ஒரு காணி நிலம் -திருமலைராஜன்

நேற்று வால் ஸ்ட்ரீட் ஜேர்னலில் அமெரிக்காவில் கார்ப்பரேட் வேலைகளை உதறி விட்டுத் தங்கள் சேமிப்பு முழுவதையும் முதலீடு செய்து நிலம் வாங்கிப் பண்ணைகள் அமைக்க முயல்பவர்களைப் பற்றிய ஒரு கட்டுரை வந்திருந்தது. தமிழ் நாட்டிலும் கூட ஐ டி வேலை வாய்ப்புகளும் வெளிநாட்டு வாய்ப்புகளும் அளித்த வசதியினால் பலரும் மீண்டும் விவசாயத் தொழிலுக்குத் திரும்பிச் சென்று பெரும் அளவில் மரம் வளர்ப்பதிலும், தோட்டங்களையும், பண்ணைகளையும், மரங்களையும் வளர்ப்பதில் தூண்டப்பட்ட ஆர்வத்துடன் செயல் பட்டு வருகிறார்கள். அவர்களால் இயற்கை விவசாயத்திற்கும், திறன் அதிகமுள்ள பாசன முறைகளுக்கும் புதியதொரு உத்வேகம் கிடைத்து வருகிறது. ஒரு பக்கம் விவசாய நிலங்கள் வீட்டடி மனைகளாக மாறி வந்து கொண்டிருந்தாலும் இன்னொரு புறம் இவை போன்ற ஆர்வங்களும் முயற்சிகளும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன.

தாமிரவருணி கரையின் இருந்த வளமான விவசாய நிலங்கள் எல்லாம் என் அப்பா காலத்திலேயே விற்கப்பட்டு விட நிலம் வைத்து விவசாயம் செய்வதெல்லாம் அவர் காலத்துடன் முடிந்து போன ஒரு பழங்கனவாகிப் போய் விட்டிருந்தது. பூர்வீக நிலங்களை எல்லாம் இழந்த பின்னர் அவரும் பிழைப்புத் தேடி நகர வாழ்விற்கு நகர்ந்திருந்தார். பின்னர் நாங்கள் குடியிருந்த வீட்டின் பின்னால் இருந்த மலைச்சாரலைக் கொத்திச் சமன் படுத்தி அதில் காய்கறிகளையும் வாழைகளையும் வளர்க்க எனக்குச் சொல்லித் தந்திருந்தார். கத்திரி, வெண்டை, மிளகாய், தக்காளி, எள்ளு, வாழை, முருங்கை, அகத்திக் கீரை, அரைக் கீரை என்று வீட்டுக்குத் தேவையான அனைத்துக் காய்கறிகளையும் எங்களால் செழிப்பாக வளர்ப்பதே எனக்கு மிகவும் ஆர்வமுள்ள ஒரு சிறு வயது பொழுது போக்காக இருந்தது. பின்னர் அந்த வீட்டில் இருந்து மாறி படிப்பு வேலை என்று அலைந்ததில் செடிகளுடனான தொடர்பு அற்றுப் போனது. ஆனால் வெகு நாளாக இந்தக் காணி நிலக் கனவு மட்டும் மனதுக்குள் கனன்று கொண்டேயிருந்தது. பத்மராஜனின் ’நமுக்குப் பார்க்கான் முந்திரித் தோப்புக்கள் ’என்ற சினிமாவைப் பார்க்க நேர்ந்த பொழுது அந்த ஆசை மேலும் வளர்ந்தது. என்றாவது ஒரு நாள் வசதி வரும் பொழுது முதலில் செய்ய வேண்டிய வேலை ஒரு தோட்டம் அமைப்பதாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். அதற்கான முதல் தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தேன். கிராமத்தில் மீதம் இருக்கும் நிலத் துண்டுகளோ மீண்டும் போய் உரிமை கொண்டாடும் நிலையில் இல்லை. நமுக்குப் பார்க்கானில் வரும் மோகன்லாலைப் போல பெரிய முந்திரித் தோட்டம் அமைப்பதற்கான வசதியும் இல்லை. இருந்தாலும் சிறிதாக ஒரு சின்ன தோட்டம் அமைக்க வேண்டும் என்று ஆசை மட்டும் தொடர்ந்து கொண்டேயிருந்தது. ஆனால் அதை அமெரிக்காவில் இங்கிருந்தபடி செய்ய முடியாது என்ற நிதர்சனமும் உறைத்தது.

