கருக்கியூர் முதல் தெங்குமராட்டா வரை – 1

ஈரோடு செங்குந்தர் பொறியியல்கல்லூரியில் பேசச்சென்றபோது அப்படியே ஒரு கானுலாவுக்கும் செல்லலாம் என ஈரோடு நண்பர் சிவா சொன்னார். கல்லூரிப் பேச்சு நான்கு மணிக்கு முடிந்தது. மாலை ஐந்துமணிக்கே செல்லலாம் என கல்லூரி தாளாளர்களில் ஒருவரான சிவானந்தம் சொன்னார். அவர் கடந்த பதினைந்தாண்டுக்காலமாக தொடர்ச்சியாக கானுலா சென்று வரக்கூடியவர். அதற்காக ஒரு குழுவே அவருடன் இருக்கிறது. நான் அஜிதனும் அதில் பங்கெடுக்கலாமென நினைத்தேன். அஜிதன் இரவு எட்டுமணிக்குத்தான் பெங்களூரில் இருந்து வந்தான்.

ஒன்பதுமணிக்கு கோத்தகிரிக்கு காரில் கிளம்பினோம். சிவானந்தன், நான், அஜிதன்,கிருஷ்ணன்,சிவா, அசோக், கமல் என்று எட்டுபேர். கோத்தகிரி சென்றுசேர இரவு பன்னிரண்டரை மணி ஆகிவிட்டிருந்தது. கோத்தகிரி அருகே ஒரு கானுலாதங்குமிடத்தில் படுக்கை ஏற்பாடாகியிருந்தது. நல்ல குளிர். ஆனால் எனக்கு சரியான தூக்கம். 23 இரவில் ஊரிலிருந்து கிளம்பியது முதலே அரைத்தூக்கம்தான் தூங்கிக்கொண்டிருந்தேன். கானுலாதங்குமிடம் ஓரளவு வசதியானது.

காலையில் அஜிதன் என் காலைப்பிடித்து இழுத்து ‘அப்பா எந்திரி…’ என்றான். ‘ஏண்டா?’ என்றேன் ‘வெளிச்சம் வந்தாச்சு…எதுக்காக வேஸ்ட் பண்றே?’ என்றான் ‘ஒரு பத்துநிமிஷம்டா’ என்றபின் சுருண்டுகொண்டேன். அவன் தன் தூரநோக்கியுடன் வெளியே சென்று பறவைகளைப்பார்க்க ஆரம்பித்தான். அவனுடைய பறவைப் பட்டியலில் புதியதாக ஒன்றை சேர்த்துக்கொண்டதாகச் சொன்னான். ஐந்தாண்டுகளுக்கும் மேலாகப் பறவைகளைப் பார்த்துவரும் அவனுடைய பட்டியலில் ஒரு புதிய பறவை சேர்வது மிக அபூர்வமானது.

காலைஎழுந்ததும் கறுப்புடீ போட்டுக்கொடுத்தார் விடுதிக்காவலர். குடித்து பைகளைக் கட்டிக்கொண்டு கிளம்பினோம். நான் கானுலாவுக்கான சப்பாத்துகள் கொண்டுவரவில்லை. சாதாரணச் செருப்புதான். ஆனால் மழைக்கோட்டுகள் கொண்டுவந்திருந்தேன், எனக்கும் அஜிதனுக்கும். மழை வந்திருந்தால் மிகவும் சிரமமாகியிருக்கும். நான்குநாட்கள் முன்னால் வரை தொடர்ந்து மழைபெய்துகொண்டிருந்தது. பயணம் உறுதியா என்ற சந்தேகமேகூட இருந்தது.

வழியில் ஒரு டீக்கடையில் சாப்பிட்டுவிட்டு கருக்கியூர் கிளம்பினோம். வழியில் இயற்கை சூழலியல் ஆர்வலரான பிரபு வந்து சேர்ந்துகொண்டார். பிரபு யானைடாக்டர் கெவுக்கு மிக நெருக்கமாகப் பலவருடமிருந்தவர். ஆனால் கானுலாவில் அதிகம் பேசிக்கொள்ளவில்லையாதலால் அது தெரியவில்லை. மறுநாள் அவர் பிரிந்துசெல்லும்போதுதான் நான் யானைடாக்டர் பற்றி எழுதிய கதையை அவரிடம் சிவானந்தன் சொன்னார். என்னிடம் பேச வந்து காத்து நின்றாராம். நான் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தேன். அவர் பேசமுடியாமல் சென்றுவிட்டார்

