ஏடுதொடங்கல்

கேரளத்தில் மிகப்பரவலாக உள்ள சடங்கு எழுத்தறிவித்தல். விஜயதசமியன்று நிகழும் இவ்விழா தமிழகத்தில் மிகவும் முக்கியமான ஒரு சடங்காக இருந்து காலப்போக்கில் முக்கியத்துவம் இழந்துவிட்டது. இப்போது விஸ்வகர்மர்கள் [ஆசாரிகள், ஸ்தபதிகள், பொற்கொல்லர்கள்] இடையே மட்டும் சிறப்பாக நீடிக்கிறது. ஏடுதொடங்குதல் என்று அக்காலத்தில் தமிழில் சொல்வார்கள். புதிய ஏடுகளை எழுதத்தொடங்கும் நாளும்கூட.

கேரளத்தில் ஏடுதொடங்குவது ஒரு கிராமத்தின் பண்டிதர் அல்லது ஆசிரியரால் செய்யப்படும் சடங்கு. வள்ளத்தோள் நாராயண மேனன் கேரளத்தின் பண்பாட்டு அடையாளமாக உருவாகிவந்தபோது அவர் கையால் எழுத்தறிவிக்கப்படுவதை கேரளமக்கள் பேறாக கருதினார்கள். மெல்லமெல்ல அது ஒரு விழாவாக ஆகியது. அதன்பின்னர் எழுத்தாளர்கள் , கவிஞர்கள் கையால் எழுத்தறிவிக்கபப்டுவது என்ற வழக்கம் கேரளத்தில் பரவியது. அது கேரளத்தில் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியம் மீதிருக்கும் மதிப்பின் அடையாளமும் கூட.

வருடம்தோறும் மலையாளமொழியின் பிதா என கருதப்படும் துஞ்சத்து எழுத்தச்சன் பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள துஞ்சன்பறம்பு மண்டபத்தில் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுத்தறிவிப்பார். பல்லாயிரம் பேர் வந்து அந்நிகழ்ச்சியில் பங்குகொள்வார்கள். அது இன்று கேரளத்தின் ஒரு பண்பாட்டுத்திருவிழா.

சில வருடங்களுக்கு முன் என் வாசகர் என தொலைபேசியில் மட்டுமே அறிமுகமாகியிருந்த நண்பர் அரங்கசாமி தன்னுடைய மகனுக்கு நான் எழுத்தறிவிக்கவேண்டும் என ஆசைப்பட்டார். நான் சடங்குகளில் எப்போதும் சங்கடமாக உணர்பவன். என் பிள்ளைகளுக்கு இத்தகைய சடங்குகள் எதையும் இதுவரைச் செய்ததுமில்லை. ஆனால் சம்மதிக்கவேண்டியிருந்தது. அதிலிருந்த பிரியம் காரணமாக. அரங்கசாமியும் குடும்பமும் நாகர்கோயில் வந்தனர். என் இல்லத்தில் எழுத்தறிவுப்பு நிகழ்ச்சி நடந்தது.

அதன்பின்புதான் அரங்கா நெருக்கமானவராக ஆனார். அரங்கனிடமிருந்து அதைச் சொல்லிக்கேட்டு நண்பர்கள் அந்நிகழ்ச்சியை இங்கும் நடத்தவேண்டும் என சொன்னார்கள். திருப்பூரில் நண்பர் ராஜமாணிக்கம் முயற்சியில் ஒரு விழா ஏற்பாடு செய்யபப்ட்டிருக்கிறது. நான் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கிறேன்.

இன்று சடங்குகளைப்பற்றி என் எண்ணங்கள் வேறு. அவை சில மதிப்பீடுகளை ஆழமாக சமூகத்தில் நிலைநாட்டும் குறியீட்டுநிகழ்ச்சிகள் என நினைக்கிறேன். சடங்குகளை நிராகரிக்கிறோம் என்ற நவீனத்துவ மனநிலை மரபார்ந்த பல விழுமியங்களை இழப்பதில்தான் சென்று முடிகிறது. அவ்வகையில் இச்சடங்கு அவசியமானதே என நினைக்கிறேன். இது மேலும் பல இடங்களில் பரவுமென்றால் அது நல்லதுதான்

ஆனால் நம் மக்களுக்கு இன்றும் எழுத்து , இலக்கியம் ஆகியவற்றின் மீது மதிப்பு கிடையாது. ஆகவே அரசியல்வாதிகளையும் உள்ளூர் முதலாளிகளையும் கொண்டு நம்மவர் இதைச் செய்ய ஆரம்பித்துவிடக்கூடாது. இதில் எழுத்தாளர்கள், பண்டிதர்கள், ஆசிரியர்கள் முக்கியமாகப் பங்கெடுக்கும்வரைத்தான் இதற்கு மதிப்பு.

கல்வி என்பது தொழிலுக்கான பயிற்சி அல்ல, எதிர்காலத்துக்கான முதலீடும் அல்ல, அது ஞானத்தை நோக்கிச் செல்லும் வழி என்பதை உணர்த்தும் விழா ஏடுதொடங்குதல். அந்த உணர்ச்சியை சிலரேனும் அடைய இது ஒரு தொடக்கமாக அமைந்தால் நல்லது.

திருப்பூரில் வரும் விஜயதசமி நன்னாளன்று (24.10.2012, புதன்கிழமை) காலை 7 மணி முதல் 9 மணி வரை, திருப்பூர் அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோவிலில் ‘எழுத்தறிவித்தல்’ விழா சிறப்பாக நடைபெற உள்ளது. அறம் அறக்கட்டளை, திருப்பூர் & சக்தி மாரியம்மன் டிரஸ்ட், எம்.ஆர்.நகர், திருப்பூர் – இணைந்து நடத்துவது இவ்விழா .

ஏறத்தாழ இருபதாண்டுகளுக்கு முன்னர் நானும் நண்பர்களும் நித்யசைதன்ய யதியை பார்க்க ஊட்டி குருகுலத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது அக்குழுவில் இருந்தவர் சூத்ரதாரி என்ற எம்.கோபாலகிருஷ்ணன். அப்போது அவர் நித்யாவின் ஈஸோவாஸ்யஉபநிடத உரையை தமிழாக்கம் செய்தார். தமிழினி வெளியிட்டது. அதன்பின் அவர் அம்மன்நெசவு, மணல்கடிகை போன்ற நாவல்களை எழுதி தமிழின் முக்கியமான எழுத்தாளராக ஆனார். அவரது மொழிபெயர்ப்பு நூல் ஈசோவாஸ்யஉபநிடதம் அவ்விழாவில் மீண்டும் புதிய பதிப்பாக வெளியிடப்படுகிறது.

அன்று மாலையில் நாள் ஐந்து மணிக்கு திருப்பூர் சன்மார்க்க சங்க வளாகம் [ கருவம்பாளையம்] அரங்கில் நான் பேசுகிறேன். ‘கல்வியும் ஞானமும்’ என்ற தலைப்பில்.

முந்தைய கட்டுரைசரகர்
அடுத்த கட்டுரைகாந்தியின் பலிபீடம்