அப்படி ஒரு தோட்டம் ஏற்பாடு செய்ய முடியும் என்றால் தன் இளம் வயதில் விவசாயத்தில் இருந்து வெளியேறி எலக்ட்ரிக்கல் வேலையில் இறங்கிய என் அப்பாவுக்கு அவரது வயதான காலத்தில் ஒரு உற்சாகம் அளிப்பதாக இருக்கும் என்று எண்ணியதாலும், அருகில் இருந்து கவனித்துக் கொள்ளும் வசதி கருதியும் என் பெற்றோர் வசிக்கும் இடத்தின் அருகே நிலம் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தேன். மதுரை நகரைச் சுற்றியிருந்த அத்தனை விளை நிலங்களும் வீட்டு மனைகளாக மாற்றப் பட்டு விட்டன. விவசாயம் வெகுவாக அருகி வருகிறது. சின்ன, சின்ன வீட்டடி மனைகளாக அருகருகே ஒரு ஏக்கர் வரையிலும் தனித் தனியாக விலைக்கு வந்தன. வீட்டடி மனை என்பதினால் விலையும் அதிகம். மற்றவர்கள் எல்லாம் விளை நிலங்களை வீட்டடி மனைகளாக மாற்றுவதில் மும்முரமாக முதலீடு செய்து கொண்டிருந்த பொழுது வீட்டடி மனைகளை வாங்கித் தோட்டம் அமைக்கலாம் என்று இறங்கிய பொழுது என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். இதை லே அவுட் போட்டு விற்பனை செய் என்று ஆலோசனைகள் சொன்னார்கள்.

என் கனவுகளைச் சரியாகப் புரிந்து கொண்ட என் அப்பாவும் ஆர்வத்துடன் இறங்க மனைகளை வாங்கி ஒன்றிணைத்து வேலி மட்டும் போட்டு வைத்திருந்தோம். நீண்ட நாள் கனவின் முதல் அடி நனவானது. இருந்த காசையெல்லாம் இடத்தில் போட்டு விட அதில் அடுத்த வேலைகளை ஆரம்பிக்க நான்கு வருடங்கள் எடுத்தன. எனக்கு ஒரு மாதமாவது லீவு கிடைத்து ஊருக்குச் செல்லும் பொழுதுதான் எதையும் செய்ய முடியும் என்ற நிலையில் 2010ம் வருடத்தில்தான் போய் அடுத்த கட்ட ஏற்பாடுகளைச் செய்ய முடிந்தது. கிட்டதட்ட ஒரு ஏக்கர் அளவுள்ள செவ்வக வடிவுள்ள நிலத்தில் ஏற்கனவே சுற்றி கம்பி வேலியும் ஒரு கதவும் போட்டிருந்தோம். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நிலம் சும்மா புல்லும் காட்டுச் செடிகளும் வளர்ந்து இருந்த நிலத்தில் போர் வெல் போட்டு மின்சார இணைப்பு வாங்கி ஒரு சிறிய கட்டிடம்/ஷெட் ஒன்றையும் எழுப்பியிருந்தோம். அதன் பின் நிலத்தைச் சமன் படுத்த, புல் வெட்ட, குழி தோண்டி கன்றுகள் வைக்க அவற்றை பராமரிக்க, சொட்டு நீர் பாசனம் அமைக்க என்று இது வரை ஒரு நான்கு லட்ச ரூபாய்களுக்கும் மேலாக செலவு பிடித்தது. நிலத்தடி நீர் 300 அடியில் கிடைத்தது. வேலைகளை ஆரம்பித்து என் அப்பாவிடம் ஒப்படைத்து விட்டு வந்தேன்.

அவரது தொடர்ந்த ஆர்வத்தினால் சொட்டு நீர் பாசனத்துக்கு ஏற்பாடு செய்து, நிலத்தைச் சமன் செய்து, குழிகள் வெட்டி, உரம் இட்டு, கன்றுகளை வாங்கி தோட்டத்தை ஒரு வடிவுக்குக் கொண்டு வந்திருந்தார்.

