க.நா.சு.கடிதங்கள்

“அவரது அந்தக்கம்பீரம் கையில் எதுவுமே இல்லாத நிலையில் இருந்து வந்தது. அல்லது எதுவுமே ஒரு பொருட்டல்ல என்ற நிலையில் இருந்து வந்தது”

ரமணர் வந்த சிலகாலம், திருவண்ணாமலையில் வீடு வீடாகப் பிச்சைக்காகச் சென்ற போது ஒரு சக்ரவர்த்தி போல் உணர்ந்ததாகச் சொல்லியிருக்கிறார்.

இன்னும் ஒரு விரிவான கட்டுரை எழுதுங்க ஸாரே

பாலா

அன்புள்ள பாலா,

எழுதலாம். ஆனால் நான் க.நா.சுவைச் சந்தித்ததே அவ்வளவுதான். அதன்பின் சுரா வீட்டில் அவர் இருக்கையில் காசர்கோட்டில் இருந்து தொலைபேசியில் நான்கே வார்த்தை.

ஒன்றை ஆச்சரியத்துடன் நினைத்துக்கொள்கிறேன். என் மகன் என்னிடம் நான் லாரி பேக்கரைச் சந்தித்ததைப்பற்றி ஆர்வமாகக் கேட்டான். நான் அவரிடம் ஒன்றரை மணிநேரம் பேசிக்கொண்டிருந்தேன். ஒன்றரை மணிநேரம் பேசி இவ்வளவுதானா எழுத இருக்கிறது என்றான். உண்மையில் அவரிடம் பேசியதில் பெரும்பகுதி மறந்தே போய்விட்டது. அம்மாதிரி சந்திப்புகளின் முக்கியத்துவம் அப்போது தெரிவதுமில்லை.

ஆனால் நான் எழுத்தாளர்களைச் சந்தித்த போது பேசியது முழுக்க நினைவில் இருக்கிறது. ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு அசைவும். இதில் என்னுடைய தேர்வு என ஒன்று இருக்கிறது

க.நா.சுவைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். என் இலக்கிய முன்னோடிகள் வரிசை நூல்களில் சென்றதும் நின்றதும் நூலில் உள்ளது அக்கட்டுரை.

ஜெ

ஜெ,

க.நா.சு பற்றிய கட்டுரை மிக அருமை. இருகட்டுரைகளும் சேர்ந்து ஒரு முழுமையை அளிக்கின்றன. க.நா.சுவின் தட்டச்சுப்பொறி அவரது பங்களிப்பு என்ன என்று காட்டுகிறது. இந்தக்கட்டுரை அவர் யார் என்பதைக் காட்டுகிறது.

சக்கரவர்த்திக்கு என்னுடைய மனமார்ந்த வணக்கம்

ராம்குமார்

அன்புள்ள ராம்

நன்றி.

அவரது உடல்மொழியைப்பற்றி சுந்தர ராமசாமியும் எழுதியிருக்கிறார். நெற்றியில் சரியும் அடர்ந்த முடியைப்பெற்றிருந்தது அவரது அதிர்ஷ்டம். அந்த அசைவில் அவர் யாரென்று தெரியும் என்று எழுதியிருந்தார்

ஜெ

க.நா சுவும் வெசாவும்

க.நா.சு-அழியாச்சுடர்களில்

முந்தைய கட்டுரைகாடன்விளி [சிறுகதை]
அடுத்த கட்டுரைசெக்,பிரகாஷ்-கடிதங்கள்