கூடங்குளம் இடிந்தகரைக்குச் சென்றோம்

கிட்டத்தட்ட ஒரு வருடமாக கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள்போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. நேரடியான அரசு வன்முறை மூலம் அம்மக்கள் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்ட பின்னரும் அறவழிப்போராட்டமாகவே அது நீடிக்கிறது.

கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக நாகர்கோயிலில் படைப்பாளிகள் சார்பில் ஓர் ஆர்ப்பாட்டம் கடந்தவாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நண்பர் ஸ்டாலின் ராஜாங்கம் கூப்பிட்டு என்னிடம் பங்கெடுக்கும்படி சொன்னார். நான் அப்போது ஊரில் இல்லை.

அந்த மனக்குறையை நண்பர்களிடம் சொன்னேன். கிருஷ்ணன் ஒரு ஆதரவுப்பயணமாக நாம் கொஞ்சபேர் கூடங்குளத்துக்கே செல்வோமே என்று சொன்னார். இது என்னுடைய வாசகர் குழுமம் சார்ந்த நிகழ்ச்சியாக இல்லாமலிருக்கட்டும், இணையத்திலும் அறிவிப்பு தேவையில்லை, நட்புமுறையில் தெரிந்தவர்கள் மட்டும் செல்லலாம் என முடிவெடுத்தோம்.

ஆனால் பிறகு இருபதுபேருக்குமேல் வேண்டாமென திட்டமிட்டோம். ஏனென்றால் அதிகம்பேர் செல்வது பெரிய நிகழ்ச்சியாக ஆகிவிடும். கூடங்குளம் செல்பவர்கள் மீது அதிகாரபூர்வமற்ற தடை நிலவுகிறது. வழியில் உள்ள தடுப்புகளில் சோதனைகள் செய்யப்பட்டு தடைசெய்யப்படுகிறார்கள் என்று அறிந்தோம்.

21 -10-2012 அன்று ஞாயிறு காலை நண்பர்கள் வள்ளியூரில் வந்து கூடினார்கள். கிருஷ்ணனுடன் கடலூர் சீனு, ரவி [ஷிமோகா], சந்தோஷ் [வழக்கறிஞர்], தினேஷ் நல்லசிவம், தங்கவேல் ஆகியோர் வந்திருந்தார்கள். மதுரையில் இருந்து வே.அலெக்ஸ் [எழுத்து பிரசுரம்], பாரி செழியன் [அயோத்திதாசர் ஆய்வுமையம்,] சா.கருப்பையா [தலித் இயக்கக் களப்பணியாளர்] , கொண்டவெள்ளை [துப்புரவுத்தொழிலாளர் சங்கம்] ,ஜெயசிங், கவிஞர் தமிழ்முதல்வன், நாகேந்திரகுமார், ஆகியோர் நாகர்கோயில் வந்தார்கள்.

செல்லும்வழியில் கெடுபிடிகள் அதிகம் என்று சொல்லப்பட்டது. ஏனென்றால் மறுநாள்முதல் சில போராட்டங்களை கூடங்குளம் போராட்டக்குழு அறிவித்திருந்தது. 22 அன்று மாவட்ட ஆட்சியர்களிடம் மனுகொடுத்தல். 29 அன்று சட்டசபை மறியல். ஆகவே போலீஸ் கூடங்குளம் செல்பவர்களை கண்காணிப்பதாகவும், தடுத்துவைப்பதாகவும் சொன்னார்கள். நண்பர்களிடம் வழி கேட்டு தெரிந்துகொண்டேன். கூடங்குளம் போராட்டக் குழுத்தலைவர்களில் ஒருவரான புஷ்பராயனிடம் செல்பேசியில் தகவல் தெரிவித்தேன்.

ராதாபுரம் வழியாக சுற்றிக்கொண்டு கிராமத்து மண்சாலைகளின் வழியாக கூடங்குளத்தை முழுமையாகத் தவிர்த்து இடிந்தகரைக்குச் சென்றோம். சொந்த மண்ணில் சொந்த மக்களை திருட்டுத்தனமாகச் சென்று காண்கிறோம். தினமலரில் ‘வெடிகுண்டு கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்’ போன்ற செய்திகளை எழுதிய மண்டையை நினைத்துக்கொண்டேன். தமிழகம் இவை செழித்து வளர ஏற்ற மண்.

நாங்கள் சென்றதை அறிந்து உதயகுமாரும் புஷ்பராயனும் வந்தார்கள். உதயகுமாரைக் கண்டதும் சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிவிட்டேன். நாங்கள் சந்தித்து பேசி நெடுங்காலமாகிறது. அவரைக் கண்டதும் அவர் உண்ணாவிரதமிருந்து கிடந்த காட்சிதான் நினைவுக்கு வந்தது. இன்று உண்ணாவிரதங்களைக்கூட பொருட்படுத்தாமலிருக்குமளவுக்கு நம் தேசத்தின் மனசாட்சி தடித்துவிட்டது. நாம் சுயநலத்தில் ஊறி நம்முள் நாமே ஆழ்ந்து வாழப்பழகிவிட்டிருக்கிறோம்.