என் அப்பாவின் ஆர்வத்தினாலும் மேற்பார்வையிலும் மெல்ல மெல்ல அனைத்து மரங்களும் வளர்ந்து வருகின்றன. வாழ்க்கையில் எல்லாக் கனவுகளும் சாத்தியமாவது இல்லையென்றாலும் கூட இந்தக் கனவு இந்த அளவுக்காவது முன்னேறி தென்னை,மா,கொய்யா,சப்போட்டா,தேக்கு,குமிழ் தேக்கு,பாக்கு,நெல்லி,எலுமிச்சை,மாதுளை, முருங்கை,வேம்பு,அத்தி,புங்கை,பூவரசு,வில்வம்,பலா,சீத்தாப் பழமரம்,பன்னீர்,செண்பகம்,மே ஃப்ளவர்,சரக் கொன்றை,நாவல், முருங்கை, அகத்தி என்று கலவையாக மொத்தம் ஒரு நூறு மரக் கன்றுகள் நடப்பட்டு வளர்ந்து வருகின்றன. முருங்கை, கொய்யா, மாதுளை போன்றவை காய்க்க ஆரம்பித்து விட்டன. இவை தவிர வீடு கட்டுவதற்காக ஒதுக்கப் பட்டுள்ள இடத்தில் சுமார் 150 சவுக்குக் கன்றுகளும் நடப்பட்டுள்ளன. இவை தவிர இன்னும் ஒரு 25 மரங்கள் நட திட்டமிட்டிருக்கிறேன். இந்த வருடம் செய்ய வேண்டும். இடைப்பட்ட இடங்களில் கீரை மற்றும் காய்கறிகள் கடந்த ஆடி 18 அன்று பயிரிடப்பட்டுள்ளன. ஊடுபயிர் செய்வதற்கான நிறைய இடம் இருக்கிறது. ஆனால் வேலை செய்வதற்கும் பராமரிக்கவும் தான் ஆள் இல்லை. அதனால் இடைப்பட்ட நிலம் பெரும்பாலும் வெறுமையாகவே கிடக்கிறது. இடையே நிறைய வாழைகள் போடலாம். இந்த சவுக்கு மரங்களை மட்டும் இன்னும் ஒரு எட்டு வருடங்களில் அங்கே ஒரு சிறிய வீடு கட்டும் பொழுது நீக்கி விடும் திட்டம் உள்ளது. வேலியை ஒட்டி பெரும்பாலும் தேக்கு, பூ மரங்கள் மற்றும் பழமில்லாத மரங்களை நட்டுள்ளோம். இன்னும் ஒரு ஐந்து வருடங்களில் அந்தப் பாலைவனத்தின் நடுவில் ஒரு சோலை சாத்தியமாகும் என்று நம்புகிறேன்.

டிரிப் மூலமாகத் தண்ணீர் செடிகளுக்குப் பாய்கிறது. தினமும் ஒரு மணியில் இருந்து இரண்டு மணி நேரங்கள் வரை மோட்டார் போட வேண்டி வருகிறது. மின்சார கட்டணம் இப்பொழுதெல்லாம் மாதம் ரூ1000 முதல் ரூ2000 வரை வருகிறது.நிலத்தையும், செடிகளையும் பார்த்துக் கொள்ளவும், சிறு களைகளை நீக்கவும், மோட்டார் போட்டு நீரைச் சரியாகப் பாய்ச்சவும் ஒருவருக்கு மாதம் ரூ 1500 சம்பளமாகக் கொடுக்கிறோம். அவர்கள் வேறு எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். செடிகளை காவாத்து செய்ய, உரம் வைக்க, பராமரிக்க மூன்று/நான்கு மாதத்திற்கு ஒரு முறை வரும் தோட்டக்காரருக்கு அவரது செலவுகளுக்குத் தக்கவாறு பணம் கொடுக்க வேண்டி வருகிறது. மின்சாரம் மற்றும் பராமரிப்புச் செலவுக்ளாக மாதம் கிட்டத்தட்ட 2000 முதல் 3000 வரை ஆகி விடுகிறது. நான் அருகில் இருந்திருந்தால் இந்தச் செலவுகளைப் பெரும் அளவுக்குக் குறைத்திருக்கலாம். இப்பொழுதைக்கு இவை தவிர்க்க முடியாத செலவுகளாகவே உள்ளன. வேறு வழியில்லை. எந்த லாபத்தையும் எதிர்பார்க்கவில்லை. மரங்கள் வளர்ந்து சோலையானால் போதும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே உள்ளது.

