மார்ச் ஆறாம் தேதி முதல் மூன்றுநாள் சிதம்பரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியைப் பார்த்தேன். கேரளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் நிகழ்ச்சிக்குச் செல்வதற்காக விரும்பி என்னிடம் உதவி கேட்டார். ஒரு கட்டத்தில் எனக்கும் நண்பர்களுக்கும் ஆர்வம் ஏற்பட்டது. போய்த்தான் பார்ப்போமே என்ற வகை ஆர்வம்தான். எனக்கு நடனக்கலையில் பெரிய ஈடுபாடு எப்போதுமே இருந்தது இல்லை.
ஈரோட்டிலிருந்து நண்பர் விஜயராகவனும் வழக்கறிஞர் கிருஷ்ணனும் நேரடியாக சிதம்பரம் வந்தார்கள். கல்பற்றா நாராயணன் ஐந்தாம்தேதியே வந்து இறங்கி அங்கே தங்கியிருந்தார். நான் சென்று சேர்ந்தது ஆறாம் தேதி காலை. சிதம்பரத்தில் நகைத்தொழில் செய்துவரும் நண்பர் கார்த்திகேயன் [மீனாட்சி ஜுவெல்லர்ஸ்] தங்குமிடம் ஏற்பாடுசெய்து உபசரித்தார்.
காலையில் நேராக பிச்சாவரம் சென்றோம். அலையாத்திக் காடுகளைப் பற்றி நிறையவே படித்திருந்தாலும் நேரில் கண்டது அதுவே முதல் முறை. ஆழம் குறைந்த உட்கடலுக்குள் வேர்பரப்பி செழித்திருந்த காடுகளின் தழைப்புக்கு அடியில் நீர்மீது பச்சைநிழல் பரவிய சுரங்கத்துக்குள் படகில் சென்றது இனிய அனுபவமாக இருந்தது. துள்ளி துள்ளி விழும் மீன்களில் நீர் திடுக்கிட்டுக் கொள்வதையும் நாரைகள் வெண்மலர்கள் போல அடர்ந்த குட்டைமரங்களையும் நீளக்கால்களை நீரில் ஊன்றி கழுத்தை நீட்டி நின்ற கூழக்கடாக்களையும் கண்டுகொண்டு செவ்வியல்கலைகளைப் பற்றி பேசியபடிச் சென்றோம்.
மாலை ஐந்தரை மணிக்கு நிகழ்ச்சி தொடக்கம். நண்பர் கார்த்திகேயனின் தந்தையார் எங்களை சிதம்பரம் ஆலயத்திற்குள் அழைத்துச்சென்று தரிசனம்செய்ய வைத்தமையால் சற்றுத் தாமதமாகவே நிகழ்ச்சிக்குச் செல்ல முடிந்தது. பல அடுக்குகளாக வரலாறும் கலையும் படிந்துகிடக்கும் மாபெரும் ஆலயம் அது. அன்று சிவராத்திரி ஆனதனால் பெரும் கூட்டம். கல்பெருகி நிறைந்த பேராலயங்களில் மக்கள் நிறைந்து ஒரே உணர்வுக்கு ஆள்படுகையில் ஒருவிதமான காலமின்மை கைகூடுவதை உணரலாம். அக்கணம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பல்லக்கிலேறி வந்தால்கூட அதிர்ச்சி கொள்ள வேண்டியதில்லை.
