தேர்தல்:கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

எப்போது கணிப்பொறியை திறக்கிறேனோ உடனே உங்கள் இணையதளத்தை படித்துவிடுகிறேன். நான் ஒரு விளம்பர எழுத்தாளர். இருந்தும் உங்கள் இணையதளத்தைப்பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை- பயங்கரமாக எழுச்சியூட்டுவது என்று சொல்லலாம்.

தேர்தல் முடிவுகள் பற்றிய உங்கள் கட்டுரை இவ்வகையில் நான் வாசிக்க நேர்ந்தவற்றில் மிகச்சிறந்தது.  எல்லா பிரச்சினைகலுக்கும் கறுப்புவெள்ளை தீர்வுகளைச் சொல்லும் ‘நிபுணர்கள்’ எங்கும் உள்ளனர். மிகக்குறைவானவர்களே அதன் நடுப்பகுதியைப்பற்றி சிந்திக்கிறார்கள். நீங்கள் அவர்களில் ஒருவர். இணையத்திலும் சரி இதழ்களிலும் சரி எழுதக்கூடிய பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கான சொந்த லாபநோக்குகள் உள்ளன. உங்களுக்கு அத்தகைய நோக்கங்கள் இல்லை. அது இன்று சிலரிடமே காணப்படும் மிக முக்கியமான ஒரு குணநலன். ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறைய படிப்பவன் என்ற முறையில் நான் இதை உறுத்யாகவே சொல்ல முடியும்.

அன்புடன்
கிருஷ்ணன்

அன்புள்ள கிருஷ்ணன்,

நலம். கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து பதில்போடுகிறேன். என் வாழ்க்கையில் இத்தனை மின்னஞ்சல்கள் தேங்கியதில்லை. காரணம் நடுவே உருவான ஈழப்பிரச்சினை சார்ந்த சோர்வு. அர்த்தமில்லாமல் அதைச்சார்ந்த இணையதளங்களை வாசித்து தொலைபேசிகளைபேசி அதுவே ஒரு மனப்பீடிப்பாக கொஞ்சநாள் ஆகிவிட்டது. இப்போது சரியாகிவிட்டேன். கொஞ்சபேர் காணாமல் ஆனார்கள். கொஞ்சபேர் நன்றாக இருக்கிறார்கள். அப்போதைய மின்னஞ்சல்கள் அனைத்துக்கும் இப்போதுதான் பதில் போடுகிறேன்

பொதுவாக தேர்தல் போன்ற விஷயங்களை அலசுபவர்களுக்கு உள்ளூர அழுத்தமான நிலைபாடுகள் இருக்கும். உணர்ச்சிகள் இருக்கும். அவற்றையே அவர்கள் பிரச்சினைகளை நோக்கி திருப்பிக்கொள்வார்கள். நுண்ணுணர்வை பிரச்சினைகளை நோக்கி திருப்பிக்கொள்வதில்லை. அவற்றைச் செய்யவே நான் முயல்கிறேன்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்

சித்தார்த்தன் என்பவருக்குப் பதிலாக நீங்கள் தேர்தல் பற்றி எழுதியிருந்த கட்டுரையை படித்தேன். நான் பெரும்பாலான தருணங்களில் அரசியல் கட்டுரைகளை தவிர்த்துவிடுவேன். கணிசமானவர்களை நான் நகைச்சுவை நடிகர்களைப்போலத்தான் பார்க்கிறேன். தமிழக அரசியலைப்பற்றி நீங்கள் எழுதியதைப்படித்தபோது நான் கடுமையான மனநெகிழ்ச்சி அடைந்தேன். திருமண வீடுகளுக்கு முன்பு எச்சில் உணவுக்காக சண்டை போடுபவர்களை நானும் கடந்தகாலத்தில் கண்டிருக்கிறேன். இப்போது அக்காட்சிகள் பெரிதும் குறைந்துவிட்டன