நான் வனத் துறை மற்றும் வேளாண்மைத் துறையினரை பல முறை தொடர்பு கொண்டு நாங்கள் சரியான விதத்தில் செல்கிறோமா என்று ஆலோசனை மட்டும் சொல்லுமாறு கேட்டுக் கொண்டும் கூட எவரும் நம் நிலத்துக்கு வந்து ஆலோசனை அளிக்க முன் வரவில்லை. மதுரையில் இவை நர்சரி வைத்திருக்கும் நண்பர் ஒருவரின் உதவியினால் ஓரளவுக்குப் பராமரித்து வருகிறோம். முற்றிலும் இயற்கை முறையில் இம்மரங்களை வளர்க்க முயன்று வருகிறோம் அதற்காக சில நண்பர்களிடம் உதவி கேட்டிருக்கிறேன். இருந்தும் எவர் ஆலோசனையும் இதுவரை களத்தில் பெற முடியவில்லை. வளர்க்கும் முறை குறித்து கொஞ்சம் நல்ல ஆலோசனையும் உதவியும் கிட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மின்சாரத் துறையினர் சிலர் நீங்கள் பழ மரங்கள் வைத்துள்ள படியால் எதிர்காலத்தில் அதன் மூலம் வருமானம் வரும் என்பதினால் இதை வணிக இணைப்பாகக் கருதாமல் இருக்க லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று என் தந்தையிடம் கேட்டிருக்கிறார்கள். கொடுக்காதபடியால் இப்பொழுது வணிகக் கட்டணத்தை வசூலித்து வருகிறார்கள். நான் மிக எளிதாக இந்த நிலத்தை வீட்டு மனையாகப் போட்டு விற்பனை செய்து லாபம் பார்த்திருக்கலாம். மதுரையில் பசுமையான பகுதி வெகு குறைவே. நெடுஞ்சாலைகளுக்காகவும், வீடுகளுக்காகவும் ஏற்கனவே இருந்த கொஞ்ச நஞ்ச பசுமையும் அழிக்கப் பட்டு விட்டன. இந்தச் சூழலில் மரம் வளர்க்கும் ஒரு முயற்சிக்கு மின்சார வாரியத்தின் அதிக கட்டணம் மரம் வளர்ப்பதற்காக நான் கட்டும் ஒரு அபராதமாக இருக்கிறது.

இப்பொழுது உடல் நலம் சற்று குன்றியதால் என் அப்பாவினால் வாரம் ஒரு முறை போய் பார்த்து விட்டு வர மட்டுமே இயல்கிறது. குழி தோண்டவும், களை எடுக்கவும், பிற வேலைகள் செய்வதற்கும் ஆள் கிடைப்பது வெகு அரிதாக இருக்கிறது. இது தவிர வேறு சில இடையூறுகளும் இந்த முயற்சியில் ஏற்பட்டன. நான் அங்கு இல்லாமல் இவ்வளவுதான் செய்ய முடிந்திருக்கிறது. ஊருக்குத் திரும்பினால் மட்டுமே நேரடியாகப் பராமரித்து வளர்க்க முடியும் என்ற நிலை. ஆனால் அது வரை காத்திருக்க காலம் இல்லாதபடியால் முடிந்த வரை துவக்கி வைக்கலாம் என்று இறங்கியிருக்கிறேன். இப்பொழுதைக்கு இந்த நூறு மரங்களும் ஒரு சோலையானாலே போதுமானது, இதில் இருந்து வேறு பெரிய வருமானம் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு சிறிய கனவு, நனவானால் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவேன் எதிர்காலக் குடிலை அதன் நடுவே அமைத்துக் கொள்வேன்.

ராஜன்

முந்தைய கட்டுரைஏழாம் உலகம்-ஓர் விமர்சனம்
அடுத்த கட்டுரைமொழி- 3,வையாபுரிப்பிள்ளையின் மரணமின்மை