கூடங்குளமும் சுஜாதாவும்

சுஜாதா அறிமுகம்

1988 வாக்கில் நான் காசர்கோட்டில் இருந்த காலம். கூடங்குளம் அணு உலை அப்போதுதான் ஆரம்ப கட்டத்தில் இருந்தது. சுகதகுமாரியைத் தலைமையாகக் கொண்ட கேரள சூழியல் அமைப்புகள்தான் அதற்கு ஓரளவேனும் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். நான் இருமுறை வந்து கூடங்குளம் எதிர்ப்பு கோஷங்கள் போட்டிருக்கிறேன். சுந்தர ராமசாமி ஒருமுறை வந்திருந்தார்.

பொதுவாக அன்று எல்லாத் தரப்புமே கூடங்குளம் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தனர். எதிர்ப்பரசியலில் ஈடுபாடுள்ள இடதுசாரிகள் கூடங்குள விவகாரத்தில் முதன்மை ஆதரவாளர்கள், காரணம் உலை சோவியத் ருஷ்யாவால் நிறுவப்பட்டது. அன்று சோவியத் ருஷ்யா வலுவாக இருந்தது, இடதுசாரிகளின் முக்கியமான ஆதரவுத்தளமாக அது விளங்கியது.

பொதுமக்கள் கூடங்குளம் ஒரு பெரு நகரமாக ஆகிவிடும், நிலமதிப்பு நூறுமடங்கு எகிறும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். ஆகவே சூழியலாளர் எதிர்ப்பு என்பது மதியவெயிலில் நான்குபேர் சாமி சப்பரத்தைக் கொண்டுசெல்வதுபோல சோகையான சம்பிரதாயமாகவே இருந்தது

அப்போதுதான் சுஜாதா எழுதிய ஒரு குறிப்பு தினமணியில் வந்தது. ‘டெக்னோகிராட்’ என நம்பப்பட்ட சுஜாதா அப்படி எழுதியது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. நான் அவருக்கு அதைக் கடிதமெழுதித் தெரிவித்திருந்தேன். அவர் கோணலான கையெழுத்தில் ‘கவனியுங்கள் என் எதிர்ப்பும் ஒரு டெக்னோகிராட்டாக நின்றபடித்தான்’ என்று எழுதியிருந்தார்.

கூடங்குளம் நடுவே கைவிடப்பட்ட திட்டமாகத் தெரிந்தது. பின்பு சோவியத் ருஷ்யா உடைந்து ருஷ்யக்குடியரசு உருவானபோது மீண்டும் சூடு பிடித்தது. புதிய கமிஷன்கள் புதிய தள்ளுபடிகள் நிகழ்ந்திருக்கலாம். ஆனாலும் போராட்டம் என ஏதும் நிகழவில்லை.

கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டம் மீண்டும் ஆரம்பமானது போராட்டக்களத்தில் இருந்த அசுரன் என்ற நண்பர் என்னை வந்து சந்தித்தபோதுதான் எனக்குத்தெரிந்தது. ஆனாலும் அது ஓர் அறிவியக்கமாகவே நீடித்தது. அசுரன் புற்றுநோயில் காலமானார். அவரது கட்டுரைகளின் தொகுதி நியூயார்க்கில் வெளியிடப்பட்டபோது நான் நூலை வெளியிட்டேன். அந்நிகழ்ச்சியில் உதயகுமார் பேசினார்.

இன்று கூடங்குளம் போராட்டம் வலுவாக நிகழ்வதற்கு இருகாரணங்கள். ஒன்று உடனடியாக நெருக்கடியைச் சந்திக்கும் மீனவ மக்கள். இரண்டு விடாப்பிடியாகத் தொடர்ந்து களத்தில் இருக்கும் உதயகுமாரின் தலைமை

சுஜாதாவின் கட்டுரையை
ஒரு நண்பர் இன்றுகாலை அனுப்பிவைத்தார். அது இணையத்தில் கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. போகிறபோக்கில் சொல்லுவதுபோலச் செல்லும் கட்டுரை எல்லாவற்றையுமே விளக்கிவிடுகிறது

சுஜாதா- கூடங்குளம்

முந்தைய கட்டுரைகருக்கியூர் முதல் தெங்குமராட்டா வரை – 1
அடுத்த கட்டுரைசாதியும் ஜனநாயகமும்