அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
அர்விந்த்
பொதுவாக வரலாறு சார்ந்து ஒரு நூலைச் சொல்வது கடினம். ஏனென்றால் நம்மிடையே சமநிலையில் நின்று வரலாற்றை எழுதும் வழக்கம் மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. ஒவ்வொரு வரலாறும் ஒவ்வொரு கோணத்தில் மேலானது என்றும் அவற்றின் வழியாக ஒரு பொதுவான புரிதலை நோக்கிச்செல்ல முடியும் என்றும் தோன்றுகிறது.
தமிழில் தமிழ் வரலாறு சார்ந்த பல முக்கியமான நூல்கள் மொழியாக்கம் செய்யப்படவே இல்லை என்றால் நம்புவீர்களா? பல நல்ல நூல்கள் எழுபதுகளில் நாவலர் நெடுஞ்செழியன் கல்வியமைச்சராக இருந்த போது படமேற்படிப்புவரை தமிழில் கொண்டுவரும் நோக்கத்துடன் மொழியாக்கம்செய்யப்பட்டன. அவை இப்போது கிடைப்பதில்லை. அவற்றை மறு பிரசுரம்செய்யவும் முடியாது -அரசு சொத்துக்கள்.
கீழ்க்கண்ட நூல்களை மிகச்சுருக்கமான ஒரு வாசிப்புக்காக நான் சிபாரிசு செய்கிறேன். இவற்றின் முக்கியமான சிறப்பு இவற்றை நான் வாசித்தேன் என்பதே. இவற்றை விட மேலான நூல்கள் கண்டிப்பாக இருக்கக் கூடும். நான் வரலாற்று ஆய்வாளன் அல்ல. எழுத்தாளன் என்னும் எல்லைக்குள் நின்று வாசிப்பவனே. முக்கியமான பிறநூல்கள் இருந்தால் நண்பர்கள் எழுதலாம்.
இந்நூல்களை ஏன் வாசிக்கலாம் என்றும், ஏன் கவனமாக இருக்க வேண்டும் அல்லது எதைக் கவனமாக இருக்க வேண்டும் என்றும் என் நோக்கில் சொல்கிறேன். மீண்டும் சொல்கிறேன். நான் இத்துறை ஆய்வாளன் அல்ல.
1. History of British India P.E.Roberts [Oxford University Press 1921 ]
மிக மிக சுவாரசியமான நூல் இது. இதில் இந்தியாவின் நில அமைப்பு குறித்த முதல் அத்தியாயம், பிரிட்டிஷார் வருவதற்கு முந்தையஇந்திய வரலாற்றின் ரத்தினச்சுருக்கமாக உள்ள இரண்டாம் அத்தியாயம் இரண்டையும் மட்டும் படித்துவிட்டு முடிவெடுங்கள். இத்தனை கச்சிதமாக அழகாக எழுதப்பட்ட வரலாற்று நூல்கள் மிக அபூர்வம். வரலாற்றை எழுதினால் இப்படி எழுதவேண்டும். வெறும் நடையழகுக்காகவே நான் படிக்கும் நூல்
ஆனால் வழக்கம்போல இதில் உள்ளது பிரிட்டிஷ் நோக்கு. இதன் நோக்குக் குறைகளை, விடுபடல்களை வேறு நூல்கள் வழியாக அறியலாம்.
2. The Oxford History of India. Vincent Smith உண்மையில் இதுதான் பிரபலமான ஸ்டாண்டார்ட் ஆன நூல். இதில் வழக்கமான பிரிடிஷ் வரலாற்று நோக்குகள் உள்ளன. ஆனால் தகவல்கள் மிகச்சீராக சுவாரசியமாக தொகுக்கப்பட்டு ஒரு நல்ல வரலாற்று நூலுக்குரிய எல்லா இலக்கணங்களுடனும் உள்ளது. ஆனால் ராபர்ட்ஸின் நூல் அளவுக்கு வாசிப்பின்பம் இதில் இல்லை என்பதைக் காணலாம்.
இந்நூலில் மட்டுமல்ல இத்தகைய நூல்களில் எல்லாமே உள்ள முக்கியமான குறைகள் இவர்கள் இந்தியாவை பார்த்த விதம்தான் அவற்றை மிகச்சுருக்கமாக இப்படிச் சொல்கிறேன்.
