இந்துஞானமரபில் ஆறுதரிசனங்கள் -கடிதம்

வணக்கம் சார்,

நேற்று தான் ‘இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’ முடித்தேன்.

உங்கள் எழுத்துக்கள் மீது எனக்கு முதலில் ஆர்வம் பிறந்தது மானுடவியல் சார்ந்த விஷயங்களை நீங்கள் சொல்லும் முறையில்தான்.

‘பண்படுதல்’ அப்படித்தான் வாசித்தேன். அந்த ஆர்வம் மெல்ல சரித்திரம், காந்தி, இந்தியவியல் என்று வளர்கிறது.

இந்த அம்சங்களை சார்ந்த உங்கள் ஒவ்வொரு புத்தகமும் எனக்கு மேலும் மேலும் ஆர்வம் உண்டாக்கி விடுகின்றது. இவ்விஷயங்களை மேலும் படிப்பதற்கு, ஆராய்வதற்கு உங்கள் ‘பார்வை’ தான் எனக்கு வழிகாட்டி. அதைப் பிரமாணமாக வைத்தே… இதர புத்தகங்களைப் படிக்கிறேன்.

இதற்கு முன்னால் இந்து மதத்தின் மேல் எனது பார்வை… இடது சாரிச் சிந்தனை, பெரியாரிசம் சார்ந்தது தான். அதை துடைத்தெறிய உங்கள் புத்தகம் உதவியது.

இந்தப் புத்தகத்தில் ஞாயதரிசனத்தில் உள்ள பிரமாணங்களை விளக்குவதற்கு நீங்கள் சொன்ன டார்வின் மீன், ஓநாய்… உதாரணம் ஒரு அற்புதம். ஞான மரபில் தேர்ந்த அனுபவம், அசாதாரணமான கற்பனை உள்ள உங்களைப் போன்றவர்களால் தான் அது சாத்தியம். ஒரு காலத்தில் நமது குருமார்களும் இப்படியேதான் கல்வி கற்பித்து இருப்பார்கள்!

உங்கள் வாசகனாக பெருமைப்படும் மற்றுமொரு சந்தர்ப்பம் இது.

அன்புடன்,
ராஜு

அன்புள்ள ராஜூ

நலம்தானே?

இந்துஞானமரபை விரிவாக அறிமுகம் செய்து சில தனிநூல்களை எழுதவேண்டுமென ஆசை உண்டு, பார்ப்போம்.

பொதுவாக இந்து ஞானமரபை மதிப்பிடுவதை இப்படி உருவகிப்பேன். ஒரு நிலத்தை மதிப்பிடுவது போல. நிலத்தின் வளத்தை அதன் மண்ணை வைத்து மதிப்பிடலாம். அதில் நின்ற, நிற்கிற மரங்களைக் கொண்டு அடுத்தபடியாக மதிப்பிடலாம். அந்த மண் நேற்றுவரை எப்படி எவற்றைப் பயிரிட்டது என்பதையும் கருத்தில்கொள்ளலாம். நம் மண் அற்புதமானது. மகத்தான மரங்கள் கொண்டது. ஆனால் களைகளும் உள்ளன. நேற்றுவரை சற்று விஷச்செடிகளும் பயிரிடப்பட்டிருந்தது.

பெருமையும் சிறுமையுமல்ல. இதை எப்படி மீட்டு வளப்படுத்துவதென்பதே கேள்வி

ஜெ

முந்தைய கட்டுரைஇரு சந்திப்புகள்
அடுத்த கட்டுரைகாந்தி ஓஷோ மற்றும் சிலர்