில். குமரிமாவட்டம், தமிழ் நாடு, இந்தியா.பின்கோடு. 629002.தொலைபேசி [04652] 236625 பக்கம் 300 விலைரூ 70

– 06.01.2002, திண்ணை./ மறுபிரசுரம்

 

(தளநிர்வாகி குறிப்பு : இந்த கட்டுரையின் கீழே இந்த நூலாசிரியர் எழுதிய பின்னூட்டம் உள்ளதை கவனிக்கும்படி வேண்டுகிறோம் )

முந்தைய கட்டுரைடொமினிக் ஜீவாவுக்கு இயல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 52