1. இந்தியாவின் பன்முகத்தன்மையை ஓர் எதிர்மறைக் கூறாக காண்பது. அவற்றைப் புரிந்துகொள்ளும்பொரூட்டு அவற்றின் பொத்தாம்பொதுவான சில அடையாளங்கள் அல்லது தனித்தன்மைகளை வைத்து பலவகையான சட்டகங்களுக்குள் அல்லது கட்டங்களுக்குள் தொகுக்க முனைவது. இவ்வாறு தொகுக்க முனைவது பிரிட்டிஷ் நிர்வாக முறைக்கு அவற்றை கையாள்வதற்கு ஒரு உதவியது என்பதும் பிரிட்டிஷாரின் நோக்கமே அதுதான் என்பதும் உண்மை. ஆனால் இது வரலாற்றைப்பற்றிய பல தவறான புரிதல்களை உருவாக்குகிறது
2. இந்தியாவின் உட்கூறுகளை ஒன்றுடன் ஒன்று தொடர்ச்சியாக உரையாடி வளரும் தரப்பாகக் காணாமல் அவற்றை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு மோதிக்கொள்பவையாகக் காண்பது. இன்றும் நம் முற்போக்கு வரலாற்றாசிரியர்கள் இந்தக் கோணத்தையே முன்வைக்கிறார்கள்.
3. இந்தியாவின் எல்லா சிந்தனை- பண்பாட்டு முன்னேற்றத்துக்கும் ஏதேனும் வெளி ஆற்றலின் தொடர்பு இருக்கும் என்ற அவசரகதியான ஊகம்.
இந்த மூன்று அடிப்படைச் சிக்கல்களையும் கணக்கில் கொண்டு நோக்கினால் இந்தியாவைப்பற்றி எழுதப்பட்ட பிரிட்டிஷ் வரலாறுகள் முக்கியமானவை என்பதே என் எண்ணம். முக்கியமாக பிரிடிஷ் எழுத்தாளர்கள் அளவுக்கு பிறர் சுவாரசியமாக வரலாற்றை எழுதவே இல்லை.
4. An Advanced History of India . R.C. Majumdar, H.C. Ray chaudhuri இப்போது வரும் தொண்ணூறு சத வரலாற்று நூல்களுக்கும் ஆதாரமாக விளங்கும் நூல் இதுவே. நான் மிக மதிக்கும் கே.தாமோதரன் போன்ற கேரளப் பண்பாட்டு ஆய்வாளர்கள் இவர்களை மிகவும் ஆதாரமாகக் கொள்கிறார்கள்
இதில் மஜும்தார் மிகவும் வங்க சார்பு கொண்டவர். அவரது பிறநூல்களில் இந்தியப்பண்பாட்டையே வங்காளத்தை மையமாக்கி ஆராயும் அளவுக்குத் துணிவதைப் பார்க்க முடியும். இருந்தாலும் மேலே சொன்ன பிரிடிஷ் நூல்களில் இல்லாத இந்திய தேசியத்தின் கோணம் இந்நூலில் உண்டு.
5. History of the Freedom movement in India . R.C. Majumdar . அரவிந்தருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதீத முக்கியத்துவம் போன்ற சில்லறை பிரச்சினைகளைத் தவிர்த்தால் இந்நூல் மிகவும் முக்கியமானது.
6. டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் சுயசரிதை மேலெ சொன்ன நூலுடன் இணைத்து வாசிக்கத்தக்கது. பாவனைகள் இல்லாத எளிமையான இந்த சுயசரிதை இந்திய சுதந்திரப்போராட்டத்தின் ஒரு நல்ல வரலாற்று ஆவணம்
D.D. Kosambi
7. An Introduction to the Study of Indian History .D.D. Kosambi
8. The Culture and Civilisation of Ancient India in Historical Outline. D.D. Kosambi
இந்த இரண்டு நூல்களுமே தமிழில் வந்துள்ளன. [எஸ்.அர்.என்.சத்யா மொழியாக்கம். என்.சி.பி.எச் வெளியீடு] முதன்முறையாக இந்தியவரலாற்றில் ஒரு புதிய கோணம் திறக்கப்படுகிறது. மன்னர்களின் வரலாற்றுக்குப் பதிலாக மக்கள்சமூகங்களின் வரலாறாக இந்திய வரலாறு கோஸாம்பியால் அணுகப்பட்டது. அதாவது எந்த வகையான உற்பத்தி முறை எந்தவகையான வரிவசூல் முறை இருந்தது என்ற கோணத்தில் வரலாற்றை ஆராய்வது. இது மிகவும் புரட்சிகரமான விளைவுகளை இந்திய வரலாற்று ஆய்வில் உருவாக்கியது என்பதே என் எண்ணம்.