முக்கிய விருந்தினர் அனுமதிச்சீட்டு பெற்று முன் வரிசையிலேயே எங்களை அமரச்செய்தார் நண்பரின் தந்தை. நடன நிகழ்ச்சியை மிகுந்த உதாசீனத்துடன்தான் நான் கவனிக்க ரம்பித்தேன். கல்பற்றா நாராயணன் தவிர பிற நண்பர்களும் அப்படித்தான்..அதிலும் முதல் நிகழ்ச்சி பத்மினி துரைராஜன் தன் மாணவிகளுடன் ஆடிய பரதம். வீட்டிலிருந்து கிளம்புகையில் ”அழகிகளின் ஆடலை கண்டு வருகிறேன்” என்று அருண்மொழியிடம் விடைபெற்றபோது ”போ போ எல்லாம் பல்லுபோன கெழவிகளா இருப்பாங்க” என்று ஆசியளித்திருந்தாள். அதற்கேற்ப நாற்பதை ஒட்டிய வயதுடன் அப்பெண்மணி வந்து நின்றபோது ஒரு மனச்சுளிப்பு உருவாயிற்று.
ஆனால் வெறும் ஐந்து நிமிடம்தான். புத்தம் புதிதான ஓர் உலகத்தை பெரும் பரவசத்துடன் கண்டு கொண்டேன். அந்த மேடையில் நின்ற மனித உடலின் வயதோ தோற்றமோ என் முன்னாலிருந்து முற்றிலும் மறைந்தது. மொழிபோல, வண்ணங்கள் போல, ஒலி போல மனித உடலும் ஒரு மாபெரும் கலை ஊடகம் என்பதைக் கண்டேன். அதனூடாக அழியாத பேரின்பத்தை நிகழ்த்த முடியும் என்று அறிந்தேன்.
அப்போது தெரிந்தது, நான் அன்றுவரைக் கண்டதெல்லாம் பரதங்களே அல்ல. நம் நாட்டில் ஆங்காங்கே பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தபடியே இருக்கிறது. அவற்றில் மிகப்பெரும்பகுதி ஓரு வகை சபலத்துக்காக கொஞ்சநாள் நடனம் பயின்றுவிட்டு கௌரவத்துக்காக அரங்கேற்றப்படுபவை. பெரும்பாலும் சிறுமிகள். அவர்களது பெற்றோரும் சுற்றமும் ரசிபபர்கள். நம்மையும் மாட்டிவிடுவார்கள். நான் பார்த்தவை எல்லாமே அவ்வகைதான். பல நிகழ்ச்சிகளில் தாங்க முடியாமல் நான் எழுந்து ஓடி வந்தது உண்டு.
பரதம் மேல் இளக்காரமான எண்ணம் ஏற்படுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு என்று பட்டது. அது தொலைக்காட்சிகளில் பரதத்தைப் பார்ப்பது. நடனத்தை கண்முன் ஒரு மனித உடலில் அது நிகழும்போதே பார்க்கவேண்டும். அதன் காட்சித்தொகுப்பு ஒருபோது நடனம் அல்ல. அதைவிட திரைப்படங்களில் பயிற்சி இல்லாத நடிகைகள் செய்யும் முரட்டுத்தனமாக பரத நாட்டிய அசைவுகள். அந்த உடையைக் கண்டாலே அருவருப்பு கொள்ளும் நிலைக்கு என்னைக் கொண்டுசென்றவை இவையே.
எல்லா செவ்வியல்கலைகளையும்போல பரதமும் மிகக்கடுமையான நீண்டநாள் பயிற்சியால் கைகூடும் வரம். அப்படிப்பட்ட பயிற்சிக்கு ஒவ்வொரு நாளும் வளரும் ஆர்வமும் ,தணியாத தேடலும் தேவை. அர்ப்பணிப்பு இன்றி கலையே இல்லை. நான் அப்போது மேடையில் பார்த்தது அப்படிப்பட்ட ஒரு கலைநிகழ்வு. வியப்புடன் ஒன்றைக் கண்டு கொண்டேன், கதகளி கண்டு வளர்ந்த எனக்கு நடனமுத்திரைகள் எங்கோ மறந்தவைபோல எளிதில் நினைவுக்கு வந்தன. பாவங்களையும் அசைவுகளையும் என்னால் துல்லியமாகவே பின்தொடர முடிந்தது. அத்துடன் நெடுநாட்களாக தாகம் மிகுந்து நான் தேடித்தேடிப்பார்த்த இந்தியச் சிற்பக்கலை நடனத்தின் ஒவ்வொரு கணத்திலும் கரைந்திருக்கக் கண்டேன். குறிப்பாக பரதம் என்பது மனித உடல் வழியாகச் சிற்பங்கள் கடந்துசெல்லும் ஒரு மாயம்.