ஒரு தேசத்தின் முன்பாக ஒரு பொதுநல ஊழியர் உண்ணாவிரதமிருந்து சோர்ந்துகிடப்பதென்பது ஒரு சவால், ஒரு மன்றாட்டு. அச்சமூகம் உயிருடனிருக்கும் சமூகம்தானா என்பதற்கான சோதனை அது. நாம் இறந்துகொண்டிருக்கும் சமூகமோ என்ற எண்ணத்தை அன்று நான் அடைந்தேன். ஒரு இரவு முழுக்க தூக்கமின்றி படுத்துப் புரண்டுகொண்டிருந்தேன்.அந்நினைவுகள் எழுந்துவந்தன.

உதயகுமாரிடம் கூடங்குளம் போராட்டம் பற்றியும் அணுஆற்றலின் மாற்றுக்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். தன்னை ஓர் உறுதியான காந்தியர் என்றும் போராட்டம் என்றுமே அறவழியிலேயே நீடிக்கும் என்றும் உதயகுமார் சொன்னார். அதை வன்முறைப்போராட்டமாக, இந்திய எதிர்ப்புப் போராட்டமாக ஆக்கவும் அப்படி சித்தரிக்கவும் அரசும் சிற்சில ஊடகங்களும் முயல்கின்றன என்றும் சொன்னார். அதுவே அவர்கள் அதை அழிப்பதற்காகக் கொண்டிருக்கும் உத்தி, ஒருபோதும் அதற்கு இடமளிக்கப்போவதில்லை என்றார்.முழுமையான வெற்றி வரை போராட்டம் நீடிக்கும் என்றார். போராட்டம் சற்றும் தளர்வில்லாமல் தீவிரமடைந்தே வருகிறது என்று புஷ்பராயன் உறுதியுடன் சொன்னார்.

இடது ஓரத்தில் தாடியுடன் புஷ்பராயன்

பேசிப்பேசி தெரிந்த விஷயங்கள்தான். ஆனால் அவருடன் பேசுவது ஒரு நெகிழ்ச்சியூட்டும் அனுபவமாக இருந்தது. ஒரு வரலாற்றுத்தருணம் அதற்கான மனிதனைக் கண்டுபிடிக்கிறது. அவனை அது சுவீகாரம் செய்துகொள்கிறது. குட்டியைத்தின்னும் தாய்ப்பன்றிபோல வரலாறு அவனை கடித்துத்தின்னவும் செய்கிறது. எல்லா வரலாற்றுநாயகர்களும் வரலாற்றின் களப்பலிகளும் கூடத்தான் . அவர்கள் முன் எளியமனிதர்களாகிய நாம் அடையும் நெகிழ்வும் பணிவும் நாம் எங்கோ நமக்குள் அதை உணர்வதனால்தான்.

உதயகுமார் புதியவராக உற்சாகமானவராக இருந்தார். போராட்டத்துக்கான ஆதரவு சீராகப் பெருகிவருவதாகச் சொன்னார். ஆரம்பத்தில் அணுஆற்றல் மூலம் உடனடியாக மின்சாரம் கிடைத்துவிடும் என்றெல்லாம் பிரமை கொண்டிருந்த மக்களின் எண்ணங்கள் இன்று தொடர்ச்சியாக மாறிவருவதைப்பற்றியும் தேசம் முழுக்க ஒரு கவனம் உருவாகிவருவதைப்பற்றியும் சொன்னார்.

நண்பர்கள் அவர்கள் தங்கள் சூழலில் சந்திக்கநேர்ந்த அவநம்பிக்கைகளையும் எதிர்ப்புகளையும் பற்றிச் சொன்னார்கள். நான் என்றுமே தமிழகம் எந்த மக்கள் போராட்டத்தையும் முழுமூச்சாக நடத்திய வரலாறு கொண்டது அல்ல என்றேன். மிகச்சிறுபான்மையினரின் குரலாகவே இங்கே சுதந்திரப்போராட்டம் முதல் எல்லா போராட்டங்களும் இருந்துள்ளன. அதிலும் தமிழகத்தில் சூழியல்போராட்டங்கள் என்றுமே மக்களாதரவைப் பெற்றவை அல்ல. இங்கே நாம் நடத்திய எல்லா சூழியல்போர்களும் சிலருடைய போராட்டங்களே. நீதிமன்ற தலையீட்டினாலேயே அவை கொஞ்சமேனும் வெற்றியை ஈட்டின. மக்களாதரவால் அல்ல.