ஆனால் இதில் எளிமைப்படுத்தும் கூறு ஒன்று உண்டு. அது பண்பாட்டை வெறும் பொருளியல்சக்திகளின் நுரை மட்டுமே என்று பார்க்கும் கோணம். கிபி இரண்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் சாலைவழிப்போக்குவரது அதிகரித்தது, ஆகவே சமணம் வளர்ச்சிஅடைந்தது என்று சொல்வதைப்போன்ற எளிமைப்படுத்தல்கள். அவற்றைப்பற்றிய எச்சரிக்கையுடன் அணுகினால் உதவிகரமான நூல்கள் இவை.
கோஸாம்பிதான் வரலாற்றை எழுதிய இந்தியர்களிலேயெ சுவாரசியமான எழுத்தாளர் என்பது என் எண்ணம்
9 Indian Feudalism R.S. Sharma,
10 Land Revenue in India: Historical Studies R.S. Sharma
கோஸாம்பியின் வழிவந்தவர். ஆனால் சுவாரசியமே இல்லாமல் எழுதும் பேராசிரியர். இரண்டாவது நூல் ‘இந்திய நிலமானியமுறை‘ என்றபேரில் தமிழில் வெளிவந்துள்ளது. இந்திய வரலாற்றில் நில உடைமை என்பது என்னென்ன பங்கை ஆற்றியுள்ளது என்பதை இந்நூல்கள் காட்டுகின்றன. ஆகவே இவை முக்கியமானவை
பெரும்பாலான இந்திய வரலாற்று நூல்களில் சர்மாதான் மேற்கோள் காட்டப்பட்டிருப்பார். ஜவகர் லால் நேரு பல்கலையை மையமாக்கி ஒரு இடதுசாரி வரலாற்று எழுத்துக் குழு உருவானது. அதன் மையம் இவர். இவரது பெரும்பாலான நூல்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்பதும் பெரும்பாலானவை சோவியத் வரலாற்று ஆசிரியர்கள் வகுத்த வழியில் நகர்பவை என்பதும் என் எண்ணம்
இந்த இடதுசாரி வரலாற்றாசிரியர்களின் சாதகமான கூறு, இவர்கள் வரலாற்றை அக்காலகட்டத்தின் பொருளாதார கட்டமைப்பு மற்றும் சமூக நிர்வாக முறை ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தி ஆராய்கிறார்கள் என்பது. எதிர்மறையான கூறு வரலாற்றாய்வை சமகால அரசியல் தேவைகளுக்கு ஏற்ப திரித்துக்கொள்ள தயங்குவதே இல்லை என்பது. எண்பதுகளில் எழுதப்பட்ட இவர்களின் வரலாற்று நூல்களில் அக்காலத்தில் சோவியத் அரசு வெளியீடுகள் எடுத்துக்கொண்ட அதிகாரபூர்வ நிலைபாடுகளே பிரதிபலிப்பதை இப்போது காணலாம்
இப்போது தமிழில் ஆய்வுநெறியைப்பற்றி கவலையே படாமல் கட்சியின் மேடைப்பேச்சாளர் போலவே செயல்படும் ஆ.சிவசுப்ரமணியம் போன்றவர்கள் எல்லா மொழியிலும் உருவாக இவர்கள்தான் வழியமைத்தார்கள்
11 The Agrarian System of Mughal India . Irfan Habib
12 An Atlas of the Mughal Empire Irfan Habib
இவரும் இடதுசாரி வரலாற்று எழுத்துக்குழுவைச் சேர்ந்தவர். ஆனால் அவரது இஸ்லாமியப்பற்றுக்கு அது தடையாக இல்லாமல் பார்த்துக்கொள்கிறார். இஸ்லாமியர் காலத்து பொருளியல் கட்டுமானங்களையும் அவற்றின் அரசியல் பங்களிப்பையும் சிறப்பாக ஆராய்ந்திருக்கிறார். இஸ்லாமிய படையெடுப்பின் தவிர்க்க முடியாத அம்சமான பெருங்கொள்ளை குறித்து இவ என்ன சொல்கிறார் என்பதை மட்டும் அவ்வப்போது அடையாளப்படுத்திக்கொண்டு வாசித்துச் சென்றால் உதவியானவர்தான். முதல் நூல் தமிழில் வெளிவந்திருப்பதாக ஒரு ஞாபகம்.