என் நண்பர்களின் நிலையும் அதுவே. கிருஷ்ணன் ”ஒரு நிமிஷம் என் காதெல்லாம் சூடாகிவிட்டது” என்றார். ”ரஷய நாவல்களின் உலகுக்கு அறிமுகமாகும்போது அப்படி ஒரு பரவசம் இருந்தது. ஒரு புதிய கலையுலகுக்குள் கொண்டுசெல்லும் வாசல் திறந்தது போல உணர்ந்தேன்” என்றார். பின்னர் செல்பேசியில் ஈ£ரோடு சிவாவையும், சென்னை வழக்கறிஞர் செந்திலையும் அழைத்து ”ஒரு பெரிய தொடக்கம் இது. ஒரு கலை நம்மை கண்டுபிடிச்சிருக்கு”என்றார் கிருஷ்ணன். எங்களுடன் எல்லா பயணங்களுக்கும் வரும் அவர்கள் நடனமாவது பார்ப்பதாவது என்று தவிர்த்து விட்டிருந்தார்கள்.
தொடர்ந்து வெவ்வேறு இந்தியக் கலைவடிவங்கள். ஒவ்வொரு ஆடலும் இருபத்தைந்து நிமிடம் முதல் அரைமணிநேரம் வரை. ஷால்லு ஜிண்டாலின் குச்சிபுடி. பார்சி போன்ற முகம் கோண்ட மெலிந்த பெண். பரத நாட்டியத்தின் அசைவுகளில் ஒரு இருபக்கச் சமன் இருப்பது போல தோன்றியபோது குச்சிபுடி கைகளை வீசிவீசிப் பறக்க முயல்வது போல ஓர் அடிப்படை அசைவுமொழி கொண்டிருந்தது. ஆனால் முத்திரைகளும் பாவங்களும் பரதத்தை பெரிதும் நிகர்த்திரூந்தன.
அதன் பின் மோகினியாட்டம் டாக்டர். நீனாபிரசாத். மென்மையான அசைவுகள் மட்டுமே கொண்ட மோகினியாட்டம் அந்த மென்மையினால் மட்டுமே பரதம், குச்சிபுடி ஆகியவற்றிலிருந்து வேறுபடுகிறது. கதகளிக்குரிய முக, விழி அபிநயம் கொண்டது. ஆனால் கதகளியின் அசைவுகள் வேறுவகையானவை. ஒன்றுமேல் ஒன்றாக தன்னுள்ளேயே ததும்பும் மூன்று உருளைகளின் ஆட்டம் போன்றது கதகளி. மோகினியாட்டம் தன்னுள் மயங்கிய பெண்ணின் கனவுநிகர்த்த அசைவுகள் கொண்டது. லாஸ்ய நிருத்யம் என்றழைக்கப்பட்ட இவ்வாட்டத்தை மோகினியாட்டமாக ஆக்கியவர் வள்ளத்தோள் நாராயண மேனனின் கலாமண்டலத்தைச் சேர்ந்த கல்யாணிக்குட்டியம்மா. கேரளத்தில்கூட சமீப காலத்தில் இதற்கிணையான ஒரு மோகினியாட்டத்தைக் கண்டதில்லை என்றார் கல்பற்றா நாராயணன்.