ஏனெனில் நாம் விதைநெல் உண்ணும் சமூகம். நாம் ஏரிகளை நிலத்தடிநீரை, காடுகளை லாபவெறியுடன் அழித்துக்கொண்டிருக்கும் மக்கள் . தமிழக வரலாற்றில் மக்களாதரவு பெற்ற முதல் போராட்டம் இந்தக் கூடங்குளம் போராட்டமே.

இருபதாண்டுகளுக்கும் மேலாக சூழியல் சார்ந்த எல்லா போராட்டங்களிலும் ஆர்வமும் ஈடுபாடும் காட்டிவருகிறேன். நிறைய எழுதியிருக்கிறேன். எனக்கு இப்போராட்டம் ஒரு பெரிய ஆச்சரியமாக , நிறைவேறிய கனவாகவே இருக்கிறது என்றேன்.

அங்கேயே சாப்பிட்டோம். இரு குழந்தைகள் அங்கே தேவாலயத்தில் புதுநன்மை செய்யும் சடங்குக்கு வந்திருந்தார்கள். அவர்கள் சார்பில் அளிக்கப்பட்ட உணவை உண்டோம். உதயகுமாரிடம் விடைபெற்றுக்கொண்டோம்.

மறுநாள் போராட்டத்தை ஒட்டி போலீஸ் பல இடங்களில் முன்னெச்சரிக்கைக் கைது போன்ற நடவடிக்கைகளை எடுப்பது பற்றிய தகவல்கள் வந்துகொண்டிருந்தன. அவர்களுக்குத் தேவை ‘பயங்கரவாதிகள்’. கூடங்குளம் செல்பவர்கள் மீது எதையாவது குற்றச்சாட்டாக பதிவுசெய்ய வாய்ப்புள்ளது, நாங்கள் சுற்றியே செல்லலாம் என்றார்கள். கூடங்குளம் தாண்டும்போது அப்பகுதியே ஏதோ ராணுவத்தால் ஆக்ரமிக்கப்பட்ட நிலம் போல காட்சியளிப்பதைக் கண்டோம்.

கூடங்குளம் போராட்டம் இப்போதே ஒரு மாபெரும் வெற்றிப்போராட்டம்தான். இனி இந்தியாவில் எந்த அணுமின் திட்டங்களையும் இதுவரை செய்ததுபோல இடதுகை வீச்சில் அரசு செய்துவிடமுடியாது. எந்த ஒரு அறிவியக்கத்தை விடவும் இதைப்பற்றிய விழிப்புணர்ச்சியை இந்தப்போராட்டம் தேசம் முழுக்க உருவாக்கியிருக்கிறது.

அதைவிட அணு உலை சம்பந்தமான விஷயங்கள் மக்கள் கேள்விகேட்பதற்கு அப்பாற்பட்டவை என்று இந்திய அரசு உருவாக்கியிருக்கும் பிரமையைக் கிழித்து மக்கள் வாழ்க்கையை பாதிக்கும் எவையும் மக்களால் கேள்விகேட்கத்தக்கவையே என நிறுவியிருக்கிறது.

தார்மீகமான போராட்டங்கள் வெல்லும் என்ற நம்பிக்கைதான் வரலாற்றை இதுவரை கொண்டு வந்துசேர்த்திருக்கிறது. அதுவே இன்றும் நீடிக்கும் துணை.

ஆனால் ஒருவருடம் தாண்டிய இந்த மக்கள்போராட்டத்தை இன்றுவரை ஒரு தாசில்தார் கூட அரசுத்தரப்பில் இருந்து வந்து சந்தித்துப் பேசவில்லை என்பதில் இருந்து நாம் இன்னொரு கோணத்தில் யோசிக்க ஆரம்பிக்கவேண்டும். நாம் உண்மையில் ஜனநாயக அரசைத்தான் அமைக்கிறோமா? ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நம்மை ஆள சர்வாதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கிறோமா?

நம் அரசமைப்பில் உண்மையில் நாம் தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதிகளுக்கு அதிகாரம் உள்ளதா? இல்லை பிரிட்டிஷார் உருவாக்கிய அதிகாரிகளின் அமைப்புதான் இன்றும் அரசியல்வாதிகளை முன்னிறுத்தி நம்மை ஆள்கிறதா? கேள்விக்கு அப்பாற்பட்ட சர்வாதிகார அமைப்பாக அதுதான் நீடிக்கிறதா?

புகைப்படங்கள் மேலும்

கூடங்குளம்

கூடங்குளம் உண்ணாவிரதம்

கூடங்குளம் போராட்டம்

முந்தைய கட்டுரைஎழுத்தின் வழிகள்-கடிதம்
அடுத்த கட்டுரைசரகர்