13 Asoka and the Decline of the Mauryas . Romila Thapar இடதுசாரி வரலாற்றாசிரியர்களில் மிகவும் அரசியல் உள்நோக்கம் கொண்டவர் இவரே என்பது என் எண்ணம். ஆனாலும் இவர் அசோகர் காலகட்டம் மகதம் ஆகியவற்றைப் பற்றிச் செய்த ஆராய்ச்சிகள் காரணமாக அந்நூல்கள் முக்கியமானவை.
14 Age of the Nandas and Mauryas, K. A Nilakanta Sastri முதலில் இந்நூலை வாசித்துவிட்டு ரொமீலா தாப்பரின் நூலை வாசிக்க வேண்டும். இந்நூலின் சில இடைவெளிகளை நிரப்புகிறார் என்ற அளவில் மட்டுமே ரொமீலாவின் நூல் முக்கியமானது. அசோகர் காலத்தில் அவருடைய சாம்ராஜ்யத்துக்குள் அடங்கிய குறுநில மன்னர்களின் அமைப்பைப்பற்றி அவர்கள் நிர்வாகம்செய்யபப்ட்ட முறைகளைப் பற்றி அந்த பேரரசின் கட்டுமானம் பற்றி நீலகண்ட சாஸ்திரிக்கு கருத்துக்கள் இல்லை. அவற்றை ரொமீலா ஆராய்கிறார். ஆனால் சாஸ்திரி அசோகர் காலத்து தொல்பொருள்சான்றுகளை சீராக தொகுக்கிறார்
John F Richards
15 The Mughal Empire John F Richards
16 The Imperial Monetary System of Mughal India John F Richards
இந்த இரு நூல்களையும் ஏன் சொல்கிறேன் என பல வாசகர்கள் அவற்றை வாசித்தபின் கேட்கக்கூடும். அந்த அளவுக்கு பாகிஸ்தானிய கோணம் சார்ந்து எழுதப்பட்ட நூல்கள் இவை. கல்வித்துறை சார்ந்த மென்மையும் தர்க்கமுறையும் இருந்தாலும் இவற்றின் கோணம் இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் இந்தியாவை ஒருங்கிணைத்தார்கள் என்பதே.
ஆனால் இவற்றின் முக்கியத்துவம் என்னவென்றால் மொகலாய ஆட்சியை பற்றி இந்தியாவுக்குள் நிறுத்தி எழுதியதையே வாசித்திருக்கிறோம். விரிவாக தெற்காசிய நிலப்பரப்பில் துருக்கிய- முகலாய ஆட்சி பரவியதன் சித்திரத்தை இந்நூல்கள் அளிக்கின்றன.