புகழ்பெற்ற நர்த்தகி நடராஜின் நடனமும் எளிய ரசிகனுக்கு முதல் தயக்கத்தை உருவாக்கக் கூடியதே. திருநங்கையான அவர் உடலில் ஆண்மையின் இறுக்கம் இருக்கத்தான் செய்தது. ஆனால் சிதம்பரம் ரசிகர்கள் அவரை நன்கறிந்தவர்கள் என்று பட்டது. ஆர்வம் மிக்க வரவேற்பு மட்டுமே அவருக்குக் கிடைத்தது. சில கணங்களில் நர்த்தகி நடராஜ் உருவாக்கிய உணர்வுலகை பற்றி விரிவாகவே எழுத வேண்டும். ஒரே மனித உடலில் பற்பல மனிதர்கள் பலவகைப்பட்ட உணர்ச்சிகளுடன் உருவாகி வளர்வதை எப்படி விவரிப்பது! ஒரே மனித உடல் இறைவனாகவும் பக்தனாகவும் படைப்புலகமாகவும் மாறும் கலையின் அற்புதம். நீனா பிரசாத்தில் மிக மென்மையாகவும் நளினமாகவும் வெளிப்பட்ட உணர்ச்சிகள் நர்த்தகி நடராஜில் பெரும் கொந்தளிப்பாக நிகழ்ந்தன. ‘அன்பே சிவமென்பது ஆரும் அறிகிலார்’ என்ற திருமந்திர வரிகளுக்கு நர்த்தகி நடராஜ் அளித்த விரிவான அபிநயம் நினைவை விட்டு அகலாதது.
அன்று திரும்பும்போது நர்த்தகியைப் பற்றியே பேச்சு வந்தது. நம் இதழுலகில் இன்றுவரை ஒரு திருநங்கை இல்லை. இலக்கிய உலகில் இப்போதுதான் வந்திருக்கிறார்கள். ஆனால் கலையில் எப்போதோ ஒரு பெரும்கலைஞர் வந்து தன்னை நிறுவிக் கொண்டுவிட்டார். அவரை ஆசாரவாதியான ஒரு குரு ஏற்றுக்கொண்டு தன்னுடனேயே வைத்திருந்து கற்பித்திருக்கிறார். அறிவையும் விட கலை எளிதில் திறமையைக் கண்டடைகிறதா என்ன?
சென்னை கிருஷ்ணா சிதம்பரத்தின் பரதமும், ஸிவாங்கி அனந்தானியின் பரதமும், பிரணிதா காமத்தின் பரதமும் அமுதா தண்டபாணியின் மாணவிகளின் நடனநாடகமும் தொடர்ந்து ஒரு பரவச நிலையிலேயே இருக்கச் செய்தன. இவற்றை விமரிசனபூர்வமாக ஆராயவோ மதிப்பிடவோ பயிற்சியும் பழக்கமும் இல்லையானாலும் அவற்றின் நுண்ணிய அசைவுகளின் ஒத்திசைவை கை,விழி முத்திரைகளின் துல்லியத்தை வியந்து பாராட்ட முடிந்தது
மறுநாள் தூங்கி எழுந்ததுமே காரில் சீர்காழி, திருவெண்காடு கோயில்களுக்குச் சென்று வந்தோம். பொதுவாக இந்த தஞ்சை மாவட்ட கோயில்கள் சிற்பங்கள் இல்லாமல் விரிந்த பெரும்பரப்புடன் உள்ளன. என் நோக்கில் தென்பாண்டி நாட்டுச் சிற்பங்களின் முழுமையை இங்குள்ள சிற்பங்களின் காணவும் முடிவதில்லை. [ஆனால் தி.ஜானகிராமன் நேர் மாறாக எண்ணுகிறார். தென்பாண்டி நாட்டு நாயக்கர் காலச் சிற்பங்களை வெறும் கல்பூதங்கள் என பல இடங்களில் எழுதியிருக்கிறார். ஸ்ரீவில்லிபுதூர், நான்குநேரி, ஸ்ரீவைகுண்டம், கிருஷ்ணாபுரம் ,நெல்லையப்பர் லயம், சுசீந்திரம், திருவட்டார் ஆலயச் சிற்பங்களை மாபெரும் கலைச்சின்னங்களாகவே எந்த ரசிகனும் எண்ணுவான்]
ஐந்தரை மணிக்கே அரங்குக்குச் சென்றிருந்தோம். அரங்கேற்ற மாணவிகளின் நடனம். திரும்பவும் அதே உணர்வு. கலை என்பது ஒரு எளிய பயிற்சி மட்டுமல்ல என்று உணராத மக்கள் தங்கள் பிள்ளைகளை மேடையேற்றி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஏழு மணிக்கு ஹைதராபாத் ஸ்மிதா மாதவின் நடனம்தான் உண்மையான கலைநிகழ்ச்சி தொடங்கிவிட்டது என்பதைக் காட்டியது. பெங்களூர் தீபா ராகவனின் பரதமும் நுண்ணிய சிற்ப நுட்பங்களுடன் விழிவிருந்து.