கருக்கியூர் ஒரு மலைக்கிராமம். சரிவிலிருக்கும் நூற்றுக்கும் குறைவான ஓட்டுவீடுகள். ஒரு சிறிய பொதுநலக்கூடம், ஒரு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி. கருக்கியூரில் தமிழகத்தின் பழைமையான குகை ஓவியங்கள் உள்ளன. அக்டோபர் இரண்டாம்தேதி புதுக்கோட்டைக்குச் சென்றபோது நண்பர்களுடன் நார்த்தாமலை , சித்தன்னவாசல் சென்றிருந்தோம். அங்கே தற்செயலாக ஆய்வாளர் காந்திராஜனை சந்தித்தோம். கோயில் வாசலில் வைத்தே பேசிக்கொண்டிருந்தோம். அவர்தான் கருக்கியூர் பற்றிச் சொன்னார்

காந்திராஜன் தமிழகத்தின் குகைஓவியங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் அபூர்வமனிதர். கருக்கியூர் ஓவியங்கள் ஆங்கிலேயர்காலகட்டத்தில் அடையாளம் காணப்பட்டிருந்தாலும் பின்னர் மறக்கப்பட்டன. அவற்றைக் கண்டு ஆவணப்படுத்தி கவனத்துக்குக் கொண்டுவந்தவர் அவர். தமிழ்ப்பண்பாட்டின் பல அபூர்வமான தொடக்கப்புள்ளிகளை நாம் இந்த ஓவியத்தில் காணலாம். சொல்லப்போனால் தமிழ்ப்பண்பாடுபற்றிய எந்த விவாதத்தையும் கருக்கியூர் ஓவியங்களில் இருந்து தொடங்குவது நல்லது.

கருக்கியூர் ஓவியங்கள் வேட்டைச்சமூகமாக இருந்த மக்களால் வரையப்பட்டவை. பத்தாயிரம் வருடப்பழைமை அவற்றுக்கிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. பிரம்மாண்டமான பாறைச்சரிவு ஒன்றின் பரப்பில் இவை வரையப்பட்டிருக்கின்றன. பாறை ஒரு கூரை விளிம்புபோல நீட்டிக்கொண்டிருக்கிறது. அதனடியில் மழைக்கு நனையாமல் இருநூறுபேர் வசதியாக நிற்க முடியும். ஒருகாலத்தில் வேடர்களின் தங்குமிடமாக இருந்திருக்கலாம். யார்கண்டது , வேடர்தலைவர்களின் அரண்மனையாகவோ அவர்களின் கோயிலாகவோகூட அது இருக்கலாம்.

கருக்கியூர் ஓவியப்பாறைக்குச் செல்லும் வழி மிகமிக செங்குத்தானது. மலைச்சரிவில் வேர்களையும் கிளைகளையும் பற்றிக்கொண்டுதான் இறங்கவேண்டும். வன ஊழியரக்ளின் உதவியில்லாமல் செல்லமுடியாது, செல்ல முயல்வது ஆபத்தானதும்கூட. வனத்துறை அனுமதி கண்டிப்பாகத்தேவை. அங்கே இறங்கிச்சென்று சேர்ந்தபோது உடம்பில் கொதித்த வியர்வை அடங்கப் பத்துநிமிடங்களாயின. அதன்பின்னரே ஓவியங்களை பார்க்கமுடிந்தது.

இந்தப் பாறைமலையின் மேற்குப் பக்கம் அதிகமாக மழை பெய்யும் பகுதி. கிழக்குப்பக்கம் மழை குறைவு. ஆகவே இது விலங்குகளின் புகலிடம். நாங்கள் சென்றபோதுகூட அங்கே ஏதோ விலங்கு இரவு தங்கியிருந்தமைக்கான ரோமங்கள் முதலியவற்றைப் பார்த்தோம். இந்த பாதுகாப்புதான் ஓவியங்களை இத்தனை ஆயிரம் வருடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

இவற்றை இன்று நாம் ஓவியம் என்று சொல்லும் அர்த்தத்தில் ஓவியங்களென சொல்லமுடியாது. மனித உருவங்களெல்லாமே குழந்தைகள் கிறுக்குவதுபோலத்தான் வரையப்பட்டிருந்தன. ஆனால் விலங்குகளின் உருவங்களில் ஆழ்ந்த அவதானிப்பும் கைத்திறனும் தெரிந்தது. முதல்பார்வைக்கு ஓவியங்களைக் கண்டுபிடிப்பதே கடினம். பார்க்க ஆரம்பிக்கையில் ஒவ்வொன்றாகத் தெரிந்துகொண்டே இருக்கின்றன. நீருக்குள் மீன்கள் ஒவ்வொன்றாக தெளிந்துவருவதுபோல இவை வருகின்றன.