என் அப்பா கூட இளமையில் அரிச்சோற்றை விழாநாட்களில் மட்டுமே சாப்பிட்டிருக்கிறார். நான் சிறுவனாக இருக்கும்போது அவர் சொல்லும் அக்கதைகளை கேட்க மிகவும் அலுப்பு கொள்வேன். இப்போது இன்னும் பொறுப்பாக இருக்கவேண்டுமென்ற எண்ணம் வருகிறது.  நான் வெளிநாடுகளில் பணியாற்றியவன். பொதுவாக சிங்கப்பூர் மலேசிய வாழ் தமிழர்களைப்போலவே  ஈழத்தமிழர்களும் இந்தியத்தமிழர்கலை அவர்களின் வறுமைகாரணமாக்கி ஏளனமாக பார்க்கவும் தங்களை மேலானவர்களாக பார்க்கவும் பழகிவிட்டிருக்கிறார்கள்.
இன்று இந்தியாவில் நாம் தமிழ்பேசாதவர்க உங்கள் எழுத்துக்கள் வழியாக இந்தியா எப்போதுமே பெரும் மக்கள் தொகையை பரிமாறிக்கொண்டு ஒன்றாக இருக்கும் நிலம் என்று புரிந்துகொண்டேன். ஸ்ரீலங்காவில் அபப்டிப் பண்பாட்டுப்பரிமாற்றம் ஒற்றுமை ஆகியவற்றுக்குப் பதிலான மனநிலைகளை வளர்த்துக்கொண்டுவிட்டார்களோ என்று தோன்றுகிறது. அவ்ர்கள் பிடிவாதமாக இருந்தால் பெரும்பாலும் பிரச்சினைகள்தான் முளைக்கும்.

தமிழ் அரசியல் வாதிகள் எதையுமே சிந்திக்க முடியாதவர்கள். மக்களை உணர்ச்சிகரமான முட்டாள்களாகவே நிறுத்த விரும்புகிறவர்கள். மிகச்சிறந்த, மிகப்பரிதாபகரமான உதாரணம் வைக்கோ. அவர்களுக்கு எந்த பிரச்சினையுமே தெரியவில்லை. இந்தமாதிரி அரசியல்வாதிகளைத்தான் அங்கேயும் அவர்கள் நம்பியிருப்பார்கள்.

வாழ்த்துக்கள்

தண்டபாணி

அன்புள்ள தண்டபாணி,

நான் இந்தியா முழுக்க சுற்றியிருக்கிறேன். இப்போதும் பயணம்செய்கிறேன். இந்தியாவில் எங்கும் பரவியிருக்கிற ஒரு சமூகம் உண்டு என்றால் அது தமிழ்ச்சமூகம். எட்டுகோடித் தமிழர்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் இரண்டுகோடிபேர் தமிழ்நாட்டுக்கு வெளியே இந்தியாவின் பல மாநிலங்களிலாக வாழ்கிறார்கள். சேலம் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூலிவேலை வீடுவேலை செய்கிறார்கள். நாமக்கல் கரூர் திண்டுக்கல் பகுதியை சேந்தவர்கள் லாரி, கோழிமுட்டை, பேருந்து உதிரிகள்சார்ந்த வணிகம் செய்கிறார்கள். சாத்தூர் விருதுநகர் சிவகாசி பகுதியினர் மளிகை, பலகாரம், பலசரக்கு வணிகம். குமரி நெல்லை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கட்டிடத்தொழில்.

இங்கே பிரிவினைவாதம், வட இந்திய வெறுப்பு முதலிய உணர்ச்சிகளை தூண்டிவிஉம் அரசியல்வாதிகள் இந்த 2 கோடி பேரின் வாழ்க்கையை எந்த மனத்தயக்கமும் இல்லாமல் அடகு வைக்கிறார்கள். ஒரு வெறுப்பும் போராட்டமும் வெடித்து இம்மக்கள் அழிய நேர்ந்தால் அந்த அழிவைச்சொல்லி மேலும் வெறுப்பை வளர்ப்பார்கள். இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு எதிராக நிதானமாகச் சிந்திக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது

ஜெ

அன்புள்ள ஜெ

கொங்கு வேளாளரின் வணிக- தொழில் முதலீட்டைப்பற்றிய உங்கள் தக்வல் தவறானது. அவர்களின் முதலீடு நான்குலட்சம் கோடிக்கும் மேல் என்று குத்துமதிப்பாக கணக்கிடப்பட்டிருக்கிறது

சிவகுமார்

அன்புள்ள சிவகுமார்

உண்மை. பலர் சுட்டிக்காட்டியிருந்தார்கள். வருடாந்தர வரவுசெலவை முதலீடு என தவறாக அளித்துவிட்டேன்
ஜெ

 

தேர்தல்:கடிதம்

தேர்தல் முடிவுகள்

முந்தைய கட்டுரைஅயன் ராண்ட் 1
அடுத்த கட்டுரைஅயன் ராண்ட் 2