மும்பை தக்ஷ¡ மஷ்ருவாலாவும் மாணவிகளும் ஆடிய ஒடிஸி இந்த மூன்றுநாள் நிகழ்ச்சியின் சிகரங்களில் ஒன்று. ஒடிஸி நடனத்தில் கிழக்குஆசிய மரபு நடனத்தின் சாயல் இருந்தது. தலை அலங்காரம், தலையசைவு ,இடை நெளிவு முதலியவற்றில். தீபச்சுடர் போல தொடர்ந்து நெளிந்து கொண்டே இருக்கும் உடலசைவு ஒடிஸியின் சிறப்பம்சம். தக்ஷ¡ மஷ்ருவாலா நாற்பதுக்கும் மேற்பட்ட வயதுள்ளவர். அவரது மாணவிகளின் தேர்ந்த நடன அசைவுகள் அவர்கள் பெரும் நடனக்கலைஞர்கள் என்று காட்டின. ஆனால் தக்ஷ¡வின் அருகே அவர்களால் நெருங்க இயலவில்லை. மேதமையை திறமைகளே அடையாளம் காட்டுகின்றன.
அன்றைய நடனத்தில் கீதோபதேச நடனத்தை நான் கண்ட மாபெரும் மேடைக்கலைநிகழ்வுகளில் ஒன்றாகச் சொல்வேன். கிருஷ்ணன் விஸ்வரூபம் கொள்ளும்போது கணம் ஒன்றுவீதம் அத்தனை தெய்வங்களும் தக்ஷ¡வின் உடலில் நிகழ்ந்து மறைய அதைக் கண்ட பார்த்தன் கொள்ளும் அச்சமும் பிரமிப்பும் நெகிழ்வும் மெய்ஞானமும் அவரது தோழியின் முகம் வழியாக வெளிப்பட்ட கணங்கள் அற்புதமானவை.
சுதாராணி ரகுபதியின் மாணவிகள் பிரியாமுரளி அருணா சுப்பையா, டி.எம்.ஸ்ரீதேவி ஆகியோரின் அங்கயற்கண்ணி வர்ணம் அடுத்து தொடர்ந்தபோது கிருஷ்ணன் ‘முதல் நிகழ்ச்சியின் வீச்சிலிருந்து மீள முடியாமல் இந்த நடனத்தை சரியாக ரசிக்க முடியவில்லை’ என்று சொன்னார். ஆனால் என்னால் சில நிமிடங்களிலேயே தேவியின் பல முகங்களை ஒத்திசைவுள்ள அசைவுகளுடன் சித்தரித்த அந்நிகழ்ச்சிக்குள் செல்ல முடிந்தது.