இருவகையில் இவை வரையப்பட்டிருக்கின்றன. சாம்பல்நிறமான பாறைப்பரப்பில் வெள்ளைக்கல்லால் அடித்து அடித்து தடமாக்கிக் கோடிழுத்து வரையப்பட்டிருந்தன சில ஓவியங்கள்.சிவப்புக்கல்லால் பூச்சாக வரையப்பட்டிருந்தன சில. உண்மையில் பச்சிலைகள் முதலியவை சேர்த்து பலநிறங்களில் வரையப்பட்டிருக்கலாம். கல்நிறங்கள் மட்டும் காலத்தில் எஞ்சியிருக்கின்றன போலும்.

வேட்டைக்காட்சிகள்தான் அதிகமும். வில்லேந்திய வேட்டுவர் படைகள் சூழ்ந்து வேட்டையாடும் நிகழ்ச்சிகள் பல உள்ளன. ஆய்வாளர்கள் ஆச்சரியமாகச் சுட்டுவது இரு விஷயங்களை . ஒன்று, பலர்சூழ்ந்து காளைமாட்டைப்பிடிக்கும் சித்தரிப்பு. இன்றைய ஜல்லிக்கட்டின் புராதன வடிவம். இன்னொன்று தோள்களோடு தோள்சேர்ந்து பெண்கள் ஆடும் நடனத்தின் சித்தரிப்பு. இது இன்றும் நம்மிடையே உள்ளது. தேடித்தேடி ஓவியங்களை அடையாளம் கண்டுகொள்வது மிகவும் குதூகலமான அனுபவமாக இருந்தது.

இங்கும்கூட தேடிவந்து ஓவியங்கள்மேல் சாக்குக் கட்டியாலும் கல்லாலும் சொந்தப்பெயர்களை எழுதிவைத்திருக்கிறார்கள். இந்த ஓவியங்கள் இன்னும் அதிககாலம் நீடிக்க வழியில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது . ஆனால் தமிழகத்தில் கலையும் வரலாறும் சூழலும் அழியவிடப்படுவது பற்றி பேசிப்பயனில்லை. தமிழ்ச்சமூகம் அந்த அழிவையே ஆனந்தமாகக் கொண்டாடும் மனநிலையை அடைந்துவிட்டிருக்கிறது.

மீண்டும் கருக்கியூர் வரை நடந்தோம். இம்முறை மேலே ஏறவேண்டும். நான் கீழே வர ஆரம்பிக்கும்போதே பாசியில் சறுக்கி விழுந்து முழங்காலில் காயம்பட்டுக்கொண்டிருந்தேன். ரத்தம் கசிந்தது.ஆனால் தொடங்கிய பயணத்தை முடிப்பதென்று உறுதியாகவே இருந்தேன். முரட்டுத்தனமாக நடக்க ஆரம்பித்தபோது கொஞ்சநேரத்தில் வலி மறைந்தது.

கருக்கியூரில் இருந்து தெங்குமராட்டா நோக்கி கிளம்பினோம். இந்தக் கானுலா என்பது உண்மையில் மொத்த மேற்குமலைத்தொடரின் உயரத்தையும் நடந்தே இறங்குவதுதான். கருக்கியூரில் இருந்து ஒரு மலையில் ஏறினோம். கோத்தகிரியில் இருந்து கருக்கியூர்வரை இறங்கிவந்த உயரம் அது. ஐந்து கிலோமீட்டர் தூரம் . ஏறியபின் கீழே சத்தியமங்கலம் வரை விரிந்து கிடந்த சமவெளியைப் பார்த்தோம். புகைப்படலம்போல மேகம் பரவிக்கிடந்த நீலச்சமநிலம். அங்கிருந்து குதித்தால் சத்தியமங்கலத்தில் இறங்கிவிடலாமென்று தோன்றும். ஆனால் செங்குத்தாகப் பதினைந்து கிலோமீட்டர் இறங்கினால்தான் தெங்குமராட்டாவை அடையமுடியும்.

