வடகேரள அரசியல் வன்முறை பற்றி நாகார்ஜுனன் எழுதிய ஒரு குறிப்பைக் கண்டேன். பெரு பற்றியும் சிலி பற்றியும் ‘ஆதாரபூர்வமான’ கட்டுரைகள் எழுதப்படும் தமிழில் அண்டை மாநிலம் பற்றி ஒரு நல்ல கட்டுரையைப் பார்க்க முடிவதில்லை. நான் பல காலமாக கேரள அரசியல் பற்றிய தமிழகக் கட்டுரைகளை கவனித்து ‘என்ன இது!’ என வியந்ததுண்டு
முக்கியமான காரணம் அரசியல் சார்புதான். நேற்று நாகர்கோயிலில் தங்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக இடதுசாரி அமைப்புகள் நடத்திய பேரணி என்னைக் கடந்துசென்றது, உருளைகிழங்கு வாங்க கடைக்குச் சென்றபோது. கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ் வந்த பின்னரே அரசியல் படுகொலைகள் தொடங்கின என்று இடதுசாரி இதழில் கட்டுரை கண்டேன். இந்நிலையில் எதுசொன்னாலும் அது ஒரு தரப்பாகவே ஆகும். என்றாலும் ஒரு பதிவு
நான் 1984 ல் கேரளமாநிலம் காஸர்கோட்டுக்கு வேலைக்குச் சென்றபோது அப்போதுதான் ஆர்.எஸ்.எஸ் அங்கே வேரூன்ற ஆரம்பித்திருந்தது. ஆகவே வன்முறைகள் தொடர்ந்து நடந்தன. அதைவிட அதிகமான வன்முறைகள் காங்கிரஸ் கட்சிக்கும் இடது கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் இடையே நடந்து வந்தன. முஸ்லீம் லீக் கட்சிக்கும் இடது கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் இடையே தொடர்ந்து கொலைகள் நிகழ்ந்து வந்தன.
இந்த வன்முறைகளை கட்சி அரசியலை வைத்துப் புரிந்துகொள்ளவே முடியாது என்பது என் எண்ணம். வடக்குக் கேரளத்தில் எல்லா கட்சிகளும் இந்த வன்முறையில் ஈடுபடுகின்றன. எழுபதுகள் முழுக்க இடது கம்யூனிஸ்டுக் கட்சியும் வலது கம்யூனிஸ்டுக் கட்சியும் மோதிக்கொண்டு இப்போது நடப்பதைவிட பலமடங்கு அதிகமான வன்முறை நிகழ்ந்து ஏராளமானவர்கள் கொல்லபப்ட்டிருக்கிறார்கள். எண்பத்தேழில் எம்.வி.ராகவன் என்ற கண்ணூர் வட்டார இடது கம்யூனிஸ்டு தலைவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டபோது கம்யூனிஸ்டுக் கட்சிக்குள்ளேயே படுகொலைகள் நடந்தன. இன்றும் அம்மோதல் கொலைத்தொடராக நீள்கிறது. ராகவன் இப்போது தனிக்கட்சி கண்டு காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறார். காங்கிரஸ் எஸ் என்று ஒரு கட்சி இருந்தது. சரத் பவார் தொடங்கிய கட்சி. அவர் மீண்டும் காங்கிரஸில் சேர்ந்த பின்னும் வடகரை என்ற ஊரில் மட்டும் பி உண்ணிகிருஷ்ணன் என்பவர் தலைமையில் நீடித்தது. அந்தக் கட்சிக்கும் இடதுசாரிகளுக்கும் இடையே வடகராவில் படுகொலைகள் மாறி மாறி நடந்துள்ளன.