ஹரீஷ் கங்கானி நிகழ்த்திய கதக் அதுவரையிலான நிகழ்ச்சிகளில் இருந்து வேறுபட்டிருந்தது. பாவங்கள் கொப்பளிக்கும் உணர்ச்சிவெளிப்பாடுகளுக்குப் பதிலாக அது ஒரு திறன் விளக்கம் போலிருந்தது. அவரது அசைவுகள் மிகச் சரளமானவை. கதக் சுழன்று கொண்டே இருக்கும் மனித உடலில் கூடும் நடனநிலை . ஹரீஷ் ஒவ்வொரு முறையும் மைக் அருகே வந்து கதக் பற்றி பேசி ஆடிக்காட்டினார். சரோடும் தபலாவும் துரித கதியில் துடிக்க கூடவே சரியான தாளத்தில் சலங்கை ஒலிக்க துள்ளும் அவரது கால்களில் இருந்து கண்களை எடுப்பது கஷ்டம். சவால் ஜவாப் என்று ஒரு நிகழ்ச்சி. தபலாக்கலைஞருக்கும் ஹரீஷின் சலங்கைக்குமான போட்டி அது.
கலாதீக்ஷா [சென்னை] குழுவினரின் பரதம். அதன் பின் சென்னை ஜனரஞ்சனி திவ்யா ரஞ்சனியின் பரதம். சித்ரா விஸ்வேஸ்வரனின் மாணவி வி.எம் சுப்ரியாவின் பரதம் என தொடர்ந்து நிகழ்ச்சிகள். என்றாவது ஒருநாள் தேர்ந்த ரசிகனின் கண்களுடன் இந்நிகழ்ச்சிகளைப்பற்றி எழுதுவேன் என்று சொல்லிக் கொண்டேன். ஆனால் இன்று எளிய பாமரனாக இக்கலைகள் எனக்களித்த உவகை அன்று இருக்குமா தெரியவில்லை.
மறுநாள் ரவிக்குமார் எம்.எல்.ஏவாக இருக்கும் காட்டுமன்னார்கோயில் வழியாக கங்கை கொண்டசோழபுரம் சென்றோம். பசுமையான வயல்வெளிகளுடன் சிறிய பாதை. கங்கை கொண்ட சோழபுரம் அதிகம் பயணிகள் வராத அமைதியான இடம். தஞ்சை கோயிலின் சாயல்கொண்ட பேராலயம். சுற்றிலும் புல் வெளி. அங்கே அமர்ந்து கோயில்கோபுரத்தைப் பார்த்தபடி நடன நிகழ்ச்சியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம்.
அருண்மொழியின் கிண்டலைப்பற்றிச் சொன்னேன். முதியவர்கள் ஆடுவது பற்றி சுப்புடு ஒருமுறை கிண்டலாகச் சொன்னதை நான் சுந்தர ராமசாமியிடம் சொன்னேன். ”அவருக்கு ஒண்ணும் தெரியாது, இடக்குப்பேர்வழி” என்றார் ராமசாமி. ” அலர்மேல்வள்ளி சுத்தமா அழகி இல்லை. செப்பு மாதிரி சின்ன உருவம். அவ மேடைக்கு வர்ரதைப்பார்த்தா ஏமாற்றமாகி எந்திரிச்சு வீட்டுக்குப் போயிடலாம்னு தோணிடும்.ஆனா மேடையில ஒரு பதினஞ்சு மினிட் தாண்டியாச்சுண்ணா நம்ம பேரழகிகளையெல்லாம் கொண்டுட்டுபோயி அழகா இருக்கறது எப்டின்னு இவகிட்டே ஒருவருஷம் டியூஷன் எடுக்கச் சொல்லணும்னு தோணிடும்” என்றார்.”…ஆனா அலர்மேல்வள்ளியே பாலசரஸ்வதியிடம் போயி ஆறுமாசம் டியூஷன் எடுக்கலாம். நான் அந்த அம்மாளோட ஆட்டத்தைப் பார்க்கிறப்ப அவருக்கு அறுபது வயசு பக்கத்திலே இருக்கும்…”
எந்தக் கலைக்கும் தோர்ச்சியிலிருந்து முதிர்ச்சிக்குப் போக ஒரு கால அளவு தேவையாகிறது. இருபது வருடம் பயின்ற பின்னரே பரதம்போன்ற கலைகளில் முழுமை கைகூடுகிறதுபோலும். அப்போது இயல்பாகவே வயதாகிவிட்டிருக்கிறது. ஆனால் இசை என்பது குரலைப் பொருட்படுத்தாதது போலவே நடனக்கலை உடலையும் பொருட்படுத்தாது என்று படுகிறது என்றேன். கலை எப்போதுமே ரசிகனின் கற்பனையில் நிகழ்கிறது. குரல் என்பதும் உடல் என்பதும் அக்கற்பனையை தூண்டும் ஊடகங்கள் மட்டுமே.