17 The History of Andhras – Durga Prasad இந்நூல் தமிழில் மொழியாக்கம் செய்யபப்டவேண்டிய ஒன்று. ஏனென்றால் வரலாற்றுக்காரணங்களால் பதிமூன்றாம் நூற்ற்றாண்டுக்குப் பிந்தைய ஆந்திர வரலாறு தமிழக வரலாற்றுடன் பின்னிப்பிணைந்துள்ளது. ஆந்திர நிலப்பகுதியில் காப்பு-கம்மா போன்ற சாதியினரின் எழுச்சியும் அவர்கள் உருவாக்கிய பேரரசுகளின் சித்திரமும் இந்நூலில் விரிவாக சித்தரிக்கப்படுகிரது. அதன் ஒரு பகுதிதான் பதினைந்தாம் நூற்றண்டுக்குப் பிந்தைய தமிழக நாயக்கர் வரலாறு
18 A Forgotten Empire – Vijayanagar: A Contribution to the History of India. Robert Sewell இந்த நூலைப்பற்றி ஏற்கனவே நான் நிறைய எழுதியிருக்கிறேன். சீவெல் பிரிட்டிஷ் சிவில் ஊழியர். ஹம்பியை ‘கண்டுபிடித்தவர்‘ அவரே. அவரது முயற்சியாந்தான் ஹம்பியின் இடிபாடுகள் வரலாற்றுச்சின்னங்களாக பாதுகாக்கப்பட்டன. இந்நூலை விட மேலான பல நூல்கள் வந்துள்ளன. ஆனால் இதில் உள்ள ஈடுபாடும் ஊக்கமும் அபாரமான மொழிநடையை உருவாக்குகின்றன
19 History of Vijayanagar B. Surya Narayana Rao சீவெல்லின் நூலைப் படித்தபின் படிக்க வேண்டிய இந்நூலில் ஒரு தேசிய எழுச்சியின் மனநிலை தெரியும். ஆனாலும் விரிவான தகவல்கள் கொண்டது. விஜயநகர வரலாறே தென்னக வரலாற்றின் பாதி என்றால் மிகையல்ல.
20 A concise history of Karnataka: from pre-historic times to the present. U Suryanath Kamath கர்நாடக வரலாறு பற்றிய சிறப்பான அறிமுகம். சூரியநாராயண ராவுவின் விஜயநகர் வரலாற்றுடன் இணைத்து வாசிக்கவேண்டிய நூல். ஆனால் கர்நாடக வரலாறு என்பது பெரும்பாலும் சமணர்களின் வரலாறு. அந்த அம்சம் இந்நூலில் பலவீனமாக உள்ளது.
21 தென்னிந்திய வரலாறு: கெ.கெ.பிள்ளை. [தமிழில். பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு] சுருக்கமான செறிவான இந்தவரலாறு ஒட்டுமொத்தமாக பார்க்கவும் தமிழகத்துடன் தென்னிந்திய வரலாற்றை பிணைத்துக்கொள்ளவும் உதவிகரமானது . நீலகண்ட சாஸ்திரியின் இதே தலைப்பிலான நூல் இதைவிட பிரபலமானது.ஆனால் இந்நூல் இன்னும் கச்சிதமானது என்பது என் கருத்து
22 தென்னிந்திய வரலாறு கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி பல பகுதிகளாக விரிவாக எழுதப்பட்ட இந்நூல் தென்னிந்தியவரலாற்றை ஒன்றுடன் ஒன்று கோர்த்து விரிவான வரைபடமாக அளிக்கிறது.
தமிழக வரலாறு
1. The Madura country manual . J H Nelson தமிழக வரலாற்றின் ஆரம்ப வரைபடத்தை உருவாக்கிக்கொள்ள மிகமிக உதவியான இந்நூல் எப்படி நம் வரலாறு எழுதப்பட்டது என்பதைக் காட்டுகிறது. இந்நூலின் கோணமும் பிரிடிஷ் ஆதிக்கக் கோணம். ஆனால் வரலாற்றை எபப்டி எழுதுவது என்பதற்கு உதாரணமாக அமையும் அழகிய நடை கொண்ட நூல். அதற்காகவே வசிக்கலாம்.
2 Madras Gazetteer W. Francis ஒரு சாராரால் நெல்சன் நூல் அளவுக்கே முக்கியமான நூல் என்று சொல்லபப்ட்டாலும் நடை என்னை கவரவில்லை. ஆனால் சென்னையைச் சுற்றியுள்ள குகைக்கோயில்கள் மற்றும் வரலாற்றுச்சின்னங்களை பற்றிய இந்த விரிவான பதிவு நம் வரலாற்றாய்வின் ஓர் அடித்தளம்
3. Tinneveli District Gazetteer H.R.Pate I.C.S. திருநெல்வேலியைப்பற்றிய ஆழமான கச்சிதமான ஒரு வரலாற்று, நிலவியல் அறிமுகம் இந்நூல். நெல்சன் அளவுக்கு வாசிப்புத்தன்மை இதற்கில்லை. இருந்தாலும் முக்கியமானது.