கோழிக்கோட்டுக்கு வடக்கே உள்ள கேரளம் பண்பாட்டில் முற்றிலும் வேறுபடது. அதை ஒரு ‘பழங்குடி கேரளம்’ என்று சொல்லலாம். மரபாக இது கோலத்து நாடு என்று சொல்லபப்ட்டது. இங்குள்ள கோரப்புழ என்ற ஆறு கோலத்து நாட்டையும் கோழிக்கோட்டையும் பிரித்தது. கோழிக்கோட்டு சாமூதிரியின் ஆட்சியின் கீழ் இருந்தாலும் கோரப்புழாவுக்கு வடக்கே உள்ளவர்கள் வேரு ஆட்கள். கோலத்து நாட்டு மக்கள் எக்காரணத்தாலும் கோரப்புழாவை தாண்டலாகாது என்ற ‘கோரப்புழ விலக்கு’ இந்நூற்றாண்டின் தொடக்கம் வரை அமுலில் இருந்தது
புராதன சேர நாட்டின் வட எல்லை பந்தளாயனி என்று சொல்லபப்டும் கோயிலே. அது கோழிக்கோட்டுக்கு வடக்கே உள்ளது. அதற்கு மேலே உள்ள பகுதி பேரரசு பெரும் பண்பாடு ஆகியவற்றுக்கு உள்ளே வரவே இல்லை. இங்கு பழங்குடி அரசுகள் மூத்து உருவான பலநூறு சிறு சிறு ஆட்சியாளர்கள் ஆண்டாரக்ள். இவர்களை நாடுவாழிகள் என்றும் மாடம்பிகள் என்றும் வரலாறு சொல்கிறது. இவர்களுக்கு இடையே எப்போதும் – சண்டைகள் – நடந்து கொண்டே இருந்தன. படுகொலைகள் ஓயாத மண் இது.
இப்படி படுகொலை செய்யபப்ட்டவரகளை தெய்வமாக்கி வணங்குவதே இப்பகுதியில் மேலோங்கியிருந்த மதம். இது தெய்யம் ஆட்டு என்று சொல்லபப்டுகிறது. இன்றும் இங்கே செல்வாக்குடைய தெய்வங்கள் மறுதா, அறுகொலை , தெய்யம் என்றெல்லாம் அழைக்கப்படும் படுகொலை தெய்வங்களேயாகும்.கோரப்புழைக்கு தெற்கே தெய்யங்கள் பிரபலம் அல்ல.
ஓயாத சண்டைகளுக்கு இங்கே பல வடிவங்கள் உண்டு. விரித்துச் சொல்லப்போனால் பெருகும். இரண்டு விஷயங்களை மட்டும் சொல்லலாம். ஒன்று இங்கே போருக்காகவே உருவான சேகவர்கள் என்ற சதியினர் உண்டு. இரு சிறுமன்னர்கள் நடுவே பூசல் உருவானால் அவரக்ள் ஆளுக்கு ஒரு சேவகரை வாடகைக்கு எடுக்கிறார்கள். நாள் குறிக்க்கப்படுகிறது. இருவரில் ஒருவர் சாகும் வரை போர் நடக்கும். இப்படிபப்ட்ட சேவகர்களின் கதைகளையே வடக்கன் பாட்டுகள் என்ற வீரகதைப்பாடல்கள் போற்றி புகழ்கின்றன. இவற்றை ஒட்டியெ ஏராளமான மலையாளப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஒருவடக்கன் வீர கதா என்ற எம்.டி.வாசுதேவன் நாயர்- கரிகரன் சினிமா நினைவுக்கு வரலாம்.
இன்னொன்று குடிப்பகை என்ற அம்சம். ஒரு குடும்பத்தில் [தாய்வழிச் சொத்துரிமை உள்ள குடும்பம் தறவாடு என்று அழைக்கபப்டும்] ஒருவர் கொல்லப்பட்டால் கொன்றவர் குடும்பத்தில் ஒரு தலையை எடுப்பது வரை கொல்லபப்ட்டவனின் குடும்பத்தினர் ஆங்க மாட்டார்கள். இந்த ‘தலைக்கணக்கு’ பல நூறு வருடம் பற்பல மனிதர்கள் அவ்ழியாக தொடரும். இந்நூற்றாண்டின் இறுதிவரை இது இருந்திருக்கிறது.