”அழகிகளுக்கு மேலே ஒன்றும் வேண்டியதில்லை. அழகற்றவர்களுக்கு வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. அந்த தூரத்தையெல்லாம் அவர்கள் கலையால் நிரப்பிக் கொள்கிறார்கள். அழகை தியானித்து தியானித்து அழகை அடைந்து, அப்படியே அழகையும் தாண்டி அப்பால் சென்றுவிடுகிறார்கள்” என்றார் கல்பற்றா நாராயணன்.
மறுநாள் பெங்களூர் பிரேமா ஸ்ரீதரின் பரதம் முதல் தொடக்கம். இந்த நாட்டியாஞ்சலியில் பெண்களைப் பார்ப்பதும் கண்டிப்பாக ஒரு ஆனந்தமே. முந்தைய நாள் சென்னை பரதாலயாவின் நடனத்தில் நட்டுவாங்கம் செய்த கரிய பெண் பேரழகி. நடனத்தை அவரது கண்கள் தொடர்ந்து கவனிப்பதும் புன்னகைப்பதும் தலையசைப்பதும் மனம் கவர்ந்தது. பிரேமா ஸ்ரீதர் கன்னடப்பெண்களுக்குரிய கண்கள் கொண்டவர். சற்று புடைத்து, கீழிமை கனத்து இருப்பது போன்ற கண்கள். தமிழ்ப்பெண்களுக்குரிய மான்விழிகள் அல்ல. அவற்றில் வரும் பாவங்கள் முற்றிலும் வேறுவகையானவை.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உஷாந்தினி ஸ்ரீபத்மநாபனின் நடனத்தில் பாவங்களை தீவிரமாகவும் நளினமாகவும் அவர் வெளிபப்டுத்திய விதம் நன்றாக இருந்தாலும் பாடலைப்பாடியவர் உற்சாகமே இல்லாமல் பாடியதாகப் பட்டது. ரமணி ரஞ்சன் ஜேனாவின் குழு [அவரது மகனும் மகளும்] நிகழ்த்திய ஒடிஸி நடனம் முந்தையநாள் ஒடிஸிக்கு நிகரான அனுபவமாக இருந்தது. குறிப்பாக ‘லலித லவங்க லதா பரிசீலன’ என்ற ஜயதேவரின் அஷ்டபதிக்கு இருவர் ஆடிய ராதாமாதவ நடனம். ஒடிஸியின் அசைவுகளின் நளினம் பிருந்தவான லீலைக்க்கு மிகப்பொருத்தமாக அமைந்தது என்று பட்டது. பாடலும் மிகச்சிறப்பாக ஒலித்தது.
தொடர்ந்து லீனா மலாக்கர், பூர்ணிமா ராய் இருவரும் ஆடிய கதக். இயல்பான அசைவுகளும் சுழற்சியும் கொண்ட கதக் ஒரு வசந்தகால நடனம் என்ற எண்ணமே ஏற்பட்டது. மற்ற நடனங்களில் நடனப்பெண் பெண்ணல்லாமலாகி அசையும் சிலைகளின் வரிசையாக தென்படுகிறாள். துல்லியமான நிலைகள் அல்லாமல் ஒரு கணமும் இல்லை. கதக்கில் வேகமாக ஆடும்போது கையால் பாவாடையை தூக்கிக் கொள்கிறார்கள். சிரிக்கிறார்கள். ஒருவருடன் ஒருவர் பேசவும்செய்கிறார்கள். நடனம் நடுவே கூந்தலிழையை இயல்பாக ஒதுக்கி காதில்செருகும் அசைவும் ஒரு நடனமாக ஆகிறது.