4 சோழர்கள்: கெ.ஏ.நீலகண்ட சாஸ்திரி . தமிழில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் கல்கிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்த நூல். இன்றும் தமிழ் வரலாற்று எழுத்தில் ஒரு கிளாஸிக் இது
5. History of the Tamil from the earliest times to 600 AD P. T. Srinivasa Iyengar பொதுவாக தமிழ் வரலாற்றை எழுதும்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கும் தன்மை வரலாற்றாசிரியர்களிடம் உண்டு. தமிழ் தொன்மை தனித்தன்மை ஆகியவற்றைப்பற்றி பேசும்போது ஒரு தயக்கம். இதற்கு மறுபக்கமாக உலக நாகரீகமே தமிழ்தான் என்ற வகையிலான ஆய்வுகள். இவையிரண்டுக்கும் நடுவே ஆய்வுநெறிக்குள் நின்று தமிழ்த்தொன்மை தனித்தன்மை ஆகிய இரண்டையும் குறித்த முக்கியமான ஊகங்களை நிகழ்த்தியவர் பி டி சீனிவாச அய்யங்கார்
6 The PandyanKingdom: From the Earliest Times to the Sixteenth Century K. A. Nilakanta Sastri இந்நூல் சுருக்கமாக தமிழில் வெளிவந்திருக்கிறது. பாண்டிய வரலாற்றை அறிவதற்கான தரப்படுத்தப்பட்ட வரலாற்று ஆவணம் இது
7 The Pallavas. Dubreuil, G. Jouveau; V. S. Swaminadha Dikshitar பல்லவர்களைப்பற்றிய குறிப்பிடத்தக்க வரலாற்று நூல். குறிப்பாக பல்லவர்களின் தோன்றுமிடம் குறித்த ஆய்வுகளுக்காக முக்கியமானது
8 Pallavas of the Kanchi. R.Gopalan பல்லவர்களின் வரலாற்றைப்பற்றிய முதல் முழுமையான நூல்
9 History of the Nayaks of Madura R Sathianathaier மதுரை நாயக்கர்களின் காலகட்டத்தில்தான் தமிழகத்தில் இன்றுகாணும் ஏராளமான பண்பாட்டு சாதனைகள் உருவாயின. தென் தமிழ்நாடு அவர்களின் உருவாக்கம் என்றால் அது மிகையல்ல. அவர்களை பற்றி எழுதப்பட்ட முதல் ஆய்வுநூலான இது தமிழக வரலாற்றாய்வில் ஒரு கிளாசிக். இதை ஒட்டி அ.கி.பரந்தாமனார் ஒரு நூல் தமிழில் எழுதியிருக்கிறார். ஆனால் வெளிவந்து முக்கால் நூற்றாண்டு ஆகியும் இந்நூல் இன்னும் தமிழில் வரவில்லை.
தி.வை. சதாசிவப்பண்டாரத்தார்
10 பிற்கால சோழர் வரலாறு: தி.வை. சதாசிவப்பண்டாரத்தார் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் சோழர் வரலாற்றுக்கு மறுபக்கமாக இந்நூலை வாசிக்கவேண்டும். சாஸ்திரி விட்டுச்சென்ற பல பகுதிகளை பண்டாரத்தார் நிரப்புகிறார். குறிப்பாக சாஸ்திரியின் நூலை வாசித்தால் நமக்கு சோழர் காலத்தில் வைதீக பிராமணம் மேலோங்கியதன் சித்திரம் கிடைப்பதில்லை. அதை நாம் இந்நூலில் காணலாம்
11 தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்: கே கே பிள்ளை இந்நூல் தமிழக வரலாற்றை பண்பாட்டு கோணத்தில் சொல்கிறது. இந்தில் சோழர்கள் பற்றி சொல்லபப்டும் இடங்கள் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி சதாசிவப்பண்டாரத்தார் இருவருடைய வரலாற்றிலும் இல்லாத பகுதிகள். அக்கால வலங்கை இடங்கை சாதியமைப்பு மற்றும் சாதிமோதல்களின் பின்புலங்களை ஆராயும் இந்நூல் தமிழக வரலாற்றை மக்கள் கோணத்தில் அணுகிய முதல் நூல்.