இத்தகைய ‘பண்பாட்டு’ சூழலில் இன்று அரசியல் கட்சிகள் வன்மங்களை விதைத்து வருகின்றன. ஒரு பகுதியின் அடிபப்டையான பண்பாடே அவரக்ளின் அரசியலிலும் பிரதிபலிக்கும். ஒரு பகுதி மக்களின் குலதெய்வம் என்ன என்று பார்த்தாலெ அம்மக்களின் பண்பாட்டு நிலையும் தெரியும். அரிவாள் ஏந்தி போர்க்கோலமாக நிற்கும் குலதெய்வம் கொண்ட மகக்ளின் ஆழ்மனதில் இருந்து வன்முறையை அப்படி எளிதில் எடுத்து விடமுடியாது.
வடகேரளத்தில் கட்சிகள் என்பவை கிட்டத்தட்ட இனக்குழுக்கள் போலவே உள்ளன. ஒரு குழு அதன் உறுபினருக்கு ஆறுதலையும் பாதுகாப்பையும் அளிக்கிறது. நான் பலர் என்ற உணர்வை கொடுக்கிறது. அப்படி ஒரு குழு ஒன்றாக இருக்க அதற்கு எதிரிகள் தேவை. எதிரி மீது கடும் வெறுப்பை அது உருவாக்கி வைத்திருக்கிறது. அவ்வெறுப்பு வன்முறையை இயல்பாகவே நாடுகிறது
எல்லைகள் மீறப்படுவதைப்பற்றி நாகார்ஜுனன் சொல்கிறார். ஐந்து வருடம் முன்பு ஜெயகிருஷ்ணன் என்ற ஆரம்பபள்ளி ஆசிரியரை, அவர் ஆர் எஸ் எஸ் ஊழியர், ஆரம்பபள்ளி குழந்தைகள் கண்முன் வகுபப்றையில் வைத்து மார்க்ஸிஸிட் கட்சியினர் வெட்டிக் கொன்றார்கள். அந்தக்குழந்தைகளில் பல இன்றும் தீவிரமான உளச்சிக்கல்களுடன் உள்லன. வன்முறைக்கு எல்லைகள் என ஏதும் இல்லை. நல்ல வன்முறை தீயவன்முறை என ஏதும் இல்லை. வன்முறை ஒருபோதும் நேரடியாக வருவதில்லை. இலட்சியவாத வன்முறை, விடுதலை போராட்ட வன்முறை என்றெல்லம் பெயரிட்டபடித்தான் எல்லா வன்முறையும் நம் முன் வருகின்றன.
வன்முறை பழங்குடி மனநிலை சார்ந்த ஒன்று என நான் நினைக்கிறேன். தன்னை ஒரு குழுவாக பன்மைப்படுத்திக் கொள்வதும் பிறனை உருவாக்கி அவனை வெறுப்பதும் அதன் இரு பக்கங்கள். வடகேரளம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் வரை வன்முறை மண்டிய பழங்குடிப் பண்பாட்டின் பிடியில் இருந்ததை வில்லிம் லோகன் போன்ற ஆய்வாளர்கள் காட்டுகிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சி அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடைக் கொண்டு வந்தது. ஆனால் உள்ளே வன்முறையின் விதைகள் இருந்தன. கட்சி அரசியல் அதை வைத்து விளையாடுகிறது. இதுவே உண்மை. இதில் மார்க்க்ஸிஸ்ட் கட்சி முதல் எல்லா கட்சிக்கும் பங்கு உண்டு. விதிவிலக்கான கட்சி ஏதும் இல்லை.
வடகேரளம் தொழில்மயமானதல்ல. கிராமியத்தொழிகள். வெளிநாட்டு பணவரவு. நுகர்வோர் பண்பாடு மட்டுமெ அங்கே பரவியிருக்கிறது. அது இன்னும் நவீன காலகட்டத்துகே வரவில்லை. அங்கே தொழில்கள் வந்தாலே போதும் இம்மனநிலை மாறிவிடும் என நான் நினைக்கிறேன். அதறு முன் வன்முறைக்கு சித்தாந்த சாயம்பூசும் ஆசாமிகளை அப்புறபப்டுத்தவேண்டும்