ஒன்று கவனித்தேன். பரதத்தை ஒப்பிடும்போது கதக்கிலும் ஒடிஸியிலும் பாடல் நன்றாக இருக்கிறது. அதிலும் லீனா மலாக்கருக்குப் பாடிய பாடகர் அபாரமான கற்பனை வளமும் குரல் வளமும் கொண்ட இளைஞர். கதக்கில் பாடிய பாடகர்கள் அனைவருமே இஸ்லாமியர் என்பதற்கும் ஏதேனும் கலாச்சாரக் காரணம் இருக்க வேண்டும். பரதநாட்டியத்தில் முதல்தரப் பாடகர்கள் பாடுவதில்லை போலும்.
திரைநடிகை சொர்ணமால்யா நன்றாகப் பெருத்த உடலுடன் வந்து ஆட ஆரம்பித்தபோது கிளம்புவோம் என்று கல்பற்றா நாராயணன் சொன்னார். அந்தப் பெண்மணிக்கு பரதத்துக்கான பயிற்சியும் இல்லை, அவரது மனம் அதில் நிற்கவும் இல்லை. முழுக்க முழுக்க தேர்ந்த கலைஞர்கள் மட்டுமே ஆடிய ஒரு விழாவில் அவர் ஆடமுடிந்தது அவரது திரைப்புகழினால்தான். திரைப்படத்தின் தீங்கு சென்று தொடாத இடமே இல்லை.
மார்ச் ஒன்பது பத்து இரு நாட்களிலும் மேலும் நடன அஞ்சலி உண்டு. பல முக்கியமான கலைஞர்கள் ஆடுகிறார்கள் என்று தெரிந்தது. ஆனால் திரும்ப வருவதற்கான கட்டாயங்கள். இந்நிகழ்ச்சி இப்படி ஒரு அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கவேயில்லை. அடுத்த முறை இன்னும் திட்டமிட்டு வரவேண்டும்.
மூன்றுநாட்களிலும் பத்தாயிரம் பேர் கொண்ட பெருங்கூட்டம் கலையாமல் நின்று நடன நிகழ்ச்சிகளை ரசித்ததைக் கவனித்தேன். முதல்நாள் சிவராத்திரி அதனால் கூட்டம் என்று நினைத்தேன். ஆனால் மறுநாளும் அதே கூட்டம். அத்துடன் சிதம்பரம் ரசிகர்கள் நுண்ணிய தருணங்களுக்கு இயல்பாக அளித்த கைத்தட்டலும் மற்ற நேரங்களில் கூரிய கவனத்துடன் அமைதி காத்ததும் வியப்பளித்தது.
இருபது வருடங்களுக்கும் மேலாக இந்த அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுவதனால் கண்டு வளர்ந்த ஒரு தலைமுறை உருவாகி விட்டிருக்கிறது என்றார் நண்பர்.
கடலூர் வாசகநண்பர் சீனு வந்து வெகுநேரம் அருகே அமர்ந்திருந்த பின் நடன இடைவெளியில் மெல்ல குனிந்து நான் சீனு கடலூர் என்றார். மகிழ்ச்சியாக இருந்தது. பல வருடங்களாக தொலைபேசியில் பேசி அறிந்த வாசகரான அவரை நேரில் சந்தித்தது அப்போதுதான்
பேருந்தில் அரைத்தூக்கத்தில் வந்துகொண்டிருந்தபோது கனவுகளிலும் ஒலித்தபடி இருந்த ஜதிஸ்வரங்கள் உள்ளூர எங்கோ பரதமும் ஒடிஸியும் கதக்கும் குடியேறிவிட்டிருந்தன என்பதற்கான சான்று.