12 Suchindram Temple K.K.Pillai இந்த நூல் தமிழக வரலாற்றாய்வில் ஒரு இன்னொரு கிளாஸிக். ஒரு கோயிலின் கல்வெட்டுக்கள் ஆசாரங்கள் சிலைகள் கட்டுமானங்கள் நிர்வாக முறை ஆகியவற்றின் மூலம் வரலாற்றின் ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தை அளிக்கும் முயற்சி. வரலாற்றை எழுதுவதற்கான ஒரு புதிய கோணத்தை இது திறக்கிறது. இதை ஒட்டி மேலதிக தகவல்களுடன் எழுதப்படுள்ள அ.கா.பெருமாள் அவர்களின் சுசீந்திரம் கோயில் வரலாறு ஒரு முக்கியமான நூல்.
13 தென்னாட்டுப்போர்க்களங்கள்: கா அப்பாத்துரை. இவர் வரலாற்றாசிரியர் அல்ல. வரலாற்றின் முறைமையும் இவர் ஆய்வில் இல்லை. ஆனால் தமிழிய உணர்வுடன் எழுதப்பட்ட வரலாறுகளிலேயே நான் பொருட்படுத்தும் ஒரே நூல் இதுவே
14. History of Tivancore . K. Sangkuni Menon திருவிதாங்கூரின் திவானாக இருந்த இவர் அரசாங்க ஆவணங்களைக் கொண்டு எழுதிய இந்நூலில் அதிகாரபூர்வ ஆவணங்கள் நிறைய இருப்பது பலம். அரசு சார்ந்த கோணம் பலவீனம். ஆனால் நல்ல வாசிப்புத்தன்மை கொண்ட முக்கியமான நூல். தென் தமிழக வரலாற்றை திருவிதாங்கூர் வரலாற்றுடன் இணைத்தே வாசிக்க வேண்டும். இவரது மகன் கெ.பி.பத்மநாப மேனோன் எழுதிய ‘கொச்சி வரலாறு‘ இதனுடன் இணைத்து வாசிக்கவேண்டிய ஒரு நூல்
15 தென்குமரியின் கதை, அ.கா.பெருமாள் இந்த வரலாற்று நூல் ஒரு புதுவகை வரலாறு. அதாவது ஒரு சிறிய நிலப்பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு அதன் சரித்திரத்தை அதன் பண்பாடு நாட்டாரியல் ஆகியவற்றின் அடிப்படையில் தொகுத்துச்சொல்ல முயலும் நூல் இது. இதேபோல தமிழகத்தின் பிறபகுதிகளின் வரலாறும் எழுதப்படும் என்றால் தமிழக வரலாற்று வரைவே மாறிவிடக்கூடும்.
இத்தனை நூல்களையும் வாசிக்க அதிகபட்சம் இரண்டு வருடங்கள் ஆகலாம். ஆனால் இந்தியச்சூழலில் அரசியல் பொருளியல்சமூகவியல் அடிப்படைகளைப் பற்றிச் சிந்திக்கும் எவருக்கும் இந்த வாசிப்பு ஒரு வலுவான அடித்தளமாக அமையும் என நான் நினைக்கிறென். அத்தகைய ஒரு வாசிப்பு நம்மில் கருத்துச் சொல்லும் கணிசமானவர்களிடம் இல்லை என்பதனாலேயே அவர்களின் கருத்துக்கள் மேலோட்டமான அபிப்பிராயங்களாக- வரலாற்றுப்பின்புலம் கூறமுடியாதவையாக- உள்ளன என்பதும் என் எண்ணம்.
http://www.aaraamthinai.com/ilakkiyam/writers/apr23sadasiva.asp
திருவட்டாறு பேராலயம்- ஒருவரலாறு
சில வரலாற்று நூல்கள் 4 – தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன்
சில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்
சில வரலாற்று நூல்கள் 1 – மதுரைநாடு : ஒரு ஆவணப்பதிவு (ஜெ.எச்.நெல்சன்)
சில வரலாற்று நூல்கள் – 3 –மதுரைநாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)