இறங்குவது எளிது என்ற மனப்பிரமை விரைவாகவே அகன்றது. மலையில் இறங்குவது ஏறுவதுபோலவே சிரமமானது. வேகமாக ஓடிவிடமுடியாது. முட்களும் புதர்களும் அடர்ந்த பாதை வளைந்து வளைந்து செல்லக்கூடியது. நம் கால்களின் பலத்தால் நம்மைத் தூக்கித் தூக்கி இறக்கவேண்டும். மிகவிரைவிலேயே தொடைகளும் கெண்டைக்கால் தசைகளும் களைத்து வலிக்க ஆரம்பித்துவிட்டன. அத்துடன் உருண்டகற்களாலான தரைப்பரப்பில் சரிவில் இறங்கும்போது தொடர்ச்சியாகப் பலமணி நேரம் பாதங்களை வளைத்து நெளித்து ஊன்றுவதனால் கொஞ்சநேரத்திலேயே கணுக்கால்கள் தெறிக்க ஆரம்பித்தன.

ஆனால் கானுலா என்பதன் இன்பமே அந்தக் கஷ்டங்கள்தான். மலையின் கிழக்குப்பக்கம் பொதுவாக வறண்ட புதர்க்காடுகள்தான். ஆனால் மழைபெய்திருந்தமையால் குளிர்ந்து விரிந்துகிடந்தது. அவ்வப்போதுவரும் மரங்களின் உரமும்திடமும் காடுகளுக்கு மட்டுமே உரியவை. மலைச்சரிவில் யானை இறங்கும் தடம் உருவாகியிருந்தது. அதன் வழியாகத்தான் இறங்கினோம். பெரும்பாலும் அமைதியாக, காட்டை கவனித்தபடி.

தமிழகத்திலேயே அதிகமான வனவிலங்கு நடமாட்டமுள்ளது இப்பகுதி. அடர்கானகங்களை விட இம்மாதிரி புதர்காடுகளில்தான் மிருகங்கள் அதிகம் வாழ்கின்றன. அடர்கானகங்கள் பொதுவாக சிறிய உயிர்கள் நிறைந்தவை. கரடி, புலி,யானைகள் நிறைந்த பகுதி அது. ஆனால் அவ்வேளையில் நாங்கள் மலபார் சிவப்புஅணில் தவிர எதையும் பார்க்கவில்லை. பறக்கும்கீரி என அந்த அணிலைச்சொல்லலாம். கீரியளவு பெரியது. ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்கு காற்றில் பறந்துசெல்லக்கூடியது.

மோயாறின் கிளையாறு ஒன்று கீழே மலைமடிப்பில் பெருத்த ஓசையுடன் சென்றுகொண்டிருந்தது. காலை பதினொரு மணிக்குக் கிளம்பிய நாங்கள் மாலை இரண்டரை மணிக்கு அந்த ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தோம். அதன்கரையில் அமர்ந்து கொண்டுவந்திருந்த தக்காளிச்சாதத்தை சாப்பிட்டோம். குடிநீர் ஆங்காங்கே ஓடைகளில் பிடித்துக்கொள்வதுதான். சுத்தமான சில்லென்ற மலைக்குடிநீரை நான் சிறுவயதில் பேச்சிப்பாறைக் காடுகளில் குடித்திருக்கிறேன்.பிஸ்லேரி குடிநீர் வந்தபோது கொஞ்சநாள் அந்த சுவையை அக்குடிநீர் நினைவுறுத்த்யது.

பொதுவாக நமது காடுகளில் உள்ள ஆறுகளில்கூட நல்ல தண்ணீர் கிடைப்பதில்லை. ஏனென்றால் காட்டாறுகள் எங்கோ ஓரிடத்தில் ஊர்களை, அல்லது சுற்றுலாமையங்களை கடந்து வரும். அங்கே சாக்கடையை கலந்துவிடுவார்கள். சாக்கடை கலக்காத ஆறு என தமிழகத்தில் எதுவும் இல்லை. ஆனால் இப்பகுதி ஓடைகள் கோத்தகிரியின் மலைகளில் தோன்றி காட்டை விட்டு வெளியேறாதவை. தெங்குமராட்டா தாண்டியதுமே அவை சாக்கடைகளாகிவிடும். பவானியில் கலந்து சத்தியமங்கலத்திற்குச் செல்லும்போது கிட்டத்தட்ட கூவம்.

[மேலும்]


படங்கள்

முந்தைய கட்டுரைகருக்கியூர் முதல் தெங்குமராட்டா வரை- 2
அடுத்த கட்டுரைகூடங்குளமும் சுஜாதாவும்